privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

சென்ற தேர்தலில் டங்குவார் அறுந்து கிழிந்தாலும் கேப்டன் ஃபேமிலி தாங்களும் ஒரு கமிஷன் வாங்கக் கூடிய அளவுக்கு வலிமை உள்ள கட்சி தான் என்று நினைக்கின்றனர்.

-

ரசியலை நொறுக்குத்தீனி போல கொடுப்பதற்கு தமிழ் ஊடகங்கள் எப்போதும் காத்திருக்கின்றன. அந்த காத்திருப்பில் தேமுதிக விஜயகாந்த் ஒரு முக்கியமான தீனி. டாஸ்மாக்கும் சால்னா கடையும் பிரிக்க முடியாதது போல தமிழ் ஊடகங்களையும் கேப்டனின் நியூசையும் பிரிக்க முடியாது. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளாகவே நடந்து வரும் வரலாறு.

விஜயகாந்த் பிறந்த ஆண்டு 1952. அப்போது அந்த குழந்தையின் பெற்றோர்கள் பின்னொரு நாளில் நமது குழந்தைதான் வருங்கால முதலமைச்சர் என்ற முழக்கத்தினை கேட்கும் என்பதை நம்பியிருக்க மாட்டார்கள். இந்த பணக்கார விவசாய குடும்பத்தை சேர்ந்த அந்த குழந்தை வளர்ந்த விதம் ஒரு பண்ணையார் வீட்டு முறையில்தான்.

“தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் என அழைக்கப்படுபவர் தந்தை பெரியார் அவரைப் போலவே முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்பதால் இந்தியாவின் வெண்தாடி வேந்தர் என நரேந்திர மோடியை அழைக்கலாம்” என்று இந்த பொன்மொழியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் சாட்சாத் கேப்டன் தான். தாடிக்கு தாடி வெள்ளைக்கு வெள்ளை உருவத்திலேயே எதுகை சந்தத்தை கண்டுபிடித்தவர் இந்த விஞ்ஞானி. மோடியை முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்று சொல்வதற்கு ஒரு முரட்டு முட்டாள்தனம் வேண்டும். அது கேப்டனின் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது.

திரையுலகில் வாய்ப்பு பறிபோனதும் இனி அவர் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று ஆன அன்றே தமிழ் அரசியல் உலகிற்கு சிறு சனி பிடித்தது எனலாம். மரத்தையோ குளத்தையோ ஃபாரின் பூங்காக்களையும் சுற்றிச் சுற்றி நாயகியை தூக்கி டூயட் பாடுவதற்கு விஜயகாந்தின் வயிறு பெரும் பிரச்சனையாக இருந்ததால் (கோட்டு போட்ட போதும் கூட) அவருக்கே கூட இனிமேல் நாம் நாயகனாக நடித்தால் நானே கூட பார்க்க மாட்டேன் என முக்தி அடைந்து இருக்கலாம்.

1970-களின் இறுதியில் “இனிக்கும் இளமை” திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்வில் விஜயகாந்த் துவக்கினார். எண்பதுகளில் கோபம் கொண்ட சிவப்பு இளைஞனாக போராடினார். தொண்ணூறுகளில் அந்த சிவப்பு கரைந்து காக்கியாகி நேர்மையான போலீஸ் அதிகாரியாக உலா வந்தார், உரையாற்றினார். இரண்டாயிரத்தில் அந்த நேர்மை எக்ஸ்ட்ரா லார்ஜாக விரிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடும் ராணுவ தளபதியாக பிரமோஷன் ஆனார். இறுதியில் விருதகிரி எனும் சூப்பர் கோமாளியாக அவரது திரையுலக வாழ்வு முடிந்து போனது.

படிக்க:
கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?
♦ விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

இதன் தொடர்ச்சியாக அவர் கட்சி ஆரம்பிக்கிறார். தற்போது கட்சியின் நிலையும்கூட விருதகிரியாகத்தான் வந்து நிற்கிறது. அவர் கட்சியை துவக்கியது ஒரு பெரும் சிரிப்பு திரைப்படத்திற்கு உரிய கதை கொண்டது. 2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற எந்த பொருளுமற்ற வார்த்தைகளை அதுவும் குலதெய்வத்தின் முன் சீட்டு குலுக்கிப் போட்டு தெரிவு செய்து, ராகு காலம் – எமகண்டம் பார்த்துத்தான் இந்தக் கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்தார். ஆக இந்த கட்சியை ஆரம்பித்த நேரத்தையும் பெயரையும் ஜோசியர்களும் வாஸ்து நிபுணர்களும் தான் தீர்மானித்திருந்தார்கள்.

இடையில் கெடுவாய்ப்பாக அவரது திருமண மண்டபம் மேம்பாலம் கட்டுவதற்காக கொஞ்சம் இடிக்கப்பட்டது. அது இடிபடாமல் காக்க நிறைய பேரிடம் கெஞ்சிப் பார்த்தார் விஜயகாந்த். அது முடியவில்லை என்ற பொழுது என் மண்டபத்தை இடிக்கிறாயா என்ன செய்கிறேன் பார் என்று கருணாநிதிக்கு சவால் விட்டு கட்சியை ஆரம்பித்தார். ஒரு கல்யாண மண்டபம் ஒரு அரசியல் கட்சி தோன்றுவதற்கு காரணமாக இருந்தது என்ற மாபெரும் வரலாறு தமிழகத்தில் மட்டும் தான் நடக்க முடியும்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கேப்டன் ஏழு ஏழரை அல்லது எட்டு சதவீத வாக்குகளை பெற்றார். உடனே பார்ப்பன ஊடகங்களும் துக்ளக் சோ போன்ற தரகர்களும் இந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக சித்தரித்து கேப்டனை உசுப்பி விட்டனர். அப்போதே அவரை அதிமுக வசம் கூட்டணியில் சேர்க்க வைக்க இந்த தரகர்கள் பெரும் பாடுபட்டனர்.

அந்த தேர்தலில் கேப்டன் சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்ற உண்மையை ஜெயலலிதா சொல்ல விஜயகாந்தும் நீ தான் கூட இருந்து ஊட்டி கொடுத்தாயா என்று பதிலடி கொடுத்தார். இத்தகைய மாபெரும் தத்துவ போராட்டங்கள் தான் அன்றைய பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரியாக தமிழக மக்களின் பொழுதைத் தின்றது.

அவரது 8 சதவீத வாக்குகளை பார்த்து திமுக அதிமுக போன்ற கட்சிகளில் செட்டிலாக முடியாத பண்ருட்டி போன்ற பழம் பெருச்சாளிகள் கேப்டன் கட்சியில் வந்து குவிந்தனர். அப்போது விஜயகாந்த்தோடு பிரச்சாரக் கூட்டங்களில் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆருக்கு பிறகு கேப்டனுக்கு தான் தமிழக மக்கள் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் திரண்டு வரவேற்பதாக ஆனந்தவிகடனில் பதிவு செய்திருக்கிறார். இது போதாதா கேப்டன் மற்றும் கேப்டன் குடும்பம் குப்புறப் படுத்துக் கொண்டு கனவு காண்பதற்கு?

படிக்க:
நேற்று அண்ணாயிசம் ! இன்று அண்ணியிசம் !!
புரட்சி அண்ணி பிரேமலதா – தமிழகத்தின் புதிய சீக்கு !

2006 சட்டமன்றத் தேர்தலில் அவர் விருத்தாசலத்தில் வென்று பாமக முகத்தில் கரியைப் பூசினார். இதுவும் ஒரு மாபெரும் சாதனை என்பதை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். அந்த அளவுக்கு கேப்டனின் திரைப்பட வசனங்களை உண்மையென நம்பிய பரிதாபத்திற்குரிய மக்கள் இருக்கத்தான்  செய்தார்கள்.

இடையில் பண்ணையார் தனது வீட்டு பண்ணையார் அம்மா பிரேமலதாவை மகளிர் அணி தலைவியாக அல்லது கட்சிக்கே செயல் தலைவர் போன்று முன்னிறுத்தினார். அதுபோக கேப்டனின் மச்சான் சதீஷ் இளைஞர் அணித் தலைவராக பொறுப்பேற்றார். ஆக இந்த பண்ணையார் குடும்பம் மொத்த கட்சியையும் கையில் வைத்துக் கொண்டு இயங்கியது. மற்ற கட்சிகளில் வாரிசு முறை என்பது தந்தை அல்லது தாய் மண்டையைப் போட்ட பிறகோ அல்லது ஓய்வு பெற்ற போதோ நடக்கும். இங்கு மட்டும்தான் ஒரே ஷாட்டில் ஒரு  குடும்பம் ஒட்டு மொத்த கட்சியையும் கைப்பற்றிக் கொண்டது.

இருப்பினும் இவர்கள் தலைமைக் கழகம், தலைமைக் கழகத்தின் அறிவிப்பு, அது இது என்று ஒரு தொழிற்முறை கழகம் போல பேசுவார்கள். இதையெல்லாம் ரசிக்கும் அளவுக்கு தமிழக மக்களிடம் நகைச்சுவை உணர்வு மிளிரவில்லை என்பது ஒரு சோகமான உண்மை.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !கேப்டனின் பண்ணையார் குடும்பம் மட்டுமல்ல அந்தக் கட்சியே மூடநம்பிக்கையில் தினமும் மூன்று முறை குளித்துவிட்டுத்தான் கட்சி பணி ஆற்றும் என்பது ஒரு கொசுறு செய்தி. சான்றாக சேலத்தில் விஜயகாந்த் குடும்பத்தினர் தமது கைக்காசை போட்டு நடத்திய மாநாட்டிற்கு போவோம். அங்கே மாநாட்டுத் திடலில் பனமரத்துப்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் கருப்பு நிற ஆட்டுக்கடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதே போன்று வேறு சில பகுதிகளில் மாநாடு சிறப்பாக நடைபெற்றதற்காக 12 கிலோ எடை கொண்ட கருப்பு ஆடுகளை வெட்டி ரத்தத்தை மண்ணில் விட்டு பலி கொடுத்தனர்.

பிறகு ஜெயலலிதாவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தார். எதிர்க்கட்சி தலைவராக ஆனார். அப்போதே அவர் அடுத்த தேர்தலில்ல தான்தான் முதலமைச்சர் என எண்ணியிருக்க வேண்டும். இது தண்ணி போடாமலே வந்த கருத்து என்பதை நினைவில் கொள்க. பிறகு புரட்சித் தலைவியோடு புரட்சி கேப்டன் சண்டை போட்டார். 2014 தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக காமெடி செய்தார். தற்போது 2019 பாராளுமன்ற தேர்தலில் என்ன செய்வது என்று அவருக்கே தெரியவில்லை. ஏனெனில் அவரது அரசியல் வாழ்க்கையில் ஆக்சன் டூயட் காமெடி சோகம் டிராமா என அனைத்தும் முடிந்து விட்டதால் வர இருக்கின்ற எபிசோடில் என்ன செய்வது என தெரியவில்லை.

கேப்டனின் தற்போதைய திரிசங்கு நிலைக்கு புரட்சி அண்ணி பிரேமலதா ஒரு முக்கியமான காரணம். கேப்டன் எப்போதெல்லாம் நிதானம் இழக்கிறாரோ அப்போதெல்லாம் கடிவாளத்தை இந்த புரட்சி அண்ணிதான் எடுத்துக் கொள்வார். யோகா தினத்தில் ஆசனங்களை செய்யாமல் விஜயகாந்த் திணறிய போதும் சரி, பொதுக்கூட்டங்களில் உணரும் போதும் சரி இவர்தான் சரி செய்வார். ஆனால் விஜயகாந்துக்கு இருக்கும் ஒரு மக்கள் தொடர்பு கூட இந்த புரட்சி அண்ணிக்கு கிடையாது. ஒரு வகையில் இவர் தேமுதிகவின் ஜெயலலிதா என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !“தமிழகத்தின் வசந்த காலமே, எங்கள் விழாக்கோலம் தமிழ் வீர மங்கையே, புரட்சி அண்ணியே என்று தேமுதிகவினர் இவருக்கு ஆங்காங்கே பிளக்ஸ் பேனர் வைத்து உசுப்பேத்தினர். தற்போது தேமுதிக என்ற கம்பெனி புரட்சி அண்ணியின் ரிமோட் கண்ட்ரோலில் தான் உள்ளது. சென்ற தேர்தலின்போதும் இவர்தான் நட்சத்திர பேச்சாளர்.

இந்த நிலையில் சென்ற தேர்தலில் டங்குவார் அறுந்து கிழிந்தாலும் கேப்டன் ஃபேமிலி தாங்களும் ஒரு கமிஷன் வாங்கக் கூடிய அளவுக்கு வலிமை உள்ள கட்சி தான் என்று நினைக்கின்றனர். எனவேதான் இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என திமுக அதிமுக என்று மாறி மாறி மாபெரும் ஆராய்ச்சி செய்து சதியாலோசனைகள் செய்து தரகர்கள் பலரை இறக்கி முயற்சி செய்தனர்.

அவர்களுக்கு தேவை சீட்டு மற்றும் நோட்டு. இதில் யார் அதிகம் தருவார்கள் என்பதில் கேப்டன் கம்பெனி ரொம்பவும் மிகையாக நடந்து கொண்டது. தனது கம்பெனியில் எவ்வளவு வியாபாரம் நடக்கிறது, எவ்வளவு வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்பதைத் தாண்டி ஒரு பெட்டிக் கடைக்காரர் ஒரு சூப்பர் மார்க்கெட் கடை போல நினைத்துக்கொண்டு கடன் வாங்கினால் எப்படி இருக்கும்?

படிக்க:
சில பைன் மரங்களையும் ஒரு காகத்தையும் குறி பார்த்து அழித்த மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 !

பாஜகவை பொருத்த வரைக்கும் கேப்டனின் ஓட்டு 8 சதவீதத்தில் இருந்து இரண்டு மூன்று என குறைந்தாலும் அது தங்களுக்கு தேவை, எப்படியாவது தமிழகத்தில் சில பல சீட்டுகள் கூட்டணியோடு ஜெயிக்க வேண்டும் என்று வெறியாக இருக்கின்றனர். ஆகவேதான் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கேப்டன் வீட்டுக்கு சென்று சால்வை போட்டு அவரிடம் பலமுறை பேசியிருக்கிறார். பதிலுக்கு கேப்டன் பேசினாரா என்று கேட்காதீர்கள். கேப்டன் சேரில் அமர்ந்து இருந்தார் என்றாலும் பேச்சுவார்த்தையை சதீஷும் புரட்சி அண்ணியும்தான் செய்திருக்கிறார்கள். கூடவே இவர்கள் திமுகவிலும் ஒரு நூல் விட்டு பார்த்திருக்கிறார்கள் இப்படி மாறி மாறி பேசுவது குறித்து வெட்கம் சூடு சொரணை இவர்களுக்கு இல்லை. அந்த வகையில் இந்த கோமாளித்தனத்தின் தர்க்க ரீதியாக கேப்டனின் கட்சி “எங்கே செல்லும் இந்த பாதை” என்னும் முக்தி நிலைக்கு வந்திருக்கிறது.

இருப்பினும் கடைசியில் கேப்டன் குடும்பம் அதிமுக கூட்டணியில் பாஜக-வின் உத்தரவிற்கு இணங்க மூன்றோ நாலோ சீட்டில் ஒதுங்கி விடும். ஆனால் ஒரு தேர்தல் கூட்டணிக்காக இப்படி சந்தி சிரிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது குறித்து இவர்களுக்கு கூச்சமே இல்லை. தேர்தல் அரசியலில் இத்தகைய கூத்துக்கள் நடக்கும் போது பாஜக செய்யும் சதிச் செயல்களின் பரிமாணம் எப்படி இருக்கும்? விஜயகாந்தோ, பாமக ராமதாசோ இன்று மோடி துதி பாடுகிறார்கள். நாளை மோடி மீண்டும் வெற்றி பெற்று வந்து முற்போக்காளர்களை வேட்டையாடினால் இவர்களும் எச்.ராஜாவோடு இணைந்து நம்மை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவார்கள்!

கேள்வி : சொந்த செலவில் தேமுதிக விஜயகாந்த் சூனியம் வைத்துக் கொண்டதற்கு  யார் காரணம் ?

கேப்டன் குடும்பம்
பாஜக
அதிமுக
திமுக
ஊடகங்கள்

(பதில்களில் இரண்டைத் தெரிவு செய்யலாம்)

*****

டிவிட்டரில் வாக்களிக்க:

*****

யூ-டியூபில் வாக்களிக்க:

சொந்த செலவில் தேமுதிக விஜயகாந்த் சூனியம் வைத்துக் கொண்டதற்கு  யார் காரணம் ?