டெல்லியிலுள்ள பழைய ராஜேந்திரா நகர், படேல் நகர், கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளில் நுழைவுத் தேர்வுகளுக்கான எண்ணற்ற தனியார் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ராஜேந்திரா நகரில் செயல்பட்டு வந்த ராவ் ஐ.ஏ.எஸ் அகாடமியில், ஜூலை 27 அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் கட்டிடத்தின் அடித்தளத்தில் இயங்கிய நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மூன்று ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ் அகாடமி அடித்தளப் பகுதியில் உள்ள நூலகத்தில் 17 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது, அதேநேரத்தில் வெள்ள நீரூம் நூலகத்திற்குள் வரத் தொடங்கியுள்ளது. நூலகத்தில் உள்ள பயோமெட்ரிக் கேட்டை அடைத்தாலும், கேட் பழுதடைந்து விரைவாக நூலகத்திற்குள் கிட்டத்தட்ட பத்து முதல் 12 அடிவரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கிருந்த 17 மாணவர்களும் படிக்கட்டுகள் மூலமாக மேலே ஏறி வர முயன்றுள்ளனர். மூன்று மாணவர்கள் மீண்டு வர முடியாமல் உள்ளேயே உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மற்ற 14 பேரையும் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில், உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி, கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிவின் தல்வின் ஆகியோர் அடங்குவர். இந்த மரணம் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் ராவ் பயிற்சி மையத்திடம் கேட்டதற்கு எந்த தகவலும் முறையாக தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். மாணவர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து பயிற்சியாளர் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தின்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2021 ஆம் ஆண்டில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்கு எம்.சி.டி விதிமுறையின் படி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள பகுதியை சேமிப்பு கிடங்கிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த மாத தொடக்கத்தில் தான் பயிற்சி மையத்திற்கான தடையில்லா சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குப் பின் விசாரணை மேற்கொண்டதில் அடித்தளப் பகுதியில் நூலகம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. இதேபோல், அப்பகுதியை சுற்றியுள்ள 13 பயிற்சி மையங்கள் சட்டவிரோதமாக இயங்கியதை கண்டறிந்து சீல் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மேயர் கூறியுள்ளார்.
பயிற்சி மையங்கள் கட்டித்தின் அடித்தளப் பகுதியை வகுப்பு நடத்தப் பயன்படுத்துவது முதல் முறை அல்ல. 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. வணிக வளாகங்களில் விதிமுறையை மீறி சட்டவிரோதமாக பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், அதிகாரிகள் தனியார் நிறுவனப் பயிற்சி மையங்களிடம் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்பயிற்சி மையங்கள் இயங்குவதற்கான சான்றிதழ்களையும் கொடுத்து வருகின்றனர்.
படிக்க: கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?
இம்மரணங்களை கண்டித்து அருகிலுள்ள பயிற்சி மையங்களை சேர்ந்த மாணவர்கள் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கேட்டும், டெல்லி மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்பகுதியில் எப்போதும் மழை பெய்த உடனேயே வெள்ளம் சூழ்ந்துவிடுவதாக போராடும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏ.என்.ஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த மாணவர் ஒருவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறு மழைக்கே இப்பகுதியில் வெள்ளம் சூழ்கிறது. இயற்கைப் பேரிடர் எப்போதாவது தான் ஏற்படும், ஆனால் இங்கு எப்போதும் நிகழ்கிறது. ஆறு நாட்களுக்கு முன்பு கூட படேல் நகரில் மின்சாரம் தாக்கி ஒரு மாணவர் உயிரிழந்தார்” என்றார். மற்றொரு மாணவர் கூறுகையில், 80% நூலகங்கள் அடித்தளத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்தனர். அதில், மாணவி ஒருவர் கூறுகையில், “சம்பவம் நடந்த பகுதியில் எண்ணற்ற பயிற்சி மையங்கள் உள்ளன. குறிப்பாக, குடிமைப் பணிகள், சி.ஏ., வங்கித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்கள் அதிகம். ஆனால், அங்கு கட்டுமான அமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளது” என்றார்.
மூன்று மாணவர்கள் உயிரிழந்த பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த நபர் கூறுகையில், “சிறிய மழை பெய்தாலே முழங்கால் அளவு தண்ணீர் தேங்கிவிடும். குடியிருப்புப் பகுதி என்பதால் பெரும்பாலும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கவனிப்பு இங்கு இருக்காது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிப்பதால், தேர்தல் நேரங்களில் கூட அரசியல்வாதிகள் அங்கு வர மாட்டார்கள்” என்கிறார்.
மேலும், பெரும்பாலானப் பயிற்சி மையங்கள் ஓராண்டுக்கு சுமார் 1.5 முதல் 1.8 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான மையங்களில் வாகன நிறுத்துமிடம் கூட இருக்காது என்கிறார்.
படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!
சென்னையை சேர்ந்த மற்றொரு மாணவர் கூறுகையில், “அப்பகுதியில் மின்சார வயர்களை பார்த்தாலே அது அவ்வளவு ஆபத்தானதாகத் தெரியும். பயிற்சி மையங்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள் தங்கும் வீடுகளும் மிக மோசமான நிலையிலேயே இருக்கும். பெரும்பாலும் 400 சதுர அடி அறையில் ‘பங்க் படுக்கைகள்’ அமைக்கப்பட்ட வடிவத்தில் தான் அறைகள் இருக்கும். அதில் 4-6 பேர் தங்க வேண்டும். அறையில் போதிய வெளிச்சம் கூட இருக்காது. தீயணைக்கும் கருவி, அவசர வழி இருக்காது. கட்டிடங்கள் மிக நெருக்கமாக இருக்கும். ஆனால், அதற்கு 10,000 முதல் 18,000 வரை வாடகைத் தர வேண்டும்” என்கிறார்.
இதுமட்டுமின்றி, பயிற்சி மையங்களில் இணைய நூலக வசதி எனக் கூறி நாற்காலி, மேசை மட்டும் அமைத்து, அதைப் பயன்படுத்துவதற்கு, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு தொகை என மாணவர்களிடம் வசூல் செய்வதாகவும் கூறுகிறார்.
ஆனால், தனியார் பயிற்சி மையங்கள் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு முறையான வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் தனது கொள்ளை லாபவெறிக்கு மாணவர்களை சித்திரவதை செய்து வருகின்றன. பல பயிற்சி மையங்களில் மன உளைச்சலால் தற்கொலைகள், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுவதால் தற்கொலைகள் என தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.
கல்வி கார்ப்பரேட்மயமாக்கப்படுவதன் அங்கம் தான் பயிற்சி மையங்களின் நிகழும் இதுபோன்ற படுகொலைகள். நீட் தேர்வில் தொடங்கி பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்காகப் பயிலும் மாணவர்களுக்கு நிகழும் மரணங்களுக்கு, அரசின் கல்வி கார்ப்பரேட்மயம் எனும் தனியார்மய லாபவெறிக் கொள்கையே காரணமாகும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube