அமுல் மூலம் ஆவினை அழிக்கத்துடிக்கும் மோடி அரசு – பின்னணியில் அம்பானி!

சந்தையை கைப்பற்ற அம்பானி ஒவ்வொரு மாநில அரசுகளிடமும் போய் நிற்க வேண்டும் அல்லவா? அதனால்தான் மோடி அரசு மாநில கூட்டுறவு நிறுவனங்களை அழித்து, அமுல் என்ற ஒற்றை தேசிய கூட்டுறவு நிறுவனத்தை கட்டியெழுப்ப விழைகிறது.

0

குஜராத் மாநில அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாகக் கூட்டுறவு மனப்பாண்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.


படிக்க: தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்


தமிழ்நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது ஆவின். இது தமிழ்நாட்டு பால் உற்பத்தியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனம் ஆகும். இதுவரை எந்தவொரு மாநில கூட்டுறவு நிறுவனமும் மற்ற மாநில கூட்டுறவு சங்கங்களை ஒழித்து, சந்தையை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை.

ஆனால் அமுல் தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அமுல் தன்னுடைய மாநில எல்லையைத் தாண்டி பிற மாநிலங்களுக்குள் ஊடுருவி, மற்ற மாநில கூட்டுறவு சங்கங்களை ஒழித்துக்கட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊடுருவலை மோடி அரசின் துணையோடு தான் மேற்கொண்டு வருகிறது.

அமுலை ஆட்டுவிக்கும் மோடி அரசு!

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவின் கூட்டுறவு நிறுவனம், கிராமப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மாவட்ட அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆகிய மூன்றடுக்கு அமைப்பின் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 9,673 கிராமப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 4.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகளாலும் நிர்வாக குளறுபடிகளாலும் ஆவின் நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கிராமப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் படிப்படியாக கலைந்து வருகின்றன. பால் கொள்முதல் திறனும் குறைந்து வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை பல ஒன்றியங்களில் 90 நாள்களைக் கடந்தும் வழங்கப்படாத அவலநிலையே நிலவுகிறது. மேலும் ஆரோக்கியா, ஹட்சன் போன்ற தனியார் நிறுவனங்கள், ஆவினை விட ஒரு லிட்டர் பாலுக்கு அதிக விலையையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிலுவைத் தொகையை ஒப்படைப்பதால் அந்நிறுவனங்களை நோக்கி பால் உற்பத்தியாளர்கள் செல்கின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்குள் நுழைகிறது. அதற்கு ஏற்றாற்போல சட்டத் திருத்தங்களை மேற்கொள்கிறது மோடி அரசு. இதற்கு முன்னர் அமுல் நிறுவனம், தமிழகத்தில் ஜஸ்கீரிம் போன்ற பால் சார்ந்த பொருட்களை மட்டும் விற்பனை செய்தது; பால் கொள்முதலில் ஈடுபடவில்லை. ஆனால் மோடி அரசின் சட்டத்திருத்தற்குப் பின்னால் தான் பால் கொள்முதலில் நுழைய விழைகிறது.


படிக்க: அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !


கடந்த 2022 டிசம்பரில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் (Multi State Co-operative Society Act) ஒன்றிய அரசு, கூட்டுறவு சங்கங்களின் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் சில திருத்தங்களை செய்துள்ளது. இது மாநில அரசுகளை எந்த அதிகாரமும் அற்ற இந்துராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாற்றும் மோடி அரசின் திட்டத்தின் ஒரு அங்கம் ஆகும்.

இரண்டு மாநில கூட்டுறவு சங்கங்களை இணைப்பதற்கு கூட்டுறவு சங்க நிர்வாகிகளில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் இணைத்துக் கொள்ளலாம் என்றும், இனிமேல் கூட்டுறவு தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு தான் கூட்டுறவு சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளை நியமிக்கும் என்றும் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அமுல் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் கர்நாடகா மாநிலத்தின் நந்தினி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது கர்நாடக மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக பின்வாங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆவின், நந்தினி போன்ற எல்லா மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்டி, பால் கொள்முதல் மற்றும் விநியோகத்தை அமுல் கூட்டுறவு நிறுவனத்தின் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது மோடி அரசு.

எனவே அமுல் கூட்டுறவு நிறுவனம் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதை, ஏற்கெனவே தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன; கூடுதலாக அமுல் நிறுவனம் வருகிறது என்று மட்டும் கருதக் கூடாது. இது எல்லா மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களை அழிக்கத் துடிக்கும் மோடி அரசின் நோக்கத்தை பார்க்க மறுப்பதாகும்.

எல்லாம் அம்பானிக்காகவே!

தேசிய பணமாக்கல் கொள்கையின் மூலம் நாட்டின் பொதுச்சொத்துகளை எல்லாம் விற்று, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து வரும் மோடி அரசு அமுல் நிறுவனத்தை ஏகபோகமாக வளர்ப்பது கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கத்தான். குறிப்பாக கூறவேண்டுமென்றால், அம்பானியின் நலனுக்காகத்தான். 13 லட்சம் கோடி மதிப்பு கொண்ட இந்திய பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையை அம்பானிக்கு தூக்கி கொடுக்கத்தான்.

சந்தையை கைப்பற்ற அம்பானி ஒவ்வொரு மாநில அரசுகளிடமும் போய் நிற்க வேண்டும் அல்லவா? அதனால்தான் மோடி அரசு மாநில கூட்டுறவு நிறுவனங்களை அழித்து, அமுல் என்ற ஒற்றை தேசிய கூட்டுறவு நிறுவனத்தை கட்டியெழுப்ப விழைகிறது.


படிக்க: பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !


மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு வலுவான கட்டமைப்பு தேவை. அத்தகைய கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதற்கு திராணியுள்ள நிறுவனம் அமுல். இந்தியாவின் பால் உற்பத்தியில் முதலிடத்திலும், உலக அளவில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

மோடி அரசு, ஒருபுறம் அமுல் நிறுவனத்தின் மூலம் மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் சட்டதிருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் (National Dairy Development Board) மாநில கூட்டுறவு நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்கான அதிகாரம் கொண்டது.

இதன் இயக்குநர்களில் ஒருவர் தனியார் நிறுவனங்களை சார்ந்தவர் இடம்பெறலாம் என்றும், கூட்டுறவு சங்க அமைப்பு முறையோடு கூடுதலாக வேறு நிறுவன அமைப்பு முறைகளை கொண்டுவரலாம் என்றும், மாட்டுத் தீவன உற்பத்தி, பால் குறித்து ஆய்வு செய்யக்கூடிய துணை நிறுவனங்களின் பங்குகளை ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் விற்கலாம் என்றும் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

இந்தியாவின் பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையைக் கைப்பற்றுவதற்காக பல ஆண்டுகளாக அம்பானி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு சட்டத்தை திருத்திய பிறகு, ஐஸ்கீரிம் போன்ற பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் கூட்டுறவு நிறுவனத்தின் உயர்பதவிகளில் 41 ஆண்டுகள் பணிபுரிந்த ஆர்.எஸ்.சோதி அமுல் நிறுவனத்தில் இருந்து பதவி விலகி அம்பானி நிறுவனத்தில் இணைந்துள்ளார். இவர் அமுல் நிறுவனத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவை அம்பானி நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையை குறி வைத்து வேலை செய்வதற்கான துலக்கமான சான்றுகளாகும்.

மோடி ஆட்சியே அம்பானி, அதானி போன்ற பார்ப்பன, பனியா, குஜராத்தி, மார்வாடி, சேட்டுக்களின் ஆட்சி தான். இவர்களே எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்; ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற்றப்படுகின்றனர். எனவே இந்திய பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையை அம்பானி கைப்பற்றுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வெளிநாட்டு பால் பொருட்கள் சந்தையைக் கைப்பற்றுவதற்கான நோக்கமும் அம்பானியிடம் உள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. எனவே இந்திய பால் பொருட்கள் உற்பத்தி வெளிநாட்டு சந்தையை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற திட்டத்திலும் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

000

இந்தியா முழுவதும் உள்ள மாநில கூட்டுறவு நிறுவனங்கள், அந்தந்த மாநில விவசாயிகளான பால் உற்பத்தியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது ஆகும். தமிழகத்தில் மட்டும் ஆவின் நிறுவனத்தை 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்து உள்ளனர். மேலும் இலாபமற்ற முறையில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தியவாசிய உணவுப் பொருளான பால், பெரும்பான்மையான மக்களை சென்று சேர்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்திய பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் சங்கிலியை அம்பானி முழுமையாக கைப்பற்றும் போது, மாநில கூட்டுறவு நிறுவனங்கள் ஒழித்துக் கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்பு கொண்ட தேசிய பால்வள மேம்பாட்டு ஆணையத்தின் துணை நிறுவனங்களான மதர் டெய்ரி போன்ற நிறுவனங்கள் அம்பானியால் விழுங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அடிமாட்டு விலைக்கு பாலை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். உழைக்கும் மக்கள் வாங்க முடியாத அளவுக்கு பால் விலை உயர்த்தப்படும்; பல பிஞ்சுக் குழந்தைகளின் அத்தியாவசிய ஊட்டச்சத்து பொருளான பால் பல குழந்தைகளிடம் இருந்து அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகும்.

சுருக்கமாக கூறினால், இந்தியா ஒரு பேரழிவை எதிர்நோக்கி இருக்கிறது. எனவே இந்த உண்மைகளை நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மோடி அரசின் இத்தகைய பாசிச, நாசகார சதித் திட்டத்திற்கு எதிராக, மாநிலங்களைக் கடந்து விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தால் பாதிக்கப்படும் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டடியமைக்க வேண்டும்.


பிரவீன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க