த்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பியாரி சஹாரியா. இவருடைய கணவர் அர்ஜூன் சஹாரியா. இவர்கள் பழங்குடியின மக்கள் பிரிவை சார்ந்தவர்கள். நிலமற்ற இவர்களுக்கு அரசு நலத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் இவர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தது ஊரில் உள்ள ஆதிக்க சாதியினருக்கு பிடிக்கவில்லை. அதனால் தொடர்ச்சியாக இந்தப் பழங்குடிகளை மிரட்டி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் நிலத்தை அபகரித்துக் கொண்டனர். இது சம்பந்தமாக வருவாய்த் துறையில் புகார் கொடுத்து நிலத்தை மீண்டும் மீட்டுள்ளனர் பழங்குடி மக்கள். இருந்தும் தொடர்ச்சியாக மிரட்டியும் அச்சுறுத்தியும் வந்துள்ளனர்.

இதற்காக போலீசுத்துறையில் புகார் கொடுத்தும் ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 2 அன்று அர்ஜூன் சஹாரியா நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆதிக்க சாதியினை சேர்ந்த மூன்று நபர்கள் டிராக்டரில் வேகமாக வந்துள்ளனர். பதறி போய் அர்ஜுன் நிலத்திற்கு செல்ல அங்கு ராம்பியாரி சஹாரியா தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அர்ஜுன். தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் ராம்பியாரி சஹாரியா.


படிக்க : ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!


பழங்குடிப் பெண்ணை தீவைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு மகிழ்ந்துள்ளனர். இதை சாதாரணமாக பார்க்க முடியாது ஏனென்றால், இது மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கை. மிரட்டல் விடுத்தபோதே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அரசு எந்திரம்தான் முதல் குற்றவாளி.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையே இந்த விஷயத்தில் எப்படி உள்ளது என்பதை கீழே பாருங்கள்.

தொடக்க விசாரண நடத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், கைது கட்டாயமல்ல.

குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால், அவன்/அவளின் நியமன நிர்வாகத்தின் அனுமதியின் பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும்.

அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில் அவன்/அவள் மூத்த போலீசுத்துறை கண்காணிப்பாளின் அனுமதியோடு மட்டுமே கைது செய்யப்படலாம்.

கைது செய்வதற்கு முன்கூட்டியே பிணை வழங்கப்படுவது இல்லை என்று இந்த சட்டத்தின் பிரிவு 18 கூறினாலும், இந்திய உச்ச நீதிமன்றம், கைதுக்கு முன்னரே பிணை பெறுவதை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றம் கூறும்போது, தேசிய குற்றப் பதிவுகள் துறையின் 2015-ம் ஆண்டு தரவுகளின் படி, சுமார் 15-16 சதவீத வழக்குகள் 2015-ம் ஆண்டு விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும். 75 சதவீதத்திற்கு மேலான வழக்குகள் விடுதலை / திரும்ப பெறுதல் அல்லது வழக்குகளை பேசி முடிப்பதில் நிறைவு பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த தரவுகள் எல்லாம் காட்டும் எதார்த்த உண்மை ஆதிக்க சாதியினர் எந்த அளவிற்கு மிரட்டி வழக்குகளை திரும்பப்பெற வைக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த விஷயங்கள் நீதிமன்றத்திற்கு தெரிந்தாலும் அதையெல்லாம் மறைத்துவிட்டு ஆதிக்கசாதி வெறியர்களை காப்பாற்றும் விதமாக தன்னுடைய வழிகாட்டுதலையும் பார்வையையும் வழங்கியுள்ளது.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!


இந்த அரசின் உச்சபட்ச நீதி கிடைக்கும் இடம் என மார்தட்டிக் கொள்ளும் உச்ச நீதிமன்றம் இப்படி சாதி ஆதிக்கவாதிகளின் திமிர்த்தனத்தை பாதுகாப்பதாகதான் உள்ளது.

இதுபோக, இந்த பிரச்சினை நடந்துள்ள மத்தியப்பிரதேச மாநிலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் புல்டோசர் அரசியலின் தொடக்கப் புள்ளி. இஸ்லாமிய மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு ஒட்டுமொத்த மத்தியப்பிரதேச அரசு நிர்வாகமும் களத்தில் நிற்கிறது. இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலின் ஆட்சியின்கீழ்  தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிமை கிடைக்கப்போவதில்லை.

ஆகவே, இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை களத்தில் இறங்கி முறியடிப்போம்.

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க