வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட இந்த மே தினத்தை சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான மே தினம் என கல்வியாளர்களும் தொழிற்சங்க இயக்கங்களும் குறிப்பிடுகின்றன. பணியமர்த்துதல் மற்றும் பணிநீக்கத்தை எளிதாக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் நிலையில், ஐந்து மாநிலங்கள் சத்தமில்லாமல் பணி நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக சட்டப்பூர்மாக மாற்றியுள்ளன.

மே தினம் தொழிலாளர்களின் உரிமைகள் கொண்டாடப்படுவதைக் குறிக்கிறது. ஆனால் இந்த மே 1, கோவிட் -19 நெருக்கடியால் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, பல தசாப்த கால போராட்டத்தின் மூலம் அவர்கள் பெற்ற சில உரிமைகளையும் இழந்துள்ளனர்.

மேற்கு வங்கம் கே.ஆர். ஜாம்ஷெட்பூரின் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தொழிலாளர் ஆய்வுகள் பேராசிரியர் சியாம் சுந்தர், இந்தியாவில் உள்ள அரசாங்கங்கள் “19 ஆம் நூற்றாண்டின் தொழிலாளர் சுரண்டல் மாதிரியை மீண்டும் கண்டுபிடித்து வருகின்றன” என்கிறார்.

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்பும்போது, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்படலாம்.

குஜராத்தில், முதல் எட்டு மணிநேரங்களுக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தையே கூடுதலாக பணியாற்றும் நேரத்துக்கும் அவர்களுக்கு வழங்கப்படும். தொழிற்சாலைகள் சட்டம் கூடுதல் மணிநேரங்களுக்கு இரண்டு மடங்கு ஊதியத்தை கட்டாயம் தர வேண்டும் என்கிறது.

1940களில் அம்பேத்கரின் முயற்சியின் மூலம்தான் தொழிலாளர்களின் அன்றாட பணி நேரம் 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேர வேலையும், வாரத்தில் 48 மணிநேரமும் நிர்ணயித்தது, வாரத்திற்கு அதிகபட்சம் 60 மணிநேரம் கூடுதல் பணி நேரத்திற்கான ஊதிய விகிதத்தில் இரட்டிப்பாக செலுத்த வேண்டும் என சொல்கிறது..

படிக்க:
♦ மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?

தொழிலாளர் பொருளாதார நிபுணர் அமிதாப் குண்டு, ஐந்து மாநிலங்கள் அனைத்து துறைகளிலும் வேலை நேரத்தை அதிகரிக்கும் முடிவை கேள்வி எழுப்பினார்.

“ஒரு அவசர நடவடிக்கையாக, குறிப்பிட்ட துறைகளில் மாநிலங்கள் வேலை நேரத்தை அதிகரிக்க முடியும், ஓய்வு, சுகாதாரம், உணவு, தங்குமிடங்கள் போன்ற சில சலுகைகள் பணியிடங்களில் தருவதன் மூலம் வேலை நேரத்தை அதிகரிக்கலாம். ஆனால் அனைத்து துறைகளிலும் வேலை நேரம் அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை” என்கிறார் அவர்.

சுரங்க மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் அதிகரித்த வேலை நேரமும் கவனிக்கத்தக்கது. வேலை நேரத்தை அதிகரிக்கும் போது, பணியிட சூழலை மேம்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உள்ள தொழில்சாலைகள் தொழிலாளர்களை குறைந்தபட்ச ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை செய்யும் வியர்வை உழைப்பை சுரண்டிய மாதிரியைப் போல, ஐந்து மாநில அரசாங்கங்கள் முதலாளிகளைச் செய்ய அனுமதிக்கின்றன” என்கிறார் சியாம் சுந்தர்.

பொது அவசரத்தை முன்வைத்து வேலை நேரத்தை அதிகரிக்கலாம் என தொழிற்சாலைகள் சட்ட பிரிவு 5 கூறுவதை குஜராத் அரசு முறையற்ற முறையில் பயன்படுத்துவதாகவும் அவர் விமர்ச்சிக்கிறார்.

“சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, ஒரு பொது அவசரநிலை என்பது போர் போன்ற இந்தியாவின் பாதுகாப்புக்கு வெளிப்புற அல்லது உள் அச்சுறுத்தலை தரக்கூடிய சூழல் என சொல்கிறது. கோவிட் -19 தொற்றுநோய் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பொது அவசரநிலை அல்ல” என அவர் கூறுகிறார்.

ஜேஎன்யூ-வின் அமைப்புசாரா துறை மற்றும் தொழிலாளர் ஆய்வுகள் மையத்தின் தலைவர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா, இந்த ஆண்டின் மே தினம் நிச்சயமாக சமீபத்திய ஆண்டுகளில் மிக மோசமானது என்கிறார்.

ஏற்கனவே, மோசமான வேலையின்மை பிரச்சினை இருந்த நிலையில், கோவிட் -19 பிரச்சினையால் அது இன்னும் மோசமடைந்துள்ளது என்கிறார் அவர்.

படிக்க:
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !

“அமெரிக்காவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 25 மில்லியன் மக்கள் வேலையின்மை காப்பீட்டிற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் இதே நிலைதான் உள்ளது. 2018 ஆம் ஆண்டில், இந்தியா 45 ஆண்டுகளில் இல்லாத மிக அதிகமான வேலையின்மை விகிதத்தைக் கண்டது; தொற்றுநோய் காரணமாக இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது” என்கிறார் மெஹ்ரோத்ரா.

காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு அசோக் சிங், மோடி அரசாங்கம் தொழிலாளர் விரோதமாக நடந்து கொள்கிறது என குற்றம்சாட்டுகிறார். கடந்த குளிர்கால கூட்டுத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்துறை உறவுகள் வழிகாட்டு மசோதாவை அவர் குறிப்பிட்டு பேசுகிறார்.

இந்த மசோதா 100 ஊழியர்கள் வரை அரசின் எந்தவொரு அனுமதியும் இன்றி பணிநீக்கம் செய்ய முதலாளிக்கு அனுமதி அளிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஒரு கூட்டத்தை கூட அழைக்கவில்லை. இது ஒருபோதும் ஆலோசனையை நம்பவில்லை. நீண்ட போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் அடைந்த சலுகைகள் திரும்பப் பெறப்படுகின்றன. நாங்கள் அனைத்து தொழிலாளர் சங்கங்களும் ஏப்ரல் 21 அன்று சமூக ஊடகங்கள் வழியாக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினோம்” என்கிறார் அவர்.

சிபிஎம் ஆதரவு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தபன் சென், “கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு அதிக நிதி தருவதால், அவர்களாக தொழிலாளர் சட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.

“தனியார் முதலாளிகள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவோ அல்லது சம்பளத்தை குறைக்கவோ கூடாது என அரசாங்கங்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை. நிச்சயமாக, இது நூற்றாண்டின் கடுமையான மே தினம் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் சென்.


– கலைமதி

நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க