Tuesday, May 17, 2022
முகப்பு செய்தி இந்தியா ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !

ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !

முடக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு தொலைதொடர்பு மற்றும் அவசர செய்திகள் பகிர்வதற்கு தன்னால் முடிந்த வகையில் உதவி புரிந்துள்ளார் இந்த இளைஞர்

-

ந்திய ஊடகங்களில் ஒரு பிரிவினர் ஜம்மு காஷ்மீரில் “சகஜ நிலை” திரும்பி விட்டது என்கின்றனர். காஷ்மீரின் பல பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவை மீண்டும் துவங்கி விட்டது என்றும், பிரிவினைவாதிகள் மட்டுமே அங்கே பதற்றம் நீடிப்பதாக கூறிவருகிறார்கள் என்றும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டார்கள் என்றும் மோடியின் ஆசி பெற்ற ஊடகங்கள் நம்மிடம் கூறுகின்றன. ஆனால், இதையெல்லாம் மறுக்கிறார் ஜாவித் பார்ஸா.

Javid Parsa
ஜாவித் பார்ஸா

“இது அனாதைகளின் நிலம். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் 31 வயதான ஜாவித் பார்ஸா. தொழில் மேலாண்மையில் முதுகலை படித்துள்ள பார்ஸா முன்பு அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். 2014-ம் ஆண்டு கார்ப்பரேட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு காஷ்மீர் திரும்பிய ஜாவித், தற்போது சங்கிலித் தொடர் உணவங்கள் நடத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஊக்கமாகச் செயல்பட்டு மெய்நிகர் உலகின் நட்சத்திரமாக இருந்த ஜாவித், தற்போது அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி மெய் உலகிலும் ஒரு நட்சத்திரமாக மிளிர்கிறார்.

ஊடகங்கள் சொல்லும் பொய்களுக்கு மாறாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அம்மாநிலம் முழுக்க மருந்துப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் (குறிப்பாக காவல் நிலையங்களில்) தொலைபேசி சேவை இயங்குகின்றது. தொலைபேசிகள் இயங்கும் இடங்களிலும் வெளிநாட்டு அழைப்புகள் செய்ய முடியாது. எனினும், இணையம் முழுமையாக இயங்கவில்லை. வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கும் தங்கள் உறவினர்களை காஷ்மீரிகளால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதே போல் காஷ்மீருக்கு வெளியே உள்ள ஊடகங்களால், குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்களால், அம்மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

படிக்க:
காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !
♦ ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !

“இந்த இணைய யுகத்தில் தொலைத் தொடர்பு சேவை ரத்து என்பது வெறுமனே தகவல் தொடர்பை தடுப்பதோடு முடிவதில்லை. அது உடலரசியல் தொடர்புடையது. இந்த தடையின் மூலம் அரசு உங்களை உடலாலும் அரசியலாலும் கட்டுப்படுத்துகிறது” எனக் குறிப்பிடும் புதுதில்லியைச் சேர்ந்த பேராசிரியர் கௌஹர் ஃபாரூக், “ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல அவசர ஊர்தியை அழைக்க வேண்டுமென்றாலும் தொலைபேசி தேவை. இதைத் தடுப்பதால் ஒரு தனிநபரின் வாழும் உரிமையைத் தடுக்கிறீர்கள்” என்கிறார்.

மேலும், “இணையம் மற்றும் தொலைபேசி சேவையைத் தடுத்ததன் மூலம் காஷ்மீரிகளின் பௌதீக இருப்பை இந்திய அரசு குலைத்து அந்தப் பகுதியையே வெறும் மந்தைகளை அடைக்கும் பட்டியைப் போல் ஆக்கியுள்ளது. நிலத்தையும் வான் பரப்பையும் ஏற்கெனவே அரசு கைப்பற்றியிருந்த நிலையில், தொலைத் தொடர்பு ஒரு சிறிய ஜன்னலைத் திறந்து வைத்திருந்தது… இப்போது அதுவும் மூடப்பட்டு விட்டது” என்கிறார் கௌஹர் ஃபாருக்,

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

காஷ்மீரின் மீது இரும்புப் போர்வை போர்த்தப்பட்ட அன்று ஜாவித் பார்ஸா தனது தொழிலின் நிமித்தம் தில்லிக்கு பயணமாகியிருந்தார். தனது தொழில்ரீதியான சந்திப்புகளை முடித்து விட்டு ஈத் பண்டிகைக்காக மீண்டும் ஊர் திரும்ப உத்தேசித்திருந்தார். விமானத்தில் இருந்து இறங்கியதும் அவரது கைபேசிக்கு ஏராளமான அழைப்புகள் வந்துள்ளன. காஷ்மீருக்கு வெளியில் இருப்பவர்கள் தங்கள் சொந்தங்களின் நலனை அறிந்து கொள்ள செய்த அழைப்புகள் அவை.

“அப்போதே நான் முடிவு செய்து விட்டேன். அங்கேயே தங்கி மக்களை இணைக்க வேண்டும் என” எனக் குறிப்பிடுகிறார் ஜாவித். உண்மையில் வளமான கார்ப்பரேட் வேலையை விட்டு தெருவோர உணவகங்களைத் துவங்கும் முடிவுக்கு ஜாவித் வந்ததற்கும் கூட இதுதான் காரணம். “நான் வேலையை விடும்போது மக்களோடு இணைந்திருப்போம் என முடிவெடுத்தேன். அந்தக் காலங்களில் மக்கள் உணவகங்களில் வந்து ஒருவருக்கொருவர் அறிமுகமாகி அரசியல் பேசிக் கொள்வார்கள். அந்த சூழலை மீண்டும் உருவாக்க எண்ணினேன். எனவே தான் தெருவோர உணவகங்களைத் துவங்கினேன்” எனக் குறிப்பிடுகிறார் ஜாவித்.

காஷ்மீர் சந்தித்துக் கொண்டிருந்த நெருக்கடியான சூழலுக்கு ஜாவித்தின் இயல்பான குணம் ஒரு தீர்வாக அமைந்தது. அவர் மக்களை இணைக்கத் துவங்கினார்; அதற்கு ஜாவித்தின் இணைய பிரபலமும் கைகொடுக்கத் துவங்கியது. #KashmirSOS என்கிற ஹேஷ்டேகின் கீழ் உதவி தேவைப்படுகின்றவர்களையும் உதவக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களையும் இணைக்கத் துவங்கினார் ஜாவித். இப்போது அந்த ஹேஷ்டேக் வைரல் ஆகி மக்களை முடிந்தவரை நெருக்கமாக கொண்டு வந்துள்ளது.

படிக்க:
நூல் அறிமுகம் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ?
♦ பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !

எங்கெல்லாம் தொலைபேசி இயங்குகின்றதோ அங்கிருந்தெல்லாம் ஜாவித்துக்கு அழைப்பு வரும். வெளிநாட்டில் யாரை இணைக்க வேண்டுமோ அவர்களோடு கான்பிரன்ஸ் கால் மூலமாக இணைக்கிறார் ஜாவித். இந்த முறையில் கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் சுமார் 1500 தொலைபேசி உரையாடல்களை இணைத்துள்ளார். நாளொன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை இணைத்துள்ளார். சில சந்தர்பங்களில் தொலைபேசி வலைப்பின்னலுக்கு வெளியே இருப்பவர்களுக்கு வரும் கடிதங்களையும் அவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

பெரும்பாலான தொழில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளைக் கூட சமாளிக்க இயலாத நிலையில் தவிக்கும் காஷ்மீரிகளுக்கு உதவ நிதிதிரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் ஜாவித். இதுவரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு திரட்டியுள்ள அவர், அதைக் கொண்டு தேவைப்படுகின்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

எல்லாம் சுமூகமாகச் சென்று கொண்டிருப்பதாக மத்திய அரசு சொல்லும் பொய் மூட்டைகளை இது போன்ற செய்திகளே உடைத்துப் போடுகின்றன. உண்மையில் காஷ்மீர் இன்றைக்கு உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையாக இருக்கிறது… புகைந்து கொண்டிருக்கும் அதன் உச்சி முகட்டை தங்கள் பிட்டங்களால் இரண்டு கனவான்கள் அடைத்து கொண்டு அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

வினவு செய்திப் பிரிவு
– சாக்கியன்
செய்தி ஆதாரம் : அல்ஜசீரா 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க