காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! – பாகம் 3
மராட்டியர்களைக் குறித்த வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்காரின் படைப்புகளிலிருந்து கீழே உள்ள பகுதிகளை கொடுக்கிறோம். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசராக சிவாஜியை ஏற்றுக்கொள்வதில் இருந்த சாதியரீதியிலான சிக்கல்களை தன்னுடைய இரண்டு நூல்களில் இவர் ஆய்வு செய்துள்ளார்.
மராட்டிய சமூகத்தை மட்டுமல்ல, உண்மையில் இந்திய சமூகம் முழுமைக்குமான ஒரு ஆழமான ஆய்வு, நாட்டுப்பற்று என்ற பெயரில் புறக்கணிக்கப்படுகின்ற சில உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. சிவாஜியின் வெற்றிக்கு மிகப்பெரிய தடைகளாக முகலாயர்களோ அல்லது யூசுப் அடில் ஷாவோ (பீஜப்பூர் சுல்தான்), சித்திகளோ (ஆப்பிரிக்க பாண்டு இனக்குழுவை சேர்ந்தவர்கள்) அல்லது பரங்கியர்களோ அல்ல, மாறாக சொந்த நாட்டு மக்களே என்பதை நாம் உணர்கிறோம்.
ஏதோ 17-ம் நூற்றாண்டில் நடந்தது மட்டுமல்ல இன்றும் ஒரு இந்தியரின் வாழ்வில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தி மதமோ, நாடோ அல்ல சாதிதான் என்பதை புரிந்துகொள்ளாத குருடராக நாம் இருக்க முடியாது. பாடநூல்களில் மட்டுமே இருக்கும் இந்துக்களின் நான்கு வருணப்பிரிவுகளும் அதற்கு பொதுப்படையாக கொடுக்கப்படும் தத்துவ விளக்கங்களையும் சாதியாக புரிந்து கொள்ளக்கூடாது. உண்மையில் சாதி இருக்கிறது. அது மனித சமூகப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் அதனிலும் பிரிவுகள் (இன்னும் சரியாக சொல்வதானால் மரத்தின் கிளைகள் அல்லது இலைகள் என்று கூட நான் கூற வேண்டும்!) என்று அதனுள் ஒவ்வொரு சாதியும் பிளவுப்பட்டு, அதற்குள் கொள்வினை கொடுப்பினை செய்துக்கொள்வதும், சாப்பிடுவதும், குடிப்பதுவுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக சக்தி தான் சாதி.
மேலும் பார்ப்பன சாதிகளில் ஒவ்வொரு துணைப்பிரிவும் கூட வைசியர் அல்லது சூத்திரர் போல முழுமையான தனிச்சாதிகளாக இருக்கின்றன. சான்றாக, வட இந்தியாவைச் சேர்ந்த கன்னியாகுப்ஜா மற்றும் சராயுபாரி பார்ப்பனர்கள். மகாராஷ்டிராவின் கொங்கனாஸ்தா மற்றும் தேசஸ்தா பார்ப்பனர்களை கூறலாம்.
சிவாஜிக்கு எதிரான தனிப்பட்ட பொறாமை:
பூணூலணியவும், சடங்குகளில் வேத உபநிடதங்களை உச்சரிக்கத் தகுதியுள்ள ஒரு சத்திரியனாக அங்கீகரிக்கப்படாதவரை தான் வெற்றிக்கொண்ட நிலப்பரப்புகளாலும், கொள்ளையடித்த புதையல்களாலும் சிவாஜி மனநிறைவு கொள்ளவியலாது. அந்த அங்கீகாரம் ஒரு பார்ப்பனரால் மட்டுமே அவருக்கு தர இயலும்.
பேஷ்வாக்கள் கொங்கன் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள். பேஸ்வா பார்ப்பனர்களின் உதிரம் தூய்மை குறைவானது என்று மேட்டு நிலத்தை (தேஷ்) சேர்ந்த பார்ப்பனர்கள் கருதினர். இதன் விளைவாக மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியின் அராசுக் கொள்கை தேசிய எல்லைகளை நோக்கி வழிகாட்டுவதற்குப் பதிலாக, ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகக் குறும்பிரிவின் கவுரவத்தை மட்டும் உயர்த்திப் பிடிப்பதாகவே அமைந்தது.
படிக்க:
♦ மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
♦ விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !
கிட்டத்தட்ட தனது நாட்களின் இறுதி வரை, பொறாமை, அவதூறு, அலட்சியம் மற்றும் மராட்டிய குடும்பங்கள் சிலவற்றின் எதிர்ப்பையும் கூட எதிர்த்து சிவாஜி போராட வேண்டி இருந்தது. சிவாஜியின் சொந்த சகோதரர் வியன்கோஜி 1666-ல் பிஜாப்பூர் மீது முகலாய படையெடுப்பின் போது அவருக்கு எதிராக சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜியின் மத சகிப்புத்தன்மையும் சமமாக கருதும் போக்கு :
ஒரு இந்துத் தலைவராக இருந்ததால் அல்ல, மாறாக அவர் ஒரு சிறந்த கணவராகவும், சிறந்த அரசராகவும், மற்றும் நிகரற்ற தேசத்தைக் கட்டமைப்பவராகவுமிருந்ததால் மட்டுமே வரலாற்றில் தகுதியுள்ளவர்களின் மண்டபத்தில் ஒரு உயர்ந்த பீடத்தில் சிவாஜி நிற்கிறார். அவர் தனது தாயிடம் மரியாதையுடனும், தனது குழந்தைகளிடம் அன்பாகவும், மனைவிகளுக்கு உண்மையாகவும் இருந்தார். மற்ற பெண்களுடனான தனது உறவில் மிகவும் தூய்மையானவராக இருந்தார். போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட பேரழகிகள் கூட அவரால் அம்மா என்றே அழைக்கப்பட்டனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், ஒரு மிகச்சிறந்த அரசராகவும், அமைப்பாளராகவும் தன்னுடைய மேதமையை பறைசாற்றியுள்ளார். மத வெறித்தனம் கோலோச்சிய அக்காலத்தில் அனைத்து மதங்களையும் தாராளமாக சகித்துக்கொள்ளும் கொள்கையை பின்பற்றினார்.
இந்துக்கள் மீது தேர்தல் வரி விதிக்கப்படுவதை எதிர்த்து அரங்கசீப்பிற்கு எழுதிய கடிதம், சிவாஜியின் தெளிவான தர்க்கம், பொறுமையான மனநிலை மற்றும் அரசியல் ஞானத்தின் தலைசிறந்த படைப்பாகும். அவர் ஒரு இந்து பக்திமான் என்றாலும், ஒரு முசல்மானிடத்திலும் உண்மையான புனிதத்தை அவரால் அடையாளம் காண முடிந்தது. எனவே அவர் பாபா யாகுத் என்ற இசுலாமிய புனித மனிதருக்கு கெலேசியில் தர்க்காவை நிறுவினார். அவரது சேவையில் அனைத்து மதங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைத்தன. அவர் குவாசி ஹைதர் என்ற முஸ்லீம் செயலாளரை நியமித்தார். சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர் முகலாயப் பேரரசின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.
சிவாஜியின் படையில் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். எந்த ஒரு பெண்ணை தொடவோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசலையோ, ஆசிரமத்தையோ கொள்ளையடிக்கவோ கூடாதென மராட்டிய படைவீரர்களுக்கு கண்டிப்பான கட்டளை இருந்தது. படையெடுப்பின் போது கைப்பற்றப்படும் முஸ்லிம்களின் புனித நூலான குரான் மரியாதையுடன் முஸ்லிகளிடம் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டிருந்தது.
(ஜதுனாத் சர்காரின், ‘சிவாஜியின் வீடு’ நூலிலிருந்து)
சிவாஜியின் முடிசூட்டு விழா மற்றும் அதற்குப் பிறகு (1674-1676) :
சிவாஜி முடிசூடிக்கொள்ள விரும்பியது ஏன்?
சிவாஜி முடிசூடாமல் இருப்பதன் நடைமுறை சிக்கல்களை சிவாஜியும் அவரது அமைச்சர்களும் அவர் நீண்ட காலமாகவே உணர்ந்திருந்தனர். சிவாஜி, பல பகுதிகளைக் கைப்பற்றியதுடன் ஏராளமான செல்வங்களைச் சேகரித்திருந்தார் என்பது உண்மை. அவருக்கு ஒரு வலிமையான தரைப்படையும் கடற்படையும் இருந்தது. மேலும் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாட்டை போலவே மனிதர்களது வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தி அவருக்கிருந்தது. ஆனால் கோட்பாட்டளவில் அல்லது முகலாயப் பேரரசரை பொறுத்தவரை அவர் வெறும் நிலக்கிழார் மட்டுமே. எந்தவொரு அரசரடனுமான சரிசமமான அரசியல் அங்கீகாரத்தை அவரால் பெற முடியவில்லை.
படிக்க:
♦ சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?
♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
சிவாஜி வெறும் தனிப்பட்ட நபராக இருந்தவரை தன்னுடைய ஆதிக்கத்திலுள்ள மக்களின் விசுவாசத்தையும் பக்தியையும் கோர முடியவில்லை. ஒரு அரசருக்கு இருப்பது போல புனிதத்தன்மை அவரது வாக்குறுதிகளுக்கு இல்லை. அவர் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியாது, சட்டப்பூர்வமாக மற்றும் நிரந்தரமாகவும் எந்த நிலத்தையும் அவரால் வழங்க முடியாது. அவரது வாளால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் அவரது சட்டபூர்வமான சொத்தாக மாற்ற முடியாது, நடைமுறையில் அவருக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவரது அதிகாரத்தின் கீழ் வாழும் மக்களால் முந்தைய அதிகார வர்க்கத்திடமிருந்த விசுவாசத்தை கைவிட முடியவில்லை அல்லது அவருக்கு கீழ்படிந்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் இருந்து விலக்கு பெற்றார்கள் என்பதையும் அவரால் உறுதிப்படுத்த முடியாது. அவருக்கான நிரந்தர அரசியல் ஆளுமையை ஒரு இறையாண்மையின் செயலாக சரிபார்க்கப்பட வேண்டும்.
காகா பட்டாவினால், சிவாஜி சத்திரியனாக அங்கீகரிக்கப்படுதல் :
ஆனால் இந்த இலட்சியத்தை அடைவதற்கு ஒன்று தடையாக இருந்தது. பண்டைய இந்து வேதங்களின்படி, சத்திரிய சாதியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே சட்டப்பூர்வமாக அரசராக முடிசூட்டப்பட்டு இந்து சடங்குகளின் மரியாதைக்கு உரிமை கோர முடியும். போன்ஸலேக்கள் சத்திரியர்களோ, அல்லது வேறு இரட்டை பிறப்பு கொண்ட சாதியினரோ அல்ல மாறாக வெறும் உழவர்கள் தான். சிவாஜியின் கொள்ளு தாத்தாவும் அப்படியான ஒருவராக தான் இன்னமும் கருதப்படுகிறார். ஒரு சூத்திரன் எப்படி சத்திரியனுக்கான சடங்குகளுக்கு ஆசைப்பட முடியும்? சிவாஜி ஒரு சத்திரியன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்த முடியும்.
ஆகையால், எதிர்ப்புகள் அனைத்தையும் அமைதியாக்க முதலில் திறமையான ஒரு பண்டிதரின் ஆதரவைப் பெறுவது அவசியமாக இருந்தது, அப்படி ஒருவர் விஸ்வேஸ்வரில் வாழ்ந்து வருவது தெரிந்தது. பெனாரஸை சேர்ந்த அவரது பட்ட பெயர் காகா பட்டா. சர்ச்சைக்குரிய பெரும் சமற்கிருத அறிஞரான அவருக்கு நான்கு வேதங்களிலும், ஆறு தத்துவங்களிலும், அனைத்து இந்து மத இலக்கியங்களிலும் புலமை இருந்தது. பிரம்ம தேவா என்றும் அந்த காலத்தின் வியாஸர் என்றும் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.
சிவாஜியின் புத்திசாலித்தனமான செயலாளார் பாலாஜி ஆவ்ஜி மற்றும் இதர அதிகாரிகளால் புனையப்பட்ட போன்ஸ்லேயின் வம்ச வரலாற்றை காகா பட்டா ஏற்றுக்கொண்டார். சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.
அவரது தடாலடியான இந்த அறிவிப்பிற்கு எராளமான பணம் கொடுக்கப்பட்டதுடன் சிவாஜியின் முடிச்சூட்டு விழாவின் முதன்மையான மதகுருவாகவும் அவர் மரியாதை செலுத்தப்பட்டார். அவரை வரவேற்க சதாரிவிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் சிவாஜியும் அவரது அதிகாரிகளும் சென்றனர்.
(சிவாஜியும் அவரது காலமும், நூலிலிருந்து – ஜாதுனாத் சர்கார்)
(தொடரும்)
இதன் முந்தைய பகுதிகள் :
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா