பத்திரிக்கை செய்தி
04.05.2020
தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும், சொற்ப வருமானத்தையும், சீரழித்ததில் டாஸ்மாக் குடிபோதைக்கு முக்கிய பங்கு உண்டு. கொரோனா ஊரடங்கால் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு கடந்த 40 நாட்களாக எந்த வேலையும் இல்லை. வருமானமும் இல்லை. டாஸ்மாக் மூடப்பட்ட காலத்தில், குடிக்க இருந்த பணம், ரூ.100, 200 கூட சாதாரண மக்களுக்கு அரிசி பருப்பு வாங்கி உயிர் வாழ பயன்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு வருகிற மே 7 –ம் தேதி முதல் டாஸ்மாக்கை மீண்டும் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
குடிக்கும் பெரும்பான்மை நபர்களும் 40 நாள் கால இடைவெளியில் குடிக்காமல் கடந்து உள்ளனர். குடியை நிறுத்தியதால் பாதிக்கபட்ட நபர்களுக்கு மறுவாழ்வு மையத்தின் மூலம் சிகிச்சை அளிப்பதுதான் சரியான தீர்வு. மாநில அரசின் வருமானம் போகிறது. சாராய ஆலை அதிபர்களின் வருவாய் போகிறது என்பதற்காக மீண்டும் டாஸ்மாக்கை திறக்கக்கூடாது. கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் படும் துன்பத்தை துயரத்தை இழப்புகளை மதிப்பிடுகையில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் எடப்பாடி அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.
தமிழகத்தில் குடிபோதையால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும் சிதைந்த குடும்பங்களும் மாளாது. விதவைகளான பெண்கள், நடைபெற்ற போராட்டங்கள், தேசதுரோக உள்ளிட்ட எண்ணற்ற வழக்குகள், போராட்டத்தில் உயிரிழந்தவர்கள், சிறை சென்றவர்கள் என தமிழகத்தில் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்திற்கு நீண்ட அர்ப்பணிப்பான தியாக வரலாறு உண்டு.
படிக்க:
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !
♦ PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்
மத்திய மாநில அரசுகள் 55 நாட்கள் ஊரடங்கு அறிவித்து இன்றுடன் 40 நாளை கடந்துள்ள நிலையில் மிக அற்பமான அளவில்தான் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அனைவருக்கும் கொடுக்கவில்லை. மக்களை தியாகம் செய்ய சொல்லி ஏளனம் செய்கிறது.
படுகுழியில் விழுந்த உலகபொருளாதார நெருக்கடியால், இனி அனைவருக்கும் வேலை என்பது இல்லை. இருக்கும் வேலையும் பறிபோகும். இந்த நிலையில் டாஸ்மாக்கை மீண்டும் திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்களின் கொஞ்ச நஞ்ச ரத்தத்தையும் டாஸ்மாக் மூலம் அட்டையாக உறிஞ்ச போகிறது. அதை அனுமதிக்க கூடாது.
தோழமையுடன்
வழக்குரைஞர் சி. ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
நாம் அனைவரும் வினவு கட்டுரைகளை சிறப்பான முறையில் இளைஞர்கள் அனைவரும் படிக்க வோண்டும்