தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணித்தார். திரைத்துறையினர், அவரது ரசிகர்கள் உட்பட பலரும் “விஜயகாந்த் ஆபீசுல எப்போ போனாலும் கறிசோறு போடுவாங்க” என்று ஒப்பாரி வைத்த வண்ணம் உள்ளனர்.

நாம் இங்கு விஜயகாந்த்தை தனிநபராகப் பரிசீலிக்காமல், அவரது அரசியலைப் பரிசீலிக்க வேண்டும். எனவே, அவரது அரசியல் குறித்தான கட்டுரைகளை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

***

விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

விஜயகாந்த்மிழகத்தில் காஸ்ட்லியான கனவு எது? கோட்டையில் கொடியேற்றும் கனவுதான் அது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு அலையில், பாசிச ஜெயாவின் கடைக்கண் பார்வையோடு கரையேறியவர் விஜயகாந்த். 29 சட்ட மன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தும் அடுத்த தேர்தலில் மேற்படி கனவு நனவாகும் என்று கணிசமாக போதையேற்றிருக்கும்.

விஜயகாந்த் ஒரு ஆளாவதை அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளுமே விரும்பவில்லை. சென்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க மேடைகளில் “கேப்டனை” வறுத்தெடுத்ததை ‘அம்மாவும்’ ரசித்திருப்பார் என்பதே உண்மை. போயஸ் தோட்டத்திற்கு பிழைப்பைத் தேடி போன தலைவர்கள் எவரும் சுயமரியாதை என்ற ஒன்றை தலைமுழுகி விட்டுத்தான் பாயாசம் குடிக்க முடியும் என்பதற்கு அத்வானி முதல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வரை பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. இதில் டாக்டரேட் முடித்தவர் தா.பாண்டியன். அதனால்தான் அவருக்கு மட்டும் அங்கே தனி கவனிப்பு.

ஆனால் ‘புரட்சித் தலைவி’யின் ஈகோவுக்கு சற்றும் குறைவில்லாமல் இயங்கும் ‘கேப்டனது’ ஈகோவும் ஒரு உறைக்குள் இரண்டு ஈகோ ஃபாக்டரி இயங்க முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. இவ்வளவிற்கும் ஆரம்பத்தில் கேப்டன் அம்மாவுக்கு அனுசரணையாக தி.மு.கவை மட்டும் விளாசியவாறு அரசியல் செய்து வந்தார். என்னதான் ஈகோ மலை இருந்தாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு சில பல எம் எல் ஏக்கள் வேண்டும் என்பதால் கூட்டணிக்கு சம்மதித்தார். ஒரு வேளை அவர் சம்மதிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்திருந்தால் இந்தக் கோமாளிக்கு அப்போதே மங்களம் பாடியிருக்கலாம். ஆனால் தி.மு.க, அ.தி.மு.கவில் ஆளாக முடியாத கொட்டை போட்ட பெருச்சாளிகள் கைக்காசை போட்டு செலவு செய்து தே.மு.க.தி.கவிற்கு வெளிச்சம் போட்டு நுழைந்தவர்கள் வியாபாரத்தில் ரிடர்ன்சை எதிர்பார்த்தனர்.

அந்த நிர்ப்பந்தம் கேப்டனை வழிக்கு கொண்டு வந்தது. இப்படித்தான் ஆரம்பத்தில் அவர் மனம் கோணாமல் அம்மாவிடம் தஞ்சம் அடைந்தார். எனினும் உள்ளே அவருக்கு எப்போதும் இருக்கும் ஈகோ ஃபயர் கொஞ்சம் தணிந்திருந்தது. ஆனால் அதை அம்மா எப்போதும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு அவ்வப்போது குட்டவும் செய்தார். தான் போட்ட பிச்சைதான் அந்த 29 எம்.எல்.ஏக்கள் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்த மனநிலைதான் உள்ளூராட்சித் தேர்தலில் கேப்டனை எச்சில் பருக்கை இல்லாமல் கூட விரட்டியடிக்க காரணமாக இருந்தது. அதில் தனியாக நின்ற கேப்டன் மண்ணைக் கவ்வினார் என்பதிலிருந்து தே.மு.தி.கவின் இத்துப் போன பலத்தை புரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு தே.மு.தி.க சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் அ.தி.மு.கவிற்கு தாவலாம் என்பதை ஊடகங்கள் எப்போதும் சொல்லி வந்தன. கேப்டனுக்கே இந்த பயம் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது நாளொன்றுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் வீதம் கோட்டையில் அம்மாவை சந்திந்து அருளாசி பெறுகிறார்கள். இந்தக் கணக்கில் போனால் இன்னும் இரண்டு வாரத்தில் கேப்டனது கட்சி எம்.எல்.ஏக்கள் கோட்டை கிரிவலத்தை முடித்திருப்பார்கள். அதிலும் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன் போன்ற பெரும்புள்ளிகளே அம்மா சரணத்தில் புகலிடம் அடைந்திருப்பதில் கேப்டனுக்கு ராச்சோறு கூட இறங்கியிருக்காது. அதுதான் பத்திரிகையாளர்களிடம் அவர் சீறியதன் பின்னணி.

கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது. இனி அடுத்த சுற்றுக்கு தி.மு.கதான் கதி என்றான பிறகு கேப்டன் தனது சரணம், பல்லவிகளை மாற்றிப் போட வேண்டும். கேட்டால் லியாகத் அலிகான் அய்யா சரணத்தை தீப்பிடிக்கும் தமிழில் எழுதித் தந்து விடுவார். திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிப்பார் கேப்டன்.

தே.மு.தி.கவின் டங்குவார் இப்படி நொந்து நூடில்சாகும் அடிப்படை என்ன? தி.மு.க, அ.தி.மு.க எனும் இரண்டு பெருச்சாளிகளுக்கு மாற்று என்று பேசிவிட்டு அந்த பெருச்சாளிகள் கொண்டிருக்கும் அதே அடிப்படையில் பிறந்த மற்றொரு பெருச்சாளி இல்லையில்லை சுண்டெலிதான் தே.மு.தி.க. தனிநபர் துதி, குடும்ப ஆதிக்கம், ஊழல் பெருச்சாளிகளே தளபதிகளாய் கட்சியை ஆக்கிரமித்திருப்பது, மருந்துக்கு கூட ஜனநாயகமின்மை, சென்டிமெண்ட் அரசியல், பிழைப்பிற்க்காக நாய் நரியுடன் கூட கூட்டணி வைப்பது, மக்கள் பிரச்சினைகளுக்காக சூடாக பேசியே காலம் கடத்துவது…. இத்தகையதின் நீட்சிதான் கேப்டனது இந்த காமடி போர் தோல்விக்கு காரணங்கள்.

ஓட்டுப் பொறுக்கி கட்சிகளது நடைமுறை இதுதானென்பது நிதர்சனமாயிருப்பதால் புதிதாத் தோன்றும் ஒட்டுண்ணிகளால் மாற்றம் எதுவுமில்லை. சிவப்பு படங்களில் ஊழல் எதிர்ப்பு வசனங்களை நா புடைக்க பேசியவர் என்பதை வைத்து மட்டும் தமிழகத்தை ஆண்டு விடலாமென மனப்பால் குடிக்கிறார் என்றால் குடிப்பவரை விடுங்கள், அப்படி குடிக்கலாம் என்று ஒரு நிலைமையை தமிழக மக்கள் வைத்திருப்பதுதான் கேவலம்.

– வினவு (அக்டோபர் 2012)

***

புரட்சி அண்ணி பிரேமலதா – தமிழகத்தின் புதிய சீக்கு!

“மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது தத்துவ உலகில் ஒரு பிரபலமான வாக்கியம்.  இயற்கை அல்லது இந்த உலகம், எப்போதும் ஏதோ ஒரு முறையிலும் மாறிக்கொண்ட இருக்கும், மாறாதது எதுவுமில்லை என்பதை விளக்குகிறது அந்த வாக்கியம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் “மாற்றம்” என்ற வார்த்தை இப்போது வானாளவ பேசப்படுகிறது. ஆனால் அந்த மாற்றம் குறித்து பேசும் கட்சிகளும், கூட்டணிகளும் ஒட்டுப் பொறுக்கி அரசியலின் முடை நாற்றத்தை அல்லது இந்த போலி ஜனநாயகத்தின் அழுகுணி ஆட்டத்தை மறைக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாதா, இவர்களுக்கு மாற்று கிடையாதா, மாறி மாறி இவர்களையே ஆட்சியில் அமர்த்த வேண்டுமா என்பதை மாபெரும் தத்துவ ஞானக் கேள்வியாக டி.வி நிலைய வித்வான்கள் விவாதம் என்ற பெயரில் படுத்தி எடுக்கின்றார்கள்.

அ.தி.மு.கவில் அவர் பெயர் ஜெயலலிதா! தே.மு.தி.க-வில் அவர் பெயர் பிரேமலதா!
அ.தி.மு.கவில் அவர் பெயர் ஜெயலலிதா! தே.மு.தி.க-வில் அவர் பெயர் பிரேமலதா!

இரண்டு கட்சிகளுக்கு மாற்று என்று பேசுபவர்கள் அனைவரும் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான உத்தியாக இந்த டயலாக்கை அடிக்கடி எடுத்து விடுகிறார்கள் என்று சொல்லப்படுவதை நாம் நிராகரிக்க முடியாது. அவர்களில் சில அப்பாவிகளாக இருந்தாலும் தாம் என்ன பேசுகிறோம், யாருக்கு பயன்படுகிறோம் என்ற தன்னறிவு இன்றி ஊடகங்கள் கட்டியமைத்திருக்கும் பொதுப்புத்தியில் சரவண பவன் பாணியில் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறார்கள்! ஆகவே இந்த மாற்று வைபவத்தில் புதிய ருசியை தேடும் ஒரு நுகர்வுக் கலாச்சார தேடலும் இருக்கிறது. அந்த தேடலை விளம்பரங்கள் வழி நிறுவனங்கள் கற்றுக் கொடுப்பதைப் போல அரசியல் தேடலை ஊடகங்கள், அறிஞர்கள், பிரபலங்கள் என்று பலர் கற்றுக் கொடுக்கின்றனர்.

தி.மு.க – அ.தி.மு.க தலைமை அலுவலகங்களில் ஒன்றரை அல்லது இரண்டே கால் சீட்டுகளுக்காக போலி கம்யூனிஸ்டுகள் இவ்வளவு காலம் தவம் கிடந்தாலும், அதிலும் போயஸ் தோட்டத்தில் “இன்னைக்கு முடிஞ்சு போச்சு, நாளைக்கு வாங்க” என்று தெருவுக்கு விரட்டியடிக்கப்பட்டிருந்தாலும் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதை மறைத்து விட்டு “மாற்றம்” குறித்து மார் தட்டுகிறார்கள். அந்த மார்பு, சந்தர்ப்பவாதம் எனும் டி.பியால் இன்றைக்கோ நாளைக்கோ காத்திருக்கிறது என்றாலும்.

அவருடைய பிறந்த நாளுக்கு அம்மா அவர்கள் வீடு தேடி வாழ்த்து தெரிவிக்கும் அளவுக்கு அம்மா கம்யூனிஸ்டாக இருந்த தா.பாண்டியனது கட்சி கூட இன்றைக்கு “மாற்று” குறித்து பேசுகிறது. தொகுதி பிச்சைக்காக போயஸ் தோட்டத்தில் தவம் கிடக்கவோ இல்லை அணி வகுக்கவோ சென்ற நல்லக்கண்ணுவைக் கூட பலர் முதலமைச்சராக முன்மொழிகிறார்கள். எளிமையாக வாழும் ஒருவர் பாசிஸ்டாக ஆடும் ஒருவரின் அரண்மனைக்குச் சென்று அம்மா தாயே ஒன்றோ இரண்டோ பாத்து போடுங்கமா என்று கேட்பதை வைத்து அந்த எளிமையின் பொருள் என்ன? என்று எந்த கனவானும் சீமாட்டியும் கேட்பதில்லை.

வைகோவைப் பொறுத்தவரை அவரது அபிமானி ஜூனியர் விகடன் திருமாவேலனாலேயே கேலி செய்யப்படும் முக்தி நிலையை அடைந்து விட்டார். வி.சி திருமாவளவனோ கேப்டன் அணி என்று அழைப்பது கவுரக்குறைச்சல் இல்லை என ஆண்டைகளின் மண்டப ஓரத்தில் பரிதாபமாய் நிற்கிறார். அடங்க மறு அத்து மீறு, திருப்பி அடி எல்லாம் மூப்பானர் காலத்தில் தேர்தல் ஜோதியில் கலந்து எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவராக வாழ்த்தி இன்று தே.மு.தி.க எனும் கோமாளிக் கட்சியில் கரைந்து நிற்கிறது.

ஆக மாற்று பேசும் இந்த யோக்கியவான்கள் எவரும் கடந்த காலத்திலேயே யோக்கியமாக எதையும் செய்ய வில்லை என்பதோடு இன்று அவர்கள் முன்னிறுத்தும் கேப்டன் அணியிலேயும் அதே அயோக்கியத்தனத்தையே இலட்சியமாக முன்னிறுத்துகிறார்கள்.

இறுதியில் இத்தனை இலட்சிய மாற்றுக்களையும் சுமந்து கொண்டு விஜயகாந்த், முதல்வர் கனவில் என்ன பேசுவதென்று தெரியாமல் விழிக்கிறார். மைத்துனர் சதீஷோ, மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகள் கேப்டனை முதல்வராக ஏற்றதால் வைகோ, திருமா, கம்யூனிஸ்டு தலைவர்கள் அனைவருக்கும் பதில் மொய்யாய் அமைச்சர் பதவிகளை அன்புடன் அளிக்கிறார். இதையெல்லாம் செய்ய வேண்டியது தமது கடமை என்று அந்த கடமையே கூனிக்குறுகுமளவு உருகுகிறார்.

கல்லூரியைக் காப்பாற்றவும், கல்யாண மண்டபத்தை இடித்தவர்களை பழிவாங்கவும் அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்கு, கூடுதலாக லியாகத் அலிகான் வசனங்களுக்கு கைதட்டும் மக்கள் தன்னையும் ஒரு ஆளாக ஏற்கக்கூடும் என்று நினைத்திருக்க கூடும். இருப்பினும் ஒரு கட்சி நடத்துவது எவ்வளவு பெரிய சித்திரவதை என்பதையும் அவர் இக்காலத்தில் கண்டிப்பாக உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் பேரம், மரியாதை சந்திப்பு, கிங், மேக்கர், போன்ற வார்த்தைகள் அதிகம் அவரைச் சுற்றி வந்தன. இடையில் அவரது மனைவி, மைத்துனர் அடங்கிய கிச்சன் கேபினட் தே.மு.தி.கவின் கடிவாளத்தை கையிலெடுத்தது.

தே.மு.தி.க என்ற கட்சியின் பெயரே நல்ல நாளில் மூகூர்த்த நேரத்தில் மூன்று பெயர் கொண்ட சீட்டில் ஒன்றை தெரிவு செய்து முடிவு செய்யப்பட்ட ஒரு தரித்திரம். இந்த கின்னஸ் சாதனைக்கு போட்டியாக இந்த தேர்தலிலும் பங்குனி உத்திரத்தில்தான் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை இவர்கள் பதம் பார்த்து கூட்டணி அமைத்தார்கள். சில அப்பாவித் தோழர்கள் பகத்சிங் நினைவு தினமென்று ஸ்டேட்ஸ் போட அதை காலி செய்தது இந்த பங்குனி உத்திர பஞ்சாங்க ரிலீஸ்.

விஜயகாந்த் கூட கொஞ்சம் யதார்த்தமாக இருக்கூடிய ஆள் என்பதால்தான் ஜெயாவை எதிர்த்து அவர் பேசுவதும், அ.தி.மு.க ஆதரவு ஊடகங்களை அவர் எள்ளை நகையாடுவதுமாய் இருக்கிறது. இருப்பினும் தி.மு.க – அ.தி.மு.க எனும் இருபெரும் கட்சிகளில் சேர்ந்து ஆளாக வாய்ப்பில்லாத அண்ணன்கள், வள்ளல்கள், ரவுடிகள், ரியல் எஸ்டேட் தரகர்கள், அரசியல் நாட்டாமைகள் பலரும்தான் தே.மு.தி.க எனும் விபத்துக் கட்சியின் தூண்கள். அதில் பண்ருட்டி முதல் மைஃபா பாண்டியராஜன் வரை பல பெருச்சாளிகள் இருந்தனர். பிறகு அந்தப் பெருச்சாளிகளில் சிலர் தே.மு.தி.கவின் ரிசல்டைக் காட்டி அ.தி.மு.க கோட்டையில் தங்களை நல்ல விலைக்கு விற்றுக் கொண்டார்கள்.

தே.மு.தி.க பிசினைஸை கவனித்துக் கொள்ளும் பிரேமதலா!
தே.மு.தி.க பிசினைஸை கவனித்துக் கொள்ளும் பிரேமதலா!

தனது கட்சிக்காரர்கள் அனைவரும் இப்படித்தான், அவர்கள் செலவழிப்பது ‘அதை’ எதிர்பார்த்துத்தான் என்பது விஜயகாந்துக்கும் தெரியும். சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவோடு கூட்டணி வைத்து பின்பு மோடி பதவிப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியில் முன் சீட்டு பாஸ் கிடைக்க வில்லை என்று பொன்னாரோடு காய் விட்ட கோபத்தில் இருந்தவர்தான் கேப்டன். அவரைப் பொறுத்தவரை வீட்டுக்கு வந்தவரை உபசரிக்க வேண்டும், மற்றவர் வீட்டுக்கு போனாலும் நன்றாக உபசரிக்கப்படவேண்டும். அதானியைக் குளிப்பாட்டும் மோடி குரூப், கேப்டனை குளிப்பாட்டினால் ரிடன்ஸ் கம்மி என்று வரம்பிட்டுக் கொண்டதை அறியுமளவு விஜயகாந்துக்கு அரசியலும் தெரியாது, அறவியலும் புரியாது.

இடையில் அவர் எந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற முடிவை அண்ணி பிரேமலாதா எடுத்துக் கொண்டார். யோகா தினத்தில் ஆசனங்களை செய்யாமல் விஜயகாந்த திணறிய போதும் சரி, கூட்டத்தில் உளறும் போதும் சரி, பிழை திருத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டார் பிரேமலதா. எனினும் அவர் விஜயகாந்தைப் போல கொஞ்சமாவது யதார்த்தமாக இருப்பவரல்ல. அதாவது பரம்பரை பாசிஸ்டுக்குரிய அத்தனை பண்புகளும் அவருக்குண்டு. அ.தி.மு.கவில் அவருக்கு பெயர் ஜெயலலிதா. தே.மு.தி.கவில் அவரது பெயர் பிரேமலதா.

“தமிழகத்தின் வசந்த காலமே, எங்கள் விழாக் கோலமே, தமிழ் வீரமங்கையே, புரட்சி அண்ணியே” என்று தே.மு.தி.கவினர் தமிழகமெங்கும் ஏதோ ஒரு நம்பிக்கையில் செலவழித்து தட்டியோ பிளக்ஸோ வைக்கின்றனர். உடல்நிலை காரணமாகவோ இல்லை ரிமோட் கண்ட்ரோல் அண்ணி காரணமாகவோ இந்த தேர்தலில் விஜயகாந்தின் நகைச்சுவை பேச்சுக்களை நாம் அதிகம் கேட்க முடியாது என்பதால் அண்ணிதான் தே.மு.தி.கவின் நட்சத்திர பேச்சாளர்.

கூட்டிக் கழித்து சொன்னால் பிரேமலதா என்பவர் யார்? மக்களின் உரிமையான ஜனநாயகம் என்பது தனது கைப்பையில் இருக்கும் ஏ.டி.எம் கார்டு போலவும், அதிகாரம் என்பது தனது காலில் இருக்கும் செருப்பு போலவும் கருதுகின்றவர். மக்கள் சப்தமிடாமல் கையேந்தினால் தனது கார்டை போட்டு கொஞ்சம் பணம் கொடுப்பார். சத்தம் போட்டால் செருப்பால் அடிப்பார். இந்த உலகில் இருக்கும் எதுவும் சீமாட்டி மனது வைத்தால் மட்டுமே மக்களுக்கு கிடைக்கும் என்ற ராயல் சீமாட்டியின் பார்வை அப்படியே பிரேமலதாவுக்குப் பொருந்துகிறது. மக்களை அடி முட்டாள்களாகவும், அடிமைகளாகவும் கருதுவதில் அம்மாவையே விஞ்சிவிட்டார் அண்ணி. அவரது பேச்சின் சில பகுதிகளைக் கேளுங்கள்!

“இப்போதே தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக பெரிய பெரிய வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் பேசியிருக்கிறோம்” என்கிறார். இது உண்மையென்றால் இந்த பேரத்திற்காக எவ்வளவு வாங்கியிருக்கிறார் என்று போலிக் கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தில் இருக்கும் தோழர்கள் அதுவும் நமது அருமைக்குரிய அண்ணன் மாதவராஜ் போன்றோர் கேட்பார்களா? அப்படிக் கேட்டால் தா.பா-நல்லக்கண்ணு-இராமகிருஷ்ணன் வகையறாக்கள் அதற்கு வெளி என்றால் பிரபஞ்சம், கம்பெனி என்றால் காலக்ஸி, பேச்சு என்றால் லேகியம், என்று ஒரு பதிலை வைக்க மாட்டார்களா என்ன?

“பொங்கலுக்கு ஒரு வாரம் விடுப்பு, ஜல்லிக் கட்டை மீண்டும் நடத்துவோம், ரமணா படத்தைப் போல ஊழல் ஒழிப்புப் படை,  இறுதியில் கேப்டன் ஆட்சிக்கு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.35”க்கு கொடுப்பாராம். இவையெல்லாம் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கோட்டை பதவியை குறிவைத்து அண்ணி முழங்கிய போர்ப்பறைகள். முகமது பின் துக்ளக் அல்லது லூயி போனபர்ட் போன்ற வரலாற்றின் கைப்புள்ளைகளை இங்கே நிஜத்தில் காண்கிறோம்.

பெட்ரோல் விலை, மின்கட்டணம் உள்ளிட்டு பல்வேறு சேவைகள், கட்டணங்கள் அனைத்தும் ஒழுங்கு முறை ஆணையங்கள் எனப்படும் முதலாளிகள், அதிகாரிகள் அடங்கிய அரசாங்கங்களுக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகின்றது. கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சட்டபூர்வமாகவே தாரைவார்க்கப்பட்டு மக்கள் நலன் சமாதியாகும் காலத்தில் இப்படி பச்சையாக பொய்யுரைக்க முடியுமென்றால் அதை என்னவென்று சொல்வது?

எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் சட்டசபைக்கு போனாரா, பேசினாரா என்று ஜெயாவின் பாசிசத்தை சிறந்த ஆட்சி நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்ட அறிவுஜீவி அடிமைகள் கேட்கிறார்கள். ஆனால் ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் தே.மு.தி.க என்ன போராட்டத்தை நடத்தியிருக்கிறது?

கோவன் கைதைக் கண்டித்த அறிக்கையைத் தாண்டி தமிழகத்தில் ஒரு டாஸ்மாக் கடையைக் கூட இவர்கள் ஏன் உடைக்கவில்லை? பெட்ரோல் விலை உயர்வைக் குறைப்பதற்கு முன்னால் அதை உயர்த்திய அரசை, மோடி கட்சியை எதிர்த்து இவர்கள் ஏன் சுண்டுவிரலை கூட அசைக்கவில்லை?

ஊழலுக்கு ரமணா படை அனுப்புவதற்கு முன்னால் ஆண்டாள் அழகர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கமால் டிமிக்கி கொடுத்ததையும், எதிர்த்துக் கேட்ட பேராசிரியர்களை ஆள் வைத்தும் அடித்தார்களே அந்த கல்லூரி ஓனரை பெண்டு கழட்ட படை அனுப்புவாரா அந்த அண்ணி?

ஜல்லிக்கட்டு நடத்துவதை உச்சநீதிமன்றம் சமாதியாக்கிய நிலையில் பிரேமலதா என்ன செய்வார்? கேப்டனை அனுப்பி உச்சநீதிமன்றத்தில் குண்டு போடுவாரா? இல்லை பாசிச ஜெயாவை விடுவித்த குமாரசாமியைக் கண்டித்து ஒரு கூட்டத்திலாவது பேசுவாரா ? பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் உள்நாட்டில் மூடுண்ட தொழில்களும் வேலையிழந்த தொழிலாளிகளும் வாழும் நாட்டில் இன்னும் எத்தனை பேர் தாலியை அறுக்க இவர்கள் பன்னாட்டு முதலாளிகளை அழைக்கிறார்கள்?

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று என்ற பெயரில் ஜெயா எதிர்ப்பு வாக்குகளை உடைக்கும் பணி இருப்பது உண்மை என்றாலும், மக்கள் நலக்கூட்டணியோ இல்லை அவர்கள் தூக்கிச் சுமக்கும் கேப்டன் அணியோ தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளை விட கேவலமான முறையில் இருப்பது உண்மையில்லையா?

மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கை துவங்கி, இந்துத்துவ சார்பு வரை அனைத்து பீடைகளையும் விருதுகளாக அழகு காட்டும் கேப்டன் கட்சிதான் மாற்று என்றால் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளலாம்.

வினவு (ஏப்ரல் 2016)

***

நேற்று அண்ணாயிசம்! இன்று அண்ணியிசம்!!

ட்டு முதல் எஸ்.பி. வரை போலீசு என்ற நிறுவனம் முழுவதையும் அம்பலப்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி என்ற பெண். அவரைப் போல பா.ஜ.க. முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரையும் முன் எப்போதும் இல்லாத அளவில் அம்பலப்படுத்தியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

விஜயகாந்த்
விஜயகாந்த் : கழிசடை அரசியல் நாயகன்

உத்தமபுத்திரர்கள் போலவும் ஊழலின் நிழல் கூடப் படியாதவர்கள் போலவும் மக்கள் நலக் கூட்டணியினர் பம்மாத்து செய்து கொண்டிருந்தனர். திராவிட இயக்கத்துக்கு மாற்று என்று கூறி, அவர்களை உசுப்பேற்றிவிட்டுக் கொண்டிருந்தன ஊடகங்கள். விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து, வாயெல்லாம் பல்லாக தே.மு.தி.க. அலுவலகத்திலிருந்து பஞ்ச பாண்டவர்கள் பேட்டி அளித்த அந்த நிமிடத்திலிருந்து நகைச்சுவைக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.

தி.மு.க. 500 கோடிக்கு விஜயகாந்தை பேரம் பேசியது என்றார் வைகோ. இல்லை என்று அறிக்கை விட்டார் அண்ணியார். இது விஜயகாந்த் அணி என்கிறார் பிரேமலதா. இல்லை என்கிறார் நல்லகண்ணு. இது கூட்டணி இல்லை, தொகுதி உடன்பாடுதான் என்கிறார் ஒருவர். இல்லை, இப்போதே கூட்டணிதான் என்கிறார் இன்னொருவர். இப்போது கூட்டணி இல்லை, ஆட்சி அமைக்கும்போதுதான் கூட்டணி என்கிறார் வேறொருவர்.

ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி
கருப்புப் பணத்தில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தி உறுதிமொழி ஏற்கும் கருப்பு எம்.ஜி.ஆர்

ஒப்பந்தம் முடிவான மறுகணத்திலிருந்து கேப்டனைக் காணவில்லை. அண்ணி பொளந்து கட்டுகிறார். மச்சான் அமைச்சரவையை நியமிக்கிறார். விஜயகாந்தைச் சுற்றி நாங்கள் இருக்கிறோம், இனி பத்திரிகையாளர்கள் யாரும் அவரை நெருங்க முடியாது என்று பொளந்து கட்டிய போர்வாள் பேட்டியிலிருந்து தப்பி ஓடுகிறார். தப்பிக்க முடியாமல் தடுமாறுகிறார் எழுச்சித் தமிழர். பெட்ரோல் விலையைக் குறைப்பேன் டோல்கேட்டை மூடுவேன் என்ற விஜயகாந்தின் காமெடி வாக்குறுதிகளுக்கு விளக்கமளிக்க முடியாமல், அவர் கொள்கைக்கு நான் பொறுப்பல்ல, என் கொள்கைக்கு அவர் பொறுப்பல்ல; இருந்தாலும், அவர்தான் முதலமைச்சர் என்கிறார் திருமா.

அன்று எம்.ஜி.ஆர். என்ற நடிகருக்குக் கட்சியையும் கொள்கையையும் உருவாக்கிக் கொடுத்துத் தமிழகத்தின் தலையில் கொள்ளி வைத்தவர் வலது கம்யூனிஸ்டு தலைவர் கல்யாணசுந்தரம். பிறகு, அம்மாவுக்கு தா.பா. இப்போது விஜயகாந்தின் கொள்கையை பிரேமலதா உருவாக்கி விட்டார். அதற்கு விளக்கம் சொல்லும் பொறுப்பை மட்டும் நால்வரிடம் ஒப்படைத்திருக்கிறார். முன்னர் எம்.ஜி.ஆர்., கம்யூனிசம், காப்பிடலிசம் என்ற இரண்டும் கலந்து தயாரிக்கப்பட்ட தனது காக்டெய்ல் கொள்கைக்கு அண்ணாயிசம் என்று பெயரிட்டார். இன்று அது அண்ணியிசமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

ஒரே நேரத்தில் தேசியக் கட்சியான பா.ஜ.க.வுடனும், திராவிடக் கட்சியான தி.மு.க.வுடனும், முற்போக்கு முகாமான வலது, இடது கம்யூனிஸ்டுகளுடனும் பேரம் பேச வேண்டியிருக்கும் என்பதை தொலைநோக்குடன் உணர்ந்துதான், 2005-இலேயே தனது கட்சிக்கு தேசிய, முற்போக்கு, திராவிடக் கழகம் என்று விஜயகாந்த் பெயர் சூட்டியிருக்க வேண்டும். திருமாவும் தனது கூட்டணிக்கு வருவார் என்று ஒருவேளை ஊகிக்க முடிந்திருந்தால், தேசிய முற்போக்கு திராவிட தலித்தியக் கழகம் (தே.மு.தி.த.க) என்று கேப்டன் பெயர் சூட்டியிருப்பார். ஜோசியர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற ஒரு நிபந்தனையைத் தவிர, இப்படிப் பெயர் சூட்டுவதில் அவருக்கு கொள்கைரீதியாக அவருக்கு வேறு எந்த தடையும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி
கழிசடை அரசியல் தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து கூட்டணி அமைத்த பூரிப்பில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்.

விஜயகாந்த் என்பவர் பழைய நடிகர்களைப் போல நாடகக் கம்பெனி, அதற்குப் பின் சினிமா என்று படிப்படியாக வளர்ந்தவரோ, கலையார்வமிக்க கலைஞன் என்பதால் நடிகன் ஆனவரோ அல்ல. கையில் பணம் வைத்துக்கொண்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மைனர். இன்று தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகன், இயக்குநர் ஆகியோரின் பிள்ளைகளெல்லாம் நடிகனாவதைப் போல, கையில் பணம் இருந்ததால், தானே நடிகன் ஆனவர். எம்.ஜி.ஆரைப் போன்ற அரசியல் வாசனை கொண்ட பின்புலம்கூட இல்லாதவர். பணம் இருந்ததால் கதாநாயகன். சினிமா பிரபலமும் ரசிகர் மன்றமும் இருந்ததால் அரசியல்வாதி.

ஆளும் கட்சியின் மீது உள்ள அதிருப்தியை அறுவடைசெய்து கொள்ளும் வண்ணம் ஏதோ ஒரு வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான எவனொருவனும் தலைவனாகலாம் என்பதால், விஜயகாந்தும் ஒரு தலைவன் ஆனார். ராகுகாலம் – எமகண்டம் பார்த்துத் தொடங்கப்பட்ட இந்த கோமாளிக் கட்சியில், பிழைப்புவாதிகள், சாதியத் தலைவர்கள், தி.மு.க. -அ.தி.மு.க.வில் பதவி கிடைக்காத காரியவாதிகள் உள்ளிட்டோர் உள்ளூர் தலைவர்களானார்கள். ரசிகர் மன்றம் காலாட்படையாக இருந்தது.

தி.மு.க., அ.தி.மு.க.வை வீழ்த்துவதுதான் இலட்சியம், மக்களோடும் ஆண்டவனோடும்தான் கூட்டணி என்று சவடால் அடித்துத் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், 2006-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பத்து சதவீத வாக்குகளைப் பெற்றதால், திடீர் அரசியல் தலைவராகிவிட்டார். தனது திராவிட இயக்க ஒழிப்புத் திட்டத்துக்கு ரஜினிகாந்தைப் பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றத்துக்கு ஆளாகியிருந்த துக்ளக் சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலுக்கு விஜயகாந்த் வாராது வந்த மாமணி ஆனார்.

விஜயகாந்த் விளம்பர வித்தைகள்
அம்மா வழியில் ஆம்பள ஜெயலலிதா விஜயகாந்த் கட்சியின் சினிமா பாணி விளம்பர வித்தைகள்.

2009 தேர்தலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட நிலையில், 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் விஜயகாந்தைக் கூட்டணி சேர்த்து விட்டது பார்ப்பனக் கும்பல். அதன் பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்டி 14 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஒரு இடத்தில்கூட தே.மு.தி.க. வெற்றி பெற இயலவில்லை. இப்போது விஜயகாந்தை எப்படியும் முதல்வர் ஆக்கியே தீருவது என்ற முடிவோடு, கேப்டன், அண்ணியார், மச்சான் உள்ளிட்ட மொத்தக் குடும்பத்தையும் தோளில் தூக்கித் திரிகிறது மக்கள் நலக் கூட்டணி.

தனியார் பொறியியல் கல்லூரியில் கல்விக் கொள்ளை, கல்யாண மண்டபம், பண்ணைகள் உள்ளிட்ட தனது சொத்துகளைப் பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் அரசியலில் குதிப்பது என்ற வழக்கமான திடீர்ப் பணக்கார கும்பலின் உத்தியைப் பின்பற்றும் விஜயகாந்தைத்தான், ஊழல் எதிர்ப்பு அணியின் கிங் என்றும் தாங்களெல்லாம் கிங் மேக்கர் என்றும் வெட்கமோ கூச்சமோ இல்லாமல் அறிவித்துக் கொள்கின்றனர் மக்கள் நலக் கூட்டணியினர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.35 விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்குவோம், ரேசன் பொருட்களை வீட்டுக்கே மாதந்தோறும் கொண்டுவந்து கொடுப்போம், தனியாருடன் சேர்ந்து கூரியர் சேவை நடத்துவோம், சிறு தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடங்குவோம், தனியாருடன் சேர்ந்து அனைத்து வட்டங்களிலும் வணிக வளாகங்கள்-திரையரங்குகள் கட்டுவோம், தனியாருடன் இணைந்து கப்பல் போக்குவரத்து தொடங்குவோம், இவற்றின் மூலம் பல இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறது தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கை. ஒரு நாலாந்தர அரசியல் சினிமாவின் கதை, வசனத்தைக் காட்டிலும் இழிந்த முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் இந்தக் கும்பல் கொண்டிருக்கும் அறிவுக்குச் சான்று பகர்கிறது.

திருப்புமுனை மாநாடு
தேர்தலில் தனது கட்சியை வைத்து பேரங்கள் நடத்திச் சூதாடும் விஜயகாந்த் நடத்திய தமிழக அரசியலில் திருப்புமுனை மாநாடு.

சினிமாவில் சம்பாதித்த கருப்புப் பணத்தை வைத்து தனது பிறந்த நாளன்று நாலைந்து பேருக்கு தையல் மிசின், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஒரு நூறு பேருக்கு அன்னதானம் வழங்கிவிட்டு, அதையே அரசியலுக்கு வருவதற்கான தகுதியாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு அற்பவாதியை, ஊழலை ஒழிக்க வந்த மாற்று அரசியல் சக்தி என்று கொண்டாடுகிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

ஊழலை ஒழிக்க வந்த இந்த மாற்று அரசியல் சக்தி தொடங்கும்போதே கட்சியை தனது குடும்ப கம்பெனியாகத்தான் கருதியது, கருதியும் வருகிறது. அது உண்மையும்கூட. தன்னை வைத்துதான் கட்சி என்றும் தன்னைத் தவிர மற்றவர்கள் எல்லம் பூச்சியங்கள் என்றும் கருதிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், தன் கட்சிக்காரர்கள் அனைவரையும் தன்னை வைத்து சம்பாதிக்க முயற்சிக்கும் வியாபாரிகளாகவே விஜயகாந்த் கருதுகிறார்.

அந்த வியாபாரிகளோ, தாங்கள் போட்ட முதலீட்டுக்கு இலாபத்தை எதிர்பார்க்கின்றனர். 2011- இல் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியவுடனே ஜெயலலிதாவால் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால், ஐந்து காசுகூடச் சம்பாதிக்க முடியாமல் ஐந்து ஆண்டுகளைக் கடத்திய தே.மு.தி.க.வினர், வரும் ஐந்து ஆண்டுகளிலாவது பசுமையைக் காணமாட்டோமா என்று தவித்துக் கொண்டிருந்தனர்.

கட்சிக்காரர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட அண்ணியார், இவர்களிடம் முன்கூட்டியே பணத்தை வசூலிப்பதன் மூலம்தான் விசுவாசத்தை உத்திரவாதப்படுத்திக் கொள்ள இயலும் என்று முடிவெடுத்துக் கோடிக்கணக்கில் கறந்து விட்டார். தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று மாவட்டச் செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கொண்டிருக்க, எல்லா திசைகளிலும் எல்லாரோடும் பேரம் நடத்தி, அரசியல் விபச்சாரத்தில் புதிய எல்லைகளைத் தொட்டது விஜயகாந்த் குடும்பம்.

எத்தனை நாற்காலிகள், எத்தனை பதவிகள், எத்தனை பணம் என்பதைத் தவிர, வேறு எந்த விதமான கொள்கையோ, சித்தாந்தமோ இல்லாத இந்த கிரிமினல் கும்பல் கடைசியாக மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது. பணத்தையும் பதவியையும் உதறி விட்டு தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக ஒரு ஊழலற்ற நல்லாட்சியைத் தருவதற்காகத்தான் கேப்டன் தங்களுடன் அணி சேர்ந்திருப்பதாக வெட்கமே இல்லாமல் கூறிக் கொள்கிறார்கள் வைகோவும், திருமாவும், போலி கம்யூனிஸ்டுகளும்.

ஏட்டு முதல் எஸ்.பி. வரையிலான அனைவரின் நடத்தையைப் பற்றியும் சிவகாசி ஜெயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை நாம் அறிவோம். ஆனால், சிவகாசி ஜெயலட்சுமியின் நன்னடத்தைக்குச் சம்மந்தப்பட்ட ஏட்டுகளோ எஸ்.பி.க்களோ நற்சான்றிதழ் தந்ததாகத் தெரியவில்லை. ஆனால், தே.மு.தி.க.-வுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்துக் கொண்டாடுகிறது மக்கள் நலக் கூட்டணி.

இவர்கள் தோற்றாலும் வென்றாலும் நமக்கு மகிழ்ச்சிதான். தோற்றால், இவர்களது அரசியல் மரணம் அனைவரும் காறி உமிழ்கின்ற இழிந்த சாவாக இருக்கும். வென்றால், இவர்களது வாழ்வை அசிங்கப்படுத்தும் வேலையை அண்ணியார் கவனித்துக் கொள்வார்.

– தொரட்டி
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க