உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் அம்பானி குடும்பத்தின் ஆடம்பரத் திமிர்

பாசிச மோடியின் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான கொள்கைகளால் பில்லியனர்கள் தங்கள் சொத்துகளை பன்மடங்கு பெருக்கியுள்ளனர். 2014-ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது அம்பானியின் சொத்து 23.4 பில்லியன் டாலர். இப்போது அதைவிட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதில் இருந்த மோடியின் சேவையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ல கோடி ஏழை இந்திய மக்கள் உயிர் வாழ்வதற்கு சரியான உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவின் முதன்மைப் பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் விருந்திற்காக 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். ஜூலை 12 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் திருமண நிகழ்வுக்கு இதைவிட பன்மடங்கு செலவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018 ம் ஆண்டு, தனது மகள் இஷாவின் திருமணத்திற்காக 800 கோடி ரூபாய் வரை செலவழித்தார் முகேஷ் அம்பானி. அந்த நிகழ்வில் ஹிலாரி கிளின்டன், ஜான் கெர்ரி ஆகிய அமெரிக்க அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம் குஜராத் மாநிலத்தின் அருகிலுள்ள சுமார் 6,00,000 மக்கள் வசிக்கும் ஜாம் நகர் பகுதியில் நடைபெற்றது. இங்கு அம்பானிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆண்டிலா என்ற மாளிகை இருக்கிறது. இந்தியாவின் அன்றாடங்காய்ச்சிகளான ஏழைமக்களின் மிகப்பெரிய வசிப்பிடமான தாராவிக்கு அருகில் இந்த மாளிகை அமைந்துள்ளது. மூன்று ஹெலிபேடுகள், 160 கார் கேரேஜ், ஒரு தனியார் திரையரங்கம், நீச்சல் குளம் இன்னும் எண்ணற்ற வசதிகள் கொண்ட மாளிகை அது. இங்குதான் அம்பானியின் குடும்பம் வசித்து வருகிறது.


படிக்க: அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!


சரி விசயத்திற்கு வருவோம். அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும், அபரிமிதமான செல்வக் கொழிப்பில் அவர்கள் திளைப்பதையும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களை ஓரிடத்தில் அடையாளம் காணும் வகையிலும் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பில்கேட்ஸ், கௌதம் அதானி, மார்க் ஜூக்கர்பெர்க், இவாங்கா டிரம்ப், பாப் நட்சத்திரம் ரிஹானா மற்றும் இவர்களைப் போன்ற பல கோடீஸ்வரர்கள் உட்பட கிட்டத்தட்ட 1200 செல்வந்தர்களை அழைத்துள்ளனர். இவர்களைப் பராமரிக்க சிகையலங்கார நிபுணர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு 130 விமானங்கள் வந்திருந்தன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, மூன்று நாட்களுக்கும் மேலாக, ஆடம்பர பங்களாக்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான விருந்தினர்களுக்கு ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட இடங்களில் மது மற்றும் இரவு விருந்துகள் வழங்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட சமையல் நிபுணர்களால் சமைக்கப்பட்ட 2500 வகையான உணவுகள் வழங்கப்பட்டன. உணவிற்கான ஒப்பந்தத்திற்கு மட்டும் 25 மில்லியன் டாலர், அதாவது 150 கோடி  வரை, செலவிடப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பரிதாபகரமான வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி பெரும் பணக்காரக் கும்பல்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. இந்தத் திருமண நிகழ்வுகள் குறித்து அங்கு வந்திருந்த பெரும் பணக்காரர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் அதனை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தின. மில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்படும் ஹாலிவுட்டின் மிகப்பெரிய பிரபலங்கள் அம்பானிகளுடன் மேடையில் நடனமாடினர். மேலும் அவர்களின் உல்லாசத்தீவுக்கு வெளியே கோடிக்கணக்கான ஏழைகளுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. பாப் பாடகி ரிஹானா இவ்விழாவில் பாடுவதற்காக 8 மில்லியன் முதல் 9 மில்லியன் டாலர் வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆடம்பர திருமண நிகழ்வு முழுமையும் இந்தியாவில் உள்ள நூறுகோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலையைப் பற்றிய அலட்சியத்தை பிரதிபலிப்பதாகவே இருந்தது.


படிக்க: அதானியின் அயோக்கியத்தனத்தை தோலுரித்த பிரிட்டன் பத்திரிக்கை!


பிரதமர் மோடியை இந்நிகழ்விற்கு அழைத்திருந்த போதும் அவர் கலந்து கொள்ளவில்லை. அரசியல் காரணங்களுக்காக நிகழ்விற்கு வருவதைத் தவிர்த்து விட்டார். ஏற்கனவே அதானியுடனான உறவு அம்பலப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்விற்கு வருவது தங்களுக்கு அரசியல்ரீதியாக பாதகமாக இருக்கும் என்பதனால்தான் மோடி கலந்து கொள்ளவில்லை. ஆனால் அம்பானி மோடி உறவும் ஏற்கனவே அம்பலப்பட்டுப் போன ஒன்றுதான்.

இந்நிகழ்விற்காக மோடி அரசு பல்வேறு வழிகளில் தனது எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளது. ஜாம் நகரின் சிறிய உள்நாட்டு விமானநிலையம், சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. அரசு விமானநிலையம் விரிவுபடுத்தப்பட்டு, பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்திய விமானப்படை கூடுதல் ராணுவ வீரர்களை இதற்காக நிறுத்தியது. அதாவது இந்த சேவைகள் எல்லாம் அம்பானியின் குடும்பத்திற்காக.

பாசிச மோடியின் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான கொள்கைகளால் பில்லியனர்கள் தங்கள் சொத்துகளை பன்மடங்கு பெருக்கியுள்ளனர். 2014-ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது அம்பானியின் சொத்து 23.4 பில்லியன் டாலர். இப்போது அதைவிட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதில் இருந்த மோடியின் சேவையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொலைத்தொடர்புத்துறையில் அம்பானியின் ஆதிக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இத்துறையில் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அம்பானியின் முதலீடு உள்ளது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய அம்பானியின் ஊடக நிறுவனமான ஜியோவில் 800 மில்லியன் வாராந்திர பார்வையாளர்கள் உள்ளனர். இதில் மோடியைப் பற்றிய புகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

மோடி ஆட்சியின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மீதான சுரண்டலின் மூலம் இந்தியாவின் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் உலக சமத்துவமின்மை 2022 அறிக்கையின்படி, இந்தியாவில் 10 சதவிகிதம் செல்வந்தர்கள், மொத்த செல்வத்தில் 72 சதவிகிதத்தையும், 5 சதவிகிதத்தினர் 62 சதவிகித சொத்துகளையும், மேலும் 1 சதவிகிதத்தினர் மொத்த செல்வத்தில் 40.6 சதவிகிதத்தையும் வைத்துள்ளனர்.


படிக்க: அம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை !


மோடியின் நெருங்கிய கூட்டாளியான அதானியின் சொத்து மதிப்பு கொரானோ தொற்றுநோய் காலகட்டத்தில் மட்டும் 8 மடங்கு அதிகரித்து, அக்டோபர் 2022-இல் கிட்டத்தட்ட 10.96 லட்சம் கோடியாக அதிகரித்தது என ஆக்ஸ்பாம் குறிப்பிடுகிறது.

ஆனால் தொற்றுநோய் காலகட்டத்தில் ஏழைகளின் நிலையோ முற்றிலும் மாறுபட்டதாகும். அதிலிருந்து தற்போது வரை ஏழை மக்களின் வருமானம் மற்றும் செல்வமானது தொடர்ந்து கீழ்நிலையை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். மொத்த செல்வத்தில் அடித்தட்டில் இருக்கும் 50 சதவிகிதம் பேரின் சொத்து 3 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என ஆக்ஸ்பாம் மதிப்பிடுகிறது. மேலும் இதன் தாக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள உணவு, கடன் அதிகரிப்பு மற்றும் மரணங்களை நோக்கி ஏழை மக்களைத் தள்ளும் என ஆக்ஸ்பாமின் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அம்பானிகளும் மற்ற இந்திய கோடீஸ்வரர்களும் தங்களின் பெரும் செல்வத்தைக் கொண்டாடும் வேளையில், உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கையில் இந்தியா 111 வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், காங்கோ, ஏமன், சூடான் ஆகிய சில நாடுகளே இந்தியாவுக்குப் பின்னால் உள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடு, 15-24 வயதுடைய பெண்களின் இரத்த சோகை பாதிப்பு ஆகியவற்றிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது. இது இந்தியாவின் கடுமையான வறுமையைக் காட்டும் சில குறியீடுகள் மட்டுமே. ஆனால் இதுகுறித்து பாசிச மோடி கும்பலுக்கோ, இந்தியாவின் பெரும் பணக்காரக் கும்பல்களுக்கோ எந்த கவலையும் கிடையாது. அம்பானி, அதானி வகையறா பெரும் பணக்காரக் கும்பல்களின் வளர்ச்சியைத்தான் நாட்டின் வளர்ச்சி என்று கதையளந்து கொண்டிருக்கிறது பாசிச மோடி கும்பல்.

அம்பானி, அதானி உள்ளிட்ட ஒரு சில பில்லியனர்களின் கைகளில் அபரிமிதமான செல்வம் குவிவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த வளங்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பரிதாபகரமான வாழ்க்கை நிலைமையை மாற்றியமைப்பது அவசியமாகும். அதற்கு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்தி, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பது நமது உடனடிக் கடமையாகும்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க