25.05.2023

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை
அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டின் ஆவின் நிறுவனமானது சில குறைபாடுகளுடன் இருந்தபோதிலும் தமிழ்நாட்டு மக்களின் பால் தேவையை பெருமளவு நிறைவேற்றி செய்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு ஆவின் பாலையே மருத்துவர்கள் இன்றளவும் பரிந்துரை செய்து வருகிறார்கள். ஆவின் நிறுவனமானது பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்வது தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த முரண்பாட்டை ஊதிப் பெருக்கி பாரதிய ஜனதா கட்சியும் சங்கப் பரிவாரங்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இச்சூழலை பயன்படுத்திக் கொண்டு  குஜராத்தின் அமுல் நிறுவனமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

படிக்க : ஒன்றிய அரசின் 12 துறைகளில் கார்ப்பரேட் நிபுணர்களை நியமிக்க முடிவு!

இதுகுறித்து தமிழ்நாட்டு அரசுக்கு எவ்வித முறையான தகவலும் கொடுக்காமல் திருட்டுத்தனமாக இந்த முயற்சியை குஜராத்தின் அமுல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்பதே உண்மை. குஜராத்தின் அமுல் நிறுவனம் தனிப்பட்ட முறையில் இதை மேற்கொள்ளவில்லை மாறாக ஒன்றிய அரசின் துணையோடு இப்படிப்பட்ட ஊடுருவலை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே, கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனத்தை ஒழித்துக்கட்ட மோடி அரசு செய்த சதிகளை அம்மக்கள் விரட்டி அடித்தனர்.

இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் வளர பால் கொள்முதல்-ஐ அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு பால் தட்டுப்பாட்டை ஏற்படுத்த செய்யும். படிப்படியாக ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டி நாளை தமிழ்நாடு பாலுக்கு கையேந்த வேண்டிய சூழலும் உருவாகும்.

அது மட்டுமல்லாது, மோடி அரசின் இச்செயல்பாடு மாநில அரசின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவும் நாம் கருத வேண்டி உள்ளது.

தமிழரின் பெருமை என்று கூறிக்கொண்டு புதியதாக திறக்க உள்ள நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பது என்பதெல்லாம் ஏமாற்று. தமிழ்நாட்டின் பெருமைகளை ஒழித்துக் கட்டுவதுதான் மோடி அரசின் உண்மையான முகம். ஆவின் நிறுவனத்துக்கு எதிரான மோடியின் செயல்பாடு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

படிக்க : சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம்!

குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் பாசிச மோடி அரசின் சதியை தமிழ்நாட்டு மக்கள் முறியடிக்க வேண்டும் இன்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க