விஜயகாந்த் : திரையில் கேப்டன்; அரசியலில் கோமாளி

விஜயகாந்தின் மரணத்திற்குப் பின் இப்போது ஊடகங்களில் வரும் காணொலிகளைப் பாருங்கள். விஜயகாந்தின் அரசியல் கோமாளித்தனத்தையும், அவர் யாருக்காக பயன்பட்டார் என்பதையெல்லாம் மறைத்துவிட்டு அவர் வெள்ளந்தியான மனிதர், வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுவார், தர்மகர்த்தா, நல்ல மனிதர் என்று அவரைப் பற்றிய வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

கோமாளிகள் நாடாண்ட கதை வரலாற்று சிறப்புமிக்கது. எம்.ஜி.ஆர், விஜயகாந்த், சீமான் என அந்தக் கதைகள் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பீடித்திருக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?

விஜயகாந்த் மரணமடைந்து விட்டார். வள்ளல், அலுவலகம் போனால் சோறு போடுவார் என அவரைப் புனிதமாக்கும் ‘திருப்பணிகள்’ செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கட்டுரையின் நோக்கம் தனிப்பட்ட முறையில் அவரது மரணத்தைக் குறித்ததல்ல. சமூக அரசியல் கண்ணோட்டத்தில் அவர் யார் என்பதைப் பற்றியது. ஏனென்றால் இதை நாம்தான் பேசியாக வேண்டும்.

திரையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் அந்த விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று கனவு கண்டார். சினிமாவில் தான் பேசும் வசனங்களையே மூலதனமாகக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி விட முடியும் என்ற அபார நம்பிக்கை அவருக்கு இருந்தது.

தமிழர்களுக்கு உதவும் அனைத்து நற்குணங்கள் கொண்ட மகான் என்று இன்று அவர் இறந்த பின்பு கூவுவதைப் போலவே அப்போதும் கூவுவதற்கு ஒரு வளர்ப்புப் பிராணிகள் கூட்டம் இருந்தது.

எழுதித் தந்த வசனங்களை மனப்பாடம் செய்து சினிமாவில் நடிப்பதைப் போலவே அரசியல் களத்திலும் அனல் தெறிக்கும் வசனங்களைப் பேசி சவடால் அடித்தார். இதைக் கொண்டே தமிழ் மக்களை ஏமாற்றி விட முடியும் என்று கருதினார்.அதிலும் கூட முஸ்லீம்கள் தீவிரவாதிகள், பாகிஸ்தான் எதிரி நாடு என்ற விசமத்தனமான கருத்தை தனது படங்களில் தொடர்ச்சியாக கொண்டு வந்து பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சிறப்பாக சேவை செய்தார் என்பதுதான் வரலாறு.


படிக்க: விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”


விஜயகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 30 ஆண்டுகளுக்கு பிறகுதான் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். அந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், தலித் மக்கள், அரசு ஊழியர்கள் மீது அன்றைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி அரசுகளால் எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடத்தப்பட்டன. ஆனால் இதைப் பற்றியெல்லாம் புரட்சிக்கலைஞர் வாய் திறந்ததே இல்லை.

குறிப்பாக தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விஜயகாந்த் இருந்த காலகட்டத்தில்தான் மாஞ்சோலை படுகொலை சம்பவம் நிகழ்ந்தது. அதைக் கண்டித்து விஜயகாந்த் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. வாச்சாத்தி, சிதம்பரம் பத்மினி என அக்காலகட்டத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக சிறுதுரும்பைக் கூட எடுத்துப் போட்டதில்லை, இந்த கருப்பு எம்.ஜி.ஆர்.

உண்மையில் ஏழைகள், தொழிலாளர்கள் மீதும் விஜயகாந்த் காட்டும் கரிசனம் சினிமாவோடு முடிந்து விட்டது. அடிப்படையில் விஜயகாந்த் யார்? அவர் ஒரு முதலாளி. பொறியியல் கல்லூரியைத் திறந்து வைத்துக் கொண்டு தனியார்மயம் – தாராளமயத்தின் மூலம் சினிமாவைத் தாண்டி கொள்ளையடித்த கார்ப்பரேட் முதலாளி.

சென்னை – மதுரை – கோவை என பல முக்கிய நகரங்களில் ஏராளமான சொகுசு பங்களாக்கள், பல மாடி வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பண்ணை நிலங்கள், சூதாட்ட கிளப்புகள், பெட்ரோல் நிலையங்கள், பிறமொழி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பு – விநியோக நிறுவனங்கள், மச்சான், மனைவி, மகன்கள் பெயரில் ஏராளமான முதலீடுகள், ஏராளமான கருப்புப் பணம் என வாழ்ந்த ஒரு ’கோமான்’.

சரி அவருடைய அரசியல் அத்தியாயத்திற்கு வருவோம். தமிழ்நாட்டு மக்களிடம் தனக்குள்ள சினிமா கவர்ச்சி, அப்போதைய ஓட்டுக்கட்சிகள் மீது தமிழ் மக்களுக்கிருந்த வெறுப்பு, தன்னைச் சுற்றியிருந்த பிழைப்புவாதிகளின் கூட்டம் – இவற்றையெல்லாம் மூலதனமாக வைத்துத்தான் தனது அரசியல் வியாபாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த்.

ஜோசியக்காரனிடம் வாக்கு கேட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 2005 செப்டம்பர் 14 அன்று மதுரையில் தொடங்குகிறார். அதாவது தமிழ்நாட்டிற்கு ஏற்ப திராவிடமும் வரவேண்டும். பார்ப்பன அடிவருடித்தனத்திற்கேற்ப திராவிட சித்தாந்தத்திற்கு எதிரான தேசியமும் வரவேண்டும் என்று கோமாளித்தனமாக ஒரு பெயரை வைத்தார்.

2006 தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறார். இதில் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெறுகிறார். அந்த சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறுகிறார். அதன் பிறகு 2009 மக்களவைத் தேர்தலிலும் 39 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுகிறார்.

அதன் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிட்டது. இதில் 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராகிறார். இத்தேர்தலில் தி.மு.க வெறும் 23 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் நாக்கைத் துருத்திக் கொண்டு சட்டமன்றத்தில் பேசிய சம்பவத்திற்குப் பின்னர் அதிமுக – தேமுதிக கூட்டணி உடைகிறது. தேமுதிக எம்.எல்.ஏ.க்களை ஜெயலலிதா விலைக்கு வாங்குகிறார். நூற்றுக்கணக்கான வழக்குகளை விஜயகாந்தின் மீது ஏவி ஒடுக்குகிறது ஜெயலலிதா அரசு.


படிக்க: விஜயகாந்த் கல்லூரியில் வெடித்த மாணவர் போராட்டம்


உண்மையில் திமுக-வை ஒழித்துக் கட்டுவதற்கான ஆளும்வர்க்கத்தின், பிழைப்புவாதக் கட்சிகளின் பகடைக்காய்தான் விஜயகாந்த் என்பதைத் தாண்டி வேறு ஒன்றும் கிடையாது.

அதன் பிறகு கொஞ்சநாட்களுக்கு தேமுதிக என்ற கட்சி காணாமல் போகிறது. 2014 மக்களவைத் தேர்தலிலும் படுதோல்வி அடைகிறது. அதற்கடுத்து செத்த பிணத்தை  அலங்கரிக்கும் வேலையை சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியினர் 2016 சட்டமன்றத் தேர்தலில் செய்கின்றனர். விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் கூத்துக்களெல்லாம் அரங்கேறுகின்றன. ஆனால் அத்தேர்தலில் படுதோல்வி அடைகிறது மக்கள் நலக் கூட்டணி.

இரண்டு திராவிடக் கட்சிகளின் மீது மக்களுக்குள்ள வெறுப்பின் காரணமாக, உருவாகின்ற அரசியல் வெற்றிடத்தை இட்டு நிரப்புவதற்கு ஆளும் வர்க்கங்கள் விஜயகாந்த், வைகோ, சீமான் ஆகிய அரசியல் கோமாளிகளை பயன்படுத்திக் கொண்டன என்பதுதான் உண்மை. அந்த வகையில்தான் மேற்கண்ட கூத்துக்கள் எல்லாம் நடைபெறுகின்றன. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் திமுகவை ஒழித்துக்கட்டுவதற்குத்தான் ஆளும் வர்க்கத்தால் இவர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.

இந்த அரசியல் கோமாளிகளால் தமிழ்நாட்டின் அரசியலே தரங்கெட்டுப் போனது என்பதுதான் நாம் காணும் யதார்த்தம். அன்றைய சூழ்நிலையில் விஜயகாந்த் போன்ற கோமாளிகள் தமிழ்நாட்டின் அரசியலில் நிலைபெறுவதற்கு சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்டோரும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்ற ஆளும் வர்க்கத்தின் பார்ப்பனப் பின்னணி கொண்ட பிரிவினரின் கருத்தைத்தான் அன்று இவர்கள் முன்மொழிந்து கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் பிழைப்புவாதக் கட்சிகள் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கோமாளிகளை பயன்படுத்திக் கொண்டன என்றால் இன்னொரு பக்கம் காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட மக்கள் விரோதக் கட்சிகளும் இயல்பாகப் பயன்படுத்திக் கொண்டன.

இந்தித் திணிப்பு, நீட் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றியெல்லாம் எதிர்நிலைப்பாடுகள் கொண்டவர்தான் விஜயகாந்த். தமிழ்நாட்டிற்கு எதிரான பாசிச பிஜேபி அரசின் நடவடிக்கைகளை மனப்பூர்வமாக ஆதரித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் வேலையைத்தான் அவரது கட்சியும், அண்ணியாரும் சிறப்பாக செய்து வருகின்றனர். அரசியல் தரகு வேலையைத் தாண்டி மக்களின் உரிமைகள் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இந்தக் கட்சிக்கு கிடையாது. இதுதான் விஜயகாந்தின் அரசியல் சாதனை.

தனிநபர் துதிபாடல், ஒளிவட்டம் என்ற அடிப்படையில் விஜயகாந்தைப் போன்ற அரசியல் கோமாளிகள் கட்சிக்கட்டமைப்பை உருவாக்கி மக்களை ஏய்த்தனர்.

இதையெல்லாம் தாண்டி, விஜயகாந்தின் மரணத்திற்குப் பின் இப்போது ஊடகங்களில் வரும் காணொலிகளைப் பாருங்கள். விஜயகாந்தின் அரசியல் கோமாளித்தனத்தையும், அவர் யாருக்காக பயன்பட்டார் என்பதையெல்லாம் மறைத்துவிட்டு அவர் வெள்ளந்தியான மனிதர், வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுவார், தர்மகர்த்தா, நல்ல மனிதர் என்று அவரைப் பற்றிய வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் இதைத்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். இது சமரசவாதம், பிழைப்புவாதத்தின் விளைவல்லவா? உண்மையை மக்களுக்கு மறைப்பது துரோகமல்லவா? இதை பரிசீலிக்க வேண்டுமல்லவா இவர்கள்?

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர், கருணாநிதிக்கு மாற்றான அரசியல் ஆளுமை என்றெல்லாம் அன்றே ஊடகங்கள் விஜயகாந்தைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தன. இன்றோ விஜயகாந்தின் அரசியல் பங்களிப்பைப் பற்றி சொல்வதற்கு ஒரு விசயம் கூட இல்லாமல் நல்ல மனிதர் என்று பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் ஊடகங்களின் கயமைத்தனத்தைப் பார்த்து ஆத்திரப்படுவதா? இல்லை ஓட்டுப்போட்ட மக்களின் அவலநிலையைப் பார்த்து வருந்துவதா? என்று தெரியவில்லை.

இந்தக் கயமைத்தனத்தில் மறைக்கப்பட்ட உண்மை என்ன? விஜயகாந்த் ஒரு சினிமா கார்ப்பரேட் முதலாளி, கல்வி கார்ப்பரேட் முதலாளி, சினிமா மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துச் சேர்த்த பல நூறு கோடி சொத்துக்கு அதிபதி என்பதைத்தாண்டி அரசியல் ரீதியாக ஒரு வெங்காயமும் கிடையாது என்பதுதான்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க