ஒன்றிய அரசின் 12 துறைகளில் கார்ப்பரேட் நிபுணர்களை நியமிக்க முடிவு!

இது போன்ற தனியார் நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் வல்லுநர்களை ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நியமிப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தேவையான கார்ப்ரேட் நல திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்களே தவிர இவர்கள் கூறும்படியான அரசு பொதுத்துறையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை.

ன்றிய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் அவ்வப்போது ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவன நிபுணர்களை அனுமதித்து வந்த மோடி அரசு, தற்போது மேலும் 12 துறைகளில் கார்ப்ரேட் தனியார் நிறுவன நிபுணர்களை நேரடி இயக்குநர்களாகவும், துணை செயலாளர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் திட்டங்களை சரியாக அமல்படுத்த ஒவ்வொரு துறையிலும் துறைசார்ந்த உயர் பொறுப்புகளில், சிறந்த நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று கூறும் பா.ஜ.க அரசு, அதற்காக அரசு துறைகளில் பணி அமர்த்துவதற்கு பின்பற்றப்படும் சட்ட விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள உள்ளது. மேலும் தொழில்நுட்ப நிபுணர்கள் வல்லுனர்களுக்கான காலி பணியிடங்களை உடனே கண்டறியும் படி அந்தந்த துறைசார்ந்த அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

அந்த வகையில் மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களான வருவாய்த்துறை, நிதித்துறை, பொருளாதாரத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்துறை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை, கப்பல் போக்குவரத்து துறை, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை விமானத்துறை, வர்த்தகத்துறை மரபுசாரா எரிசக்தி துறை உள்ளிட்ட துறைகளில் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கவும் அரசின் திட்டங்களை சரியாக செயல்படுத்தவும் இவர்கள் மிகுந்த உதவியாய் இருப்பார்கள் என அறிவித்திருக்கிறது ஒன்றிய அரசு.

இந்த அறிவிப்பானது சட்ட விரோத செயல் என்றும்; இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதிக் கோட்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதால் இவற்றை எதிர்த்து அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் சமூகநீதிக்காக போராடும் அனைத்து மாநில முதல்வர்களும் தங்களுடைய வலுவான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


படிக்க: விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய அமைச்சகங்களிலும் ஒன்றிய அரசு பணியிலும் செயலாற்றி வரும் பணியாளர்களையும் அந்தத் துறைகளின் தலைவர்களாக பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அவர்களின் திறமைகளையும் கொச்சைப்படுத்தும் செயல் இது என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட பிரிவினர் ஒன்றிய அரசின் உயர்பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது என இதுபோன்ற நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது என்றும் அம்பேத்கரிய பெரியாரிய அமைப்புகளும் கட்சிகளும் கூறுகின்றன. இப்படி ஒவ்வொருவரும் இந்நடவடிக்கைக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.

இப்படி இவர்கள் கூறும் அனைத்தையும் கடந்து நாம் பார்க்க வேண்டியது இந்த அரசுக்கட்டமைப்பு முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலமே தங்கள் விருப்பமான இந்துராஷ்டிரத்தை அமைக்க முடியும் என்று திட்டமிட்டு இதுபோன்று நடவடிக்கைகளில் காவி கும்பல் ஈடுபடுகின்றனர் என்பதையே. மேலும் ஒவ்வொரு துறைகளிலும் கொள்கை முடிவு எடுக்கும் உயர் அதிகாரிகள் பொறுப்பில் அமர்ந்து கொண்டு இந்துத்துவ கருத்துக்கள் அடிப்படையிலான திட்டங்களை வகுத்து அவற்றை சட்டபூர்வமாக அமுல்படுத்த முயல்கிறது ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல். அவர்களுக்கு தேவையான பாதையை அமைத்து கொடுப்பதுதான் மோடி அரசின் முதன்மையான வேலையாகவும் உள்ளது.

மற்றொரு பக்கம் தங்களுடைய கார்ப்ரேட் நண்பர்கள் கொள்ளையடிக்க வசதியாக இதுபோன்ற தனியார் நிறுவன நிபுணர்களை ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் நியமனம் செய்கிறார் மோடி.


படிக்க: பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!


அண்மையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக மல்லிகா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவி. தமிழகத்தைச் சேர்ந்த டிராக்டர் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் (டாஃபே) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர்

தனியார் துறையில் தலைவராக இருந்த இவரைத்தான் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவராக நியமித்து முதல் முறையாக இத்திட்டத்தை அமல்படுத்தியது ஒன்றிய அரசு.

இது போன்ற தனியார் நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் வல்லுநர்களை ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நியமிப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தேவையான கார்ப்ரேட் நல திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்களே தவிர இவர்கள் கூறும்படியான அரசு பொதுத்துறையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை.மேலும் அவர்கள் கார்ப்ரேட் திட்டங்களை வகுப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதால் அரசு நிறுவனங்களை சிறிது சிறிதாக தனியார் நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு பின் முழுவதுமாக தனியார்மயமாக்கி விடுவார்கள். இதைத்தான் மோடி அரசும் வேண்டுகிறது. அதற்காகவே தேசிய பணமயமாக்கல் திட்டம், அரசு தனியார் கூட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்

இவர்களின் இந்துமதவெறி காவிக்கும்பலின் கனவை நிறைவேற்றவும் தனியார் கார்ப்ரேட் முதலாளிகள் பொதுத்துறையை சூறையாடவும் இதுபோன்ற பல்வேறு வகையான சட்ட திட்டங்களை செயல்படுத்தி வரும் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலை விரட்டியடிப்போம். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க உழைக்கும் மக்களாய் ஒன்றிணைவோம்


சித்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க