கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

இயக்குநர் சங்கர் மோகன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவரான பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.

0

கேரளாவின் கோட்டயத்தில் கே.ஆர். ​​நாராயணன் நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் விஷுவல் சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் (KR Narayanan National Institute of Visual Science and Arts) திரைப்படக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு, கல்லூரி நிர்வாகத்தால் சாதிய ஒடுக்குமுறையும் பாகுபாடும் காட்டப்படுவதாக குற்றம்சாட்டி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 5, 2022 அன்று துவங்கிய போராட்டம் நேற்றுடன் (ஐனவரி 13, 2023) 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இக்கல்லூரியின் இயக்குநர் சங்கர் மோகன் அங்கு படிக்கும் மாணவர்களையும் பணியாளர்களையும் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயக்குநர் சங்கர் மோகன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவரான பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.


படிக்க : பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!


அடூர் கோபாலகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மோகனை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக புகார் அளித்த பெண் ஊழியர்களை இழிவாகவும் பேசியுள்ளார். மேலும், படிக்க விருப்பம் இருக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

இக்கருத்துகளுக்கு மாணவர்கள் கடமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி கலையரங்கத்திலும் கல்லூரிக்கு வெளியே அரங்குகளை ஏற்பாடு செய்தும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் திரைத்துறை பிரமுகர்களும் பிரபலங்களும் அங்கு நேரடியாக வந்தும் இணைய வழியாகவும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கின்றனர்.

போராடும் மாணவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இதுவரை வகுப்புகளை தொடர்ந்து நடத்தி விட்டோம்; இதற்குமேல் தொடர நிதியுதவி தேவைப்படுகிறது” என்று உதவி கோரியுள்ளனர்.

“இயக்குநர்கள் ஆனந்த காந்தி, ராஜீவ் ராஜி, குர்விந்தர் சிங், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநர் ஜியோ பேபி, நடிகரான சுஜித் சங்கர், சமூக செயற்பாட்டாளர் மைத்ரேயன், ஊராளி இசைக்குழுவினர் என பலரும் கலந்துகொண்டு எங்களுக்கு வகுப்பு எடுத்தனர். அதில் சிலர் எங்கள் அழைப்பை ஏற்று வந்தனர்; சிலர் தாமாகவே முன்வந்தனர்” என்று மாணவர் குழுவின் (students’ council) தலைவர் ஸ்ரீதேவ் சுப்பிரகாஷ் கூறினார்.


படிக்க : தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!


மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வருபவர்களை கல்லூரி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிப்பதில்லை. மாணவர்கள் மற்றும் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரை மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க முடியும் என்று கூறி மாணவர்களுக்கு தடையை ஏற்படுத்தினர். ஆனால் மாணவர்களோ கலையரங்கில் வைத்து வகுப்புகளை ஏற்பாடு செய்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. அத்திரைப்பட விழாவிலேயே மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்து பல திரைத்துறை இயக்குநர்களும் நடிகர்களும் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க