சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 9

சி.என்.அண்ணாதுரை
காட்சி : 13

இடம் : வீதி
உறுப்பினர்கள் : பட்டர்கள், சிட்னீஸ்

(பட்டர்களைத் தூது அனுப்புவது)

சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே நீங்கள் மேற்கொண்டுள்ள காரியம் மிக மிக முக்கியமானது ; மகத்தானது; புனிதமானது; மராட்டிய மண்டல ஏட்டிலே தனி இடம் பெறும் சிலாக்கியமான காரியம்.

பாலச்சந்திரப்பட்டர் : பூர்ண சந்திரனைப் பார்த்து ரசிக்கும்படி விளக்கு கொண்டு வந்து தருவது போல் இருக்கிறது தங்கள் பேச்சு. சிவாஜி மகாராஜனாக முடிதரித்துக் கொள்ள வேண்டுமென்பதில் எங்களுக்கு அக்கறை இல்லையா என்ன ?

கேசவப்பட்டர் : நாங்கள் மராட்டிய மண்ணிலே பிறக்கவில்லையா? எங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாமல் இருக்குமா?

பாலச்சந்திரப்பட்டர் : சிவாஜியின் உப்பைத் தின்று வாழும் நாங்கள் இந்த உதவிகூடச் செய்யாமல் இருப்போமா?

சிட்னீஸ் : பூரிப்படைகிறேன் பூசுரரே … உங்கள் மொழி கேட்டு மகிழ்கிறேன். மராட்டியத்துக்குப் புது வாழ்வு அளிக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

கேசவப்பட்டர் : பொறுப்பை மறந்துவிடக் கூடியவர்களா நாங்கள்?

சிட்னீஸ் : பொற்காலம் தோன்றப் போகிறது. உங்கள் பேருதவியால்.

பாலச்சந்திரப்பட்டர் : தோன்றாமல் என்ன?

சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே! மாவீரர் தலைவன் மணி முடி தரித்துக் கொள்வது கூடாது. ஏனெனில், அவர் சூத்திரர் என்று இங்கு சில சூது மதியினர் பேசினரே!

பாலச்சந்திரப்பட்டர் : சூதுமதியினர், சூழ்ச்சித் திறத்தினர் என்றெல்லாம் ஏன் அவர்களைத் தூஷிக்கிறீர் சிட்னீஸ்? அவர்கள் சாஸ்திரத்தை தானே எடுத்துக் காட்டுகிறார்கள்.

சிட்னீஸ் : இப்பேர்ப்பட்ட சமயத்திலா? இப்படிப்பட்ட காரியத்துக்கா?

கேசவப்பட்டர் : சமயம், சந்தர்ப்பம், தயவு , தாட்சண்யம், இவைகளை எல்லாம் பார்த்து நடந்துண்டால் சாஸ்திரம் நிலைக்குமோ சிட்னீஸ், சத்தியம் தழைக்குமோ?! தேவதாப்ரீதி முக்கியமான கடமையாயிற்றே. மற்றவர்களுக்கு எப்படியோ – முப்பிரிவினரான எமக்கு தேவதாப்ரீதிதான் முக்கியமான கடமை.

பாலச்சந்திரப்பட்டர் : வீண் விவாதம் ஏன் சிட்னீசிடம்? சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும்? வேதாகம விசேஷாதிகளைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா? வீரர். அவரிடம் பேசுவதானால் ரத, கஜ, துரக, பதாதிகளைப் பற்றிப் பேசலாம்.

சிட்னீஸ் : அது உங்களுக்குப் புரியாதே.

கேசவப்ப்பட்டர் : எங்களுக்கு அது ஏன் சிட்னீஸ்? நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா? சத்ரபதி சிவாஜிக்குச் சாஸ்திரோத்தமாக மகுடாபிஷேகம் நடந்தாக வேண்டும் என்று விரும்புகிறீர். அனைவருக்கும் அதே ஆசைதான். எங்களுக்கும் தான் இதற்கான சம்மதம், ஆதரவு, உத்தரவு பெற்றுக் கொண்டு வரவேண்டும், காசிவாசி காகப்பட்டரிடமிருந்து அவ்வளவுதானே?

சிட்னீஸ் : அவ்வளவுதான்.

கேசவப்பட்டர்: செல்கிறோம் காசி நோக்கி..

சிட்னீஸ் : சென்று கூறுங்கள் – காகப்பட்டரிடம், நமது வீரத் தலைவனின் குண விசேஷங்களை ஆற்றல் மிக்க நமது தலைவர் அடிமைத்தனத்தை ஓட்ட அரும்பாடுபட்ட வீரத்தை விளக்குங்கள். அவருடைய ஆற்றலைக் கண்டு பாரத் வர்ஷத்தை அடிமைப்படுத்திய பாதுஷாக்களெல்லாம் பயந்து போனதைக் கூறுங்கள். அவருடைய சொல் கேட்டால் சோர்ந்த உள்ளங்களிலேயும் புது எழுச்சி சேரும் என்பதைக் கூறுங்கள். ஏழை ஜாகிர்தாரின் மகன், ஏவல் செய்து பிழைத்தாக வேண்டியவன், உழவன். இவனால் என்ன சாதிக்க முடியும்’ என்று பலர் பலவிதமாகப் பேசிய போதிலும் சுதந்திரப் போரை நடத்தி மலைமலையாக வந்த எதிர்ப்புகளைத் தூள்தூளாக்கி மராட்டியத்தை மற்றாரிடமிருந்து மீட்ட மாண்பை எடுத்துச் சொல்லுங்கள்.

கேசவப்பட்டர் : சொல்கிறோம். சொல்கிறோம்… சொல்லாமலா இருப்போம்.

சிட்னீஸ் : கூடுதலாகக் கூற வேண்டாம் மறையவரே! உண்மையை உரைத்தால் போதும். நமது நாட்களிலே நாம் மராட்டியத்திலே கண்ட காட்சியைக் கூறினால் போதும். சிவாஜியைக் காசிவாசி சாமான்யர் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு சாம்ராஜ்யத்தின் சிருஷ்டிகர்த்தா நம் சிவாஜி என்பதை அவர் அறிய வேண்டும். அஞ்சாநெஞ்சனின் அறிவாற்றலைக் கூறுங்கள். அறநெறி கொண்டவர் என்பதைக் கூறுங்கள்.

கேசவப்பட்டர் : தாராளமாக! பசு, பெண்டீர், பிராமணர் எனும் மூன்று சிரேஷ்ட ஜீவன்களிடமும் பக்தி கொண்ட சனாதனி சிவாஜி என்பதையும் கூறுகிறோம்.

பாலச்சந்திரப்பட்டர் : கூறவேண்டும் கேசவப்பட்டரே ! சிவாஜியின் வீர தீர பராக்கிரமத்தை மட்டும் கூறினால் போதாது. அப்படிச் சொன்னால் இணையில்லா வீரர் அனேகரை அறிவேன் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவார்.

கேசவப்பட்டர் : அப்படிச் சொல்லும். பாலச்சந்திரரே! நாம் அதிகமாக விளக்க வேண்டியது சிவாஜியின் வீரத்தைப் பற்றி அல்ல. அவருடைய பகவத் பக்தி. சனாதன சேவா உணர்ச்சி, பிராமண பக்தி இவைகளை விரிவாகக் கூறினால்தான் காகப்பட்டரின் மனதை மகிழ்விக்க முடியும்.

சிட்னீஸ் : மறைவல்லோரே, எம் முறையில் பேசினால் ஜெயம் நிச்சயமோ, அம்முறையில் பேசி காகப்பட்டரின் சம்மதம் பெற்று வாருங்கள். மராட்டியத்துக்குப் புதிய ஜீவன் அளியுங்கள். போய் வாருங்கள்.

(சொல்லிவிட்டு சிட்னீஸ் போகிறான். பாலச்சந்திரப்பட்டர் அவன் போன திசையைப் பார்த்து முறைத்து நிற்க)

கேசவப்பட்டர் : ஒய், புறப்படும் புறப்படும்! என்ன ஒய் அவன் போன திசையை நோக்கி ஏன் அப்படி பார்க்கிறீர்?

பாலச்சந்திரப்பட்டர்: முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்குப் போக வேண்டுமாம்! சூத்ரனுக்கு ராஜாபிஷேகம்! அதற்கு நாம் பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம். அவ்வளவு மண்டைக்கர்வம் ஒய்! யுத்தத்திலே ஏதோ ஜெயம் கிடைத்துவிட்டதாலேயே இந்த வீரர்களெல்லாம் கொக்கரிக்க ஆரம்பிச்சுட்டா .

கேசவப்பட்டர் : ஏன் ஒய்! போக சம்மதம் இல்லேன்னா அதை அப்பவே அவனிடம் சொல்லிவிடுவது தானே?

பாலச்சந்திரப்பட்டர் : மந்த புத்தி ஒய், உமக்கு போக இஷ்டமில்லேன்னா வேறு ஏவனாவது போஜன பிரியனாகப் பிடித்து அனுப்பிவிடமாட்டானா நாம் போனால்தானே நல்லது. இந்தக் காரியத்தை எந்த விதமாக முடிக்க வேண்டுமோ அவ்விதம் செய்ய காகப்பட்டரிடம் சம்மதம் அல்லவா வேண்டுமாம் பட்டாபிஷேகத்துக்கு. வாரும் ஒய் காகப் பட்டரிடம் சென்று கூறுவோம் மராட்டியத்தின் நிலையை .. மட்டம் தட்டுவோம், இந்த மாவீரர்களை …

கேசவப்பட்டர் : ஒய்! நீர் பேசுவதைப் பார்த்தால் விபரீதமாக இருக்கிறதே. சிவாஜி பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்குக் காகப்பட்டரின் சம்மதத்தை எப்படியாவது பெற்று வருவதாகக் கூறினீர் அவனிடம்.

பாலச்சந்திரப்பட்டர்: ஆமாம் அவனிடம் சொன்னேன். அசடு ஒய் நீர்… சொன்னால்?

கேசவப்பட்டர் : அப்படி என்றால்?

பாலச்சந்திரப்பட்டர் : ராஜ்யம்… பூஜ்யம் ஒய்! பூஜ்யம். அவா ஆசையிலே மண் விழச் செய்கிறேன். வாரும்.

(போகிறார்கள்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க