மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு மாநில அரசுகளின் அனுமதி பெறாமல் மாற்றும் வகையில், இந்திய ஆட்சிப் பணி விதி (1954) விதி எண் 6-இல் திருத்தம் மேற்கொள்வது குறித்து மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளது பாசிச மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு.

மாநில உரிமை குறித்து குறைந்தபட்சமாகவாவது பேசும் மாநில அரசுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களும், எடப்பாடியை ஒத்த பாஜக அடிமைகள் ஆளும் மாநிலங்களும் இதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

நமது நாட்டில் நீடிப்பது இரட்டை ஆட்சிமுறை. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டங்களை இயற்றும் அதிகாரம் பெற்றிருந்தாலும், அதனை அமல்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ,பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட ஆட்சிப் பணி அதிகாரிகள் தான். இந்த அதிகாரிகள் யாரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை.

படிக்க:

கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவேளை நல்லவர்களாக இருந்து மக்களுக்குச் சாதகமான சட்டங்களை இயற்றினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் இடத்தில் இருப்பவர்களான இந்த அதிகாரிகளின் துணையின்றி அவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது கடினம். அவ்வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த அரசுக் கட்டமைப்பில் இந்த ஆட்சிப் பணி அதிகாரிகளுடன் கூட்டாக இணைந்துதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் ஆட்சியையும் ஊழலையும் நடத்தி வருகின்றனர். அது ஒன்றிய அரசானாலும் சரி, மாநில அரசானாலும் சரி, இதுதான் எதார்த்த நடைமுறை

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ஆட்சிப் பணி அதிகாரிகள் தேர்வு ஆணையங்கள் இருக்கும் நிலையில், ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் செயல்பாடு குறித்த நடைமுறை விதிகள் கடந்த 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன.

பாசிச பாஜக ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பிறகு, தமது பாசிச நோக்கத்திற்கு உகந்த வகையில் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான ஆட்சியியல் மற்றும் அரசியல் நடைமுறைகளை எல்லாம் சட்டவிரோதமாக மீறி வந்திருக்கிறது. இந்த சட்டவிரோத விதிமீறல்கள் பலவற்றை அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற இருப்பதாக கூறிக்கொள்ளும் உச்சநீதிமன்றம் கண்டும் காணாமலும் கடந்து சென்றுள்ளது.

தற்போது தமது விதிமீறல்களுக்கெல்லாம் சட்ட முலாம் பூசும் வகையில், நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டப்பூர்வமானதாக மாற்றிவருகிறது, ஒன்றிய பாஜக அரசு. அவ்வகையில், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றும் நடைமுறை விதிகளில் திருத்தத்தைக் கொண்டு வரப் போவதாக மோடி அரசு அறிவித்திருக்கிறது.

இதற்காக, இந்திய ஆட்சிப் பணி விதி எண் 6-ல் இந்த திருத்தத்தைக் கொண்டுவர இருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் நடைமுறையின்படி மாநில அரசின் கீழ் செயல்படும் ஆட்சிப் பணி அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிக்கு எடுத்துக் கொள்வதற்கு மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது விதிமுறை.

தற்போது விதி எண் 6-ல் மேற்கொள்ளப்படும் திருத்தமானது, மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றிய அரசுப் பணிக்கு ஆட்சிப் பணி அதிகாரிகளை மாற்றிக் கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

சொல்லிக் கொள்ளப்படும் கூட்டாட்சியின் கீழ் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் ஏதேனும் முரண் இருக்கும் பட்சத்தில் மாநில அரசுகளின் கீழ் செயல்படும் ஆட்சிப் பணி அதிகாரிகளின் துணை கொண்டு மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலையை ஒன்றிய அரசால் செய்ய முடியும். அதற்கு நல்ல உதாரணம் இராஜஸ்தான் மாநிலம் தான்.

அங்கு பாஜக ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் முதல்வர் தமது நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.

அந்த வகையில், மாநில அரசின் செயல்பாட்டில் அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஒன்றிய அரசில் கிட்டத்தட்ட எட்டாண்டுகளாக அமர்ந்து கொண்டு படிப்படியாக ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி பாசிச இந்துராஷ்டிரத்தை அமைக்கக் காத்திருக்கும் பாசிச பாஜக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு தனது நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்துவராத மாநில அரசுகளை “ஒரு வழிக்கு” கொண்டு வரும் நோக்கத்தில் மாநில அரசு செயல்பாடுகளில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

படிக்க :

கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE 

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

தமது இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத ஆட்சிப் பணி அதிகாரிகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஒன்றிய அரசுப் பணியில் இணைத்துப் பழிவாங்கும் நோக்கோடு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது.

இதன் மூலம், மாநில அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஒன்றிய அரசில் ஆட்சி செய்யும் கட்சியின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கும் வகையில் தமக்குப் பாதகமாக செயல்பட மாட்டார்கள் என்ற அடிப்படையில் தான் இந்த விதிகள் திருத்தத்தை மேற்கொள்ள விழைகிறது ஒன்றிய அரசு.

இதற்கும் வழக்கம் போல வாய்மூடி மவுனமாக இருக்கிறது உச்சநீதிமன்றம். மாநில அரசுகளில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், இராஜஸ்தான், சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மட்டுமே இதுவரையில் இந்த விதி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

நிலவும் போலி ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டிவிட்டு, பிற்போக்கான சாதிய சனாதன தர்மத்தின் அடிப்படையிலான கார்ப்பரேட் சுரண்டலை தீவிரப்படுத்தும் இந்து ராஷ்டிரத்தை நோக்கி ஒட்டுமொத்த நாட்டையும் இழுத்துச் செல்லும் பாசிசக் கும்பலின் இத்தகைய முயற்சிகளை ஒன்றிணைந்து வீதியிலிறங்கிப் போராடி முறியடிக்க வேண்டிய நேரம் இது.


கர்ணன்
செய்தி ஆதாரம் :
தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க