‘குற்றாலத்தில் இடி, இடித்து.. கும்பகோணத்தில் மழை பெய்த’ கதையாக மோடி செய்த டிமாண்டைசேஷன் அத்தனை தொழில்களையும் பதம் பார்த்துவிட்டது. இதில் இன்னொரு உதாரணம் இந்தக் கதை.

எப்போதும் நான் முடிவெட்டுவது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு டீஸண்ட்டான சலூன் கடையில். ஏஸி வசதியுண்டு என்பதாலும், செலவும் நமக்குக் கட்டுப்படியாகும் அளவுக்கு இருப்பதாலும் தொடர்ந்து வாடிக்கையாளராக மாறிப் போனேன். அந்தக் கடையைத் திறந்து 2 வருடங்கள்தான் ஆனது.

சென்ற மாதம் கடைசியில் கடைக்குச் சென்றபோது புது ஆட்கள் கடையை மராமத்து பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் “திங்கள்கிழமை அன்னிக்கு புதுசா ரீ ஓப்பன் செய்றோம் ஸார். வந்திருங்க..” என்றார்கள்.

மாதிரிப்படம்

சரி.. விநாயகர் சதுர்த்தி அதுவுமா பெரியப்பனுக்கு முடியைக் காணிக்கையாக்கிருவோம் என்று நினைத்து நேற்றைக்குச் சென்றேன். கடையில் அனைவருமே புதுமுகங்கள். “எங்கப்பா பழைய ஆள்..?” என்றேன். “அவர் கடையை வித்திட்டுப் போயிட்டாருங்க. நாங்க இப்போ புதுசா வாங்கியிருக்கோம்..” என்றார்கள்.

அதிர்ச்சியாக இருந்தது. பழைய நண்பரான கார்த்திகேயன் மிகவும் சின்சியரான மனிதர். நமக்குப் பிடித்தால் மட்டும்தான் டிவியை ஆன் செய்வார். இல்லையென்றால் நிறுத்திவிடுவார். இடையில் செல்போனில் அழைப்பு வந்தாலும் எடுக்க மாட்டார். கடைக்குள் இருந்து யாராவது பேசிக் கொண்டேயிருந்தால் “பத்து நிமிஷம் கழித்து பேசுவோம்…” என்று பேச்சை நிறுத்துவார். இந்த மாதிரி குணங்களே நமக்கு மிகவும் பிடித்திருந்தது.

இப்போதைய புதிய ஆட்களும் அதே கட்டணத்தைத்தான் வாங்கினார்கள். முடி வெட்டுதல், ஷேவிங், டையிங் மூன்றுக்கும் சேர்த்து 300 ரூபாய்தான். ஸ்பீடு இல்லை என்றாலும் சரியாகவே இருந்தது இவர்களின் வேலை.

நன்றி சொல்லிவிட்டு அவர்களிடத்திலேயே பழைய முதலாளியான கார்த்திகேயனின் போன் நம்பரை வாங்கி அவரை அழைத்தேன்.

தொழிலை விட்டுவிட்டுச் சென்ற கதையைக் கேட்டேன். ஒரு பாட்டம் அழுது தீர்த்தார்..

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
♦ 50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !

“4 லட்சம் ரூபா செலவு செஞ்சு அட்வான்ஸ் கொடுத்து புது கலர் அடிச்சி, சோபா வாங்கி.. பெரிய, பெரிய டீலக்ஸ் கடைகள்ல இருக்குற மாதிரி எக்யூப்மெண்ட்ஸெல்லாம் வாங்கி வைச்சேன் ஸார்.. கடைல ஆளும் போட்டிருந்தேன். உங்களுக்கே தெரியும். கடைக்கு செலவே மாதம் 35,000 ஆச்சு.

முதல்ல நல்லாத்தான் இருந்துச்சு.. தினத்துக்கு 2000-ல் இருந்து 3000-ரூபா வரைக்கும் வந்துக்கிட்டிருந்தது. அப்புறம் அந்த டிமாண்டடிசேஷன் வந்துச்சு பாருங்க. அன்னிக்கு ஆரம்பிச்சது பிரச்சினை.

“கைல காசில்லை. பேங்க்ல எடுக்கணும். அப்புறம் மேல கடைக்குப் போயிக்கலாம். அப்புறம் மொத்தமா முடியை வெட்டிக்கலாம்”ன்னு நினைச்சு ஷேவிங் செய்ய மட்டு்ம் கடைக்கு வந்தவங்ககூட நிக்க ஆரம்பிச்சாங்க..

அதுவே அவங்களுக்கு வசதியா போனதால முதல் ஆளா ஷேவிங்குக்கு மட்டும் வர்ற ஆட்கள் மட்டும் சுத்தமா நின்னுட்டாங்க. அப்புறம் முடி வெட்டுறது.. டை அடிக்க.. பேஷ் ப்ளீச்சீங் செய்யன்னு மட்டும் வந்தவங்களும் மாசத்துக்கு ஒரு தடவைன்னு குறைய ஆரம்பிச்சாங்க..

Demonetisationஇப்போ டை அடிக்கவும் ஷாம்பூ மாதிரியே ஜெல் வர ஆரம்பிச்ச உடனேயே அதுக்கு இருந்த கூட்டமும் குறைய ஆரம்பிச்சிருச்சு.. பிளீச்சிங்கிற்கு வந்தவங்களும் காசில்லை.. காசை மிச்சப்படுத்தணும்னு குறைய ஆரம்பிச்சாங்க.

இப்போ கடைசி சில மாதங்களாக வந்தவங்க எல்லாரும் முடி வெட்டுறதுக்கு மட்டும்தான். அதுலேயும் முடி வெட்டும்போது தேவைன்னா ஷேவிங் செய்வாங்க.. இப்படி பிஸினஸ் ஆட்கள் குறையக் குறைய.. எனக்கும் வரவு குறைஞ்சது..

முதல் ஆளா கடைல வேலை பார்த்த பையனை நிறுத்தினேன். நான் ஒரே ஆளே வேலை செஞ்சேன். காலை, மதியம், ராத்திரின்னு 3 பேர் மட்டுமே வர ஆரம்பிச்சாங்க.. ஒரு நாள் 1000-ம்ன்னா அடுத்த 3 நாட்களுக்கு 300 ரூபாய்க்கு மேல வரலை.. இதுல கடை வாடகை.. என் குடும்பச் செலவு.. இப்படி எல்லாமே பற்றாக்குறைல ஓடுச்சு..

ஏற்கெனவே விழுப்புரம் பக்கத்துல இருக்குற என் சொந்த ஊர்ல இருக்குற விவசாய நிலத்தை அடமானமா வைச்சு கடன் வாங்கித்தான் இதை ஆரம்பிச்சேன். இப்போ கடனையும் அடைக்க முடியலை.. இந்த எட்டு மாசமா கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலேயும் முடியல ஸார்..

படிக்க:
பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !
♦ இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

அந்த 4 லட்சம் ரூபாய் கடன் இப்போ ஐந்தரை லட்சமா ஆகியிருக்கு. இப்போவரைக்கும் வட்டியைத்தான் நான் கட்டியிருக்கேன். அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலை ஸார்..

வீட்டம்மா புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு விழுப்புரத்துக்கே போயிட்டாங்க. எனக்கும் என்ன செய்றதுன்னு தெரியாமல் கடையை கை மாத்திவிட்டுட்டு வந்துட்டேன்.

கடைக்கு கொடுத்த அட்வான்ஸ், வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ்ன்னு ஒரு லட்சம் ரூபாதான் கைல இருக்கு. இதை வைச்சு என்ன செய்றதுன்னு தெரியாமல் உக்காந்திருக்கேன் ஸார்..” என்றார்.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..!

நான் உட்பட மக்கள் பலரும் காசை மிச்சப்படுத்துவது தவறில்லைதான். ஆனால் திடீரென்று அது நிறுத்தப்பட்டால், இப்படி கடன் வாங்கி தொழில் செய்பவர்களின் நிலைமை பரிதாபமாகத்தான் இருக்கும்.

கட்டணத்தைக் குறைத்தால் அவர்களுக்குக் கட்டுப்படியாவதில்லை. கடை வாடகையே 15000 ரூபாய். கடையில் வேலை பார்க்க வருபவர்களுக்கு 15000 ரூபாய் சம்பளம் கொடுத்தாக வேண்டும். அதற்குக் குறைந்து யாரும் வருவதில்லையாம்.

மின் கட்டணம், பராமரிப்புக் கட்டணம், குடும்பச் செலவுகள் என்று பார்த்தால் இது போன்ற ஒரு கடைக்காரருக்கு மாதம் 50000 ரூபாய் வருமானம் வந்தால்தான் அவரால் பிழைப்பை நடத்த முடியும்.. இல்லையெனில்..?

நல்லா போயிட்டிருந்த எல்லா தொழில்களிலும் மண்ணையள்ளிப் போட்டது மோடி என்னும் கேடியின் இந்த டிமாண்ட்டிசேஷன் என்னும் நாணய மதிப்பிழப்புத் திட்டம்தான். அது அப்போது தெரியவில்லை. இப்போது பல தொழில்களையும் அது அழித்துக் கொண்டிருக்கிறது.

கடைசியில், இதன் முடிவு என்னவாகத்தான் இருக்கும் என்று யாருக்காச்சும் தெரியுமா..?

நன்றி : ஃபேஸ்புக்கில் Saravanan Savadamuthu 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க