privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழ்நாடுசுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !

சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !

நாடு முழுவதும் எங்கும் 8அடி உயரத்துக்கு அதிகமான சுற்றுச்சுவர் எழுப்புவது சட்டவிரோதம். ‘பாதுகாப்பு’ அல்லது வேறு எந்த பெயரில் இருந்தாலும் அச்சுவரை அகற்றுவோம்.

-

கிராமம் என்றால் காலனி அல்லது சேரிகள் ஊருக்கு வெளியே இருக்கும். தாழ்த்தப்பட்டவர்களே இங்கு வசிக்கின்றனர். நகரம் என்றால் ‘சிலம்’ (Slum) அல்லது குடிசைப் பகுதிகள் இருக்கும். கிராமங்களில் வாழவழியற்று நகரில் தஞ்சம் புகுந்தவர்கள் வாழுகின்ற பகுதிதான் ‘சிலம்’. இங்கும் ஆகப்பெரும்பான்மையாக தாழ்த்தப்பட்டவர்களும், வறுமையால் பிழைப்பு தேடி நகரம் வந்த ஒருசில இடைநிலைச் சாதியினருமே வசிக்கின்றனர்.

மனு தரும சாஸ்திரத்தின் வரையறையின்படி, கிராமங்களில் சேரிப் பகுதி ஊரிலிருந்து தள்ளியே இருப்பதால் உயர்சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் அருகருகே வசிப்பதற்கான சூழல் கிடையாது. எனவே அங்கு இந்த சுற்றுச்சுவர் பிரச்சனை பெரிதாக எழுவதில்லை என்றாலும் சேரிகளையொட்டி ஆலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அமைப்பது என்பது தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சுவர் பிரச்சனையும் எழுகிறது. ஆனால் நகரங்களில் ஆற்றோரங்களோ ஒதுக்குப்புறங்களோதான் ஏழைகளின் வாழ்விடங்கள். தனது வீட்டையொட்டி ‘சிலம்’ இருப்பதால் எவ்வளவு உயரத்துக்கு சுற்றுச்சுவரை உயர்த்தலாம் என கேள்வி எழுப்புகிறார். ஒரு மேட்டுக்குடி கனவான். ஆனால் இவரது வீட்டருகே ‘சிலம்’முக்குப் பதிலாக, இவரைப் போன்றே மற்றொரு மேட்டுக்குடி இருந்தால் அவருக்கு இத்தகைய கேள்வி எழுவதில்லை.

‘சிலம்’ என்றால் சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏன் எழுகிறது? சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிப்பது, பாதுகாப்பு நலன் கருதி அல்ல; மாறாக அருகில் வாழுபவர்கள் சேரி மக்கள் என்கிற தீண்டாமை கண்ணோட்டமே முக்கியப் பங்காற்றுகிறது. மேட்டுப்பாளையமும் இதற்கு விதிவிலக்கல்ல.

படிக்க:
போர்ன் தளங்கள் தடை செய்யப்பட்ட ஓராண்டில் VPN டவுன்லோடு 400% அதிகரிப்பு !
♦ தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க.. ?

மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அப்பாவி மக்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சுற்றுச்சுவர் அருகே குடிசைகள் அமைத்ததால்தான் உயிரிழப்பு எனக் கதைப்போரும் உண்டு. சுற்றுச்சுவரையொட்டி நடைபாதையோ அல்லது சாலையோ இருந்தால் அதில் செல்வோர் பாதிக்கப்படமாட்டார்களா? அல்லது சுற்றுச்சுவர் கட்டும் போதோ அல்லது கட்டிய பிறகோ பழுதுபார்க்கும் வேலை நடைபெறும் போது அச்சுவர் இடிந்து விழுந்தால் அப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? எப்படி இருந்தாலும் சுற்றுச்சுவர் என்றால் அதில் பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமானது.

கருங்கல்லிலேயே கட்டப்பட்டிருந்தாலும் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பலாமா? எவ்வளவு உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பலாம்? எத்தகையை கட்டுமானப் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சுவர் எழுப்பலாம்? இவற்றை வரைமுறைப்படுத்த சட்டங்களும் அவற்றைக் கண்காணிக்க அதிகாரிகளும் கிடையாதா? என்கிற கேள்வியே இங்கு முதன்மையானது.

வீடு உள்ளிட்ட கட்டடங்கள் எனில், சுற்றுச்சுவரின் உயரம் அதிகபட்சம் 1.5 மீட்டர் அதாவது 5 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என்றால் கூடுதலாக 0.9 மீட்டர் அதாவது 3 அடி உயரத்துக்கு திறந்த வகை சுற்றுச்சுவரை சிறப்பு அனுமதி பெற்று அமைத்துக் கொள்ளலாம். திறந்த வகை என்பது கம்பிகளைக் கொண்டு அல்லது வேறு பொருட்களைக் கொண்டோ அமைப்பது; கற்களைக் கொண்டு அல்ல. ஆக ஒரு சுற்றுச்சுவரின் உயரம் மேற்கண்ட இரண்டையும் சேர்த்து 2.5 மீட்டர் அதாவது 8 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்கிறது
இந்தியத் தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) உருவாக்கிய தேசிய கட்டிடக் குறியீடு (National Building Code 2016). BIS என்பது இதற்கு முன்னர் ISI என்று அழைக்கப்பட்டு வந்தது.

தேசிய கட்டிடக் குறியீடு என்பது ஒரு விரிவான கட்டிடக் குறியீடு, இது நாடு முழுவதும் கட்டிட கட்டுமான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. பொதுப்பணித் துறைகள், பிற அரசு கட்டுமானத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
♦ கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

கட்டிட வடிவமைப்பு, கட்டுமானப் பொருட்கள், பாதுகாப்புத் தேவைகள், பிளம்பிங் வேலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இக்குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1970-ல் உருவாக்கப்பட்ட இக்குறியீடு பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு கடைசியாக 2016-ல் வெளியிடப்பட்டது.

துணை மின்நிலையங்கள், மின்மாற்றி நிலையங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரி கட்டடங்கள் மற்றும் விடுதிகள், பொதுப்பயன்பாட்டுக் கட்டடங்கள் போன்ற இடங்களில் சுற்றுச்சுவரின் உயரத்தை 2.4 மீட்டர் அதாவது 8 அடி வரை உயர்த்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்கிறது தேசிய கட்டிடக் குறியீடு. ஆக எத்தகையக் கட்டடமாக இருந்தாலும் 8 அடிக்கு மேல் சுற்றுச்சுவர் எழுப்புவது விதி மீறலாகும். மேற்கண்ட விதியை மீறுவோர் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது தேசிய கட்டிடக் குறியீடு.

விதியை மீறி 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பி 17 பேர் படுகொலைக்குக் காரணமான மேட்டுப்பாளையம் கட்டட உரிமையாளர் மற்றும் இந்த விதிமீறலை அனுமதித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அரசு அதிகாரிகள் அனைவருமே இங்கு கொலைக் குற்றவாளிகள்.

மேட்டுப்பாளையங்கள் இனியும் நிகழக்கூடாது எனில் 8 அடிக்கு மேல் எழுப்பப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களை, அது எத்தகைய கட்டடமாக இருந்தாலும், அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டிருந்தாலும் உடனடியாக இடித்துத்தள்ளுவோம்; இற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பையும் சேர்த்து.

– ஊரான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க