விஜயகாந்த் சாவு: ஊடகங்கள் மற்றும் இன்ன பிறரின் ஒப்பாரிகளும், அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் துயரக்காட்சிகளும்!

ஊருக்கே உணவு அளித்தவர் என்று தினமணி பாராட்டுகிறது. சரி, GST-யை மறுத்து, பேரிடர் நிவாரண நிதியை மறுத்து தமிழனின் உணவிற்கும், வாழ்விற்கும் உலை வைக்கும் பாசிச பிஜேபியை ஆதரித்தவர்தான் ‘கேப்டன்’ என்று நாம் விமர்சித்தால், இந்த நேரத்தில் பேசக்கூடாது, அது அரசியல் நாகரீகம் அல்ல என்கிறார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து விமர்சித்தால் அரசியல் நாகரிகமா?

விஜயகாந்தை புனிதராக்கி தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டும் சடங்குகள் கனகச்சிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடடா! இந்த விசயத்தில்தான் என்னே ஒற்றுமை! ஊடகங்கள், செய்தித்தாள்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முற்போக்கு என சொல்லிக் கொள்ளும் பலர் என யாரும் விதிவிலக்கில்லை.

அரசியல்ரீதியாக நாம் விமர்சித்தவுடன் சமூக ஊடகங்களில் நம்மை வன்மவாதிகள் என தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்; இருக்கட்டும். உழைக்கும் மக்களின் சார்பாக நின்று பேசுபவர்களுக்கு இந்த தூற்றலும், அவதூறுகளும் வரும் என்பது எதிர்பார்த்தது தானே!

நிற்க. விஜயகாந்தை புனிதமாக்கும் இந்த திருப்பணியைப் பார்த்து அவரே கொஞ்சம் வெட்கப்பட்டிருப்பார்.

என்னடா இது! ஒரு மரணத்திற்கு வருத்தப்படக்கூடாதா? இறந்து போன ஒருவரை இப்படியெல்லாம் விமர்சிக்கலாமா? கொஞ்சம் கூட நாகரிகமற்றவர்களாக இருக்கிறீர்களே? என்பது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். வரவேற்கிறோம்.

யாருடைய மரணத்திற்கு வருத்தப்பட வேண்டும்? எதற்காக வருத்தப்பட வேண்டும்? என்ற இங்கிதம் தெரியாதவர்களல்ல நாங்கள். இறந்து போன ஒருவரைப் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல இது. அந்த நபரை புனிதமாக்கும் அனைவரின் மீதானதும்தான்.

சரி, இரண்டு நாள் நாடகத்தின் காட்சிகளுக்குள் செல்வோமா? இந்த ஊடகங்கள் எதை முன்னிறுத்தி விஜயகாந்தை நினைவுகூர்கின்றன. மக்களுக்காக அவர் போராடிய வரலாற்றையா? இல்லை… இல்லவே இல்லை… அவர் வள்ளல் பரம்பரை என்பதைத் தாண்டி ஒன்றையும் பேசவில்லை. மக்கள் இதற்காக வருத்தப்பட்டார்களோ இல்லையோ நேரலையில் இசைக்கப்பட்ட சோக கீதங்களுக்குத்தான் அதிகமாக வருத்தப்பட்டிருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.


படிக்க: விஜயகாந்த் : திரையில் கேப்டன்; அரசியலில் கோமாளி


கவுண்டர் சாதி வெறிக்கு தூபம் போட்ட சின்னக் கவுண்டர் படத்தில் ‘அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே’ என்ற பாடல்தான் ஊடகங்கள் ஒளிபரப்பியதில் ஹைலைட். ஆனால் யாருக்கும் இது தமிழ்நாட்டின் முற்போக்கு மரபின் மீது காறி உமிழ்கிறது, சாதி ஆதிக்க உணர்வை தூக்கிப் பிடிக்கிறது என்று  தோன்றவில்லை போலும். ஒருவேளை தெரிந்திருக்கலாம்; புரிந்திருக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் பேசினால் அதுவும் தமிழனின் நாகரிகத்தை கேள்விக்குள்ளாகி விடுகிறதல்லவா? என்னே ஒரு அழகான முரண்!

நடிகர் வடிவேலு ஏன் இந்த நிகழ்விற்கு வரவில்லை? ஒரு வேளை அவர் வந்திருந்தால் கண்டிப்பாக தொண்டர்களிடம் அடிவாங்கியிருப்பார் என்பது போன்ற நாட்டுக்குத் தேவையான, கூர்மையான விவாதங்கள்… கருத்துப் பகிர்வுகள்… சமூக ஊடகங்களில்…

இந்த நடிகர் இப்படி அழுதார்! அந்த நடிகை அப்படி வருத்தப்பட்டார்! வாயைப் பொத்திக் கொண்டு கதறினார்! மூக்கைப் பொத்திக் கொண்டு விம்மினார்! இந்த வசனங்களையும், காணொலிகளையும் பார்த்து நாம் காரணமேயில்லாமல் கதற வேண்டும்…

பார்ப்பனியத்தை எதிர்த்து களமாடிய பெரியாரின் வழிவந்த, அடுக்குமொழியில் அலறவிட்ட அண்ணாவின் வழிவந்த திராவிட ஊடகங்களும், திராவிடத் தலைவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல… அது சரி ஓட்டரசியல் என்று வந்துவிட்டால் உண்மையும், நேர்மையும் எத்தனை கிலோ என்பதுதானே? சரி, சரி புரிகிறது… கொள்கைகளை நாங்கள் இன்றா கைவிட்டோம்? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா அன்றே சொன்னார். நாங்கள் அன்றே கைவிட தொடங்கிவிட்டோம் என்று சொல்லாமல் சொல்கிறது புரிகிறது. மாற்றான் பார்ப்பன அடிவருடியாக இருந்தால் என்ன? யாராக இருந்தால் என்ன? அதுவா இப்போது பிரச்சினை என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது…

விஜயகாந்தின் மரணத்திற்கு தமிழ் மக்களை மட்டுமா அழவைத்தார்கள்? பார்ப்பன ஊடகங்கள் செல்வாக்கில் வடக்கேயும் அழுகிறது. ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி யை தனது கார்ட்டூன்கள் மூலம் கூர்மையாக அம்பலப்படுத்தும் சதீஸ் ஆச்சார்யாவே விஜயகாந்தின் வள்ளல் குணத்தை மெச்சி கார்ட்டூன் போடும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றால் இது தமிழனின் பெருமை அல்லவா? ஒரு நிமிடம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.

ஊருக்கே உணவு அளித்தவர் என்று தினமணி பாராட்டுகிறது. சரி, GST-யை மறுத்து, பேரிடர் நிவாரண நிதியை மறுத்து தமிழனின் உணவிற்கும், வாழ்விற்கும் உலை வைக்கும் பாசிச பிஜேபியை ஆதரித்தவர்தான் ‘கேப்டன்’ என்று நாம் விமர்சித்தால், இந்த நேரத்தில் பேசக்கூடாது, அது அரசியல் நாகரீகம் அல்ல என்கிறார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து விமர்சித்தால் அரசியல் நாகரிகமா? இல்லை விமர்சிக்கவே கூடாது. புரிகிறது. பார்ப்பன கும்பலுக்கு வலிக்கிறது என்று…


படிக்க: பிண அரசியல் செய்த அண்ணாமலை | தோழர் மருது


2011 தேர்தல் வெற்றியின் மூலம் விஜயகாந்த் என்ற தனிமரம் தோப்பானதாம்! தினமணி மாமா சொல்கிறார்… திமுக-வை ஒழித்துக் கட்ட பார்ப்பன கும்பல் என்ற தோப்புதான் இந்த தனிமரத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது என்று நாம்தான் பேச வேண்டியுள்ளது.

’கடவுளே! தெய்வமே! எங்கள விட்டுட்டுப் போயிட்டியே என மக்கள் கதறினார்கள்’ என்று பார்ப்பன தினமலர் எழுதுகிறது. அப்படித்தான் மக்கள் இருக்க வேண்டும் என்பதுதானே இவர்களின் விருப்பம்.

தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் சேதி என்ன தெரியுமோ? ‘தமிழ்நாட்டின் இருதுருவ அரசியல் சூழலை மாற்றியமைத்தவர் விஜயகாந்தாம்’. பாருங்கள், பூனைக்குட்டி வெளியே வருகிறது. அப்படியென்றால் அந்த புதிய துருவம் தான் என்ன? பார்ப்பன கும்பலின் ஆசீர்வாதத்தோடு பக்காவாக தமிழ்நாட்டிற்கு வேட்டு வைப்பதுதானே? திமுக-வை ஒழித்துக்கட்டுவது தானே?

’புரட்சி முடிவடைகிறது.. நிஜத்திலும் நிழலிலும்’ இது தி இந்தியன் எக்ஸ்பிரசின் செய்தித் தலைப்பு… என்ன புரட்சி என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு யாரிடம் சென்று பதில் கேட்பது? அய்யா, நியாயமாரே! கொஞ்சம் அந்த வார்த்தையை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது… உண்மையாகவே அதற்காக பாடுபட்டவர்களை, தியாகித்தவர்களை கேவலப்படுத்துகிறீர்கள்… இதை நீங்கள் தெரிந்துதான் செய்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

நமக்குத் தெரிந்த ஒரு அண்ணன் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார். ”நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறேன். இல்லைன்னா 50 ஆயிரம் செலவு பண்ணிக்கிட்டாவது நான் விஜயகாந்த் சாவுக்குப் போயிருப்பேன்” என்று.

பார்ப்பன கும்பலும், ஆளும்வர்க்கங்களும், ஒட்டுண்ணிகளும் என்ன நினைத்தார்களோ அதை சாதித்து விட்டார்கள். தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்த வேண்டும், சுயமரியாதை அற்றவர்களாக மாற்ற வேண்டும், அடிமைச் சிந்தனைக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்பதுதானே இந்த கும்பலுடைய நோக்கம். அதற்காகத்தானே விஜயகாந்தின் சாவுக்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இத்தனை ஒப்பாரிகள்…

’துரோகத்தின் வரலாற்றில் விபீடணர்களுக்கும் இடமிருக்கிறதுதானே, அப்படி விஜயகாந்தும் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று அண்ணாவின் வாரிசுகளும் ’பெருந்தன்மையோடு’ அளந்துவிடக்கூடும்.

தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் இழிவுபடுத்துவதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்?

”இரக்க உணர்ச்சியை சுரண்டுவதை விட கொடூரமான சுரண்டல் வேறு எதுவுமில்லை” என்று கூறுகிறார் ஆசான் மார்க்ஸ்.

முற்போக்குவாதிகள் என்று கூறுவோர்தான் பதில் கூற வேண்டும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube2 மறுமொழிகள்

  1. அருமையான பதிவு. இது ஒரு வணிக சூதாட்டம். இரக்க உணர்ச்சியை சுரண்டுவதை விட கொடூர சுரண்டல் ஏதுமில்லை. மிகவும் சரி.

  2. மிகவும் அருமையான கட்டுரை. நக்கலாக எழுதப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு! ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க