ராஜஸ்தான் மாநிலத்தின் சம்பல் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது கோட்டா எனும் நகரம். நாட்டின் பல மாநிலங்களில் இருந்து ஆண்டிற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (NEET) மற்றும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE) போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக இந்நகரத்தை நோக்கி வருகின்றனர். எனவே இந்நகரம் “இந்தியாவின் தனியார் பயிற்சித் துறையின் மையம்” (Coaching capital of india) என்று அழைக்கப்படுகிறது.
இ்ந்நகரத்தில் கிட்டதட்ட 150-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. மேலும், மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக 3,500-க்கும் மேற்பட்ட விடுதிகள் மற்றும் 22,000-க்கும் மேற்பட்ட ‘கட்டண விடுதிகள்’ (Paying guest hostels) செயல்பட்டு வருகின்றன.
இந்நகரத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்நிகழ்வாக உள்ளது. விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிலிட்டு, மாடியில் இருந்து குதித்து, நஞ்சுண்டு மற்றும் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன், நீட் பயிற்சி வகுப்பில் இரண்டு வருடங்களாக படித்து வந்த உ.பி மாநிலம் பதாயுன் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ்(17) மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
படிக்க : இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!
கடந்த பத்து வருடங்களில் 121 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் 15 பேர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்து பேர். மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, தற்கொலை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு, பயிற்சி நிறுவனங்கள் தங்கள் இலாப நோக்கத்திற்காக, மாணவர்களை மனிதத்தன்மையின்றி மற்றும் ஈவு இரக்கமின்றி நடத்துவதுதான் முக்கிய காரணம். குறுகிய காலங்களில் அதிகப்படியான பாடங்களை படிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளாக்குவதுடன் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக தேர்வுகளையும் நடத்துகிறார்கள். இச்சுமையோடு மாணவர்கள் பள்ளிக்கூட கல்விக்காகவும் படிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் உள்ளார்கள்.
மாணவர்கள் தாங்கள் எப்போதும் ஒவ்வொரு மணி நேரமும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவதாகவும், ஒருநாள் இடைவெளி கூட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பின்னால் தள்ளப்படலாம் என்று அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதன் விளைவாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் படிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளாவதாக கூறுகிறார்கள். விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளில் இருந்து முற்றிலும் விலக்கப்பட்டு இயந்திரத்தை ஒத்த நிலைக்கு, அதாவது அதிகப்படியான நேரம் படிப்பது மற்றும் குறைந்த நேரம் தூங்குவது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது மாணவர்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கு முக்கிய காரணமாகும்.
மேலும், இம்மன அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மாணவர்கள் சிறு வயதுடையவர்களாக இருக்கிறார்கள்; குடும்பத்தை விட்டும் பிரிந்து வாழ்கிறார்கள். இப்பயிற்சி நிறுவனங்களில் பெரும்பாலும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து நான்கு முதல் ஐந்து வருடங்கள் பிரிந்து வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களும் தங்களுடைய தற்கொலைக் குறிப்பில், தற்கொலைகளுக்குக் காரணமாக பயிற்சி நிறுவனங்களை குற்றம் சாட்டியுள்ளனர். அபிஷேக் யாதவ் என்ற மாணவர், படிப்பின் காரணமாக மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார். மற்றொரு மாணவர் பயிற்சி நிறுவனங்களை விரைவில் மூடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளார்.
ஆனால், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள், அதிகப்படியான மாணவர்கள் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் எனக்கூறி, மின்விசிறியில் மாற்றங்களை செய்து வருகின்றன. கம்பிச்சுருள் (Metal spring) பொருத்தப்பட்ட மின்விசிறிகள் அறைகளில் பொருத்தப்பட்டுள்ளன. இது 20 கிலோ வரை மட்டும் தாங்கும் திறன் கொண்டது. எனவே மாணவர்கள் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முடியாது எனக் கூறுகின்றன.
மாணவர்களின் தற்கொலையை தடுப்பதாகக் கூறி, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொள்ளும் மாணவர்களை இழிவுபடுத்துகின்றனர். இந்நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கு, தற்கொலையை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. தாங்களும் தற்கொலைகளை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகத்தான் மின்விசிறியில் மாற்றங்களை கொண்டுவருகின்றனர்.
ராஜஸ்தான் அரசாங்கமும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க சட்டம் இயற்றுவதாக கூறி, நாடகமாடி வருகிறது. பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ராஜஸ்தான் பயிற்சி நிறுவனங்கள் மசோதா – 2023-ஐ (Rajastan Coaching insititute bill – 2023) கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, பாடத்திட்டங்கள் மற்றும் கட்டணங்களை முறைப்படுத்தப்போவதாக கூறியுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் தற்கொலைகளை தங்கள் அதிகாரத்தின் மூலம் தடுக்க முடியாதவர்களா, இனிமேல் தடுக்கபோகிறார்கள்; பயிற்சி நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இம்மசோதா இக்கூட்டுக்கொள்ளையை மேலும் அதிகரிக்குமே தவிர, தற்கொலைகளைத் தடுக்கப்போவதில்லை.
இப்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருந்தாலும், அந்நிறுவனங்களை நோக்கி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஏனென்றால், சமூகத்தில் ஒருபுறம் வேலையின்மை தீவிரமாக அதிகரித்து வருகிறது. மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, விவசாயம் அழிக்கப்படுகிறது; சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நசுக்கப்படுகின்றன; நிரந்தர தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு காண்டிராக்ட் முறை அரசுத்துறைகளில் உட்பட புகுத்தப்படுகிறது.
படிக்க : புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!
மறுபுறமோ, இந்திய அளவிலும் மாநில அளவிலும் உள்ள முன்னணி கல்வி நிலையங்களில் படித்தால் அதிகப்படியான ஊதியத்துடன் வேலை கிடைக்கும்; சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சாரம் ஆளூம் வர்க்கங்களால் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) போன்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் மருத்துவத்தை தங்கள் பிள்ளைகள் படிப்பது எல்லாம் மக்கள் மத்தியில் வரப்பிரசாதமாக கருதப்படுவதெல்லாம் இதன் விளைவுதான்.
அக்கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில, போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. கடன் வாங்கிப் பயிற்சி நிறுவனங்களுக்கு சென்றாவது நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என மக்கள் கருதுகின்றனர். அதற்காக, தங்கள் பிள்ளைகள் பயிற்சியின் மூலம் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என நினைக்கின்றனர். எனவேதான் மக்கள், 20 முதல் 25 லட்சம் வரை செலவழித்து தங்கள் பிள்ளைகளை பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தித் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றன.
மேலும், சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அந்நிறுவனங்களுக்குள்ளேயே போட்டி நிலவுகிறது. இதன் விளைவாக, போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் அல்லது 100 இடங்களுக்குள் தங்கள் நிறுவனத்தின் மாணவர்கள் இடம்பெற வேண்டும் என நினைக்கின்றனர். போட்டி தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களை விளம்பரப்படுத்தி, தங்கள் நிறுவனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அதிகப்படியான கட்டணமும் விதிக்கின்றனர். மாணவர்களுக்கு அதிகப்படியான அழுத்தத்தை தரும் பயிற்சி முறையை நிறுவனமயமாக்கி இருப்பதும், அதன்வெளிப்பாடுதான்.
இப்போட்டி தேர்வுகளும், தனியார் பயிற்சி நிறுவனங்களும் புதிய தாராளவாதக் கொள்கையின் அங்கம்தான். இக்கொள்கையின் விளைவாகத்தான், கோட்டா நகரம் உருவாகியுள்ளது. எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள், வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இக்கொடுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், இந்நகரத்தில் வாழ்வதை விட சாவதேமேல் என முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். இக்கொள்கையை ஒழித்துக்கட்டாத வரை, இதுபோன்ற வதைமுகாம்கள் உருவாவதை தடுக்க முடியாது.
ஆயிஷா