முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!

சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!

-

ரசியலை அக்குவேறு ஆணிவேராகப் அலசிக் கொண்டிருப்பவரிடம் போய் நீங்கென்ன கட்சி சார்? என்றால், ”அட நீங்க வேற…. நான் சோத்துக் கட்சி சார்”, என்று நகைச்சுவையாக நழுவிக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். அதுவெறும் நகைச்சுவை இல்லை. சாப்பிடுவதற்கென்றே ஒரு கட்சி கட்டியது போல சிலர் ‘சோத்துக்கட்சியாகவே’ களத்தில் இருக்கிறார்கள்.

உங்கள் ஊர் உயரதர உணவு விடுதிகளை ஒரு முறை வலம் வந்து பாருங்கள், அங்கு மேசையில் செங்கிஸ்கான் படையெடுப்பால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட பிரதேசம் போல, மிச்சம் மீதம் கிடக்கும் உணவுத் துண்டங்களையும், குவிந்து கிடக்கும் தட்டுக்களையும் பார்த்து உங்களாலும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

பசிக்காகச் சாப்பிடுவது ஒரு வகை, ருசிக்காகச் சாப்பிடுவது இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையினரைக் குறி வைத்து உணவுத் தொழில் உற்பத்தியாளர்கள் ‘ஆவி’ பறக்கப் புதுப்புது அயிட்டங்களை அவிழ்த்து விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். சும்மாவா, ”பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும், இவை நாலும் கலந்து தருவதாகப்” பகவானுக்கே மெனுகார்டு போட்ட மண்ணாயிற்றே.

என்ன, சுவையுணர்வைப் பற்றிய கேலிக்குரலாகப் படுகிறதா? சுவையுணர்வின் மீது மீளாக்காதல் கொண்டிருப்போர் பற்றிய ஒரு மேல் முறையீடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உணவில் சுவை கூடாது என்பதல்ல; காய் கனிகளையும் கீரைகளையும் மேய்ந்து கொள்ளலாம் என்றோ, அவ்வாறு மேய்ந்து கொண்டிருக்கும் பிராணிகள் மீது பாய்ந்து கொள்ளலாம் என்றோ நாம் சொல்ல வரவில்லை.

மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஊடாகச் சுவையுணர்வு வளர்கிறது; ஆனால் இந்தச் சுவையுணர்வு பெரும்பான்மை மக்களின் உணவுப் பழக்கத்துடன் ஒத்துச் செல்லாமல், குடிமக்களில் சிலருக்கு, உடம்பிலிருந்து நாக்கு மட்டும் தனியே நீண்டு வளர்ந்து செல்கிறதே, இந்த விகாரம்தான் கொஞ்சம் கவலையளிக்கிறது.

நாக்கு, மொழியைப் பழகுவதற்கு முன்பே சுவையைப் பழகிவிடுகிறது. ஆறு சுவைகளையும் சுவைப்பதற்குரிய சுவை நரம்புகள் நாவில் இருப்பதாய் ஆரம்ப வகுப்புகளிலேயே படம் போட்டுப் பாகங்களை விளக்கியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று உணவுப் பழக்கத்தில் அறுசுவை ஆயிரம் வகை சுவையாகி ‘யாகாவராயினும் நாகாக்க’ முடியாமல், மனமே ஒரு நாக்காக மாறி புதிய புதிய சுவைகளைத் தேடி அலைய ஆரம்பித்து விட்டது. ருசி வேட்டைக்காரக்கரர்களின் தட்டுத் தடுமாற்றங்களைப் போக்கி ‘தட்டு’ வரை கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையை தகவல் தொடர்புச் சாதனங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன.

சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி !

”சாப்பிட வாங்க” என்று அலை வரிசையின் வழியாக, உலை வைத்து செய்து காண்பிக்கிறது சென்னைத் தொலைக்காட்சி. சன்.டிவியில் ஸ்டார் சமையல். இப்படி ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியும் தனது நிகழ்ச்சி நிரலில் உள்ள கரம் மசாலா போதாதென்று புதிய வகை சமையலுக்கென்றே நேரம் ஒதுக்கி பார்ப்போருக்கு ருசி காட்டி வருகிறார்கள்.

பத்திரிகைகளிலும் விதம் விதமான சமையல் குறிப்புகள். குங்குமத்தில் வி.ஐ.பி. கிச்சன் என்று ஒரு பகுதி ஒதுக்கி பிரபலங்களின் கைப்பக்குவத்திற்குச் செய்முறை விளக்கம் சொல்லி வாசகிகளின் ‘படைப்பாற்றலை” தூண்டி விடுகிறார்கள்.

டி.வி.யில் ஒரு விளம்பரம்; கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் பையன் ஒருவன் ஒரு ரன் அடிக்கும் போது ஒரு பிஸ்கட்டை கடிக்கிறான். இரண்டு ரன்னுக்கு இரண்டு பிஸ்கட், நான்கு ரன்னுக்கு நான்கு என கடிப்பவன் கடைசியில் மொத்த பிஸ்கட்டையும் வெறிகொண்டு கடிக்கிறான். “உங்களால் ஒன்றோடு திருப்தி அடைய முடியாது” என்ற வசனத்தோடு விளம்பரம் முடிகிறது.

சின்னப்பிள்ளைகளிடம் வெறும் வாயை மூடிக்கொண்டு “ஆகா நல்லாயிருக்கு” என்று வாயை மென்று வேடிக்கை காட்டுவது போல இன்னொரு விளம்பரம்; தக்காளி சூப்பை கையில் வைத்துக் கொண்டு இது ஹாட்டா? இல்லை ஸ்வீட்டா? என்று கேள்வி கேட்டு விடையேதும் சொல்லாமல் “நீங்களே சுவைத்துப் பாருங்ளேன்” என்று உசுப்பிவிடுகிறது. என்ன சுவையென்று சொல்லிப்பார்ப்பவர்களை ஒரு முடிவுக்கு வரவழைப்பதை விட வாங்கி அனுபவிக்கவேண்டுமென்ற எண்ணத்தை தூண்டும் வியாபார உத்திதான் இது. விதவிதமான திட, திர உணவு வகைகள் விளம்பரத்தின் வழியாக நாக்கைப்பிடித்து இழுக்க, செய்து பார்க்க வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்கள் ” ஒரே ஒரு முறையாவது ருசி பார்த்து விடுவோமே” என்று உணவுவிடுதிகளுக்கு சென்று மேசையின் முன்பு ஒருவகைத் திகிலை அனுபவிக்கும் சுவையே தனியானது.

ஒரு நடுத்தரமான உணவுவிடுதி அது. அந்நிய நாட்டுக்குள் நுழையும் உளவாளி போலத் தயங்கித் தயங்கி வந்தவர் மேசைக்கு முன்பு அமர்ந்தார். அவர் கண்ணை முதலில் கவர்ந்தது பிளாஸ்டிக் பலகையில் தத்ரூபமாகத் தெரியும் உணவு வகைகள். பச்சை நரம்புகள் தெரிய தட்டு வடிவில் செதுக்கப்பட்டிருக்கும் வாழை இலை, அதற்கு மேல் பொன் நிறத்தில் ‘அடுக்குமாடி போல’ போண்டா. பக்கத்தில் வெளிர்பச்சை நிறத்தில் புதினா சட்னி, கசாப்புக் கடைக்கு முன்பு கண்டுண்ட நாயைப் போல வெகுநேரம் அதையே வெறித்துப் பார்த்தவர், பின்பு சுற்றிலும் சாப்பிடுவர்களைப் பார்வையிட்டார்.

சர்வர் நெருங்க, பக்கத்து மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தட்டைக் காண்பித்து ”அதுல ஒண்ணு கொண்டு வாங்க” என்று கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது போலத் துணிந்து அடித்தார். மேசைக்கு வந்த புதியவகை பூரியை வாராது வந்த மாமணிபோல வாஞ்சையாய் நோக்கினார். ஒரு சிக்கல், அதிலுள்ள எலுமிச்சம் பழத் துண்டைக் கடிப்பதா, பிழிவதா என்ன செய்வது என்று குழம்பிப் போனார். சுற்றிலும் செய்து காண்பிக்கும் நபர்களைத் தேடி ஏமாந்தார்.

மீள வழியில்லை. எடுத்து வாயிலேயே பிழிந்து கொண்டார். சர்வர் தூரத்திலிருந்து பார்த்த பார்வை இருக்கிறதே, ”உனக்கெல்லாம் ஏண்டா இந்த ஹோட்டல்?” என்று அதற்குப் பொழிப்புரை போடலாம். அப்படியொரு பார்வை அது.

மீண்டும் சோதனை. கைகழுவும் நவீன வகைக் குழாயை திருகி, இழுத்து, திருப்பி…. பிறகு அழுத்தித் தண்ணீர் வரவழைப்பதற்குள் கண்களில் தண்ணீர் வராத குறைதான். அடுத்து கை துடைக்கும் சவ்வுக் காகிதத்தை கண்டவருக்கு மீண்டும் குழப்பம். எடுக்கலாமா, விடலாமா என யோசித்தவர் அவ்வளவு வெளுப்பானதைத் தொடத் தயங்கி தன்வழியே ஒதுங்கினார். ஒரு வழியாக கல்லாப் பெட்டியை தாண்டி வரும் வரைக்கும் அவர்பட்ட பாடு ஒரு ‘ருசிகரமான’ அனுபவம். கடையை ஒருமுறை அவர் நிமிர்ந்து பார்க்கும் பார்வை இருக்கிறதே போதுமடா சாமி என்பது போல!

இன்னுமொருவரின் புலம்பலோ வேறுவிதம் ”மினி மீல்ஸாம், மினி மீல்ஸ், பேசாம ஒரு சாப்பாடே சாப்பிட்டிருக்கலாம் வயிறும் ரொம்பல, வாயும் ரொம்பல போயி ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டாத்தான் பசி அடங்கும்.” என்று கொடுத்த காசு செரிக்காமல் ‘விபத்துக்குள்ளானதை’ நொந்து கொண்டார்.

இப்படி ருசி எனும் மாயமானுக்கு பின்னே ஓடிக்களைத்துப் போய் திரும்புபவர்கள் ஒரு புறம். இன்னொருபுறம் புதிய, புதிய உணவு வகைகளிடம் குடியுரிமை கேட்பவர்கள். வாழ்க்கையின் அசல் சுவையை அனுபவிக்கச் சொல்லும் ‘காட்பரீஸூடன்’ கை குலுக்கி ‘புதிய உலகத்தில்’ திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!

உணவு விடுதிக்குள் புகுந்து சர்வரிடம் ‘என்னப்பா இதத்தவிர வேறு எதுவும் புதுசா இல்லையா?’ என்ற சலிப்போடு ”தந்தூரில புதுசா ஏதாவது கொண்டு வா” என்று ஆர்டர் தந்துவிட்டு மேசைக்கு வரப்போகிற உணவு என்னவாய் இருக்கும் என்ற த்ரில் கலந்த சுவைஞர்களின் நாக்கை கட்டிப் போட உணவுச் சங்கிலியும் நீண்டு கொண்டே போகிறது.

பாக்கர், எஸ்ட்ரா பாவு, மஷ்ரும் பீசா, புல்கா, அல்லூ பாலக், மட்டர் பான்னர், ஸ்டஃப்டு கேப்ஸிகம், – என்ன இது? வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கும் புதிய கிரகங்களா? வாடிக்கையாளர்களுக்காக உணவுத்துறை விற்பன்னர்கள் வாணலியில் கண்டு பிடித்திருக்கும் புதுப்புது ருசியான ரகங்கள்தான் இவை. இன்னும் பஞ்சவர்ண தோசை, நவரத்ன குருமா என்று பாரம்பரியத்தை இழைத்துக் கொடுக்கும் பலகார வகைகளும் உண்டு.

சாப்பாட்டு ‘ராமர்கள்’ ஒன்றை ருசி பார்த்த பிறகு இன்னொன்றுக்கு ”இரு உன்னை இன்னொரு நாள் வச்சிக்கிறேன்” என்று பொருமிக்கொள்கிறார்கள். இந்த ”ருசிகண்டேன், ருசியே கண்டேன்” என்று போகின்ற பேர்வழிகள் கடைசியில் ”தின்னுகெட்ட பரம்பரை சார்” என்று பெருமை பேசவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

ருசிகண்ட பூனைகளுக்கு நேரமேது, காலமேது? வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு நிறுத்தும் இடங்களில் பெப்சியும், கொக்கோகோலாவையும் விட்டுகட்டுபவர்களைப் பார்த்தால், வெகு தூரத்திலிருந்து வைக்கோல் வண்டியை இழுத்து வந்து இளைப்பாறும் மாட்டுக்குக்கூட மயக்கம் வரும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுச் செய்யும் சந்தை கலாச்சாரத்தின் நள்ளிரவுத் தாக்குதலை அங்கே பார்க்கலாம்.

இப்படி நேரம், காலம் இன்றி விதம்விதமாகச் சாப்பிடுவதையே லட்சியமாக, பொழுதுபோக்காக, பண்பாடாக ஆக்கிக் கொண்டவர்களின் தேடுதல் வேட்டையின் திசைகளில்தான் புட்டி உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவு விடுதிகள் எந்நேரமும் அனுபவிக்கச் சொல்லி அழைக்கின்றன.

இந்த ருசிகர உலகத்தில் நுழைபவர்களின் ‘மன அமைதியை’க் கெடுக்கும் வண்ணம் பசி எடுத்தவர்களின் கூட்டம் பார்வையிலும் பட்டுவிடாதபடி. கண்ணாடிச் சுவர்களுக்குள் கலகலப்பாக நடக்கிறது வியாபாரம். பின்னே பழைய சோறாய் இருந்தால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலாம், சில்லி சிக்கனாய் இருந்தால், காசில்லாதவனுக்குக் கதவைச் சாத்தடி கதைதான். திருப்தி இல்லாமல் ருசி தேடி அலைபவர்களை உலகத்தரத்திற்கு உயர்த்த கென்டகி போன்ற பன்னாட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் கோழிக்கறியின் நளபாகத்தைக் காட்டி உலகின் பெரும் பாகத்தை வளைத்துப் போடுகிறார்கள்.

போதை தலைக்கேற தலைக்கேற எவ்வளவுதான் சுவையான உணவு இருந்தாலும் ”என்னடி சாப்பாடு?” என்று எட்டி உதைக்கும் குடிகாரனைப் போல ”இன்னும் ருசி, இன்னும் ருசி” என்று எதிலும் அடங்காமல், காயசண்டிகையின் பசிநோய் போல ருசி நோய் கொள்பவர்களுக்கு மத்தியில்தான், உழைக்கக் கூடிய மக்களோ,

”தங்க உளுந்தலசி, தாம்பளம் போல் தோஜ சுட்டு” என்று தன்வீட்டில் தோசை சுட்டுச் சாப்பிடுவதையே இலக்கியமாக்கி வியக்கின்றனர். விதைத்து, நட்டு, அறுத்து உழைத்து வந்த அந்த நெல்மணியிலிருந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிட முடியாத அவர்களின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் இந்த சோத்துக் கட்சிக்காரர்களின் நாக்கில் முளைத்திருக்கும் சுவைமொட்டுகள் தானாக மரத்துப் போய்விடும்.

புதிய கலாச்சாரம், நவம்பர் 1997.

 1. உணவை வீணாக்க வேண்டாம் என்றால் சரி….அதில் ஒரு நியாயம் இருக்கிறது….அதற்காக சுவையாக தின்பதே குற்றம் என்றால்…..

 2. ‘சாகறதுக்கு முன்னால ஒரு முறை சரவண பவன்ல சாப்பிட்டு சாகணும்’ அப்படீன்னு ரொம்ப நாளா என்னோட தாத்தா பொலம்பிக்கிடுக்காறேன்னு ஒரு நா அழைச்சிக்கிட்டு போனேன். சுத்திலும் பார்வையை மேயவிட்டவர் ஒரு நெய்ப்பொங்கலுக்கு ஆர்டர் கொடுத்தார். நம்ம வீட்டுல இருக்குற சின்ன குழம்புக் கரண்டியில வழிச்சிக் கவுத்து வச்ச அளவுக்குத்தான் பொங்கல் ‘தத்தியுண்டு’ சைசில் தட்டில் ஒரு மூலையில் இருந்தது. ஒரு கப்பில் சாம்பார். ஒரு கப்பில் சட்டினி. தாத்தா கட்டுப்பட்டியான கிராமத்து விவசாயி. கூச்ச நாச்சம் படாம ஒரே வாயா அள்ளிப்போட்டுக்கிட்டு, ‘டேய், இங்க எனக்கு ஆங்காது; பசி அடங்காது. வேற எடத்துக்குப்போகலாம்’ அப்படீன்னு சொல்லிட்டு என் பதிலுக்கும் காத்திருக்காம எழுந்து வெளியில போய்ட்டாரு. சுத்தி உக்கார்ந்திருந்தவங்க எங்களையே வேடிக்கை பார்த்தாங்க. பாக்கட்டுமே. ஒரேஒரு நெய்ப் பொங்கலுக்கு நாப்பதுச் சொச்சம் (டேக்சோட) குடுத்துட்டு, இன்னொரு உயர்தர சைவ உணவா இல்லாத ஓட்டலாப் பார்த்து தேடிப் போனோம்!

 3. இங்கே ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ள விருப்பம்(வேறொரு நண்பரிடம் இருந்து பெற்ற தகவலே).
  எனது நண்பர் ஒரு மென்பொருள் வல்லுநர் , அவரை அலுவல் விடயமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர் .
  அங்கே அவரது சக நண்பர்களுடன் ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தார்.
  அங்கே சகட்டு மேனிக்கு தின்றுவிட்டு ஒரு கணிசமான அளவு உணவையும் விரயம் செய்து விட்டனர்.
  இதென்ன அவ்வளவு பெரிய குற்றமா என்ன ? யாரோ அவர்கள் அருகில் இருந்தவர்கள் இந்த தகவலை ஒரு அதிகாரியிடம் சொல்லி விட்டனர்.
  30 நிமிடத்தில் அவர் வரவும் ,நமது நண்பர்கள் தின்று ஏப்பம் விடவும் சரியாக இருந்தது.
  விரயம் செய்த உணவைப் பார்த்த பின், ஒரு கணிசமான கட்டணத்தை அபராதமாக கட்ட சொன்னார் .
  நண்பர்களுக்கு வந்ததே கோவம் , “என் காசு குடுத்து நான் துன்னறேன் நீ என்னடா கேக்குற ன்னு எகுற” அதற்கு அந்த அதிகாரி பொறுமையாக ,” நீங்கள் விரயம் செய்த உணவானது வேறோருவர்கானது மற்றும் இந்த நாட்டின் சட்டமும் அவ்வாறே” என்று கட்டணத்தை வசூலித்து விட்டு சென்றார். நண்பர்களும் அசடு வழிந்தவாறே திரும்பினர்.

 4. தமக்குத் தெரியாமலே பலர் இப்படி விதவிதமான உணவுகளுக்கு அடிமையாகின்றனர். சுவைக்காக சாப்பிடுவது தவறில்லை. ஆனால் அந்த சுவையே ஒரு நுகர்வு வெறியாக மாறும் போதுதான் பிரச்சினை. இன்று நடுத்தர வர்க்கத்தின் பெரும்பாலானவர்கள் இந்த நுகர்வு வெறிக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்(உணவில் மட்டுமல்ல, வேறு சில விஷயங்களிலும்)..

 5. உணவு குறித்த இந்தப் பதிவை வெறும் சுவை சார்ந்த ஒன்றாக மட்டும் பார்ப்பவர்களுக்கு இது மொக்கையாகத்தான் தெரியும். ஒட்டு மொத்த இந்திய மக்களின் வாழ்நிலையோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

  தமிழகத்தின் தலைசிறந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் கொரட்டூர் சீனிவாசன் அவர்கள் யாருடைய திருமணத்திற்க்கும் செல்வதில்லை என்கிறார். என்ன காரணம் என்பதையும் அவரே விளக்குகிறார். பந்தியில் வைக்கின்ற உணவு வகைகள் தனக்கு அருவெறுப்பை ஏற்படுத்துகிறது என்கிறார். தரம் நல்லா இல்லை என்பதற்காக அல்ல. தனக்குத் தேவையானதை மட்டும் வைக்கச்சொன்னால்கூட யாரும் கேட்பதில்லை. நாம் உண்கிறோமோ இல்லையோ இலை நிறைய வித விதமான உணவு வகைகளை வைக்கிறார்கள். ஏராளமாக உணவு வீணடிக்கப்படுகிறது. இப்படி உணவு வீணாவதை பார்க்க சகிக்க முடியவில்லை என்கிறார்.

  இது எதார்த்தமான நியாயமான உணர்வு. ஒரு பக்கம் ஒரு வேளை உணவுக்கே கோடிக்கணக்காணோர் அல்லாடும் இந்தியாவில் மற்றொரு பக்கம் வாய் ருசிக்காக விதவிதமான உணவு வகைகைளை எப்படி செய்வது என்கிற தொலைக்காட்சி செய்முறை விளக்கங்களை பார்க்கும் போது எனக்கு அது அருவெறுப்பாகத்தான் தெரிகிறது.

  ரசிகனை ஜொள்ளு விட வைக்கும் திரைப்பட நடிகைகளின் ஆட்டபாட்டங்களும் விதவிதமான உணவு வகைகளைக் காட்டி நமது நாவில் எச்சிலை வரவழைக்கும் சமையல் நிகழ்ச்சிகளும் சாராம்சத்தில் ஆபாசம் நிறைந்தவைகளே!

 6. பாஸ் நாம எல்லாம் பீப் பிரியானிக்காக எங்கெங்கோ போறோம், பாவம் பார்ப்பானுக சரவன பவன் தானே போறாங்க… சப்ப மேட்டர் பாஸ், விட்ருங்க.

  • Sathishu,
   Appo matha sathikarapayaluvaaa saravana bhavanukkae porathu illiyaaaaa apdiyaaaaaaaaaaaaa kannu unakku imputtu arivu yenga irunthu vandhuthu rasa….

 7. @ ஆனந்த்
  கலைஞர்க்கு வாரிசாக “தமிழ்க் கிருக்கு காமெடியன்” ஆக ஆசையா உங்களுக்கு? ஆங்கிலத்தை தடை செய்யவேண்டும் என்றால் முதலில் ஆங்கிலத்தில் உள்ள உங்கள் பெயரைத்தான் தடை செய்ய வேண்டும். ஏன் தமிழில் “ஆனந்த்” என பெயர் போடவேண்டியதுதானே? மேலும் ஆங்கிலத்தில் உள்ள இந்த வலைப்பக்க முகவரியையும் தடை செய்யலாமா?

  anyways, for the first time in 3 years of my being an avid reader of vinavu, I’m sharing this article with my friends.. extremely well written.. kudos to vinavu 🙂

  • @ மனிதன். நான் ஆங்கிலத்தில் பெயர் எழுதியது எளிதில் தேடுவதற்காக மட்டுமே. வலைபக்க முகவரி ஆங்கிலத்தில் இருந்தாலும் கட்டுரை தமிழில் எழுதப்பட்டுள்ளது. இங்கு கருத்துகளும் தமிழில் எழுதலாம்.

   //“தமிழ்க் கிருக்கு காமெடியன்” ஆக ஆசையா உங்களுக்கு?
   தமிழை முடிந்த அளவு அதிகமாக பயன்படுத்துவதை விரும்பிகிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்யுங்கள், (எல்லா இடங்களிலும், எல்லா நேரமும்).

 8. தல வர வர கமெண்ட்ஸ் கம்மி ஆகிட்டே வருது …பரபரப்பா எதாவது எழுதுங்க … நம்ம ரஜினி கமல் அஜித் விஜய் இவுங்கெல்லாம் இபோ ஏதும் தப்பு பண்றது இல்லையா என்ந ? தப்பு பணீருபாங்க… நல்ல யோசிச்சு கண்டுபுடிச்சு எழுதுங்க

 9. @ஆனந்த்
  எப்படி ஆங்கிலம் மட்டுமே எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்துவது முடியாத காரியமோ அதே போல் ஆங்கிலம் கலக்காத தமிழை மட்டும் உபயோகப்படுத்துவதும் practically not possible. வறுத்த அரிசி (fried rice), கலவை (mixture), வாடகை சிற்றூர்தி (taxi) போன்ற வார்த்தைகளை daily usageஇல் பயன்படுத்த முடியுமா? சொல்லுங்கள் பார்ப்போம்..

  • அன்பர்களே,
   இது போன்ற தமிழ் தளங்களில் ஆங்கிலத்தில் உரையாடும்போது, பிற விவாதிப்பாளர்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலோ, இல்லை சரிவர புரிந்துகொள்ளாமல் விவாதித்துக் கொண்டிருந்தாலோ, விஷயம் முறையாக சென்றடையாது. இது மட்டுறுத்தலின்போது நிர்வாகிகளுக்கும் இடைஞ்சல், பின்னூட்டங்களைப் பார்வையிடும் வாசகர்களுக்கும் இடைஞ்சல். அதற்குத்தான் ஆங்கிலப் பின்னூட்டங்கள் வேண்டாம் என்று சொல்வது. தமிழ் தட்டச்சுப் பழகுதல் என்பது மிக எளிமையான விஷயமாக ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் இந்தப் புரிந்துணர்வு அவசியத் தேவை. போகிறபோக்கில் சில வாசகர்கள் ஆங்கில கமெண்டுகளை உதிர்த்து விட்டுச் சென்றால் கூடப் பரவாயில்லை. தொடர்ச்சியான விவாதங்களுக்கு அதைப் பயன்படுத்த வேண்டாமே என்பதுதான் கோரிக்கை + வேண்டுகோள். வினவை ஆங்கிலப் பின்னூட்டங்களைத் தடை செய்யச் சொல்வதை விட, விவாதங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டாம் என்று வாசகரிடத்தில் வேண்டுகோள் விடுப்பதே சிறந்தது, ஜனநாயகப்பூர்வமானது.

  • தவறு.மிகப்பெரிய தவறு.தமிழால் தனித்து இயங்க முடியும்.அதற்கான தேவை அடிமை மயக்கம் தெளிந்த தமிழறிவு.அது இயல்பாகவே தமிழை தாய்மொழியாக கொண்டோரிடம் இருக்க வேண்டும்.இருக்கிறது.ஆனால் அதை பயன்படுத்தாமையே இன்றைய அவல நிலைக்கு காரணம்.

   ஆங்கிலம் கலந்து தமிழ் பேசப்படுவதற்கு காரணம் தமிழில் போதிய சொற்கள் இல்லை என்பதல்ல.நமது அக்கறையின்மையும் தாய்மொழி பற்றின்மையும்தான் காரணம்.

   ஆங்கில மற்றும் வடமொழி சொற்களை கலவாமல் வினவு தளத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை நான் எழுதி இருக்கிறேன்.யாரும் புரியவில்லை என்றோ புரிந்துகொள்ள கடினமாக உள்ளதென்றோ குறை கூறியதில்லை.ஒரு ஆங்கில சொல்லோ வட மொழி சொல்லோ கலவாமல் மணிக்கணக்கில் உரையாட வல்ல தமிழ் பற்றாளர்களை நான் அறிவேன்.

   நீங்கள் எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கும் ஆங்கில சொற்களையே எடுத்துக் கொள்வோம்.ஒரு தமிழ் குழந்தை பேசுவதற்கு ஆரம்பிக்கும்போதே அதற்கான தமிழ் சொற்களையே கேட்டு பழகி இருந்தால் இயல்பாக அந்த சொற்களையே பயன்படுத்தும்.அப்படியான சூழலை ஏற்படுத்தித் தராத நாம்தான் குற்றவாளிகள்.

   இந்த இடத்தில் எனது அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்வது பொருத்தமாகவும் எண்ணிப் பார்க்கத் தகுந்ததாகவும் இருக்கும்.

   நண்பர் ஒருவரின் சிறு தொழில் பட்டறையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.அது கூலி அடிப்படையில் திருமண அழைப்பிதழ்கள் ஆயத்தப்படுத்தி தரும் இடம்.எங்களுக்கு தேநீர் வாங்கி வந்து தந்த இளைஞனிடம் உள்ளே யார் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார் நண்பர்.அந்த பையன் புதிதாக வேலைக்கு சேர்ந்தவன்.நண்பரின் சொந்த ஊரான ஒரு சிற்றூரை சேர்ந்தவன்.அவன் சொன்னான்.

   ”அப்பு அட்ட வெட்டிக்கிட்டு இருக்கான். அய்யாத்துர தடம் பதிச்சுக்கிட்டு இருக்கான்.”

   நண்பருக்கு முதல் பகுதி புரிந்தது.இரண்டாவது புரியவில்லை.

   அய்யாத்துர என்ன பண்றான்.

   அதாண்ணே, அட்டையில சாமி படத்த பதிச்சுகிட்டு இருக்கான்.

   ஓ,”எம்போசிங்” போடுறானா.சரி சரி உள்ள போய் வேலைய பாரு.

   இதுதான் நண்பர்களே தமிழால் ”தனித்து இயங்க முடியாமல்” போன கதை.

   ”embossing ” என்ற சொல்லுக்கு அழகிய இணையான சொல்லான ”பருந்தடம்” என்ற சொல்லை புழக்கத்திற்கு கொண்டுவராதது யார் குற்றம்.நிச்சயம் தமிழின் குற்றமில்லை.அடிமை புத்தி கொண்ட தமிழனின் குற்றம்.படிப்பறிவு குறைந்த அந்த இளைஞனிடம் உயிர் வாழும் தமிழ் படித்த ”அறிவாளி”களிடம் செத்துக் கொண்டிருக்கிறது.

   \\எப்படி ஆங்கிலம் மட்டுமே எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்துவது முடியாத காரியமோ அதே போல் ஆங்கிலம் கலக்காத தமிழை மட்டும் உபயோகப்படுத்துவதும் practically not possible. வறுத்த அரிசி (fried rice), கலவை (mixture), வாடகை சிற்றூர்தி (taxi) போன்ற வார்த்தைகளை daily usageஇல் பயன்படுத்த முடியுமா? சொல்லுங்கள் பார்ப்போம்.//

   நீங்கள் எழுதியதை நான் திருப்பி எழுதுகிறேன்.பாருங்கள்.

   எப்படி ஆங்கிலம் மட்டுமே எல்லா இடங்களிலும் ”பயன்படுத்துவது” முடியாத ”செயலோ” அதே போல் ஆங்கிலம் கலக்காத தமிழை மட்டும் ”பயன்படுத்துவதும்” ”நடைமுறை சாத்தியமில்லை” வறுத்த அரிசி (fried rice), கலவை (mixture), வாடகை சிற்றூர்தி (taxi) போன்ற ”சொற்களை” ”அன்றாட பயன்பாட்டில்” பயன்படுத்த முடியுமா? சொல்லுங்கள் பார்ப்போம்.

   இப்படி தமிழில் எழுதாமல் ஆங்கிலம் கலந்து எழுதுவது உங்கள் குற்றம்.தமிழால் முடியாது என்று பழியை தமிழின் மீது தூக்கி போடுகிறீர்கள்.

   • நன்றாக சூடாக சொன்னீர்கள், திப்பு அவர்களே! வட நாட்டிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தாலும் நான் இன்னும் தூய்மையான தமிழை பயன் படுத்தவே விழைகின்றேன். தமிழால் முடியாதது எதுவும் இல்லை என்ற உணர்வு தமிழர்களான நமக்கு முன் தேவை.

 10. அதைதான் நான் சொல்கிறேன், சிலர் முழுக்க ஆங்கிலத்தில் கருத்து எழுதுகிறார்கள். அது இங்கு பொருத்தம் இல்லை.

 11. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. இது போன்ற உணவகங்கள் மூலம் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கு ஒரே மாற்று – KFC மற்றும் மெக்டொனால்ட் போல் இரண்டு பண்ணுக்குள் சில இலைகள் மற்றும் பீப் அல்லது உருளை கிழங்கு பேட்டியை வைத்து சுவையில்லாத அமெரிக்க வழி மாஸ் புரடக்சன் உணவகங்கள்.நிறைய மக்களை வேலைக்கு வைத்து சுவையாக சூடாக தயாரிக்கும் உணவகங்கள் வேண்டுமா அல்லது மெக்டெனால்ட் போன்ற உணவகங்கள் வேண்டுமா என்று இந்த கட்டுரையை எழுதியவர் சிந்த்திக்க வேண்டும்

  • KFC, McDonald இந்தியாவில் 1990-களின் பிற்பகுதியில் காலுன்றியிருந்தாலும், பரவாத காலத்தில் (1997) எழுதப்பட்ட கட்டுரையை மீள்பதிப்பாக வெளியிட்டிருப்பதை கவனிக்கவும். அன்று நாக்கு நீளத்தொடங்கி, இப்போது அகலமாகவும் ஆகிவிட்டது.

   • மன்னிக்கவும். கட்டுரை வெளியான காலத்தை கவனிக்க வில்லை.தற்போதைய சூழ்னிலையில் சுவையுள்ளதோ அல்லது சுவையற்றதோ பல தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் – உணவுகளை முழுமையாக உணவகத்திலேயே முழுவதும் தயார் செய்து கொடுக்கும் உணவகங்கள் தான் தேவை.

 12. வெறி வேண்டாம் என்று சொல்லலாம், சுவை வேண்டாம் என்று சொல்லுவதற்கில்லை. உணவாகட்டும், கட்டுரையாகட்டும், வேறு எதுவாகட்டும், இரசிப்புத்தன்மை இல்லாத போது வாழ்வில் சுவையில்லை.

 13. அய்யா,
  சுவை முக்கியம், சாப்பாட்டை வீண்ணாக்காமல் சாப்பிட்டால் ஓகே தான்,

 14. நண்பர்களுடன் இருந்தபோது சொந்த சமையல் தான். அலுப்பு பார்ப்பதே இல்லை. ஆளுக்கொரு வேலையாய் செய்து முடிப்போம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை சாம்பாரும் குழம்பும் பொறியல் வறுவலுடன் மாறி மாறி இருக்கும். சனிக்கிழமை மாலை இட்லிக்கு ஊறவைத்து வீட்டுக்கார அம்மாவிடம் கொடுத்துவிட்டால் அரைத்துக்கொடுத்து விடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை இட்லிக்கும் இரவு தோசைக்கும் வைத்துக்கொள்வோம். மதியம் கட்டாயமாக அசைவம். மணமும் ருசியுமாக சாப்பிடுவோம். அம்மாவின் கைப்பக்குவம் என் நண்பன் சிவராம கிருஷ்ணன் மூலம் எனக்குக் கிடைக்கப்பெற்றது. நானாவது சில சமயத்தில் ஹோட்டலுக்கு சென்று விடுவேன். ஆனால் என் நண்பன் இரவு வீடு திரும்ப எவ்வளவு நேரமானாலும் சாதம் வடித்து ரசமாவது வைத்து சாப்பிட்டுவிட்டுப்படுப்பான். எந்த உணவாக இருந்தாலும் நினைத்து விட்டால் செய்துவிடுவோம். ஒருமுறை ஆட்டுக்கல்லை (இங்கே ருபுக்கல்) கோணியில் வைத்து வீட்டுக்குள் தூக்கிவந்து அடைக்கு மாவரைத்து சுட்டு சாப்பிட்டோம். எங்களுக்குள் அப்படி ஒரு கூட்டணி. அதனால்தான் இப்போதும் “பிஸ்ஸாவாம் பிஸ்ஸா .. என்னத்த பெரிய்ய ..” என்று சொல்லத்தோன்றுகிறது. சிறிது ஆர்வமும் முனைப்பும் இருந்தால் வேலை நிமித்தம் தனியே வசிக்க நேர்பவர்கள் சொந்த சமையலில் கலக்கலாம். எனவே, விதவிதமான உணவு வகைகளைக் காட்டி நமது நாவில் எச்சிலை வரவழைக்கும் சமையல் நிகழ்ச்சிகளை ஆபாசமாக நினைக்கவேண்டாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க