லாபத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிய “ஃபோர்டு” நிறுவனத்திற்கு சிவப்பு கம்பள அழைப்பு

ஃபோர்டு நிறுவனம் நட்டம் எனக் கணக்குக்காட்டி, முடிந்த அளவிற்குத் தொழிலாளர்களை மிரட்டி, கட்டற்ற சுரண்டலை மேற்கொண்டதோடு, கடைசியில் நிறுவனத்தை மொத்தமாக இழுத்து மூடிவிட்டு தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டது.

மிழ்நாட்டில் அந்நிய முதலீடுகளைப் பெருக்குவதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை உத்தரவாதம் செய்துள்ளார். இதன் காரணமாக, அற்ப கூலிக்கு தமிழ்நாட்டு இளந்தொழிலாளர்கள் சுரண்டப்படுவது; மக்கள் வரிப்பணங்கள் சலுகைகளாக வாரியிறைக்கப்படுவது; கட்டற்ற இயற்கைவள சூறையாடல் போன்ற அபாயங்கள் முன்னுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், ஸ்டாலினின் பயணத்தின் ஓர் அங்கமாக, 2022-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, லாபத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிய ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் உற்பத்தியைத் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து ஸ்டாலின் பேசியதையடுத்து சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது சொல்லப்படுகிறது. ஆனால், 2022-ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய பின்புலத்தைப் பார்த்தால்தான் இந்நிறுவனம் எந்தளவிற்கு தொழிலாளர் விரோதமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

1998-ஆம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்துடன் தமிழ்நாட்டிலும், குஜராத்திலும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தியைத் தொடங்கியது. இந்நிறுவனம் உற்பத்தியை நிறுத்திகொள்வதாக அறிவித்த சமயத்தில் அதன் முதலீட்டு மதிப்பு 14,000 கோடி ரூபாயாகும். இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் சுமார் 4,000; குஜராத்தில் சுமார் 4,500. இவர்கள் அனைவரும் நிரந்தர தொழிலாளர்கள். இவர்களன்றி, உதிரிப் பாக உற்பத்தியாளர்கள், போக்குவரத்து, கேண்டீன், துப்புரவு இன்னும் பல பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் சேர்த்தால் இரு மாநில நிறுவனங்களில் பணியாற்றும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 50,000 ஆக இருக்கும்.


படிக்க: தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !


இந்தளவு உழைப்பாளர்களைக் கொண்டு இயங்கிவந்த இந்நிறுவனம் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் தொழிற்சாலையை மூடப்போவதாக திடீரென்று அறிவித்தது. ரூ.14,000 கோடி அளவிற்கு ‘நட்டம்’ அடைந்ததே உற்பத்தியை நிறுத்துவதற்கான காரணம் என்று அபாண்டமாகப் புளுகியது.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவிற்கு எதிராகப் போராடிய தொழிலாளர்கள், “வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். ஆனால், இந்த முறை ஓர் ஆண்டுக்கு மட்டுமே ஊதிய உயர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அப்போதே ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்குச் சந்தேகம் இருந்தது. இப்போது நடந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் போட்ட முதலீட்டைக் காட்டிலும் பல மடங்கு லாபத்தை எடுத்துவிட்டது, ஃபோர்டு நிறுவனம். எங்கள் உழைப்பின் மூலம் பெரும் லாபத்தை அடைந்துவிட்டு இன்றைக்கு வேறு யாருக்கோ இந்த நிறுவனத்தைக் கைமாற்றி விட முயற்சி செய்வது மிகவும் தவறானது” என்று ஃபோர்டு நிறுவனத்தின் முகத்திரையைக் கிழித்தனர்.

உண்மையில், தாங்கள் நட்டம் அடைந்துவிட்டதாக கூறிவிட்டுதான், நோக்கியா நிறுவனமும் தனது உற்பத்தியை நிறுத்திக்கொண்டு, அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.21,000 கோடி வரியை ஏய்த்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியது. அதேபோல், 2018-ஆம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு, ஹூண்டாய், நிசான், எம்.எஸ்.பி. போன்ற நிறுவனங்களும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரியதற்காக, ஆட்குறைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றியும், நிறுவனங்களை மூடப்போவதாக மிரட்டியும் தொழிலாளர்களைப் பணிய வைத்தன.


படிக்க: சென்னை ஃபோர்டு ஆலை மூடல் அறிவிப்பு – தனியார்மயத்தின் கோரத் தாண்டவம் !


அந்த வரிசையில்தான் ஃபோர்டு நிறுவனமும் நட்டம் எனக் கணக்குக்காட்டி, முடிந்த அளவிற்குத் தொழிலாளர்களை மிரட்டி, கட்டற்ற சுரண்டலை மேற்கொண்டதோடு, கடைசியில் நிறுவனத்தை மொத்தமாக இழுத்து மூடிவிட்டு தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டது. நம் நாட்டின் நீர் வளத்தை உறிந்து, வரி ஏய்ப்பு, வரிச்சலுகை மூலம் மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டி, சிறுநீர் கழிக்கக் கூட நேரம் கொடுக்காமல் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உருவாக்கப்பட்ட ஆலையின் மூலம் சுரண்டி கொழுத்துவிட்டு பின்னர் ஆலையை இழுத்து மூடிவிட்டு நிரந்தர மற்றும் இதர தொழிலாளர்களையும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளியது.

ஒருபுறம் ஃபோர்டு நிறுவனத்தின் கூலியை நம்பியே வாழ்ந்த தொழிலாளர்களை வாழ்க்கையை இழக்கச் செய்து நடுத்தெருவில் நிர்க்கதியாக நிறுத்தியதோடு, பிற நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை அமர்த்துவதற்கும், ஏற்கெனவே வேலை பார்க்கும் தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு இயற்கை வளங்களையும் மக்கள் வரிப்பணத்தையும் கொள்ளையடித்து தொழிலாளர்களைச் சுரண்டி லாபம் பார்த்து அதனைச் சுருக்கிக்கொண்டு ஓடிய தொழிலாளர்கள் மீது துளியும் அக்கறையற்ற நிறுவனத்தைத்தான் சிவப்பு கம்பளம் விரித்து மீண்டும் அழைத்துள்ளது, கார்ப்பரேட் மாடல் தி.மு.க. அரசு.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க