மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் உணவுக்கு அடுத்தபடியாக உள்ளது உடை. விவசாயத்துக்கு அடுத்து நெசவுத் தொழில் தமிழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. கொங்கு மண்டலம் நெசவுத் தொழிலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
அதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலின் நிலை என்ன என்பதை பார்ப்போம்.
அம்மாபேட்டை, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், வனவாசி, குகை, எடப்பாடி, சின்னப்பம்பட்டி, இடங்கணசாலை, மடத்தூர், சித்தர்கோவில், காடையாம்பட்டி, கசப்பேரி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பிரதானமாக நெசவு நடைபெறுகிறது.
இத்தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேர் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு ஜவுளி ரகங்கள் நாளொன்றுக்கு 20 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சேலம், உடையாப்பட்டி பகுதியில் அம்மாப்பேட்டை கூட்டுறவு நூற்பாலை 31 ஏக்கரில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கியது. இதில் 14 ஏக்கரில் நூற்பாலை கட்டிடம் கட்டப்பட்டு, தரமான நூல்கள் உற்பத்தி செய்து லாபத்தில் இயங்கிய ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனால், இங்கு பணிபுரிந்த 1,100 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
படிக்க :
♦ கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !
♦ நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?
நூற்பாலை இயங்க நடவடிக்கை எடுப்பதாக தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல்தான் இருக்கிறது. தற்போது, இந்த இடத்தில் 17 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இங்கு அடுக்குமாடி தொழிற்கூடம் உருவாக்கி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட நெசவு சார்ந்த தொழில் தொடங்கி ஜவுளி பூங்கா உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது.
