திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த ஜனவரி 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறித் தொழிலே அங்கு வசிப்போரின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பருத்தியில் இருந்து பஞ்சை எடுத்து அதனை நூலாக்கி அதனை விசைத்தறியாளர்களுக்கு மூலப்பொருளாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கொடுக்கின்றனர்.
அந்த நூலை துணியாக மாற்றி தருவது விசைத்தறியாளர்களின் வேலை. ஜவுளி நிறுவனங்கள் தரும் நூலை துணியாக நெய்து கொடுத்து அதற்கான கூலியை பெற்று வருகின்றனர் விசைத்தறி உரிமையாளர்கள்.
படிக்க :
எழுத்தும் எழுத்து ஜனநாயகமும் || மு. இக்பால் அகமது
கோவை : நலியும் விசைத்தறி தொழில் காக்க வீதியில் இறங்குவோம் !
நூலில் தரமிக்க, நேர்த்தியான வெண்மை அல்லது சாம்பல் வண்ணத் துணியாக நெய்வது சோமனூர் ரகம். அந்த நூலில் வரும் கழிவை எடுத்து, மீண்டும் நூலாக்கி நெய்வது பல்லடம் ரகம். இந்த ரக நூல்களில் இருந்து துணியை நெசவு செய்து கொடுப்பதன் அடிப்படையில், விசைத்தறி உரிமையாளர்களுக்கு நெய்வதற்கான கூலி, துணியின் நீளத்தின் அடிப்படையில் மீட்டருக்கு இவ்வளவு என ஜவுளி உற்பத்தியாளர்களால் கொடுக்கப்பட்டு வருகிறது.
விசைத்தறி உரிமையாளர்கள் அக்கூலியில் இருந்துதான் உதிரிபாக, தறி பழுதுச் செலவு, நாடிங் செலவு, மின்சாரச் செலவு, தொழிலாளர்களுக்கான ஊதியம் போக மிச்சமாகும் தொகையே விசைத்தறி உரிமையாளர்களுக்கான வருமானம். விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கூலி உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது.
திருப்பூர், கோவை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத் தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.50 கோடி மதிப்புள்ள 1 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி மட்டுமே உள்ளனர். ஏறக்குறைய 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் நேரடியாக இத்தொழிலை நம்பித்தான் உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாக வழங்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட கூலியையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கொடுக்கவில்லை. பல கட்டப் போராட்டம் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தான் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து 24.11.2021 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர், கோவை ஆட்சியர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்லடம் இரகத்திற்கு 20% கூலியும் சோமனூர் இரகத்திற்கு 23% கூலியும் உயர்த்தப்பட்டது.
ஆனால் அதை அமுல்படுத்தாமல் காலம் தாழ்த்தி பழைய கூலியையே கொடுத்துவரும் ஜவுளி உற்பத்தியாளர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள, ‘பல்லடம், சோமனுார், அவிநாசி, தெக்கலுார், மங்கலம், 63 வேலம்பாளையம், கண்ணம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லுார் ஆகிய 9 சங்க விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி பல கட்டப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் பிப்ரவரி 16, 2022  தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம், மற்ற ரகங்களுக்கு 19 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட கூலியை விட குறைவான கூலிக்கு விசைத்தறியாளர்கள் ஒப்புக்கொள்ளச் செய்யப்பட்டனர். இதில் 2 தரப்பினர் இடையேயும் உடன்பாடு ஏற்பட்டது. மேலும் தொழில் நிலைமை சீரானவுடன் 4 மாதங்களுக்கு பிறகு மீதி உள்ள கூலி பல்லடம் ரகத்திற்கு 5 சதவீதம், மற்ற ரகத்திற்கு 4 சதவீதத்தை வழங்குவது குறித்து இரு தரப்பும் பேசி உறுதி செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தையில் பல்லடம், மங்கலம், வேலம் பாளையம், கண்ணம்பாளையம், அவினாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமா நல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்களும், பல்லடம், சோமனூர், அவிநாசி, திருப்பூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களும் பங்கேற்றனர். கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் 4 சங்கங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டதால் திருப்பூர், கோவையில் 38 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சோமனூர் உற்பட 5 சங்கங்களுக்கு பிப்ரவரி 16, 2022 பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கவில்லை, விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்ற செய்திக்கும் எங்களுக்கும் சமந்தம் இல்லை, சங்க பொதுக்குழுவின் முடிவின் படி கையெழுத்து ரீதியான ஒப்பந்தத்தை மட்டுமே எங்கள் சங்கம் ஏற்கும் என சோமனூர் விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். தெக்கலூர், அவிநாசி,புதுப்பாளையம்,பெருமாநல்லூர் கையெழுத்து ரீதியான ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என போராட்டத்தை தொடர உள்ளனர்.
41-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி கூலி உயர்வை பெற்றாக வேண்டும் என்பதில் விசைத்தறி உரிமையாளர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால் விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இத்தொழிலை சார்ந்த 5  லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
பத்தாண்டுகளுக்கு முன் சாதா ரகத்திற்கு ₹1000 க்கு விழுது மாற்றி ஓட்டிவிட்டுவிடலாம், இன்றைக்கு ₹3000 வேண்டும்! 26ரூபாய்க்கு இருந்த உருளை போல்ட் இன்று ₹70 ,₹5000க்கு இருந்த நூல் விலை இன்றைக்கு ₹10000க்கு மேல் போய்விட்டது.ஏழாண்டுகளில் விலைவாசி உயர்ந்துள்ளது- அனைத்து தொழில் சம்பளமும் உயர்ந்துள்ளது, இதுபோல் பெட்ரோல் டீசல் உட்பட அத்தியாவசிய விலைவாசிகள் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் விசைத்தறியாளர்கள் வருமானம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பணமதிப்பழிப்பு, GST, கொரோனா, வெகுவாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வால் இத்தொழிலை கைவிட்டுவிட்டு பலபேர் வேறு வழிகளைத் தேடியும் இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி சேர்த்து வைத்த சொத்துக்களை இழந்துள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறையின் மூலக் காரணமே விசைதறியாளர்களால் கூலி கொடுக்க முடிவதில்லை. வங்கிக் கடன் கட்ட முடியாத சூழல், தறியை விற்றாவது கடன் கட்டலாம் என்றால் தறிக்கு விலை இல்லை, பழைய இரும்புக் கடைகளில் தறியை விற்கும் அவல நிலை. இந்தமுறை கட்டாயமாக கூலி உயர்வை வாங்கினால்தான் வாழமுடியும் என்ற நிலைக்கு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்!
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு கிடைத்தால்தான் விசைத்தறி தொழிலாளர் மற்றும் நாட்டிங் உட்பட இந்த தொழிலை சார்ந்தவர்கள் அனைவருக்கும் பலன் கிடைக்கும். இது கொங்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த பிரச்சினை.
ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள் நிலையானது- உலக அளவுல பஞ்சு விலை உயர்ந்து கொண்டேவருகிறது. பஞ்சு, நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நூல் விலை உயர்ந்தும் துணி விலையை உயர்த்த இயலவில்லை. காரணம், மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை.
படிக்க :
ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நெசவுத் தொழில் தொடங்கப்பட்டுவிட்டது. அங்கெல்லாம் தமிழ்நாட்டை விடக் குறைவான கூலிக்கு நெய்துகொடுப்பதால், தமிழ்நாடு சரக்கு தேக்கம் உள்ளது. அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே ஜவுளி தொழில் காப்பாற்றப்படும்.
அரசு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறை உற்பத்தியாளர்களிடையே 1994  முதல் கூலி உயர்வு பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் சரியான தீர்வு எட்டப்படுவதே இல்லை. இது இரு தரப்பினருக்குமான பிரச்சினை மட்டுமல்ல. திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.
இந்த நிலை நீடித்தால் காடா ஜவுளி துணி ஆர்டர்கள் வட மாநிலங்களுக்கு செல்வதுடன், தமிழகத்தில் காடா ஜவுளி உற்பத்தி தொழில் கடும் பின்னடைவை சந்திக்கும். இது மாநிலத்தின் வேலைவாய்ப்பு நிலைமைகளைக் கடுமையாக பாதிக்கும். தமிழ்நாடு அரசு, இவ்விவகாரத்தில் தலையிட்டு, ஜவுளித்துறை கூலித் தொழிலாளர்கள், விசைத் தறியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் !!
* தமிழக அரசே விசைத் தறியாளர்களுக்கு ஒப்பந்தக் கூலியை பெற்றுக் கொடுத்திடு!
* கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வெல்லட்டும் !
மதுமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க