சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 2

சி.என்.அண்ணாதுரை
சி.என். அண்ணாதுரை

காட்சி – 3
இடம் : இந்துமதி வீடு
உறுப்பினர்கள் : இந்துமதி, சந்திரமோகன்

(மோகன் வர, அவன் கழுத்தில் இந்து மாலை அணிவிக்கிறாள்.)

இந்து : கண்ணாளா இந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த மனவேதனை அவ்வளவும் இந்த ஒரு வினாடியில் ஒழிந்து விட்டது. அப்பப்பா… எவ்வளவு பயங்கரமான செய்திகள். போரிலே நமது படை சின்னாபின்னமாகி விட்டது. கோட்டையைச் சுற்றி எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள்… ஆயுதச் சாலையைப் பிடித்துக் கொண்டனர் என்றெல்லாம் வந்து கூறுவார்கள். அப்போதெல்லாம் என் நிலை… அடடா!

மோகன் : கலங்கித்தான் போயிருப்பாய் கண்மணி. களத்திலே கடும் போர்தான். ஆபத்துக்கள் நிறைய உண்டு. ஆனால், ஆற்றல் மிக்க நமது தலைவர் அளித்த தைரியம். எங்களுடைய பலத்தை பல மடங்கு அதிகமாக்கிற்று.

கண்ணே உன் காதலனும் கோழையல்ல; உன்னைக் கண்டதும் என் விழியிலே கனிவு வழியும். அதைக் கண்டு இந்தக் கண்களுக்கு இதுதான் இயல்பு என்று எண்ணி விடாதே. ஆபத்து என்ற உடனே இந்தக் கண்கள் நெருப்பைக் கக்கும். உன் மலர்க் கரத்தையும் மதுரம் தரும் அதரத்தையும் தொட்டு விளையாடும் இந்தக் கரத்திலே வாள் ஏந்தியதும், எதிரியின் தலை என் தாளிலே விழும் வரை புயலெனத்தான் சுற்றித்
திரிவேன் களத்தில்.

இந்து : போதும், போர்க்களச் செய்திகள். இனிமேல் இந்த மாளிகையிலே ஆடிப்பாடி விளையாட வேண்டும் நாம். மராட்டிய சாம்ராஜ்யத்தை கிருஷ்டிக்கும் மாவீரன் என்
காதலர் என்று ஊரெல்லாம் புகழ்கிறது.

மோகன் : ஊரெல்லாம் புகழ்ந்தாலும், உலகமே புகழ்ந்தாலும், உன் அப்பா மட்டும்…

இந்து : அவர் மட்டும் என்ன ? உங்கள் வீரதீரத்தைப் பழிக்கிறாரா? உங்கள் மீதுள்ள
அளவு கடந்த அன்பினால் போருக்குப் போக வேண்டாம் – ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறுகிறார்.

மோகன் : வேடிக்கையான சுபாவம் உன் அப்பாவுக்கு வாள் ஏந்தும் கடமையை என் போன்ற வாலிபர்கள் மறந்தால் அனைவரும் சேர்ந்து எதிரியின் தாள் ஏந்த வேண்டுமே! தாயகம் அடிமையாகிவிடுமே! நாடு பரிபூரணவிடுதலை பெற்று நமது ஆட்சி நிலைநாட்டப்படும் வரையில் போரிட்டுத்தானே ஆக வேண்டும். மராட்டிய சாம்ராஜ்யம் கிருஷ்டித்தான பிறகுதான் நமது காதல் ராஜ்யம். ஆகா! இன்பமே! நமது காதல் ராஜ்யம் அமைந்து விட்டால்…

இந்து : அமைந்துவிட்டால்….

மோகன் : புயலும் தென்றலாகும். பொற்கொடியே! அந்த ராஜ்யத்திலே வாளும் வேலும் என்ன செய்ய முடியும்?

இந்து : உங்கள் அன்பு மொழியால் என்னைப் பைத்தியமாக்கி விடுகிறீர்கள் கண்ணாளா!

மோகன் : என் மொழி உன்னை பைத்தியமாக்குவதாகச் சொல்கிறாய். இன்பவல்லி! உன் விழி என்னைப் பைத்தியமாக்கிவிடுகிறதே.

இந்து : போதும் போங்கள்! உங்களுக்கு எப்போதும் கேலிதானா?

♦ ♦ ♦ 

காட்சி – 4
இடம் : வீதி
உறுப்பினர்கள் : சந்திரமோகன், சாது.

(சாது நாட்டைப் பற்றி பாடி வருகிறார். மோகன் அதைக் கேட்டு விட்டு..)

மோகன் : பெரியவரே களிப்புக் கடலில் மூழ்கினேன். உமது கீதத்தைக் கேட்டு சாது இனிமையாக இருந்ததா தம்பி?

மோகன் : மதுரமாக இருந்தது மதிவாணரே!

சாது : இதைவிட இனிமை உண்டு , வானத்திலே வட்டமிடும் வானம்பாடியின் கீதத்தைக் கேட்டால். உற்றுக் கேட்டால் வீரனே! சிற்றருவிப் பாய்ந்தோடும் போது இனிமையான கானம் கேட்கவில்லையா? இயற்கை சதா நேரமும் இசைபாடிக் கொண்டுதான் இருக்கிறது.

மோகன் : உண்மைதான் பெரியவரே.

சாது : குழந்தையின் மழலை, குமரியின் கொஞ்சுமொழி. தென்றலிலே படும் கொடிகளின் அசைவு – இவைகளிலே இல்லாத இனிமை என் இசையிலே
ஏதப்பா ?

மோகன் : அய்யா இனிமை மட்டுமே அந்தச் சமயங்களிலே காண்கிறேன். ஆனால், தங்கள் இசையிலேயோ இனிமையுடன் பொருளும் இருக்கக் கண்டு களித்தேன்.

சாது : நல்லவனப்பா நீ! கீதத்தைக் கேட்டுவிட்டு கருத்தை கவனியாதிருப்பவரே அதிகம். நீ கவனித்தும் இருக்கிறாய்; ரசித்தும் இருக்கிறாய்!

மோகன் : ரசிக்காமல் இருக்க முடியுமா? புதுமணம் வீச வேண்டும், நாடு பொன்னாடாக வேண்டும், மக்களின் வாழ்வு மகிழ்ச்சியோடு துலங்க வேண்டும். மதிமிக வேண்டும் என்ற கருத்துக்களை நாட்டுப் பற்றுடைய யார்தான் ரசிக்காமல் இருக்க முடியும்?

சாது : அதிலும் நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ. உன் மனம் மகிழத்தான் செய்யும்.

மோகன் : உயிரைத் துரும்பென்றெண்ணி எண்ணற்ற வீரர்கள். தாயகத்தின் விடுதலைக்காகப் போரிட்டனர். குருதியைக் கொட்டினர். வெற்றியும் கிடைத்திருக்கிறது.

சாது : வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது வீரர்களுக்கு …..

மோகன் : பெரியவரே! என்ன, ஏதோ சிறு சஞ்சலம்?

சாது : வெற்றியைப் பெற்றுத் தருகிறார்கள். ஆனால் வீணர்கள் விதைத்த விஷப்பூண்டு இன்னும் அழியவில்லையே. ராஜ்யத்துக்கு எதிரிகளால் நாசம் ஏற்படாமல் தடுக்க வீரர்களின் தியாகம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த வீரத்தையும் தியாகத்தையும் விழலுக்கிறைத்த நீராக்கும் விபரீத காரியம் நடைபெறுகிறதே.

மோகன் : பெரியவரே! என்ன, ஏதாவது சதி நடைபெறுகிறதா?

சாது : ரகசியமாக நடைபெறுவதல்லவா சதி? இது சதி அல்லப்பா, சாதி. அந்த சாதித் தொல்லை உள்ள மட்டும் சமூகத்துக்கு சதா ஆபத்துதானே? வீரப்போர் புரியும் போது தாய் நாட்டவர் என்ற பாசமும், எதிரி வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது என்ற பயமும் மராட்டிய வீரர்களை ஒன்றாக்கி வைக்கிறது. பாசமும் பயமும் வெற்றிக் கொடி பறந்ததும், பறந்தே போய்விடும். பழையபடி ஜாதி தலைதூக்கும். அதை எண்ணித்தான் நான் சஞ்சலப்படுகிறேன்.

மோகன் : நாட்டு மக்களுக்கு ஜாதி கேட்டினைத்தான் செய்யும். அந்தக் கேட்டினை நாட்டை விட்டு ஒட்டிடலாம். அய்யா! ரத, கஜ துரக பதாதிகளையா கூட்டி வரும் இந்த ஜாதி?

சாது : அதற்கேனப்பா நால்வகைச் சேனை? அந்த ஜாதி சனியனால் தகப்பனே மகனுக்கு விரோதியாக்க முடியும். அண்ண னும் தம்பியும் போரிட்டு மடிவர், அது தூபமிட்டால், குடும்பம் கொலைக்களமாகும். ஊர் இரண்டு படும்! அது தூபமிட்டால், அந்த ஜாதித் சனியனுக்கு கோட்டைகள், மலைகள், மீதியிருந்தால் மாவீரர்கள் சென்று தாக்கித் தகர்த்துவிட முடியும். அந்த ஜாதிச் சனியனுக்குக் கோட்டைகள் நம்மவர்
மனதிலேயே இருக்கின்றன.

மோகன் : பெரியவரே! இதுவரை இருந்தது போல் இனியும் இருக்கும் என்று எண்ணாதீர்கள். புதிய ராஜ்யம் ஏற்படுகிறது. புனிதப் போருக்குப் பிறகு ஏற்படும் ராஜ்யம் இது. இதிலே புல்லர்களுக்கு ஆதிக்கம் இருக்காது. ஒற்றுமை நிலவும்; தோழமை மலரும்; சமரச மணம் வீசும் ; சன்மார்க்கம் நிலைக்கும்; ஜாதி மடியும்.

படிக்க:
பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !

சாது : நல்வாக்குக் கொடுக்கிறாய், நாடாள நீயே வந்தாலும் நடவாக் காரியங்களை மடமடவெனக் கொட்டிக் காட்டுகிறாய் ஆர்வ மிகுதியால்… நீயே நாளைக்கு ராஜா ஆகிவிடுகிறாய் என்று வைத்துக் கொள்.

(மோகன் திகைத்துப் பார்க்க)

ஏனப்பா அப்படிப் பார்க்கிறாய்? அவலட்சணங்களெல்லாம் அரசர்களானபோது நீ ராஜா ஆகவா முடியாது? ஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான் இருக்கிறாய்; ராஜாவாகி விடுகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது நான் சொன்ன ஜாதிச் சனியனை விரட்டப் போரிடுவாயோ?

மோகன் : ஏன் முடியாது?

சாது : பைத்தியம் உனக்கு. நீ ராஜாவானால் உடனே உனக்கு ஒரு ராஜகுமாரி வேண்டும். ரத, கஜ, துரக பதாதிகள் வேண்டும். அரண்மனை ஐஸ்வரியங்கள் வேண்டும். அந்தப்புரம் வேண்டும். அழகுள்ள ஆடும் பெண்கள் வேண்டும். ஆலவட்டம் வீச ஆட்கள் வேண்டும். யானை மீது அம்பாரி வேண்டும் என்று இவைகள் மீது அக்கறை பிறக்குமே தவிர ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

மோகன் : ஏன் வராது? கட்டாயம் வரும்.

சாது : வராதப்பா.

மோகன் : கட்டாயம் வரும்.

சாது : வராதப்பா வராது. வந்தாலும் ராஜா வேலை உனக்கு நிலைக்காது.

மோகன் : ஏன்?

சாது : ஏனா? உயர்ந்த ஜாதிக்காரர் என்பவர்கள் உன்னை எதிர்த்து ஒழித்தே விடுவார்கள்… சிவாஜியின் வீரத்தைக்கூட அந்த வீணர்கள் பொருட்படுத்த
மாட்டார்கள்.

மோகன் : பெரியவரே! முன்பு நடந்தது போல் இனியும் நடக்கும் என்று வாதாடுவது முறையாகாது. சிவாஜியின் கண்களிலே இந்தக் கொடுமைகள் தென்படாமல் இல்லை. அவர் தனக்காக, தாய் நாட்டுக்காக உயிர் கொடுத்த உத்தமர்களை உயர்ந்த ஜாதி என்று உரிமை பேசுவோரிடம் அடிமைப்பட விடமாட்டார். அவர் குடியானவர் வகுப்பு. குலப்பெருமை பேசும் கும்பலில் பிறந்தவரல்ல. அவர் சகலரையும் சமமாகவே நடத்துவார்.

சாது : ஆர்வம் ததும்புகிறது உன் பேச்சிலே. அனுபவமில்லாததால் ஆர்வம் அளவுக்கு மிஞ்சியிருக்கிறது. அனுபவம் பெறுவாயப்பா. நீ மராட்டியத்தின் மறுமலர்ச்சி துதூவன். போய் வா!

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க