“கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாமாய் இறந்தனர்” – என்கின்றன பத்திரிகை செய்திகள். ஆனால், இது வெறுமனே இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து மரணம் அல்ல. அரசு நிர்வாகமும், உள்ளூர் சாதி வெறியர்களும் கைகோர்த்துக் கொண்டு நிகழ்த்திய பச்சைப் படுகொலைகள் இவை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த  நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் அருந்ததிய மக்களின் குடியிருப்புகள் உள்ளன.

பல்லாண்டுகளாக அருந்ததியின மக்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள நிலத்தில் கூட்டுறவு சங்கம் ஒன்று லே-அவுட் போட்டது. இந்த லே-அவுட்டில் பெரும் பணக்காரர்கள் நிலம் வாங்கி வீடுகட்டினர். நடூர் மக்கள் தலித்துகளாகவும் ஏழைகளாகவும் இருந்ததால் அவர்கள் தங்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது. அவர்கள் யாரும் தங்களது லே-அவுட்டின் சாலையைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே சுமார் 100 அடி நீளத்திலும், 20 அடி உயரத்திலும் இந்த தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்கள் வசிப்பிடத்தை பெரும் மதில் சுவரின் மூலம் தனிமைப்படுத்திக் கொள்ள ஒன்று தனியார் டவுன்ஷிப்பாகவோ அல்லது கேட்டட் கம்யூனிட்டியாகவோ இருக்க வேண்டும் – அதற்கும் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த லே-அவுட் அப்படியான அனுமதியைப் பெறவில்லை. லேஅவுட்களில் உள்ள மனைகள் விற்றுத் தீர்ந்தவுடன், சாலைகளை அரசின் வசம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது விதி – ஆனால் இங்கே பெரும் மதில் சுவர் அமைத்து தடுத்துள்ளனர். அதே போல், மதில் சுவர்கள் ஆறரை அடி உயரம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி – இதுவும் மீறப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த சுவரின் மறுபக்கமாக சக்கரவர்த்தி துகில் மாளிகை என்கிற பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனுக்கு 22 செண்ட் நிலத்தில் பெரிய சொகுசு பங்களா உள்ளது. தீண்டாமைச் சுவர் அனுமதியின்றி 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டதோடு, அதனைத் தாங்கிப்பிடிக்க கான்க்ரீட் பீம்களும் இல்லாமல் இருந்துள்ளது. ஏற்கனவே மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அருந்ததிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சுவரை ஒட்டிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்று வந்துள்ளது. மழை நீர் தேங்குவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால் சுவரின் கட்டுமானம் பலவீனமாவது போன்ற காரணங்களால் சுவர் விழுந்து விடும் என மக்கள் அஞ்சியுள்ளனர். எனவே இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி அரசிடம் மனு அளித்துள்ளனர்.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ தலித் இளைஞர் மீது கொங்கு சாதியினரின் கொலைவெறி தாக்குதல் !

அதே போல் அந்த சுவர் ஆதிக்க சாதித் திமிரில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் என்பதையும் அருந்ததிய மக்கள் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பலமுறை புகாரளித்துள்ளனர். இந்த காரணங்களுக்காக மேற்படி சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எனினும், மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பெய்து வரும் தொடர் மழை கோவை மாவட்டத்திலும் அடர்த்தியாக பெய்து வந்தது. பல ஆண்டுகளாக மழை பெய்து தண்ணீர் தேங்கி பலகீனமாய் இருந்த சுவர் இந்த மழைக்கு தாக்குப்பிடிக்கவில்லை. திங்கட்கிழமை (02/12/2019) அதிகாலை மூன்று மணிக்கு மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்தது.  இதில் அருந்ததிய மக்களின் குடியிருப்பைச் சேர்ந்த நான்கு வீடுகளை முற்றிலும் சுவரின் இடிபாடுகள் மூடிக் கொண்டது. அந்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்டு 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகினர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டு தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்தோடு வந்து இடிபாடுகளை அகற்றி பிணங்களையே கைப்பற்றினர். சக்ரவர்த்தி துகில் மாளிகையின் முதலாளி மனம் கோணி விடக்கூடாது என்கிற “நல்ல” நோக்கத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டதன் விளைவு அப்பாவி மக்களின் உயிர் பலிகள். குரு (45), அரிசுதா (16), ராமநாதன் (20), அட்சயா(7), லோகுராம் (7), ஓவியம் மாள் (50), நதியா (30), சிவகாமி (50), நிவேதா (20), வைதேகி (22), ஆனந்தகுமார் (46), திலாகவதி (50), அருக்காணி (55), ருக்குமணி (40), சின்னம்மாள் (70) என 11 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள், மூன்று ஆண்கள் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போராடுபவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் போலீசு.

இதையடுத்து ஊட்டி நெடுஞ்சாலையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்துக்கு காரணமான சக்ரவர்த்தி துகில் மாளிகையின் முதலாளியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் விபத்தை ஆய்வு செய்ய வந்த ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ. சின்னராஜ் ஆகியோர் போராடும் மக்களால் முற்றுகையிடப்பட்டனர். ஏற்கெனவே கோரிக்கை வைத்த சமயத்திலும் அவற்றைப் புறக்கணித்த அதிகாரிகள் தற்போது மழைக் காலம் என தெரிந்தும் பலகீனமாய் இருந்த சுவரை அகற்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் அவரது தோழர்களை அடித்தே இழுத்துச் சென்று கைது செய்துள்ளது போலீசு. கோகுல்ராஜ்  படுகொலையில் சம்பந்தப்பட்ட யுவராஜை பயபக்தியோடு அழைத்து வரும் ‘காவல்துறை’, அநீதியாய்க் கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடிய மக்களின் மீது கொலை வெறித் தாக்குதல் செய்துள்ளது.

இந்துக்களுக்காகவே அரசியல் செய்வதாய் சொல்லிக் கொள்ளும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் இறந்து போன இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க இதுவரை எந்த போராட்டமும் அறிவிக்கவில்லை – வாயே திறக்கவில்லை. இந்து புராணங்களில் உள்ள கதைகள் குறித்து ஒரு கூட்டத்தில் பேசினார் இதே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காரப்பன் சில்க்ஸ் என்கிற கடையின் முதலாளி. அப்போது காரப்பன் சில்க்சை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர் சங்கிகள் – இப்போது இறந்து போன ‘இந்துக்களுக்காக’ சக்ரவர்த்தி துகில் மாளிகையை புறக்கணிக்க வேண்டும் என ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை?

படிக்க:
கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?
♦ பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !

தலித்தை ஆதிக்க சாதி அடிக்கும் போது ஆதிக்க சாதிக்கு ஆதரவு; கவுண்டர், வன்னியர், நாடார், தேவர் போன்ற ‘ஆதிக்க’ சாதியினரைப் பார்த்து “சூத்திரப்பயலே கருவறைக்கு வெளியே நில்லடா” என்று பார்ப்பான் சொல்லும் போது பார்ப்பானுக்கு ஆதரவு என்பதுதான் இந்துத்துவ அரசியல். இதை மீண்டும் ஒரு முறை தங்களது 17 உயிர்களைக் கொடுத்து நிரூபித்துள்ளனர் நடூர் மக்கள்.

***

வ்வொரு முறை தீண்டாமைச் சுவர் குறித்த செய்திகள் வெளியாகி கடும் போராட்டங்களுக்குப் பின் அது இடிக்கப்பட்ட பின் இதுவே கடைசி தீண்டாமைச் சுவராக இருக்கும் என நமக்கெல்லாம் ஒரு சுயதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அந்த சுயதிருப்தியின் மீது திரும்பத் திரும்ப அமிலத்தைக் கொட்டுகின்றது சாதி வெறி. மீண்டும் ஒரு முறை போராட்டம் – மீண்டும் ஒரு முறை சுவர் தகர்ப்பு – மீண்டும் மற்றொரு சுவர் கண்டுபிடிப்பு – என்கிற இந்த நிகழ்ச்சிப் போக்கு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

மந்தமாய்ப் போன நமது செக்குமாட்டுச் செயல்பாடுகளின் விளைவாய் 17 உயிர்கள் பறிபோய் உள்ளன. சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை எதார்த்தத்தில் இது போல் இன்னும் நாம் அறியாத இடங்களில் உள்ள தீண்டாமைச் சுவர்கள் குறித்த ஒரு பட்டியலை உருவாக்கி அனைத்துக்கும் எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நமது மனசாட்சியை உலுக்கி தட்டியெழுப்ப சில உயிர்கள் பலி கொடுக்கப்பட வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள பெரியாரியவாதிகள், அம்பேத்கரிஸ்டுகள், மார்க்சியவாதிகள் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக சக்திகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சாக்கியன்

6 மறுமொழிகள்

 1. 17 தலித் பிணங்களுக்காக நீதி கேட்டுப் போராடும் நாகை திருவள்ளுவனை கொடூரமாகத் தாக்கி இழுத்துச் செல்கிறது. எடப்பாடி போலீசு.

  சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ ஒன்றைப் பார்த்தேன். தர்மபுரி பென்னாகரத்தின் ஒரு பள்ளியில் பாஜக, ஆர்எஸ்எஸ் காலிகள் இருவர், பள்ளிச் சுவரில் வரையப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர் உருவப் படங்களை அழித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் பாதங்களை நக்காத குறையாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது அடிமையின் போலீசு.

  இன்னொருபுறம் இந்துக்களின் காவலரான அர்ஜூன் சம்பத் எங்கே போனார் என்றே தெரியவில்லை. எங்கேனும் அழுக்கடைந்த பூணூலை உருவி கழுவிக்கொண்டிருப்பார் போலும்.

 2. தனியார் சொத்தது காசில்லா சனங்கள சமாதியாக்குது;
  உழைப்பை வெறுக்கும் மனமது உயரமா சுவர எழுப்புது;
  கருணை யுள்ள மனமது பிணங்களுக்குப் பணத்த கொடுக்குது:
  வன்ம மானமனமது பொருந்தா பலப் பிரயோகம் பண்ணுது;
  நெஞ்சங் கொதிக்கும் மனமது சமூக விரோதப் பட்டத்த சுமக்குது.

 3. இடிந்து விழுந்தது தீண்டாமை சுவர் தான் என்பதற்கு ஏதுனும் ஆதாரம் உள்ளதா ?? இருப்பின் அதனை அளிக்கலாமே.. எங்காவது அரசு ஆவணங்களில் அந்த சுவர் தீண்டாமை சுவர் தான் என்று பதிவாகி இருக்கின்றதா ..

 4. ”இலஞ்சம் வாங்குபவன் முறையாக இரசீது போட்டு கொடுக்க வேண்டும்; அரசிதழில் அச்சிட்டு ஆவணமாக வெளியிட வேண்டும்” என்று கேட்பதைப் போலத்தான் உள்ளது தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி.

  பள்ளி மாணவர்கள் கையில் சாதிரீதியாக கயிறு கட்டிக்கொள்வதையோ, ”ஒன்லி வெஜிடேரியன்” என்று போர்டு மாட்டுவதையோ நாங்கள் சாதித் தீண்டாமையைக் கடைபிடிப்பதற்காகத்தான் இவ்வாறு செய்கிறோம் என்று சொல்லிக்கொள்வதில்லை. கேட்டால், சாமிக்கு கட்டுற கயிறு; நாங்க நான் – வெஜ் சாப்பிடமாட்டோம் அதனால் சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வீடு கொடுப்போம் என்று சொல்வார்கள். இதில் சாதி துவேசம் இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

  அதுபோல, அந்த காம்பவுண்ட் சுவர் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டிருக்கிறது என்பதிலிருந்துதானே பார்க்க முடியும்? முதலில் அது வழக்கமான முறையில் எழுப்பபட்ட காம்பவுண்ட் சுவர் கிடையாது. 20 அடி உயரத்துக்கு எழுப்பபட்டிருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்வீர்களா? அவ்வளவு உயரத்துக்கு காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டிய தேவை என்ன? சுவரை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது யார்? 90-களின் தொடக்கத்திலேயே இந்த சுவரை இடிக்கச்சொல்லி மக்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். அக்கோரிக்கையை புறந்தள்ளி அச்சுற்றுச்சுவரை பாதுகாக்க வேண்டிய தேவை ஏன் வந்தது? குறைந்தபட்சம் அந்த சுவற்றுக்கு பின்னால் வசித்து வந்த மக்கள் அருந்ததியின சாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதையாவது ஒப்புக்கொள்வீர்களா?

 5. அதிபுத்திசாலியான ரெபெக்கா மேரிக்கு நீண்ட விளக்கம் அளித்து அவரது அறிவு மேதமையை அவமானப் படுத்திவிட்டீர்கள் இங்கிலீஷ்காரன்.
  உங்களுக்கு எனது அன்பான கண்டனங்கள்..!

 6. //அவ்வளவு உயரத்துக்கு காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டிய தேவை என்ன? //
  “சக்கிலியன் வாடை காத்துவாக்குல அடிச்சிட கூடாதுன்னுதான்..!”
  இப்படி எண்ணும் ஜென்மங்கள் எங்கள் குடும்பத்திலும் சுற்றத்திலும் நிரம்பியிருக்கிறது. இவ்வளவு potential இருந்தும் நோட்டாவைக்கூட வெல்ல முடியவில்லை என்று RSS கும்பல் வெறிகொண்ட நாயாக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க