10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2025 ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு அன்று விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், அவர்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நொடிந்து போயுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி, கோப்பயன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 14 கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து தொழில் நடந்துவந்த பகுதியில், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பல்வேறு காரணங்களால் தொழில் நசிவு ஏற்பட்டு தற்போது நான்கு சங்கங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

விசைத்தறி தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேலைகளை உற்பத்தி செய்து கொடுத்து கூலியைப் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு கூலி ஒப்பந்தம் முடிந்த பிறகும் புதிய கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால், புதிய கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் போடுவதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் தயாராக இல்லை.


படிக்க: மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் யுஜிசி


குறிப்பாக, விசைத்தறி உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கு இடையே போடப்பட்ட இரண்டாண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் 50 சதவிகித கூலி உயர்வு, 20 சதவிகித போனஸ் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி 2025 ஜனவரி 1 முதல் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும் என்று விசைத்தறித் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து ஜனவரி 1-ஆம் தேதி முதல் விசைத்தறி நெசவாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்போராட்டத்தில் ஆண்டிபட்டியின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நெசவுத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் ஜனவரி 21-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதற்கிடையே விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுடைய உழைப்பிற்கு கிடைக்க வேண்டிய கூலி உயர்வைப் பெறுவதற்குக் கூட ஒவ்வொரு முறையும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து போராட வேண்டிய நிலையிலேயே விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதுமுள்ள விசைத்தறி தொழிலாளர்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தை பெரும்பாலான ஆளும் வர்க்க ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருவதுடன், நாளொன்றுக்கு 50 லட்சம் உற்பத்தி பாதிப்பு, 8 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு என்று தங்களது வர்க்கப் பாசத்தையும் தொழிலாளர் விரோதத் தன்மையையும் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால், இப்போராட்டத்தால் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது குறித்து எந்த ஊடகமும் வாய்திறப்பதில்லை. ஆளும் அரசுகளும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதற்கோ, அடாவடித்தனத்தில் ஈடுபடும் விசைத்தறி உரிமையாளர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து அதனைக் கண்காணிப்பதற்கோ தயாராக இல்லை.

புத்தாடைகளுடன் பொங்கல் கொண்டாடப் பலரும் தயாராகிவரும் சூழலில் அந்த புத்தாடைகளை நெசவு செய்யும் தொழிலாளர்கள் வீதியில் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள இறங்கிப் போராடி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க