தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!

எங்கள்  கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா T.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள விசைத்தறி, ஒப்பந்த விசைத்தறி நெசவாளர்கள் பல்வேறு தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஜனவரி 2-ம் தேதியில் இருந்து 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர்கள் 50% கூலி உயர்வு, 20% போனஸ், காப்பீடு உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளையும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் முன்னிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விசைத்தறி நெசவாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு 13 சதவீதமும் ஒப்பந்த விசைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு கோரியிருந்தனர். ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆதலால் சப் கலெக்டர் இந்த கூலிஉயர்வை அமல்படுத்த ஒரு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு கூலி உயர்த்தப்படவே இல்லை. 4 வருடத்திற்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படியே கூலி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத முதலாளிகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து மக்களிடம் கேட்டதற்கு:
“இங்கு வசிப்பவர்களுக்கு நெசவுத் தொழிலைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. காலையில் 5 மணிக்கு வேலைக்கு போனால் இரவு 8 மணி வரை வேலை செய்வோம், எட்டு மணி நேர வேலை என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே போகுது ஆனா எங்க கூலி தான் ஏறவே மாட்டேங்குது; நாலு வருஷத்துக்கு முன்ன கொடுத்த கூலி இப்ப கட்டுமா? நாங்கள் ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்ப தானே கூலி கேட்கிறோம்?” என்று சுப்புலாபுர நெசவாளர்கள் தங்கள் கையறுநிலையை வெளிப்படுத்தினர்.


படிக்க: சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !


அதேபோல் கொரோனா காலகட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட  எந்தவித  நிவாரணமும் நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை. நூல் விலை ஏற்றத்தால் ஒரு மாதமாக முடங்கிய போதும் எந்த வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இந்த பகுதியில் 40 முதல் 45  நிறுவனங்கள் இருக்கிறது, மாதத்திற்கு சுமார் ஒரு கோடி வரை வருமானம் வருகிறது. ஆனால் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் நெசவாளர்கள் சேலையில் பாக்கா பிணைப்பதற்கு அடிப்படை கூலி தர வேண்டும் என்றும் கோரிக்கையில் முன்வைக்கின்றனர்.

முதலாளிகளும் கூலி உயர்த்தாததற்கு ஜி.எஸ்.டி, கொரோனா, உபகரணங்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் லாபம் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்களே என்று மக்களிடம் கேட்டதற்கு: “முதலாளிகளுக்கு எப்போதும் கட்டாதுன்னுதான் சொல்லுவாங்க;  முதலாளிகள் வாங்கும் கடையில் தான் நாங்களும் தறிக்கு தேவையான பொருட்களை வாங்குகிறோம். விலைவாசி உயர்வால் நாங்களும்தான் பாதிப்பை அனுபவிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் கூலி உயர்வு கிடைப்பதில்லை” என்று கூறினர்.


படிக்க: கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !


முன்பு 400 ரூபாய் க்கு விற்ற காட்டன் நூல் இன்று 600 ரூபாய் வரை விலையேறியுள்ளது. ஆனால் தொழிலாளிக்கு  மட்டும் கூலி அதே நிலையிலேயே நீடிக்கிறது.

இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திண்டுக்கல்லில் இன்று (9.1.2023) தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆணையர் மற்றும் தேனி மாவட்ட சப்-கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எங்கள்  கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.நெசவாளர்களுக்கு ஆதரவாக ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி நெசவாளர்களும் ஜன.6-ம் தேதியில் இருந்து போராடி வருகின்றனர். உழைத்து உழைத்து உக்கி போன நெசவாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க