வில்லவன்
ராஜாஜிக்குப் பிறகு ஒரு நல்ல பிராமண பீஸுக்காக மயிலை ஆன்மாக்கள் பன்னெடுங்காலம் காத்திருந்த வேளையில் குத்துமதிப்பான அய்யரான எம்.ஜி.ஆர் வாய்த்தார். சுயபுத்தியும் சொல்புத்தியும் இல்லாத சுயத்தை சொறிய மட்டுமே தெரிந்த அவர்தான் நேற்றைய ஜெயாவுக்கும் இன்றைய மோடிக்கும் முன்னோடி.

கழிசடையாக இருந்தாலும் பார்ப்பனியம் கால்நூற்றாண்டு தவத்தில் பெற்ற பிள்ளை இல்லையா? ஊடகங்கள் முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து “சோறுபோட்ட மஹாராஜா” என பாமர மக்களை நம்பவைத்தார்கள். அவரால் அடித்து மெண்ட்டலாக்கப்பட்ட ஆட்களோ, அடியாட்களுக்கு பட்டா போடப்பட்டு கொல்லப்பட்ட ஏரிகளோ கணக்கில் வரவேயில்லை.

அடுத்து கோமளவல்லி வந்து சேர்ந்தார். அக்ரஹாரவாசிகள் எல்லோரும் கும்பலாய் போய் போயஸ்கார்டனில் கொண்டாடலாம் என்றால் அங்கே ஏற்கனவே நந்தி போல சசி கும்பல் உட்கார்ந்துவிட்டது. ‘விருந்து வைத்து வாயைத் தைத்ததைப்போல’ ஆயிற்று அவர்கள் நிலை. ஜெ ஊழலின் பெரும் பங்கை சூத்திர தோழியின் குடும்பம் தின்ன, மீண்டும் பார்ப்பனியம் விரல் சப்பியபடியே சாபமிட்டு காலம் கழித்தது.

ஆரிய மாமா சோ ராமசாமியே ஜெயாவை திட்டிவிட்டு எதிரணியை ஆதரிக்க வேண்டியாயிற்று. ஆனாலும் ஜாதிப் பாசம் விட்டுபோகுமா? அந்த டபுள் பாசிஸ்ட்டை நிர்வாகப்புலி என பிரச்சாரம் செய்து ஒப்பேற்றினார்கள். சாராய ஆலை ஓனர் எனும் தட்சணையைக்கூட சோ காலம் போன கடைசியில்தான் வாங்கினார். ஜெ ஒரு சோத்து சோம்பேறி என்பதால் சோ தட்சணை பெறும் காலம்வரை இருந்தார். இல்லாவிட்டால் எதிர்த்து பேசிய காலத்திலேயே சந்திரலேகா டைப் டிரீட்மெண்ட்டை பெற்றிருப்பார்.

படிக்க:
♦ கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ? | வில்லவன்
♦ சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

அந்தம்மா போன பிறகு வாய்த்த சுமார் மூஞ்சிகள் எல்லாம் புரோக்கர் வேலையே போதும் என செட்டில் ஆயின. புரோக்கர் வேலைக்குக்கூட லாயக்கற்ற எச்.ராஜா, குருமூர்த்தி, எஸ்.வி.சேகர் போன்ற கொழுப்பெடுத்த கூமுட்டைகள் தலைவன் தோரணையில் பேசி மீதமிருக்கும் பர்னிச்சர்களை உடைத்தன. எம்ஜியார் காலம் என்றால்கூட இந்த கூமுட்டைகளை இண்டலெக்சுவல்ஸ் எல்லாம் அப்படித்தான் இருப்பா என தடவிக் கொடுத்திருப்பார்கள். சமூக ஊடகங்கள் வந்த பிறகு தடவிக்கொடுக்கும் கைகளில் ‘ஷண’ நேரத்தில் துப்பிவிடுகிறார்கள். பெரியார் காலத்தில்கூட பார்ப்பனர்கள் அறிவாளிகள் எனும் அந்தஸ்துக்கு ஆபத்து அவ்வளவாக இல்லை. பேஸ்புக் காலத்தில் வெறும் ஸ்டேட்டஸ்கள் போட்டே அந்த ஸ்டேட்டசுக்கும் எள்ளும் தண்ணீரும் தெளித்துவிடுகிறார்கள்.

பார்ப்பனர்களின் முக்கால் நூற்றாண்டு அனுபவத்தில் அரசியலுக்கு வரும் சொந்தப்பிள்ளைகள் அவர்கள் கவுரவத்தை சந்தியில் நிறுத்தும் வாய்ப்பே அதிகமாக இருந்திருக்கிறது. ஆகவே பார்ப்பனியத்தின் பிளான் பி ஆனது அடிமை சூத்திரர்களை இறக்கி அவர்கள் வழியே அதிகாரத்தை தக்கவைக்கலாம் என்பதாக இருந்தது. இது சேர, சோழ காலத்து அரத பழசு டெக்னிக்தான். என்ன செய்வது பார்ப்பனியத்தை இன்றும் கிழடு கட்டைகள்தானே காப்பாற்ற வேண்டியிருக்கிறது?

பிளான் பி மூலம் முதலில் அவிழ்த்துவிடப்பட்ட நாய்கள் சாதிச் சங்கங்கள். அவர்கள் படையெடுப்புக்குப் பிறகு பார்ப்பனர்களின் சாதி வெறிக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்தது. பாதுகாப்புக்கு சரி, அதிகாரத்தை தக்க வைக்க? அதற்குத்தான் விஜயகாந்த் வரைமுறையில்லாமல் ஊடகங்களால் ஆராதிக்கப்பட்டார். அவர் கட்சி துவங்கும் முன்பே அதற்கான நேர்மறை முன்னோட்டங்கள் வெள்ளமென பாய்ந்தன. பார்ப்பனர்கள் விரும்பியிருக்காவிட்டால் ஊடக நடத்தை இப்படி இருந்திருக்காது. பெயரளவுக்குகூட சித்தாந்தம் இல்லாத, ஓரளவு ஓட்டுக்களை திரட்டக்கூடிய கொழுப்பெடுத்த முட்டாள்கள் பார்ப்பன லாபிக்கு தேவை. அதற்கு ‘சப்ஜாடாக’ பொருந்தி வந்தவர் விஜயகாந்த். நீங்கள் சந்திக்கும் பார்ப்பனர்களிடம் பேசிப் பாருங்கள், விஜயகாந்தின் வீழ்ச்சி அவர்களை சங்கடப்படுத்தியிருக்கும்.

விஜயகாந்தும் அவர்களின் கொஞ்சலுக்கு உகந்த நியாயத்தை செய்தார். அரை ஜெயாவான மனைவி, அரை பிரேமாவான மச்சான், பணக்கார திமிரைத்தவிர வேறு தகுதியே இல்லாத பிள்ளைகள் கூடவே சினிமாக்காரனுக்கே உண்டான அதிகார மிதப்பு என எல்லா சிக்கல்களையும் தாண்டி அவர் 2011-ல் ஜெயாவை ஆதரித்து பார்ப்பனியத்துக்கு சேவை செய்தார். பிறகு ம.ந.கூ-வில் இருந்தும் ஜெவுக்கு உதவினார் (அப்படித்தான் பிரேமலதா சொல்லியிருக்கிறார்). இப்போதும் பார்ப்பனியத்துக்கு ஒரு பார்ப்பனனால்கூட செய்ய இயலாத சேவைகளை செய்யும் அதிமுகவை ஆதரிக்கிறார்.

இவற்றின் கிரெடிட் முழுமையும் விஜயகாந்துக்கு போய் அதன் பாவங்களை மட்டும் அண்ணியார் சுமக்கிறார். விஜயகாந்தை ஆதரிக்கும் மயிலை ஜீவன்கள்கூட அண்ணி பிரேமலதாவை சபிக்கிறார்கள். ஸ்டாலினுக்கு கடும் போட்டி கொடுத்திருக்க வேண்டிய ஆளை கரடி பொம்மைபோல செட் பிராப்பர்ட்டியாக மாற்றிவிட்டார் எனும் அவச்சொலை நீங்கள் கபாலி கோயில் மாடவீதிகளில் இப்போதும் கேட்க இயலும். ஆனால் உண்மை அதுவா?

2006 -ல் மட்டுமே விஜயகாந்த் ஓரளவுக்கு கோர்வையாக பேசினார். 2009 -ல் இருந்தே அவர் பேச்சு கோளாறானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் ஆகிவிட்டது. கேப்டன் டிவி லைவில் அவர் பேச்சு ஒளிபரப்பாகையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனே ஒலி மட்டும் நிறுத்தப்பட்டு “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” பாட்டை ஓடவிடுவதற்கென்றே ஒரு சிறப்பு டீம் ஒன்று செயல்பட்டது. ஊடகங்களிடம் ஏடாகூடமாக பேசுவது, கூட இருப்பவனை எகிறியடிப்பது போன்ற கூடுதல் இம்சைகள் வேறு. ஆனால் இத்தனைக்கும் மத்தியில் கடந்த பத்தாண்டுகளாக விஜயகாந்தை ஒரு போணியாகும் சரக்காக வைத்திருக்க அண்ணியார் எத்தனை சிரமப்பட்டிருக்க வேண்டும்? ஒரு சூத்திர நிர்மலா சீதாராமனுக்கு இது எத்தனை பெரிய சவால் என்பதை யாருமே யோசித்துப் பார்ப்பதில்லை.

படிக்க:
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
♦ நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ

இப்போது அதிமுக கூட்டணியில் கொஞ்சம் கூடுதலாக ஜாதி ஓட்டுக்களை ஓட்டிக் கொண்டுவரும் சூழலில் இருப்பது மாங்கா கும்பல்தான். குடிசைகளை கொளுத்தி, காதலித்து மணம் புரிந்த பல குடும்பங்களை சிதைத்து (பல கிராமங்களில் வன்னியர்-தலித் தம்பதிகளை ஒதுக்கி வைத்த நிகழ்வுகள் இளவரசன் மரணத்துக்குப் பிறகு நடந்தது) அடைந்த பலன் இது. அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்குப் பிறகு சமூக ஊடக மக்கள் அடித்த அடியில் மாங்கனிகள் நசுங்கி மண்ணில் விழுந்திருக்கும். ஆனால் கேப்டனின் மகனும் மச்சானும் அதன் தாக்கத்தை குறைத்திருந்த வேளையில், அண்ணியார் வாய் திறந்த வினாடியே மாங்கா மைந்தனும் அப்பா மாங்காவும் சமூக ஊடகங்களில் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்றார்கள். இது அம்மனின் அருளுக்கு இணையான வரம். அந்த வகையில் கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான்.

இதுநாள் வரை வாய்க்கொழுப்பின் ஒற்றை பிரதிநிதியாக நிம்மி மாமியே இருந்து வந்தார். ‘ஜெ’கூட தன் திமிரை வார்த்தைகளால் பொதுவெளியில் காட்டியவரல்ல. ஆனால் ஊறுகாய் மாமியோ பிரஸ்மீட்டுக்கு 1000 ஓட்டு வீதம் தொலைக்கும் அளவுக்கு சனியை நாக்கில் குடிவைத்திருப்பவர். ஒரே பிரஸ்மீட் முலம் அந்த சனிநாக்கு நாயகி பட்டத்தை பிரேமா தட்டிப்பறித்து நிம்மி மாமியை காத்தருளியிருக்கிறார். இனி மீம்ஸ்களில் வாய்க்கொழுப்பு டெம்ப்ளேட்டுக்களை பிரேமலதாவே ஆக்கிரமிப்பார். ராஜேந்திர பாலாஜிக்கு மோடி டாடியானதில்கூட சில லாஜிக் மீறல்கள் இருக்கலாம், ஆனால் நிம்மிக்கு பிரேமாதான் மம்மி என்றால் அதை மறுக்க அகிலத்தில் யாருக்கும் திராணி இருக்காது.

யாசகம் பெற்ற அடுத்த வகையறா ஊடகவியலாளர்கள், எஸ்.வி சேகர் போன்ற சினிமா பிட்டுக் காமெடியன்களானாலும் சரி எச்.ராஜா போன்ற அரசியல் பிட்டுக் காமெடியன்களானாலும் சரி, துப்பினால் துடைத்துக் கொண்டு போவதே ஊடகங்களின் தலைவிதியாக இருந்தது. எஸ்.வி சேகர் வீட்டு வாசலில் ஆர்பாட்டம் செய்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் நிறுவன விசாரணைக் கமிசனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போதோ பிரேமா அண்ணி விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை கொஞ்சம் போல காட்டிக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். காட்சி ஊடகங்கள் விவாதங்கள் நடத்தின. நிம்மி மாமி செருப்பால் அடித்திருந்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை பரிசீலித்தால் இது எத்தனை பெரிய வாய்ப்பு என்பது உங்களுக்கு புரியும்.

வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே. தனியே போய் ஒரு தீக்குச்சி கடன் வாங்கிவரக்கூட தகுதியில்லாத திமிரெடுத்த பிள்ளையை வைத்துக் கொண்டு அவரையும் பொதுக்கூட்டத்தில் பேச அனுப்பினார். அது ஊரில் இருக்கும் கட்சிகள் எல்லாவறையும் ஒரே வாக்கியத்தில் ஒரண்டை இழுத்தது. வீட்டுக்காரர் ஃபேஸ் வேல்யூவின் கடைசி அறுவடையை எடுக்க வேண்டும். பிள்ளையின் வாயிலோ மூதேவி மல்லாக்கப் படுத்த வாக்கில் காலாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த துயரங்கள் போதாதென்று புரோக்கரேஜில் பாண்டித்யம் போதாத தங்கத் தம்பியோ இரண்டு கட்சிகளுக்கும் ஒரே நாளில் லவ் லெட்டர் கொடுத்து அம்பலப்பட்டிருக்கிறார்.

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் எந்த மனிதரும் நிதானமிழப்பார்கள். ஆனால் அண்ணியோ திட்டமிட்டு நிதானமாக நிதானமிழந்தார் என்பதை அந்த பேட்டியை பார்த்த யாராலும் கணிக்க முடியும். தன்னை பலியிட்டு தம் பிள்ளையையும் தம்பியையும் காப்பாற்றிய தியாகத்தாய் அவர் என்பதை அறிய இந்த ஒரு உதாரணமே போதும். ஜென்டில்மேன் படத்தில் மகன் படிப்புக்காக தன்னைத்தானே தீயிலிட்ட மனோரமாதான் தமிழகத்தின் தியாகத்தாய்க்கு உதாரணமாக இருந்தார். அண்ணி பிரேமா அதனிலும் மேலானவர் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

ஜெய்ஹிந்த்..

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க