காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! – பாகம் 2

உண்மையான வரலாற்று ஆய்வுகளை செய்வதிலிருந்து அரசாங்கங்களை தடுக்கும் குறுகிய பிற்போக்கு செயல்முறைகளை பதிவு செய்யும் பொருட்டு மார்ச் 1994-ல் மகாராஷ்டிரா மாநில பாடநூல் வாரியத்தின் முன்னால் தலைவர் டாக்டர் அரவிந்த் தேஷ்பாண்டேவை நேர்காணல் கண்டோம். அதிலிருந்து சில பகுதிகளை நாங்கள் இங்கே தருகிறோம்.

***

1980 – 81-ல் மகாராஷ்டிர பாடநூல் கழகம்  தொடங்கியதிலிருந்து வரலாற்று நூல்களில் மதச்சார்பின்மை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே அதில் பங்கு பெற்றிருந்த எங்களுக்கு முதன்மையான குறிக்கோளாக இருந்தது. சான்றாக, சிவாஜி ஒரு இந்து நாயகனாக எப்பொழுதும் சித்தரிக்கப்பட்டு வருகிறார். ஆனால் நீங்கள் இதைச்செய்யும் தருணம் முதல் அறிந்தோ அறியாமலேயே பக்க சார்பு வந்து விடுகிறது.

முதல் நான்கைந்து ஆண்டுகளுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம். அதனால் பாடநூல்களில் இந்த பக்கசார்பை நீக்குவதற்கு எங்களாலான முயற்சிகள் அனைத்தையும் செய்தோம். விரைவில் அதற்கான வினையை அதாவது சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகம் இரண்டுமிடத்தும் எதிர்ப்புகளை அறுவடை செய்ய தொடங்கினோம்.

Veer Shivajiஇது நான்காம் பாடநூலில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வு. 1986-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி திட்டத்தினால் ஒட்டுமொத்த பாடத்திட்டமும் மாற்றப்பட்டது. வரலாறு பாடத்திலும் வட்டார வரலாறு, இந்திய கலாச்சாரம் மற்றும் சமூகவியல் குறித்த புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டன. அதே நேரத்தில் புதிய பாடத்திட்டத்தை தயாரித்து வெளியிடுவதற்கு கடுமையான பொருளாதார பிரச்சினைகளையும் சந்தித்தோம். ஒட்டுமொத்த மாநிலத்திலுமுள்ள இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு மலிவு விலையில் நூல்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் 96 பக்கங்களாக அது குறைக்கப்பட்டது. ஆனால் நான்காம் வகுப்பு பாடத்திட்டத்தினை பார்த்தால் 96 பக்கங்களில் 80 பக்கங்கள் சிவாஜி பற்றியே பேசுவதை நாங்கள் கண்டோம். நாங்கள் விரும்பிய வேறு எதையும் சேர்ப்பதற்கான வாய்ப்பு சிறிதளவே இருந்தது.

ஒரு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் எங்களது நோக்கத்திற்கு தோதாக சிவாஜியைப் பற்றிய சில பகுதிகள் நீக்குவதற்காக வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் சில திருத்தங்கள் செய்தோம். குழு உறுப்பினர் பேராசிரியர் ஆர்.ஆர் போஸ்லேயும் அதற்கு ஒப்புதல் அளித்தார். சில பத்திகள் மாற்றப்பட்டன. சில புதிதாக எழுதப்பட்டன. அதே நேரத்தில் இந்த தகவலை யாரோ ஊடகத்திற்கு கசிய விட்டனர். திருத்தப்பட்ட பாடநூல் அச்சிட்டு வெளியிடுவதற்கு முன்பே மராத்தி தினசரியான கேசரி செய்தித்தாளின் கடுமையான பிரச்சாரத்தை எதிர்நோக்க வேண்டியிருத்தது.

“வரலாற்றின் எழுச்சியூட்டும் பகுதியை நீக்கி அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக” எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மாவட்டத்திற்கு இரு ஆசிரியர்கள் என மொத்தம் 60 ஆசிரியர்கள் மூன்று நாட்கள் வெறுமனே சோதனை வாசிப்புதான் நடத்தி வந்தோம். இந்த சமயத்தில் எங்களில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அதுவரை மதசார்பற்ற மற்றும் மனிதநேயமிக்க வரலாறு பாடத்திட்டத்தை உருவாக்க எங்கள் மீது நம்பிக்கை வைத்த அரசு, பத்திரிகை பிரச்சாரத்திற்கு பிறகு முழுமையாக பின்வாங்கி விட்டது.

படிக்க:
♦ பார்ப்பனிய கொட்டத்தை அடக்கிய பீமா கோரேகான் போரின் 200-ம் ஆண்டு !
♦ கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

1991-ல் சுதாகர் ராவ் நாயக் தலைமையிலான சிறுபான்மை அரசு பதவியிலிருந்த போது நடந்தது இது. எங்களது பணியை ஆதரித்து, வரலாற்றை தனி நபர்களிடமிருந்து விடுவித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கவனத்தில் கொள்ளும்படி மட்டுமே வரலாறு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முயல்கிறோம் என்று கல்வி அமைச்சர் பேசினார். ஆனால் கட்சிபேதமின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கு பயந்து 25 ஆண்டுகால பாடத்திட்டத்திலிருந்து ஒரு சொல்லை கூட மாற்றம் செய்ய மாட்டோம் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். விளைவு, வகுப்புவாத சக்திகளின் வன்முறை ஆட்டங்கள் இன்றும் தொடர்கின்றன. நாங்கள் பாடுபட்டுழைத்த அந்த பாடத்திட்டம் முழுவதுமாய் அழிந்துவிட்டது. நாங்கள் அனைவரும் எங்கள் பாடத்திட்ட நகல்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

இன்றியமையாத கேள்வி இங்கே என்னவெனில், வரலாற்று பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் கிளரப்படுகிறதே அது ஏன்?

(தொடரும்)


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க