கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?

ஒரு மாணவனின் தனித்திறனை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமது கல்விமுறை சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில்லை. சமூக விழுமியங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. கல்வி என்பது வேலை, ஊதியம், சமூக அந்தஸ்து, கட்டற்ற நுகர்வு என்ற திசையில் தான் இந்தியாவில் இருக்கிறது.

ந்தவொரு மனிதனும் இறப்பை தேர்ந்தெடுப்பதில்லை. தற்கொலை என்பது முழுக்க முழுக்க ஒருவர் வாழும் சூழ்நிலைகளின் தாக்கத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. தற்கொலையை தனிப்பட்ட மனநலம் சார்ந்த பிரச்சினையாக அல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் சூழல்களிலிருந்து புரிந்துகொள்ள முயிற்சிக்க வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா (Kota) என்னும் நகரத்தில் இயங்கி வரும் பயிற்சி மையங்களில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இந்த தொடர் தற்கொலைகளை தடுக்க கோட்டா நகரின் நிர்வாகம், விடுதிகளின் மின்விசிறிகளுக்கு இரும்பு கம்பி வலை (Grills) போடவும், ஸ்பிரிங் (Spring) பொருத்தப்பட்ட மின்விசிறிகளை உபயோகிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது இந்த பயிற்சி மையங்களுக்கு லாபவெறியை தாண்டி எந்த நோக்கமும் இல்லை என்ற வக்கிர புத்தியை காட்டுவதாகவே உள்ளது.

கோட்டாவில்  மாணவர்களின் தொடர் தற்கொலைகள் இந்தாண்டு மட்டும் புதிதாக நடக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில், கோட்டா பயிற்சி மையங்களில் இதுவரை 100 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். ஆனாலும், போலீஸிடம் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டி,  தற்கொலை முயற்சி செய்த மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் இல்லை. அது ஆயிரத்தை தாண்டும் என்று கல்வியாளர்கள் சிலர் கூறுகின்றனர்.


படிக்க: கோட்டா – நவீன வதைமுகாம்!


கோட்டா நகரில் நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பயிற்சி மையங்களில் படிக்க வருகின்றனர். கோட்டா மாவட்ட நிர்வாகத்தின் கணக்கீடு படி, 2,25,000 மாணவர்கள் 4000-திற்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். பயிற்சி கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய்.50,000 முதல் 2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் மட்டுமே, ஆண்டிற்கு 5000 கோடி ரூபாய் புழங்கும் இடமாக கோட்டா நகரம் உள்ளது. மேலும், விடுதிகள் மூலமாக சில நூறு கோடிகள் வரை வருவாய் ஈட்டுகிறது.

பொதுவாக பயிற்சி மையங்களில் மாணவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவது வழக்கம். கோட்டாவில் அது உச்சத்தை அடைந்திருக்கிறது. ஏனெனில், கோட்டாவின் பயிற்சி மையங்களின் வருவாய்க்கு ஆதாரமாக இருப்பது, “கோட்டா பயிற்சி மையங்களில் படித்தால் நிச்சயம் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்ற பிம்பம் தான்”. அதை தக்கவைத்துக் கொள்ள மாணவர்களை மிக மோசமான முறையில் நடத்துகின்றனர்.

ஒவ்வொரு முறையும்  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களிடம் வெளிப்படையான பாகுபாடுகள் காட்டப்படும்போது, மாணவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை வரும் வகையில் தண்டிக்கப்படுகிறார்கள். இதனால், தனிமையுணர்வு, போதைப் பழக்கம், தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் வருகிறது. இது இறுதியாக மாணவர்களை தற்கொலைக்கு தள்ளுகிறது.

தற்கொலை செய்த மாணவர்கள் அனைவரும் 15 முதல் 22 வயதிற்கு உட்பட்டவர்களே ஆவர். இவர்கள் பெரும்பாலும், உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களின் சிறிய நகரங்களையும், கிராமங்களையும் சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்க பின்னணியைக் சேர்ந்தவர்கள். முடி திருத்தும் தொழிலாளி, சிறு விவசாயிகள், வண்டி கழுவும் தொழில் செய்வோர் போன்ற எளிய உழைக்கும் பின்னணியைச் சேர்த்த பெற்றோர்களின் குழந்தைகள் தான் இந்த கோட்டா பயிற்சி மையங்களில் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.


படிக்க: 10,12 வகுப்பு தேர்வுகளில் தோல்வி: ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை! தேவை மனநல ஆலோசகரா? மாணவர் நலன் அரசா?


இந்த தற்கொலைகள் அனைத்தும் தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது. சமூக மொத்தமும் பரவிவிட்ட சமூக அரசியல் சீரழிவின் வெளிப்பாடு என்றே கருத வேண்டும். இந்த இளம் மாணவர்களின் தற்கொலைக்குக் காரணம் லாபவெறி பிடித்த பயிற்சி மையங்கள் உருவாகி வளர வாய்ப்பளித்த கல்வி தனியார்மயக் கொள்கை தான். பள்ளிக்கல்வியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு, நுழைவுத் தேர்வுகளை தகுதியாக கொண்டு வந்ததற்கும் இந்தக் கொள்கை தான் காரணம்.

ஒரு மாணவனின் தனித்திறனை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமது கல்விமுறை சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில்லை. சமூக விழுமியங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. கல்வி என்பது வேலை, ஊதியம், சமூக அந்தஸ்து, கட்டற்ற நுகர்வு என்ற திசையில் தான் இந்தியாவில் இருக்கிறது. சமூகத்தில் இந்த போக்குகள் இருப்பதற்கு மூலக்காரணமாக உள்ளவை, போட்டி மனப்பான்மையை தூண்டி விடும் முதலாளித்துவ சிந்தனை, நுகர்வு மற்றும் தனிநபர்வெறியை தூண்டிவிடும் ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பு, கூலியடிமை மனோபாவம், பார்ப்பனியம், நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சுய கௌரவம் ஆகியவை தான்.  இவையெல்லாம் அடிப்படையில் களையப்படாமல், வெறும் மனநல ஆலோசனைகள் மூலமாகவோ, அற்பத்தனமான ஸ்ப்ரிங் மின்விசிறிகள் மூலமாகவோ தற்கொலைகளை தடுக்கமுடியாது. பேராசான், தோழர்.மாவோ சொல்வது இதுதான், “நாம் எதிர்ப்பை உரத்த குரலில் தெரிவிக்க வேண்டும், சமூகத்தின் தீமைகள் பற்றி இன்னும் இறக்காத பிற மனிதர்களை எச்சரிக்க வேண்டும், நம் சமூகத்தின் எண்ணற்ற தீமைகளை கண்டிக்க வேண்டும்”. இதுதான் தீர்வுக்கான முதல் படி.

பின் குறிப்பு: இந்த கட்டுரையை எழுத தோழர் மாவோவின் “Miss Chao’s Suicide” என்ற சிறு கட்டுரை உதவியாக இருந்தது.


சீனிச்சாமி



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க