மே 1, 2022 : தமிழகம் தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டங்கள் !
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
 அன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!
மே நாள் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். காலங்காலமாக பாட்டாளி வர்க்கம் எதிர்கொண்டு வருகின்ற வேலையின்மை, வறுமை, பசி – பட்டினி, அடக்கு முறைகள் ஆகியவற்றுக்கு மூலகாரணமான முதலாளித்துவத்தை எதிர்த்து, அமெரிக்கத் தொழிலாளர்கள் மூட்டிய போராட்டத் தீ இன்னும் அணையவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த சுதந்திரச் சந்தை முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்திய முதலாளித்துவமாக மாறி, நூற்றாண்டுக்கும் மேலாக உலகையே தனது சுரண்டலின் பிடிக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஏகாதிபத்தியமானது உலகம் முழுவதும் நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்வது, தமது சந்தைக்காக நாடு பிடிக்கும் போட்டிகளில் இறங்குவது, இதன் பொருட்டு உலகப்போர்கள் துவங்கி ஆக்கிரமிப்புப் போர்கள், படைக் குவிப்புகள், இனப்படுகொலைகளை நடத்துவது, மனித வளத்தையும் இயற்கை வளங்களையும் ஒட்டச் சுரண்டுவது என எண்ணற்ற மனிதகுல விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
முதலாளித்துவம் என்கிற வரலாற்று எதிரியை வீழ்த்தாமல் விடிவே இல்லை என்கிற நிலைமையில்தான் சர்வதேசப் பாட்டளி வர்க்கம் 2022-ம் ஆண்டின் மே நாளைச் சந்திக்கிறது. ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கப் போட்டியும், போர்களும் ஒருபுறம். இந்த மேலாதிக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 30 ஆண்டுகளில் திணிக்கப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய தாராளவாதக் கொள்கைகளால் பல நாடுகள் திவாலாகும் அவலம் மறுபுறம். இவற்றால் நோய்த்தொற்று, உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, வேலைப் பறிப்பு, உழைப்புச் சுரண்டல், இனம்-மொழி-சாதி-நிறம்-மதம்-பிராந்தியம் ஆகியவற்றின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகள், போர்களால் பல இலட்சம் மக்கள் மடிவதும், கோடிக்கணக்கில் அகதிகளாவதுமான துயர்மிகு சூழலில் சிக்கி சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் திணறி வருகிறது. இதுகுறித்த பார்வை, புரிதல், தீர்வு ஆகியவற்றைப் பாட்டாளி வர்க்கம் கற்றுத் தெளிந்தால்தான் தன்னுடைய விடுதலையைச் சாதிக்க முடியும்.
படிக்க :
♦ தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மை எதிரி சர்வதேச – ஏகாதிபத்திய நிதி மூலதனமே. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ மேலாதிக்கம் தகர்வதும், அமெரிக்க – ரஷ்ய, அமெரிக்க – சீன போட்டிகள் முன்னிலைக்கு வருவதுமான புதிய நெருக்கடியை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க – ரஷ்ய ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டியே உக்ரைன் மீதான போராக வெளிப்பட்டுள்ளது. அதைப்போலவே அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டியின் வெளிப்பாடாகவே ஆப்கானிலும் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடியும், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியும் வெடித்துக் கிளம்பியுள்ளன.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கும் போர்களால்தான் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், அந்தப் போர்களே ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டிகளால்தான் உருவாகின்றன. இதன் விளைவாக உலகம் பல்வேறு அணிகளாகப் பிரிவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக் கொண்டு பாசிச – நாஜி குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும், அரசை ஆட்டுவிப்பதிலும் முக்கியமான பங்காற்றுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவிலும் பார்ப்பனப் பாசிசம் தனது இலட்சியமான அகண்ட பாரதத்தை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த பாசிசக் குழுக்கள் ஏகாதிபத்திய நிதி மூலதனமும், உள்நாட்டுத் தரகுக் கார்ப்பரேட்டுகளும் சொந்த நாட்டு மக்களைக் கொள்ளையிட்டுச் சுரண்டுவதற்கு தீவிரமாக சேவை செய்து வருகின்றனர். இந்தியாவில் அதானி, அம்பானி வகையறாக்களின் வளர்ச்சியே இதற்கு உதாரணம்.
ஒருபக்கத்தில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை அதல பாதாளத்தை நோக்கிக் கிடுகிடுவெனச் சரிந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 116 நாடுகளில் 101-வது இடத்திலும், சர்வதேச மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் 146 நாடுகளில் 139-வது இடத்திலும் இந்தியா இருக்கிறது. குறிப்பாக, மோடி ஆட்சியில் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது
கொரோனா முடக்கக் காலத்தில் சுமார் 40% தொழிலாளர்கள் வேலையை இழந்துவிட்டனர். அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பது சவாலாகவே இருக்கிறது. நாடெங்கும் பட்டினியும், வறுமையும் கோரத்தாண்டவமாடும் நிலையிலும் கூட, 100 நாள் வேலைத்திட்டத்தில் வெறும் நான்கு ரூபாய் மட்டுமே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கத்தில், கடந்த ஓராண்டில்தான் அதானியும் அம்பானியும் பிரம்மாண்டமாக சொத்துக்களைக் குவித்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முறையே 10, 11-வது இடங்களைப் பிடித்திருக்கிறனர். மோடியின் செல்லப்பிள்ளை அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும், ஒரு நாளைக்கு ஆயிரம் கோடிகள் உயர்ந்து ரூ.3,67,500 கோடிகள் அதிகரித்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் குடும்பமோ நாள் ஒன்றுக்கு ரூ.163 கோடிகளைக் குவிக்கிறது. நாடும் நாட்டு மக்களும் நாசமாகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் இவர்கள் மட்டும் எப்படி வாரிக் குவிக்கிறார்கள்? மோடி ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் பல இலட்சம் கோடிகள் வரிச்சலுகைகள், மானியங்கள், வாராக்கடன் தள்ளுபடிகளே இவற்றுக்கு மூல ஆதாரங்களாக இருக்கின்றன. இந்த இலட்சணத்தில், மக்களுக்கு மானியங்கள் கொடுப்பதால் இலங்கையைப் போல இந்தியாவும் திவாலாகிவிடும் என எச்சரிக்கிறது மோடியின் உயர்மட்ட ஆலோசனைக்குழு.
பெட்ரோல், டீசல், எரிவாயு, அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளும், சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்து, உழைக்கும் மக்கள் வாழவே முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட, ஈவிரக்கமற்ற வகையில் ஜி.எஸ்.டி வரி தாக்குதலை நடத்துகிறது மோடி – நிர்மலா கும்பல். மேலும் குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி ஆகிய சேவைகளைத் தனியார்மயமாக்கி, கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடுவதைத் தீவிரமாக்குகிறது. உழைப்புக்கேற்ற ஊதியமும், விளைபொருளுக்கேற்ற விலையும் இல்லாமல் தொழிலாளர்களும் விவசாயிகளும் அல்லல்படும் நிலையில், சிறு-குறுந்தொழில்களையும், சில்லரை வணிகத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு பலியிட்டுக் கொண்டிருக்கிறது.
நட்டக்கணக்கு காட்டி பொதுத்துறைகளை விற்பனை செய்த காலம் மலையேறி விட்டது. அரசின் செலவுகளுக்காக பொதுத்துறைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கூச்சநாச்சமின்றி விற்றுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்த அயோக்கியத்தனத்துக்கு “தேசிய பணமாக்கல் திட்டம்” என பெயரிட்டு, நாட்டைக் கூறுபோட்டுக் கூவி விற்கும் சேல்ஸ்மேன்களாக மாறியிருக்கின்றனர் பிரதமரும் அமைச்சரவையும்.
இந்தக் கார்ப்பரேட் கொள்ளையை மூடி மறைப்பதற்காகவும், அகண்ட பாரதம் என்னும் தமது கனவை நிறைவேற்றவும் நாடெங்கும் காவிவெறியைக் கிளப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பார்ப்பனப் பாசிசக் கும்பல். அதனால்தான், ஒரே நாடு – ஒரே சட்டம் – ஒரே பண்பாடு – ஒரே மதம் என்கிற இந்து இராஷ்டிர – பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறது. நீதித்துறையும், சட்டங்களும் இதற்கேற்ப தகவமைத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தட்டிக் கேட்பவர்கள், அம்பலப்படுத்துபவர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தி, அடக்கிக் கொண்டிருக்கிறது மோடி – அமித்ஷா கும்பல்.
படிக்க :
மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !
மே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் !
மொத்தத்தில் உக்ரைன் மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டியும், இலங்கையின் திவால் நிலையும், பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடியும், இந்தியாவின் பாசிச அபாயச் சூழலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. இந்த நேர்க்கோடு சர்வதேச நிதி மூலதனத்தால் வரையப்பட்ட கோடு. அரைகுறை இறையாண்மை பறிப்பு, உழைப்புச் சுரண்டல், பசி-பட்டினி, இனவெறி-மதவெறியூட்டல்கள், அடக்குமுறைகள், இயற்கை வளங்கள் சூறையாடல், சுற்றுச்சூழல் அழிப்பு, ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்கப் போர்கள். இவை அனைத்தையும் ஏகாதிபத்திய முதலாளித்துவம்தான் முன்நின்று நடத்துகிறது. அந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம். உலகையே அச்சுறுத்துகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்பவும், இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுக்க, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைக்கவும் மே நாளில் சூளுரைப்போம்!
மே நாள் சூளுரை
♠ அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
♣ அமெரிக்க – ரசிய பனிப்போரையும், அமெரிக்க – சீன ஆதிக்கப் போட்டியையும் முறியடிப்போம்!
♣ ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போரை ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மேலாதிக்கத்துக்கு எதிரான புரட்சிகர உள்நாட்டுப் போராக வளர்தெடுத்து, தேச விடுதலையைச் சாதிக்கப் போராடுவோம்!
♣ இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 9791653200, 9444836642, 8056386294, 9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க