விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழகனூர் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் அதிகாரிகளின் துணையோடு அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இந்த கிராமத்தையே கபளீகரம் செய்திருக்கிறார். “கண்ணும் கண்ணும்” படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் “கிணத்தைக் காணோம்” காமெடி காட்சியைப்போல “வீட்டையே காணோம்” என்று சோழகனூர் கிராம மக்கள் அலறியடித்து போராடியிருக்கிறார்கள்.

சோழகனூரில், வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மத்திய மாநில அரசுகள் ஒதுக்கிய பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடு கட்டித் தருவதில் சரவணன் கும்பல் பெரும் முறைகேடு செய்திருக்கிறது. இவ்வூரில் உள்ள இரு சமுதாயப் பிரிவினர்களுக்குமே சுமார் 15 வீடுகளைக் கட்டாமலேயே கட்டிமுடித்ததாகவும், மேலும் பத்து வீடுகள் அரைகுறையாக கட்டி உள்ள நிலையில் முழுமையாக முடிந்துவிட்டதாகவும் கணக்கு காண்பித்து மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கியமாக ஓவர்சீயர் என்று சொல்லக்கக்கூடிய  மேற்பார்வையிடும் அதிகாரியோ கட்டாத வீட்டை கட்டி முடித்து விட்டதாகவும், அதை தன் கண்ணால் பார்த்து விட்டதாகவும்  ஒப்புதல் அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதுமட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்டம், தெருவிளக்கு, பாசன வாய்க்கால்கள் அமைப்பது மற்றும் பராமரிப்பது, குடிதண்ணீர் வழங்குவது உட்பட அரசின் அத்தனை நலத்திட்டங்களிலும் முறைகேடு செய்து இந்த ஊராட்சியே ஊழலில் நாறிக் கொண்டிருக்கிறது.

மேலும், கிராம சபைக் கூட்டம் சரிவர நடத்துவது இல்லை. அப்படியே நடத்தினாலும் ஊருக்கு தெரிவிப்பதும் இல்லை. தனக்கு ஆதரவானவர்களை மட்டும் கொண்டு நடத்தியதாக கணக்குகாட்டி விடுவது.  இதனால் கிராமத்தின் வளர்ச்சிப்பணிகள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து எதுவும் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை. இதுவே இந்த ஊரின் எழுதப்படாத நடைமுறை. இறுதியாக தனது நண்பர் கட்டி வரும் கடைக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தக் கட்டிடம் இடையூறாக இருப்பதால் அதனை இடிக்கவும் துணிந்திருக்கிறார். இந்த சம்பவம்தான் மக்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது.

இத்தனை குற்றங்களையும் செய்த ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கடந்த மாதம் மனு கொடுத்தபோது நடவடிக்கை எடுப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஊராட்சியில் நடைப்பெற்றுள்ள வேலைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற தகவல்களை கேட்டுபெற்று அதனடிப்படையிலும் உரிய ஆதாரங்களுடன் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிராம மக்களின் இந்த நடவடிக்கைக்கு பிறகு மனு கொடுக்க யாரெல்லாம் சென்றார்களோ அவர்களை எல்லாம் ரவுடிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களைக் கொண்டு மிரட்டியும், அதே சமயம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவராக சந்தித்து பணத்தை திருப்பி தருவதாகவும் போராட்டத்திற்கு யார் கூப்பிட்டாலும் போக வேண்டாம் என்று அவர்களை பணிய வைக்கும் முயற்சியையும் செய்தனர். ஆனால் இந்தப் போராட்டத்தை வழி நடத்துவது மக்கள் அதிகாரம் அமைப்புதான் என்று தெரிந்த பிறகு அவர்கள் பின்வாங்கிக் கொண்டனர்.

நடந்திருப்பது ஊழல்… கொள்ளை… இந்த ஊழலுக்கு எத்தனை பேர் ஆரத்தி எடுப்பார்கள் என்று தெரியவில்லை.  இறுதியாக இவர்கள் கையில் எடுத்த ஆயுதம் சாதி. ஊராட்சி செயலாளரோ, தான் சார்ந்த சாதியைச் சொல்லி “என் வளர்ச்சி பிடிக்காமல் காழ்ப்புணர்வில் செய்கிறார்கள்” என்று புது புரளியை கிளப்பி சாதி மோதலை ஏற்படுத்தவும் முயற்சித்தார். அனைத்தும் இரு சமூகப் பிரிவு மக்களின் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டது. ஏற்கெனவே அதே ஊரின் பள்ளிக்கூட பிரச்சினையில் அமைப்பின் வழிகாட்டலில் ஒற்றுமையுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

உண்மைநிலை இப்படி இருக்க சாதிய கண்ணோட்டத்தில் அணுகுவதாக சொல்வது நகைப்புக்குரியது. எந்தச் சாதியைக் காட்டி அனுதாபம் தேட செயலர் சரவணன் முயற்சிக்கிறாரோ அதே, “சுயசாதி” மக்களைத்தான் அதிகமாக சுரண்டி சொத்து சேர்த்திருக்கிறார். .

இப்பேர்பட்ட பகாசுர கொள்ளையில் ஈடுபட்ட – அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 25.09.2019-ம் தேதி மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து  29-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 30.09.2019 அன்று விழுப்புரத்திலிருந்து சோழகனூர் கிராமம் வழியாக செல்லும் அரசு பேருந்தை ஊர் மக்கள் சிறைபிடித்து, ஊழல் செய்த அதிகாரிகளையும், ஊராட்சி செயலாளரையும் கைது செய்ய வேண்டும்; இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசு, “அனைவரும் கலைந்து செல்லுங்கள், இல்லை என்றால் அனைவர் மீதும் வழக்குப்போட்டு சிறையில் தள்ளிவிடுவோம்” என்று மிரட்டியது. போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாத கிராம மக்கள், “கோடிகளில் ஊழல் முறைகேடு செய்துள்ளனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் மூன்று முறை மனு கொடுத்தும் ஊழல் குற்றவாளிகளின் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்கத் துப்பில்லை, பாதிக்கப்பட்ட எங்கள் மீது வழக்கு போடுவேன், கைது செய்வேன் என்கிறீர்களே வெட்கமாக இல்லையா? வழக்குப் போடுங்கள்… நாங்கள் அதற்கு தயாராகத்தான் இருக்கிறோம்” என்று சரமாரியாக கேள்வி கேட்ட மக்கள், “சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  வரும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம்” என்றவுடன் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் போலீசார் ஒதுங்கிக் நின்றனர்.

போராட்டம் தொடரவே AD மற்றும் BDO – வர, அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் “ஊர் பஞ்சாயத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அதுவரை இந்த ஊராட்சி செயலாளர் மூலம் எந்த வேலையும் நடக்கக் கூடாது; ஆய்வு செய்து தண்டனை நிறைவேற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் அரசாங்கத்திற்கு எந்த ஒத்துழைப்பும் தர மாட்டோம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்போம்” என்றும் மக்கள் உறுதியாகக் கூறினர்.

மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள்.

மக்கள் போராட்டத்தின் வீரியத்தையும் நியாயத்தையும் அறிந்த அதிகாரிகள், “கண்டிப்பாக ஊராட்சி செயலாளரை  உடனடியாக இடமாற்றம் செய்வதாகவும், ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த ஊழல் முறைகேடுகளை 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்துவோம்” என்றும் வாக்குறுதி அளித்தார்கள்.

அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிடுவதாகவும், எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடரலாம் என்றும் ஊர்மக்கள் முடிவெடுத்துள்ளனர். முதல் கட்டமான இந்த வெற்றி மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றாலும், சாதிய பாகுபாடுகளை கடந்து ஊழலுக்கு எதிராக  இரு பிரிவினரும் இணைந்து நடத்தியதால்தான் இது சாத்தியமானது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஊர் மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.

ஊழல் தனிநபர்களின் பிரச்சனையல்ல!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் – முறைகேடுகள் கோலியனூர் ஒன்றியத்தின் ஒரு முன்மாதிரிதான். இதே கோலியனூர் ஒன்றியத்தில் 45 பஞ்சாயத்துக்கள் உள்ளது. அதிலுள்ள சோழகனூர் பஞ்சாயத்தில் மட்டுமே இவ்வளவு முறைகேடுகள் என்றால் இந்த 45 பஞ்சாயத்திலும் எவ்வளவு கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.

தமிழகம் முழுவதும், நாடு முழுவதும்  இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இப்படித்தான் மக்களின் வரி பணத்தை சூறையாடி கொழுக்கிறார்கள். மற்றொருபுறம் கார்ப்பரேட்டுகளுக்கும் வாரி வழங்குகிறார்கள்.

அரசுக் கட்டமைப்பு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக கூறிக்கொண்டு, அதற்காக குறைந்தபட்சம் வகுக்கப்பட்ட கொள்கைகளையும், திட்டங்களையும் அவர்களே மதிக்காமல், அத்திட்டங்களை முழுமையாக அமுல்படுத்தாமலும், அதற்காக ஒதுக்கப்படும் சிறிதளவு நிதியையும் கொள்ளை அடித்துவிட்டு உழைக்கும் மக்களைப் பற்றி கவலையின்றி சுகபோகமாக வாழ்கின்றனர்.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

இந்த ஊழல் முறைகேட்டினை சிறிய பிரச்சனையாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது. ஒட்டுமொத்த சமுக பொராளாதாரத்தையே சீர்குலைக்கும் செயலாகும். கீழிருந்து மேல் வரை சீரழிந்து மக்களுக்கு எதிரியாகிப்போன இந்த கட்டமைப்பு தோற்றுவிட்டதன் வெளிப்பாடு. இதனை தூக்கியெறிய உழைக்கும் மக்களாக ஒன்று திரள்வோம்..  மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டமைப்போம்.. உங்கள் ஊரின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.!


தகவல்:
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.
தொடர்புக்கு : 94865 97801

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க