டந்த மாதம் புல்வாமாவில் நடந்த தற்கொலை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் உயிரிழந்தார்கள். இதற்கு ‘பழிவாங்கும்’ விதமாக தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 300 – 400 வரையிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் மூலம் செய்தி பரப்பியது இந்திய அரசு. வெளியுறவுத் துறை செயலர் அளித்த பேட்டியில், இந்திய தாக்குதலில் ‘மிகப் பெரும் எண்ணிக்கை’யிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறினார். இறந்தது எத்தனை பேர் என்கிற விவரம் நேற்றைய முப்படை தளபதிகளின் பேட்டியிலும் சொல்லப்படவில்லை.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் என்ன நடந்தது, நடக்கிறது என்பது குறித்து இந்திய ஊடகங்கள் பேச மறுக்கும் நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உண்மை விவரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் ஜபா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நூரான் ஷா, இந்திய விமானப் படை தாக்குதலில் காயமுற்ற ஒரே நபர் இவர்தான்.  செவ்வாய்கிழமை தனது மண் குடிசையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தனது இடது கண்ணுக்கு மேலே அடிபட்டதை காண்பிக்கிறார் நூரான்.

நூரான்.

“அவர்கள் சில தீவிரவாதிகளை தாக்க விரும்பினார்கள். நீங்கள் இங்கே எந்த தீவிரவாதியை பார்க்கிறீர்கள்?” என செய்தியாளரைப் பார்த்து கேட்கிற நூரான், “நாங்கள்தான் இங்கே இருக்கிறோம். அப்போ, நாங்கள்தான் தீவிரவாதியா?” என்கிறார்.

இந்தியாவின் துல்லிய தாக்குதல் 2.0, யாரும் இல்லா இடத்தில் நடத்தப்பட்டது என பாகிஸ்தான் அரசு சொன்னது. மக்களவை தேர்தலுக்காக மோடியும் அவரது பாஜக-வும் நாடகம் நடத்துகின்றனர் என பாகிஸ்தான் புரிந்து வைத்துள்ளது.

ஜாபா கிராமத்தை ஒட்டியிருக்கும் மலைச்சரிவில் நான்கு குண்டுகள் வீசப்பட்டு மரங்கள் பிளந்திருப்பதற்கான தடயங்கள் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்கிறார்கள் அந்த கிராம மக்கள். துல்லிய தாக்குதல் அதிகாலை 3 மணிக்கு நடத்தப்பட்டதால், சத்தம் கேட்டு எழுந்ததாக சிலர் சொல்கின்றனர்.

“இங்கே யாரும் இறக்கவில்லை. சில பைன் மரங்கள் இறந்துவிட்டன. அவற்றை வெட்டி விட்டார்கள். ஒரு காகமும்கூட இறந்துவிட்டது” என்கிறார் இந்தப் பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கும் அப்துர் ரஹீது.

குண்டு விழுந்த இடத்தை காட்டும் ஜாபா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன்.

கங்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜாபா கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும் ஓடைகளும் உள்ளன.  பாகிஸ்தானியர்களுக்கு  முக்கியமானதொரு சுற்றுலா இடம் இது.  400லிருந்து 500 மக்கள் இந்தப் பகுதியில் வசிக்கிறார்கள்.  ராய்ட்டர்ஸ் செய்தியாளர் 15-க்கும் அதிகமானவர்களிடம் பேசியதில் நூரான் ஷாவைத் தவிர, வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்கிறார்.

ஜாபா கிராமத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் அதிகாரி முகமது சாதிக், இந்தியா சொல்வதைப் போல பெரிய அளவிலான பாதிப்புகள் என்று எதுவும் இல்லை என்கிறார்.

“இது வடிகட்டிய பொய். நாங்கள் ஒரே ஒரு காயம்பட்ட நபரைக்கூட பார்க்கவில்லை. ஒரே ஒருவருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது. அவரும்கூட இங்கே வரவில்லை.” என்கிறார் அந்த அதிகாரி.

ஜெய்ஸ் இ முகமது அமைப்பினர் தீவிரமாக இந்தப் பகுதியில் எந்த முகாமையும் நடத்தவில்லை என்றும் அவர்கள் நடத்தும் பள்ளி மட்டுமே உள்ளது என்றும் அதுவும்கூட குண்டு விழுந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிறது என்கிறார்கள் பகுதி வாசிகள் சிலர்.

படிக்க:
#SayNoToWar : போரை விரும்புகிறவர்கள் உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள் !
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே பயிற்சி முகாம் இருந்ததாகவும் அது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசயம் அனைவரும் அறிந்ததே என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மோடி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள போட்ட நாடகம்தான் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0’ என்பது ஆதாரபூர்வமாக வெளிவந்துவிட்டது.  மோடி வகையறாவின் புளுகு ஒரு வாரத்திற்குக்கூட தாங்கவில்லை. இந்தப் புளுகைக் காட்டி, ‘இந்தியன்டா’ என முழக்கமிடும் மாலன் – அர்னாப்புகளை என்ன சொல்லி அழைக்கலாம்?


கலைமதி
நன்றி: ஹஃபிங்டன் போஸ்ட்