ம.பி : தலித் சிறுமி பள்ளிக்கு செல்வதை தடுக்கும் ஆதிக்க சாதிவெறி!

ஆதிக்க சாதிவெறியர்களால் பட்டியலினத்தை சார்ந்த சிறுமி பள்ளிக்கூடத்திற்கு செல்லக் கூடாது என்று தடுக்கப்படுகிறார். இதனை தட்டிக்கேட்க சென்ற சிறுமியின் குடும்பத்தினர் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

0

த்தியப் பிரதேசத்தில் உள்ள பவாலியாகெடி கிராமத்தில், 16 வயது தலித் சிறுமியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று உள்ளூர்வாசிகள் குழு ஒன்று மிரட்டியுள்ளது.

அந்த கும்பல் தனது பள்ளிப் பையைப் பறித்துச் சென்றதாகவும், வகுப்புகளுக்கு செல்வதை தடுத்ததாகவும் குற்றம் சாட்டி சிறுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனது சகோதரர் அந்த கும்பலின் கருத்துகளை எதிர்த்தபோது அந்த கும்பல் அவரைத் தாக்கியதாகவும், மற்ற குடும்ப உறுப்பினர்களையும் தாக்கியதாகவும் அச்சிறுமி குற்றம் சாட்டினார்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமி ஜூலை 23-ஆம் அன்று மதியம் உள்ளூர் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் செல்லும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பவாலியாகெடி கிராமத்தில் சிறுமியின் குடும்பத்தினரை அந்த கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடந்ததை அடுத்து, ஜூலை 23 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக போலீசு ஏழு பேரை கைது செய்துள்ளது.


படிக்க : மத்தியப்பிரதேசம் : ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படும் அரசு எந்திரம்!


அந்த கும்பலும் தாங்கள் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, சிறுமியின் குடும்பத்தின் மீது எதிர் புகார் கொடுத்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் சகோதரர் மற்றும் உறவினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானபோது தான் இந்த சம்பவம் பொதுவெளியில் தெரிந்தது. உருட்டு கட்டைகளை கொண்டு சிறுமியின் குடும்பத்தினரை அந்த கும்பல் தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்), சிறுமி வீடு திரும்பியபோது 4 இளைஞர்கள் தன்னைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். “என் உறவினர் தலையிட்டபோது, ​​அவர்கள் அவரையும் அடித்தனர். சுமார் 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, எனது குடும்பத்தினரைத் தாக்கினர்” என்று அவர் தனது புகாரில் கூறினார்.

இவ்வளவு நடந்துள்ள போதிலும், “உள்ளூர் தாசில்தார் நடத்திய விசாரணையில், பழைய முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்தது. எந்த சமூகத்தினரும் சாதி, ஆதிக்கம் என்ற பிரச்சினை இல்லை. பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கவில்லை” என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஜெயின் கூறினார்.

ஆதிக்க சாதிவெறியர்களால் பட்டியலினத்தை சார்ந்த சிறுமி பள்ளிக்கூடத்திற்கு செல்லக் கூடாது என்று தடுக்கப்படுகிறார். இதனை தட்டிக்கேட்க சென்ற சிறுமியின் குடும்பத்தினர் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

ஆனால், மாவட்ட நிர்வாகமோ முன் விரோதம் என்றுகூறி வழக்கை திசைத்திருப்புகிறது. சிறுமியின் வாக்குமூலமோ, பட்டியலின பெண்கள் யாரும் படிக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்துகிறது. இப்படி பட்டவர்த்தனமாக ஆதிக்கசாதிவெறியும், ஆணாதிக்கவெறியும் வெளிபட்ட பிறகும்கூட முன்விரோத பிரச்சினை என்று சொல்வது கடைந்தெடுத்த ஐயோக்கியத்தனமாகும்.

இதுபோன்ற ஆயிரக்கணக்கான தாக்குதல்கள் பெண்கள், தலித்துகள் மீதும் ஆதிக்கசாதி வெறியர்களால் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. விதிவிலக்காக இதுபோன்று ஒன்று இரண்டு சம்பவங்கள்தான் ஊடகங்களில் பதிவாகின்றன. இந்தியா சுதந்திர நாடு; இந்துக்கள் எல்லோரும் சகோதரர்கள் என்று காவி பயங்கரவாதிகள் ஆயிரம்தான் முழக்கினாலும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடிமறைத்துவிட முடியாது. இந்த அடக்குமுறைகள் நிலவும் வரை சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களும், பெண் விடுதலைக்கு எதிரான போராட்டங்களும் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது.


கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க