அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!

கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.

ர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளைப் பரப்பி அம்மாநில அரசுகளின் பால் கூட்டுறவு உற்பத்தி நிறுவனங்களை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும், குஜராத் மாநில அரசின் பால் கூட்டுறவு உற்பத்தி நிறுவனமான அமுல், தமிழ்நாட்டின் பக்கமும் தலையைக் காட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் போச்சம்பள்ளி சிப்காட் அருகேயுள்ள ஓலப்பட்டி பகுதியில் தன்னுடைய முதல் பால் குளிரூட்டும் நிலையத்தை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஏழாயிரம் லிட்டர் பால் கொள்முதலில் ஈடுபடுவதோடு, அதில் கிட்டதட்ட மூவாயிரம் லிட்டரை ஆந்திராவில் உள்ள தனது நிறுவனத்திற்கும் அனுப்பி வருகிறது.

தமிழ்நாட்டின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவினை ஒழித்துக்கட்ட வேலை செய்யும் அமுல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கடந்த மே மாதத்தில், அமுல் நிறுவனத்தை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாகக் கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல்செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்” என சுட்டிக்காட்டி இருந்தார். அக்கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் வந்ததாகத் தெரியவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதும்போது, பால் கொள்முதல் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த அமுல், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில கிராமங்களில் பால் கொள்முதலில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களிலும் தனது கொள்முதலை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுப்பதற்காக, நயவஞ்சகமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.


படிக்க: அமுல் மூலம் ஆவினை அழிக்கத்துடிக்கும் மோடி அரசு – பின்னணியில் அம்பானி!


பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ஆவின் வழங்கும் கொள்முதல் விலையை விட அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது அமுல். அதை அமுல் நிறுவனம் மறுத்தாலும், தரத்தைப் பொறுத்து ஆவின் லிட்டருக்கு ரூ.28 முதல் ரூ.32 வரை கொடுத்து கொள்முதல் செய்யும் பாலை, அமுல் நிறுவனம் ரூ.34 முதல் ரூ.38 வரை கொடுத்து கொள்முதல் செய்வதாக அப்பகுதி விவசாயிகளே தெரிவிக்கின்றனர். மேலும் அமுல் தனது கொள்முதல் பாலுக்கான தொகையை வாரந்தோறும் வழங்கிவிடுவதால், பால் உற்பத்தியாளர்கள் இயல்பாக அமுலை நாடிச் செல்ல விரும்புகின்றனர்.

அமுல் நிறுவனத்தின் நுழைவும் இதுபோன்ற அதன் நடவடிக்கைகளும் ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் உள்நோக்கம் கொண்டது என்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளுக்காக அமுலை வரவேற்க முடியுமா?

தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல் செய்வதை ஒரு சிலர் ஆதரிக்கின்றனர். இது ஆக்கப்பூர்வமான தொழில்போட்டியை ஏற்படுத்தும் என்றும், விவசாயிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஊடகங்களில் கருத்துசொல்லும் சிலர் தேன்சொட்டப் பேசுகின்றனர்.

“ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள இத்துறையில், கூடுதலாக அமுல் நிறுவனமும் வருகிறது என்பதைத் தவிர அதனால் பெரும்பாதிப்பு நிகழ்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது. அதைவிடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நடைமுறைப் பிரச்சினைகளை அரசு முதலில் கவனிக்கட்டும்” என்று கூறியுள்ளார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்.

ஆவினில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் நிலவுவது உண்மைதான். பால் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரத்தை காரணம்காட்டி அரசு நிர்ணயித்த விலையைக் கூட அதிகாரிகள் கொடுப்பதில்லை; கொள்முதல் செய்த பாலுக்கான பணத்தையும் இழுத்தடித்து இரு மாதங்களுக்கு பிறகே கொடுக்கின்றனர். மேலும் பால் உற்பத்தியாளர் சங்கங்களும் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்காரணங்களால் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையும், தினசரி பால் கொள்முதலும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 12 ஆயிரமாக இருந்த கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையானது 9 ஆயிரத்து 673 ஆகக் குறைந்துள்ளது.

பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. ஆனால் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கான பால் தேவை 38 லட்சம் லிட்டர். எனவே பற்றாக்குறையைப் போக்க, மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடரை இறக்குமதி செய்து, அதைப் பாலாக மாற்றுகின்றனர். தமிழ்நாட்டிற்குள் ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுதான் அமுல் நுழைகிறது.

ஆனால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் ஈடுபடும் ஆரோக்கியா, ஹட்சன் போன்ற நிறுவனங்களைப் போல நாம் அமுல் நிறுவனத்தையும் கருத முடியாது. ஆவினில் நிலவும் பிரச்சினைகளால் அமுலை ஆதரிக்கவும் முடியாது. ஏனெனில் அமுலின் வரவு ஆவின், நந்தினி போன்ற மாநில பால் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்ட விழையும் ஒன்றிய அரசின் சதியாகும்!

பிற மாநில பால் உற்பத்தி நிறுவனங்களை கழுத்தறுக்கும் ஒன்றிய அரசு!

இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஐஸ்கிரீம் போன்ற பால் சார்ந்த பொருட்களை மட்டும்தான் அமுல் விற்பனை செய்தது. தற்போதுதான் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களைக் கட்டியமைத்து அதன் மூலம் பால் கொள்முதல் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது. அதாவது ஒன்றிய அரசு அமுல் மூலம் ஆவினை அழிக்கும் வேலையை துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் (Multi State Co-operative Society Act) சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மீதிருக்கும் உரிமைகளைப் பறித்துள்ளது.

இதற்கு முன்னர், அமுல் போன்ற பல மாநில கூட்டுறவுச் சங்கத்துடன் வேறு ஏதேனும் கூட்டுறவு சங்கத்தை இணைப்பதாக இருந்தால் மாநில கூட்டுறவுச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தற்போது கூட்டுறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பெரும்பான்மை அடிப்படையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் எந்த ஒரு கூட்டுறவு சங்கத்தையும் பல மாநில கூட்டுறவு சங்கத்துடன் இணைக்க முடியும் என்று திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு.

மேலும் “கூட்டுறவு தேர்தல் ஆணையம்” என்ற புது அமைப்பை உருவாக்கியிருக்கிறது மோடி அரசு. இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிர்வாகிகளை ஒன்றிய அரசே நியமிக்கிறது. இச்சட்டத் திருத்தங்களுக்கு பிறகுதான் கர்நாடக மாநிலத்தின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை பல மாநில கூட்டுறவு அமைப்பான அமுலுடன் இணைக்க முயற்சி எடுத்தது மோடி அரசு. ஆனால் கர்நாடக மக்களின் எதிர்ப்பால் அது தற்காலிகமாகப் பின்வாங்கப்பட்டுள்ளது.

எனவே, ஆவினை அழிக்கும் வேலையை செய்து வரும் அமுலை மற்ற தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட முடியாது. ஆவினின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ளும் அதேநேரம், ஆவினை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் அமுல் நிறுவனத்தின் சதிகளையும் முறியடிக்க வேண்டும்.

அமுல் வரும் முன்னே, அம்பானி வருவார் பின்னே!

மாநில அரசுகளின் பால் கூட்டுறவு உற்பத்திச் சங்கங்களை அழித்து, ஒன்றிய மோடி அரசு எந்த அமுலை ஏகபோகமாக வளர்ப்பதற்குத் துடிக்கிறதோ அந்த அமுல் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவில் மற்ற பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தேசிய பணமாக்கல் திட்டம், உட்கட்டமைப்புத் திட்டம், தனியார்-அரசு கூட்டுறவு போன்ற பல பெயர்களில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, அமுலை மட்டும் வளர்த்தெடுப்பதும் – விரிவுபடுத்துவதும் ஏன்? இந்திய பால் சந்தையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றி, மிகப்பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனத்தை கட்டியமைக்க முயல்கிறதா மோடி அரசு?

அப்படியொரு ‘அதிர்ச்சி’ நமக்கு வேண்டாம். அமுலை ஏகபோகமாக வளர்ப்பதற்குப் பின்னே, இந்திய பால் உற்பத்தித் துறையையும் சந்தையை கைப்பற்றுவதற்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் அம்பானியின் லாபவெறி ஒளிந்திருக்கிறது!

000

இந்தியாவின் முதல் பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான அமுல் குஜராத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்களை கட்டியமைப்பதற்காக, “தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்” உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தி, மாடு வளர்ப்பு போன்ற பணிகள் இதன் வழிகாட்டுதல்களின்படிதான் நடக்கிறது. பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் வெண்மைப் புரட்சி இவ்வமைப்பின் மூலம்தான் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தில் கார்ப்பரேட்டுகளை நுழைக்கும் வகையில் மோடி அரசு சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக தனியார் நிறுவனங்களைச் சார்ந்தவர் இடம்பெறலாம் என்றும், கூட்டுறவுச் சங்க அமைப்பு முறையோடு கூடுதலாக வேறு நிறுவன அமைப்பு முறைகளைக் கூட கொண்டுவரலாம் என்றும், தே.பா.மே.வாரியத்தின் துணை நிறுவனங்களான மாட்டுத் தீவன உற்பத்தி மற்றும் பால் குறித்து ஆய்வு செய்யக்கூடிய நிறுவனங்களின் பங்குகளை ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் விற்கலாம் என்றும் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இச்சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அம்பானி பால் மற்றும் தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் சந்தையில் நுழைய உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.

மேலும் ரிலையன்ஸ் குழுமம், பால் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுப் பிரிவின் வணிகத் தலைவராக சந்தீப் கோஷ் என்பவரை நியமித்துள்ளது. இவர் மில்க் மந்திரா (milk mantra) மற்றும் லாக்டலிஸ் இந்தியா (lactalis india) ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவராவார்.


படிக்க: தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்


ஒருபுறம் பால் மற்றும் பால் பொருட்கள் வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை தன் நிறுவனத்தில் இணைப்பதும், மறுபுறம் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையைத் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் ரிலையன்ஸ் குழுமம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சந்தையைக் குறிவைத்து வேலை செய்வதை உறுதியாக்குகிறது.

இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது, மோடி அரசின் சட்டத்திருத்தங்களின் நோக்கம் தனியார் – அரசு கூட்டுறவுக் கொள்கையின் (Public-Private Partnership) மூலம் அமுலின் கட்டமைப்புக்குள் அம்பானியை நுழைப்பதன் ஒருபகுதியாக இருக்கலாம் என்று கருதத்தோன்றுகிறது.

2007-ஆம் ஆண்டு தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள், “டெய்ரி லைஃப் மற்றும் டெய்ரி ப்யூர்” என்ற பிராண்டின் கீழ் ஏற்கெனவே பால் பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்ட வந்த அம்பானி, பின்பு தன் கட்டமைப்புகளை 2016ஆம் ஆண்டு மொத்தமாக “ஹெரிடேஜ் ஃபுட்” நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். தற்போது சில்லறை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவது பற்றி திட்டமிட்டுவரும் அம்பானி, மீண்டும் பால் துறைக்குள் அடியெடுப்பதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

இந்தியாவின் பால் பொருட்கள் துறையின் சந்தை, ஒவ்வொரு ஆண்டும் ஆறு சதவிகிதம் அதிகரித்துவருகிறது ஆகவே ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி தொலைத்தொடர்புத் துறையில் ஏகபோக நிறுவனமாக வளர்ந்தது போல, பால் பொருட்கள் சந்தையையும் ஆக்கிரமிக்கத் துடிக்கிறார் அம்பானி.

பால் உற்பத்தித் துறையில் எவ்வகையான கட்டமைப்புகளையும் கொண்டிராத அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை, 28 மாநிலங்களின் 222 மாவட்டங்களில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 903 கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய பால் உற்பத்திக் கட்டமைப்பைக் கொண்டுள்ள அமுல் நிறுவனத்தில் நுழைப்பதன் மூலம் அம்பானியை பால் துறையில் ஏகபோகமாக உயர்த்துவதற்கு திட்டமிடுகிறது மோடி அரசு.

அம்பானியின் இந்த ஏகபோக நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் அமுல் நிறுவனம் விரிவாக்கப்படுகிறது. எனவே, ஆவின் நிறுவனம் ஊழலும் முறைகேடுகளும் கொண்ட நிறுவனம்தானே அமுல் போட்டிக்கு வந்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்குமே என்று நாம் கருத முடியாது. விசயத்தை அரசியல் ரீதியாக அணுகாமல் பொருளாதாரவாதக் கண்ணோட்டத்தில் இருந்து பரிசீலித்தால், அது ஒன்றிய மோடி அரசின் சதித்திட்டங்களுக்கு பலியாவதாகவே முடியும். அது அதானியின் ஏகபோக வெறிக்கு வழிவிடுவதிலேயே போய்முடியும்.

சிவராமன்
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க