இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!

வழக்கம் போல் இந்த ஆண்டும்‌ மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‌நேரடியாக வாங்கி அதை சரிபார்த்து கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.

இணையவழி என்று மாணவர்களை வஞ்சிக்காமல் மாணவர்களிடம் விண்ணப்பத்தை நேரடியாக  பெற்று உதவி தொகையை வழங்கிடு!

ரசு கலைக் கல்லூரியில் படிக்கும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக  வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை இந்த முறை இணையவழியில்  பூர்த்தி செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இணையவழியில் எப்படி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது, அதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்ற வழிகாட்டுதலை  இதுவரை அரசும் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களுக்கு வழங்கவில்லை. அதற்கான இணைய வசதிகளும் அரசு கல்லூரிகளில்  கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு 4000 முதல் 8000 வரை கல்வி உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 1000 முதல் 2000 வரை கல்வி உதவித் தொகையும்  அரசு சார்பில் மாணவர்களின் வங்கி கணக்கில்  செலுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த ஆண்டு அதற்கான விண்ணப்பத்தை ஜனவரி மாதம்   மாணவர்களிடம் கொடுத்து கைகளால் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒவ்வொரு துறையின் வகுப்பு  ஆசிரியரும் ஜனவரி இறுதியில் வாங்கி கொண்டனர்.

ஆனால் தீடிரென்று  பிப்ரவரி 1 தேதி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  இதுவரை கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட  கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை இணைவழியில் மீண்டும் பதிவு செய்ய வேண்டுமென அரசு சார்பில் சுற்றறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது.  விண்ணப்பத்தை பதிவு செய்து முடிக்க வேண்டிய காலக்கெடுவும், பிப்பிரவரி 1 முதல் 15 வரை, நிர்ணைத்துள்ளது அரசு.

ஆனால் இதுவரையிலும் இணைவழியில் கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்த அனுபவம் இல்லாத மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அரசு சார்பில் இணையவழியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முதலில் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு எண் போட்டவுடன் அந்த தொலைபேசி எண்ணிற்கு வரும்   OTP யை பயன்படுத்தி அடுத்தகட்ட  விண்ணப்பத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஆதார் கார்டு எடுத்த தருணத்தில் பெரும்பாலான மக்களிடம் தொலைபேசி கிடையாது. அப்பா இல்லையென்றால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தொலைபேசி எண் தான் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் முதல் பக்கம் விண்ணப்பத்தை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரே நேரத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய அரசு வழங்கப்பட்ட‌ இணைப்பிற்குள் செல்வதால் தொடர்ச்சியாக இணையவழி பிரச்சினைகளும் வந்து கொண்டிகிறது. TN யுடன் தொடங்கும் புதிய  வருமானவரி சான்றிதழும், கணினி வழியாக பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்களும் அரசு வழங்கிய இணைப்பில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால் அதிகப்படியாக மாணவர்கள் அட்டை வடிவிலான சான்றிதழ் தான் வைத்துள்ளனர் இதனால் எதன் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறதோ அந்த முக்கிய ஆவணத்தை கூட  மாணவர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லிய அரசை  கண்டித்தும் கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியும் 6-2-2022 அன்று திருவாரூர் திரு.வி.க கலை கல்லூரியிலும், 7-2-2023 நன்னிலம் அரசு கல்லூரியிலும், 8-2-2023 திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியிலும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த உதவித் தொகையை பெறக்கூடிய மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள், இவர்கள் இதுவரை  இதுபோன்ற இணையவழிகளை பயன்படுத்தியது கிடையாது அதை பற்றி வழிகாட்டுதலையும் அரசு வழங்காமல் இருக்கிறது. இந்த கல்வி உதவி தொகை மூலம் தான்  ஒரளவு தன்னுடைய கல்லூரி கட்டணத்தையும், தேர்வு செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் மாணவர்கள் சமாளித்து வருகின்றனர். ஆனால் அதை தடுப்பதற்கு அரசு இணையவழி என்ற முறையை கொண்டுவந்துள்ளது.   100 ரூபாய் செலவு செய்து கணினி ‌மையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அளவிற்கு மாணவர்கள் யாரும்  தயாராக இல்லை. 100 ரூபாய் செலவாகும் என்பதால் அந்த விண்ணப்பங்களை பதிவு செய்யாமல் மாணவர்கள் விட்டு விடுகின்றனர்.

படிக்க: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!

முந்தைய ஆண்டுகளில் கைகளால்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நிர்வாகத்தில் நேரடியாக கொடுத்திருந்த போதும் சில மாணவர்களுக்கு இன்றுவரை உதவி தொகை வராமல் இருக்கிறது.  இப்படி இருக்கையில் இணையவழி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் வங்கி கணக்கோடு ஆதார் எண் இணையவில்லை, வாங்கி கணக்கோடு பயன்படுத்தும் தொலைபேசி எண் இணையவில்லை, வருமானவரி சான்றிதழில் சரியாக பதிவேறவில்லை என‌‌ நொண்டி சாக்கு களை எல்லாம் சொல்லி கல்வி உதவி தொகையை நிறுத்தும் வேலையில் இப்போது அரசு இறங்கியுள்ளது.

ஏன் வங்கி கணக்கில் பணம் ஏறவில்லை என‌ கேள்வி எழுப்பி அதை அடுத்தகட்டமாக நகர்த்திச் செல்ல தொடர்ச்சியாக அலை‌ய வேண்டி‌ இருப்பதால்  கிராமப்புற மாணவர்களும் அதை விரும்புவதில்லை.

எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல்  அதற்கான பயிற்சி இல்லாத மாணவர்களிடம் தீடீரென்று இப்படி இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சொல்லுவதானது மாணவர்களை வஞ்சிக்கும் போக்காகும். மாணவர்களிடமே கல்வி உதவி தொகையின் மீது வெறுப்பை ஏற்படுத்தி அடுத்தடுத்த ஆண்டு இந்த கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்; தற்போது விண்ணப்பிக்காமல் இருப்பதே நல்லது என்ற‌ மனநிலையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது அரசு. இப்படி எல்லா மாணவர்களும் சோர்வுற்று யாரும் விண்ணப்பம் பதிவு செய்யாமல் இருந்தால் இந்த கல்வி உதவி தொகை முழுவதும் நிறுத்தும் வேலையை அரசு திட்டம் போட்டு செய்து வருகிறது.

வழக்கம் போல் இந்த ஆண்டும்‌ மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‌நேரடியாக வாங்கி அதை சரிபார்த்து கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு அரசு வழங்கிட வேண்டும்.

பாவெல் கார்க்கி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க