மாமனிதர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்துக்களும் அவரது சிறப்பான மக்களுக்கான பங்களிப்பும் இன்றுவரை யாரிடமும் சரியாகப் போய் சேரவில்லை என்பது பெரும் மனக்குறையே. இந்தியாவில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அத்துணை பேரும் அம்பேத்கரின் சேவைக்கு நன்றியும் நன்மதிப்பும் கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அவரது இந்நூலில் ஆதிப்பழங்குடிகள் குற்றப் பரம்பரையினர் தீண்டப்படாதோர் ஆகிய மூன்று சமூகங்களைக் குறித்தும் அவற்றின் துயரங்கள் குறித்தும் பதிவு செய்கிறார். இந்து பார்பனிய நாகரிகமானது இம்மக்களை சமூக நிலையிலும் அரசியல் அதிகாரத்திலும் இழிவானதாகவும் அடிமைகள் போலவும் நடத்தி வருகிறது.

1931-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 8 கோடி மக்கள் அன்றைய நிலையில் இத்தகைய கொடுமையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அம்பேத்கர் பதிவு செய்கிறார். உலகெங்கிலும் நாகரிகமானது தனது இனம் நிறம் கொண்டிருந்த மேலாண்மையின் வேறுபாடும் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு ரோமானிய இனத்திற்கு ஜெர்மானிய இனமும், ஐரோப்பிய சில இனங்களும் காட்டுமிராண்டிகளாகத் தெரிவார்கள். ஐரோப்பியனுக்கு செவ்விந்திய குடிகள் நாகரிகமற்றவர்களாக தெரிவார்கள். அலெக்ஸ் ஏலி குறிப்பிடுவது போல ஒரு ஆப்பிரிக்க இளைஞனுக்கு தலைவன் சொல்லிக் கொடுக்கும் பாடத்தில் முதலாவது எங்காவது அவித்த கோழியின் வாடை அடித்தால் கவனமாக இரு. அங்கே வெள்ளையன் ஒழிந்து கொண்டு இருப்பான். நம்மை பிடித்துக்கொண்டு போக என்று எச்சரிக்கை செய்கிறார்.

ஆப்பிரிக்கனை பொறுத்தமட்டில் வெள்ளையர்கள் காட்டுமிராண்டிகள். அங்குள்ள உருவமும் நிறமும் உருவாக்கிய வேறுபாட்டை சாதி என்னும் கொடுமையும் சேர்த்து கொடூர வகைப்பாட்டை கற்பிக்கிறது இந்து கலாச்சாராம் இந்தியாவில்.

புரிநூல் போடுவதாலும் சடங்குகள் செய்வதாலும் தான் கடவுளுக்கு மேலானவனாகி, சமூகத்தின் பெருந்திரள் மக்களை மிருகங்களை விட கேவலமாக பார்த்து, ஊருக்கு வெளியே தள்ளிவைத்து சட்டம் செய்து கொள்கிறான். இக் கொடூரத்தை தன் மதத்தின் புனித தன்மைக்காக என்றும் சொல்லிக் கொள்கிறான்.

பழங்குடிகள் தீண்டத்தகாதோரின் கலாச்சாரம், மொழி, உணவுப் பழக்கம் எல்லாம் இவர்களுக்கு தீட்டுக்களாகின்றன. இந்துத்துவத்தின் கொடூரம் அதோடு நிற்காது. ஊருக்கு வெளியே தள்ளிவைக்கும் குளத்தில் தண்ணீர் எடுக்க விடாது, உணவுக்கான வழியை அடைக்கும், வறுமையே என்றும் வாழ்க்கையாக்கும். எல்லா வழிகளையும் அடைத்து விட்டு, தங்களின் மதக் கலாச்சார நடமுறைக்கு வரத் தகுதியற்றவர்கள் என்று அநியாயவாதம் பேசி, எண்ணிக்கைகாக மட்டும் மதத்தில் வைத்துக் கொண்டு எல்லைக் கோடுகளை என்றைக்கும் வைக்கும்.

இந்தக் கொடுமை வடிவத்தை அம்பேத்கர் அவர்கள் உலகுக்கு எடுத்துக்காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை விழித்தெழச் செய்தார்.

இவர்கள் பெருமிதம் கொள்ளும் ஆன்மீக ஞானம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அம்பேத்கர் சுட்டிக்காட்டுவது போல இந்து நாகரிகத்தில் மெய்ஞ்ஞான குப்பையைத் தவிர வேறு இல்லை. அறிவியல் தொழில்நுட்பம் ஏதும் எல்லோரையும் சென்றடைந்ததாகவும் இல்லை.

அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தலைப்புகளை மட்டும் இத் தொகுப்பில் தந்திருக்கிறோம். “அம்பேத்கரை படித்தறிக”… (நூலின் பதிப்புரையிலிருந்து)

… சாதியின் அடிப்படை விதிகள் யாவை, சாதி என்பது எதில் அடங்கியுள்ளது என்ற கேள்விக்கு உறுதியான விடையளிப்பவை பிராயச்சித்தம் தொடர்பான விதிகளே. எந்த விதிகளை மீறினால் பிராயச்சித்தம் கிடையாதோ அவைதாம் சாதியின் ஆன்மா ஆகும். எவற்றை மீறுவதற்கு மிகக் கடுமையான பிராயச்சித்தம் செய்தாக வேண்டுமோ அவைதாம் சாதியின் உடலாகும். ஆகவே சாதிக்கு நான்கு அடிப்படை விதிகள் இருப்பதாகத் தயங்காது கூறலாம். (அ) இந்துச் சமயத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதும், (ஆ) திருமணம், (இ) உணவு, (ஈ) தொழில் ஆகியவை தொடர்பான குறிப்பிட்ட சில விதிமுறைகளுக்குக் கட்டுண்டிருப்பதுமான ஒரு சமூகக் குழுவே சாதி என்று இலக்கணம் கூறலாம். இத்தோடு தனித்தன்மையையும் சேர்த்துக் கொள்ளலாம், அதாவது தன்னை இனங்காட்டுகிற ஒரு பொதுப் பெயரைப் பெற்றுள்ள சமூகக் குழு எனலாம்.

திருமணத்தைப் பொறுத்தவரை அகமணம்தான், அதாவது சாதிக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் விதிமுறை. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடையே கலப்புத் திருமணம் கூடவே கூடாது. சாதியின் முழுக் கட்டமைப்புக்குமான முதற் கருத்து. மிக அடிப்படையான கருத்து இதுவே.

உணவைப் பொறுத்தவரை, ஒருவர் தன் சாதியைச் சேராத எவரிடமிருந்தும் உணவு பெற முடியாது, அவருடன் சேர்ந்துண்ண முடியாது என்பதே விதி. ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளக் கூடியவர்கள்தான் சேர்ந்துண்ணவும் முடியும் என்பது இதன் பொருள். மண உறவு கொள்ள முடியாதவர்கள் சேர்ந்துண்ண முடியாது. அதாவது சாதி என்பது ஒரு அகமண அலகு மட்டுமன்று, அது ஒரு கூட்டுச் சமுதாய அலகுமாகும்.

தொழிலைப் பொறுத்தவரை, ஒருவர் தன் தன் சாதியின் பரம்பரைத் தொழிலைத்தான் செய்யவேண்டும்; சாதிக்குத் தொழிலேதும் இல்லையென்றால் தந்தையின் தொழிலைச் செய்து வரவேண்டும் என்பது விதி.

ஒருவரின் தகுநிலையைப் பொறுத்தவரை அது நிலையானது, வழிவழியாக வரப்பெறுவது. ஒருவரின் தகுநிலை அவர் சார்ந்த சாதியின் தகுநிலையால் நிர்ணயிக்கப்படுவதால் அவரது பெற்றோர் சார்ந்த சாதியின் முத்திரை குத்தப்பட்டு விடுவதால், அது வழிவழியாக வரப்பெறுவது என்கிறோம். ஓர் இந்து தன் சாதியை மாற்றிக் கொள்ள முடியாது என்பதால் தன் தகுநிலையையும் மாற்றிக் கொள்ள முடியாது. ஓர் இந்து ஒரு சாதியில் பிறக்கிறார், பிறந்த சாதியைச் சேர்ந்தவராகவே இறந்தும் போகிறார். ஓர் இந்து சாதியை இழந்தால் தன் தகுநிலையை இழக்கிறார். ஆனால் அவர் ஒரு புதிய அல்லது மேம்பட்ட அல்லது வேறான தகுநிலையை ஈட்ட முடியாது.

ஒரு சாதிக்கென்று ஒரு பொதுப்பெயர் இருப்பதன் முக்கியத்துவம் என்ன? அவசியமான இரு கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால் இந்த முக்கியத்துவம் தெளிவாகத் தெரியவரும். இந்த இரு கேள்விகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான விடை அளித்தல் சாதி என்னும் இந்நிறுவன ஏற்பாட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள இன்றியமையாதது. சமூகக் குழுக்கள் ஒழுங்கமைந்தோ, ஒழுங்கமையாமலோ உள்ளன. குழுவில் உறுப்பினராய் இருப்பதும், குழுவில் சேருவதும், அதைவிட்டு வெளியேறுவதுமான நிகழ்வும் திட்டவட்டமான சமூக விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கும்போது, குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பாகக் குறிப்பிட்ட சில கடமைகளையும் உரிமைகளையும் அவசியப்படுத்தும்போது, அக்குழுவை ஒழுங்கமைந்த குழு எனலாம்.

ஒரு குழுவில் சேரும் உறுப்பினர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும், அக்குழு கூடி நிறைவேற்ற வேண்டிய நோக்கங்களையும் முழுமையாகத் தெரிந்து கொண்டு சேரும்போது, அது ஒரு விரும்பிச் சேர்ந்த குழுவாகும். இவற்றில் தனிப்பட்ட ஒருவர் தானாக விரும்பி எதையும் செய்யாமலே உறுப்பினராகி விடுகிறார், தன்னால் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாத சமூக விதிமுறைகளுக்கும் பாரம்பரியங்களுக்கும் உட்பட்டவராகி விடுகிறார்.

சாதி என்பது மிகவும் ஒழுங்கமைந்த ஒரு சமூகக் குழுச்சேர்க்கை என்பது கூறாமல் விளங்கும். அது ஒரு தளர்வான அல்லது நிலையில்லாத அமைப்பன்று. இதேபோல் சாதி என்பது விரும்பிச் சேராத ஒரு குழுச்சேர்க்கை என்பதையும் சொல்லத் தேவையில்லை. எந்த இந்துவும் ஒரு சாதியில் பிறந்து அந்தச் சாதியைச் சேர்ந்தவராகவே இறக்கிறார். சாதியில்லாத இந்து எவரும் இல்லை. இந்துவால் சாதியிலிருந்து தப்பமுடியாது; பிறப்பிலிருந்து இறப்புவரை சாதிக்குக் கட்டுண்டிருப்பதால், அவர் தன்னால் கட்டுப்படுத்த முடியாத சாதிக்குரிய சமூகவிதிகளுக்கும் பாரம்பரியங்களுக்கும் உட்பட்டவராகிறார்.

ஒரு சாதிக்கென்று தனியாக ஒரு பெயர் இருப்பதன் முக்கியத்துவம் என்னவென்றால், இப்பெயர்தான் சாதியை ஒழுங்கமைந்த குழுச்சேர்க்கையாகவும் விரும்பிச் சேர்க்காத குழுச் சேர்க்கையாகவும் ஆக்குகிறது. ஒரு சாதிக்கென்று வேறுபட்டதொரு தனிப்பெயர் இருப்பது சாதியை நிரந்தர வாழ்வும் தனிக்கூறு எனும் முத்திரையும் கொண்ட தொழிற்கழகம் போன்றதாக்கிவிடுகிறது. தனித்தனிச் சாதிகளுக்குத் தனித்தனிப் பெயர்கள் இருப்பதன் முக்கியத்துவத்தைச் சாதி குறித்து எழுதிய எழுத்தாளர்கள் போதிய அளவுக்கு உணரவில்லை. ஆகவே, சாதிச் சமூகக் குழுக்களுக்குரிய ஒரு தனிச்சிறப்பான பண்புக்கூறு ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கிறது. இருந்தாக வேண்டும் என்பதை அவர்கள் பார்க்கத் தவறிவிட்டார்கள்.

பல நாடுகளிலும் இருக்கிற பல சமூகக் குழுக்களை இந்தியாவில் உள்ள பல்வேறு சாதிகளுக்கும் சமன்படுத்த முடியும்; இவற்றின் சமதையாகக் கருதவும் செய்யலாம். சமூகக் குழுக்கள் என்ற முறையில் மண்பாண்டம் செய்கிறவர்களும் சலவைத் தொழிலாளர்களும் அறிவாளர்களும் எங்கெங்கும் இருக்கிறார்கள். ஆனால் ஏனைய நாடுகளில் அவர்கள் ஒழுங்கமையாத, விரும்பிச் சேர்ந்த குழுக்களாகவே இருந்துள்ளார்கள்; இந்தியாவிலோ ஒழுங்கமைந்த, விரும்பிச் சேராத குழுக்கள் ஆகிவிட்டார்கள்; அதாவது சாதிகள் ஆகிவிட்டார்கள். வேறு நாடுகளில் இந்தச் சமூகக் குழுக்களுக்குப் பெயர் தரப்படவில்லை, இந்தியாவில் தரப்பட்டது என்பதே காரணம். சாதி சூடியுள்ள பெயர்தான் அதற்கு நிலைத்தன்மையும் தொடர்ச்சித் தன்மையும் தனித்தன்மையும் அளிக்கிறது. அதன் உறுப்பினர்கள் யார் என வரையறுப்பதே பெயர்தான். ஒரு சாதியிற் பிறந்தவர் பெரும்பாலும் தன் பெயருடன் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொள்கிறார்.

படிக்க:
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
உ.பி : கறி பிரியாணி பரிமாறிய ‘குற்றத்துக்காக’ 23 இசுலாமியர்கள் மீது வழக்கு !

சாதியானது அதன் விதிமுறைகளையும் கட்டுப்பாட்டுகளையும் செயலாக்குவது பெயரால்தான் எளிதாகிறது. இது இரு வழிகளில் நடைபெறுகிறது. முதலாவதாக, தனிமனிதனின் துணைப் பெயராகிற சாதிப்பெயரானது, விதியை மீறுகிற எவரும் தான் வேறு சாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லி ஏமாற்றிவிடாமலும், இவ்விதம் சாதியின் மேலுரிமையிலிருந்து தப்பி விடாமலும் தடுக்கிறது. இரண்டாவதாக, விதியை மீறும் தனி மனிதரையும் அவர் எந்தச் சாதியின் மேலுரிமைக்கு உட்பட்டவர் என்பதையும் அடையாளம் காட்டுவதற்கு அது பயன்படுகிறது; இவ்விதம் சாதி விதிமீறலுக்காக அவரைப் பிடித்துத் தண்டிப்பது எளிதாகிறது… (நூலிலிருந்து பக்.49-52)

நூல் : நாகரீகமா ? கொடுங்குற்றமா ?
ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர்

வெளியீடு : அங்குசம்,
புதிய எண் 39, பழைய எண்.15,
எழுத்துக்காரன் தெரு, திருவொற்றியூர், சென்னை – 600 019.
தொலைபேசி எண் : 94443 37384

பக்கங்கள்: 100
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval | newbooklands

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க