புரட்சித் தலைவி அம்மா வாழ்ந்த தவ வாழ்க்கையின் பயனாய் மும்பையின் வைரச் சந்தையே ஆட்டம் கண்டுள்ளது.  கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதால், மும்பை வைரச் சந்தையின் விலைகள் 30 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளன. மும்பை சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு ஹாங்காங் உள்ளிட்ட உலக வைர சந்தையிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மும்பை வைரச் சந்தையை கதிகலக்கியது புரட்சித் தலைவி அம்மா என்ற பெருமைக்குரிய செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ளது. 2016 -ம் ஆண்டு தவ வாழ்க்கை நாயகி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அறிவிக்கிறார் மோடி. நாட்டு மக்கள் எல்லாம் ஐநூறு ரூபாய்த் தாள்களுக்காக வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களின் முன் தவமிருந்ததை மறக்க முடியாது. அது சமயம் தனது படை பரிவாரங்களோடு ஒன்றே கால் கோடிக்கு இட்டலி தின்றவாறே சிந்தித்த அம்மா + உடன்பிறவாச் சகோதரி இருவரும் தாம் அடித்த கொள்ளை மொத்தத்தையும் மும்பையில் இறக்கி வைரங்களாக வாங்கிக் குவித்துள்ளார்.

அப்போது வாங்கப்பட்டது ’+11’ எனப்படும் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரமாகும். தற்போது திடீரென சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதும் இந்த வகையைச் சேர்ந்த வைரம் தான். “பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வைரமாக வாங்கி வைத்துக்கொண்டார்கள். இப்படித்தான், தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதிகள் 2 லட்சம் கேரட் வைரத்தை வாங்கினார்கள். தற்போது அந்த வைரங்களை மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால், வைரச் சந்தையும், இதன் வணிகமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது என்பது உண்மை” என்கிறார் சூரத் வைர வியாபாரிகள் கூட்டமைப்பின் (Surat Diamond Association – SDA) தலைவர் பாபு குஜராத்தி.

ஜெயா வாங்கியது மொத்தம் 2 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரங்கள். தற்போது ஒரு லட்சம் கேரட் மதிப்புள்ள வைரங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள நிலையிலேயே வைரச் சந்தை 30 சதவீதம் வீழ்ந்துள்ளது என்றால், மொத்த வைரமும் சந்தைக்கு வரும் போது குஜராத் வைர வியாபாரிகள் தலையில் துண்டைப் போட்டுக் கொள்ளப் போவது உறுதி.

புரட்சித் தலைவியின் புரோக்கர்கள் வசமிருக்கும் 2 லட்சம் கேரட் வைரங்களின் மதிப்பை சிலர் 30 ஆயிரம் கோடி என்றும் சிலர் 3 லட்சம் கோடி என்றும் சொல்கின்றனர். இதில் ஒரு நேர்மையான விசாரணை நடந்தால் தான் உண்மை வெளியே வரும் – எனினும் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்பதால் நாம் இந்த விவகாரத்தில் கவனிக்கத்தக்க மற்ற அம்சங்களைப் பார்ப்போம்.

ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களே, தற்போது தங்களுக்குத் தெரிந்த புரோக்கர்களின் மூலம் வைரங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர் என்கின்றன பத்திரிகைச் செய்திகள். அது யாராக இருக்க முடியும்? இந்த இடத்தில் சமீபத்தில் பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் நடத்திய மறைபுலனாய்வை நினைவுபடுத்திப் பார்ப்போம்.

கொடநாடு எஸ்டேட்டில் சில ஆவணங்கள் திருடு போனதும், அதில் ஈடுபட்டவர்கள் விபத்தில் கொல்லப்பட்டதும் அதற்கெல்லாம் ஏற்பாடு செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் மாத்யூ சாமுவேல் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது மறைபுலனாய்வில் கொட நாடு கொள்ளையில் ஈடுபட்ட சயானும், வலையார் மனோஜும் இதை உறுதிப்படுத்தினர்.

படிக்க:
அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் !
♦ பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

இதை வைத்துப் பார்த்தால் வைரங்கள் எடப்பாடியாரின் கைகளுக்குக் கிடைத்திருக்கலாம் என்று யூகிக்க இடமிருக்கிறது. அதே நேரம், கொடநாடு எஸ்டேட் விவகாரம் அம்பலமான போது டோக்கன் செல்வர் தினகரன் கடைபிடித்த கள்ள மௌனத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இவர்களில் ஒருவரிடம் தான் அம்மா கொள்ளையடித்துச் சேர்ந்த அந்த வைரப் புதையல் அகப்பட்டிருக்க வேண்டும்.

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை எடப்பாடியும் டி.டி.வி தினகரனும் பூட்டிய அறையில் மாட்டிக் கொண்ட பெருச்சாளியின் நிலையில்தான் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக எடப்பாடியின் நிலை இன்னும் மோசம். எப்படியும் தேர்தலில் வென்றே தீர்வது என்கிற வெறியில் அதற்காக எத்தனை கோடிகளையும் அள்ளி இறைக்கத் தயாராக இருக்கிறது அதிமுக. அதற்கு வைரத் தாயின் புதையலையே அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடியின் நிலைமை புரிந்து கொள்ளத்தக்கதே – ஆனால், யோக்கியத்துக்கு தானே மொத்த குத்தகை என்று பீற்றிக் கொள்ளும் பாரதிய ஜனதாவின் வாயில் என்னதான் இருக்க முடியும்? வேறென்ன ரஃபேல் விமானங்களாகத்தான் இருக்கும்.


நன்றி: The Times of india
சாக்கியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க