ஒசூர் – அசோக் லேலண்ட் யூனிட் 1,யூனிட் 2 நிர்வாகமே!
உணவில் பாரபட்சம் காட்டாதே!
காண்ட்ராக்ட், CL , செக்யூரிட்டி, லாஜிஸ்டிக், அப்ரண்டீஸ் தொழிலாளர்களுக்கு தரமான, சரிவிகித, ஒரே மாதிரியான, சமமான சாப்பாடு வழங்கு!
அசோக் லேலண்ட் -ல் பணிபுரியும் நிரந்தர, CL, காண்ட்ராக்ட், செக்யூரிட்டிகள், லாஜிஸ்டிக் தொழிலாளர்களே!
70 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நாம் அனைவரும் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறோம். நமது உழைப்பில் பல ஆயிரம் கோடி இலாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால், நமது ஆலை நிர்வாகமோ தொழிலாளர்களுக்கு கேண்டீனில் வழங்கப்படும் மதிய உணவில் பெரும் அநீதி இழைத்து வருகின்றது. நாம் எல்லோரும் ஒரே ஆலையில் பணிபுரிந்து வந்தாலும் இங்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஒரு மாதிரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஒரு மாதிரியும் பாரபட்சமான வகையில் உணவு வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சப்பாத்தி, முட்டை, தயிர், வெரைட்டி ரைஸ் எனவும் காண்ட்ராக்ட், செக்யூரிட்டி மற்றும் லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு வெறும் சாதமும் சாம்பாரும் பெயரளவிற்கு ஒரு கூட்டு மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் அளவு சாப்பாடு தான். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சாம்பார் கெட்டியாகவும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சாம்பார் தண்ணீரை போலவும் இருக்கிறது.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக காரணம் சொல்லி சாம்பாரில் போடப்படும் மொத்த காய்களையும் வடித்தெடுத்து விடுகிறார்கள். அதனால் CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது சாம்பாரா? ரசமா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புது மாதிரியாக இருக்கிறது.
CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்ன வேற்றுகிரகவாசிகளா? அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமில்லையா? அவர்களும் நம் சொந்தபந்தங்கள்தான். நம் உறவினர் அல்லது நம் நண்பர்களின் பிள்ளைகள்தானே? அவர்களின் வியர்வையிலும் ரத்தத்திலும்தான் அசோக் லேலண்ட் நிறுவனம் இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
படிக்க :
♦ ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
♦ ரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம் !
இதுநாள் வரை தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு வந்தவர்களை திடீரென்று டேபிளில் அமரவிடாமல் சிறிதும் மரியாதையின்றி விரட்டியடிக்கிறது நிர்வாகம். நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களது சாப்பாட்டை காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் டேபிளில் இருந்து குற்றவாளிகளைப் போல் துரத்தி, அவர்களை அவமானப்படுத்துகிறது.
ஒப்பீட்டளவில் அதிகாரிகளை விட மிக, மிகக் குறைவான கூலிக்கு வேலை செய்யும் CL, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவோ, உட்காரவோ விடாமல் வேலை வாங்கும் அதிகாரிகள், என்றாவது இந்த தொழிலாளர்கள் காலை டிபன் சாப்பிட்டர்களா? மதிய உணவு கிடைத்ததா? வயிறார சாப்பிட்டார்களா? ஆரோக்கியமான உணவுச் சூழல் உள்ளதா என்று விசாரித்திருக்கிறார்களா? தேவைப்படும் அளவிற்கு கேட்டு வாங்கி சாப்பிடும் உரிமை அவர்களுக்கு ஏன் இல்லை? இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இந்த கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு உண்மையில் மனிதத்தன்மை என்ற ஒன்று இருக்கிறதா?
மெட்டீரியல் முவ்மெண்ட், லோடிங் – அன்லோடிங், மெசின் கிளீனிங், ஷாப்களை சுத்தம் செய்வது, கழிவறை கிளினிங் செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் என எண்ணற்ற, கடுமையான வேலைகளை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் செய்கிறார்கள். இங்கு அவர்களின்றி உற்பத்தியில் ஒரு அணுவும் அசையாது. ஆனால், அவர்களுக்கு நல்ல தரமான உணவு வழங்காமல் தாழ்த்தப்பட்ட மக்களாகவே நடத்துகிறது,நிர்வாகம்.
கடந்த ஓராண்டாக டிவிஎஸ் லாஜிஸ்டிக்கில் பெண்களும் பணிபுரிந்து வருகிறார்கள். பெண்களை சமைப்பதற்காகவே பிறவி எடுத்தவர்கள் போல நாம் நடத்துகிறோம். வீட்டில் நமக்கு வகை, வகையாக சமைத்துப் போடுவதிலேயே தங்களது பாதி வாழ்நாளை அவர்கள் செலவழிக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்களுக்கு நமது ஆலையில் வெறும் சாதமும் சாம்பாரும் மட்டும்தான் வழங்கப்படுகிறது. அந்த உப்பு சப்பில்லாத சாப்பாட்டை அவர்கள் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் ‘சாப்பிட்டுவிட்டு’ வெறுப்புடன் வெளியேறி விடுகிறார்கள். இந்த லட்சணத்தில் நிர்வாகம் லாஜிஸ்டிக் பெண்களை அழைத்து மார்ச் 8 தேதி மகளிர் தினத்தை நடத்துகின்றது. பெண்களுக்கு நல்ல தரமான சாப்பாடு கூட கொடுக்க வக்கில்லாத நிர்வாகத்திற்கு, அவர்களை அழைத்து மகளிர் தினத்தைக் கொண்டாட வைப்பதற்கு என்ன யோக்கிதை இருக்கிறது?
தொழிலாளர்களை கொடும் உழைப்புச் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குகின்ற TVS நிர்வாகம் கூட அனைவரையும் வரிசையில் அமர்த்தி, சமமான உணவு வழங்குகிறது. யுனிட்-2வில் உச்சபட்டமாக ஜாதிக்கு ஒரு பந்தி என்பது போல காண்ட்ராட் தொழிலாளர்களுக்கு தனி கேண்டீன் கட்டி ஒதுக்கிவிட்டது. அற்பக்கூலி பெறுவதால் படித்த CL, அப்ரண்டீஸ் தொழிலாளர்கள் நைட் சிப்ட்டில் வேலை பார்த்துவிட்டு தூங்கி எழுந்து காலை டிபன் கூட சாப்பிடாமல் நேரடியாக மதிய உணவு சாப்பிட்டு 4.30pm சிப்ட்டிற்கு வருகின்றனர். பசியுடன் 8.30pm வரை வேலையில் ஈடுபடுகின்றனர். இது மிகப்பெரிய துயரமாகும். இதயமுள்ள மனிதர்கள் எதிர்த்து நிற்பார்கள். இதில் நமது நிர்வாகமோ துளியும் மனசாட்சியின்றி நடந்து கொள்கிறது.
ஆலையில் செக்யூரிட்டிகள் 12 மணி நேரம் இரவு பகலாக கண்விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான உணவு சப்பாத்திதான். ஆனால் அவர்களுக்கும் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை.
நிரந்தரத் தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் : கூலி மட்டும்தான் வித்தியாசம். அடக்குமுறையும் அடிமைத்தனமும் ஒன்றுதான் !
சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் சங்கம், “காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் கேண்டீனில் உணவு வழங்க நிர்வாகத்திடம் பேசி முடித்துவிட்டதாக” அறிவித்தது. சில மாதங்கள் CLகள் மட்டும் சமத்துவமாக நடத்தப்பட்டார்கள். ஆனால், இன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்ல தரமான, சரிவிகித, ஒரே மாதிரியான, சமமான உணவு வழங்காமல் நிர்வாகம் வஞ்சகம் செய்கிறது. சர்வதேச அளவில் தரம், மைக்ரோசெண்டில் உற்பத்திக்கொள்கை வகுத்துள்ள நிர்வாகம் உழைப்போரின் உணவுக் கொள்கையில் ஆய்வுகளின்றி, நேர்மையின்றி நடந்துகொள்கிறது. சரிவிகித சத்தான உணவு வழங்கப்படாததால் நிரந்தத் தொழிலாளர்கள் 45 வயதுக்கு மேல் ஆரோக்கிய வாழ்வு பறிக்கப்பட்டு நடைபிணமாக்கப்படுகிறார்கள்.
இது வெறும் சாப்பாடு பிரச்சனை மட்டுல்ல. வேலையில், சம்பளத்தில், உடையில், என தொழிலாளர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்திய நிர்வாகம், உணவில் கூட வித்தியாசத்தை புகுத்தி நவீன அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது!
நிரந்தரத் தொழிலாளி, CL, காண்ட்ராக்ட், செக்யூரிட்டிகள், அப்ரண்டீஸ் என ஒவ்வொரு வேலைப் பிரிவினரையும் தனித்தனி சாதியாகவே நிர்வாகம் பராமரித்து வருகிறது என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிரந்தர வேலை உரிமைக்காக போராட வேண்டிய இன்றைய காலச் சூழ்நிலையில் சாப்பாட்டிற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொழிலாளர் வர்க்கத்திற்கே அவமானம். அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கு சமமான உணவைக் கூட வழங்காத கார்ப்பரேட் நிறுவனமான நமது அசோக் லேலண்ட் நிர்வாகம் இதற்காக மிகுந்த வெட்கப்படவேண்டும்!
அசோக் லேலண்ட் சங்கங்களே!
ஒரே ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உணவும் கேன்டீனும் வேறு, வேறு என்ற பாகுபாட்டை நீக்கு!
காண்ட்ராக்ட், CL, அப்ரண்டீஸ், செக்யூரிட்டிகள், லாஜிஸ்டிக் தொழிலாளர்களுக்கு சரிவிகித சத்தான, தரமான, சமமான உணவை வழங்க நிர்வாகத்திடம் பேசி முடி!
அசோக் லேலாண்ட் நிர்வாகங்களே!
அனைவருக்கும் சமமான, சரிவிகித சத்தான உணவை வழங்கு!
உணவில் பாரபட்சம் காட்டாதே!
மனிதர்களை மனிதர்களாக நடத்து!
தொழிலாளர்களே!
நிர்வாகம் நம்மீது திணிக்கும் அடக்குமுறைகளை எதிர்த்து, பேசத் தயங்கினால், உரிமைகளுக்காகப் போராட மறுத்தால், நாளை தினம் நாம் சிந்திப்பதையே மறந்துவிடுவோம்!
பிறகு, அடிமைத்தனத்தையே நமது வாழ்க்கையாக மாற்றிவிடுவார்கள்! நமக்காகப் போராட எந்த அவதாரங்களும் மண்ணில் உதிக்கப் போவதில்லை.
புராண, இதிகாச அவதாரங்கள் கூட உயர்சாதி ஆதிக்கத்தையும் மக்களிடையே அடிமைத்தனத்தையும்தான் போதிக்கின்றன.
எனவே, நமது உரிமைகளுக்காக டில்லி விவசாயிகளை போல நாம்தான் ஒன்றிணைந்து போராட வேண்டும்!
பு.ஜ.தொ.மு – பிரச்சாரக் குழு, ஒசூர்
தொடர்புக்கு: 97880 11784