ந்திய மக்கள் ஒவ்வொருவரையும் மரணம் துரத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா என்கின்ற கொடிய வைரஸ் பரவலின் கொடும் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வக்கற்ற மோடி அரசின் செயல்பாட்டை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தும் நிலைக்கு கேடு கெட்டு போய் உள்ளனர் ஆட்சியாளர்கள்.

கொடிய வைரஸ் கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியைப் போடுவதற்குப் பாரதூரமான எந்த முயற்சியையும் மத்திய மோடி அரசு எடுக்கவில்லை. இந்திய துணை கண்டம் முழுவதும் மரண ஓலங்கள். உயிர் பிரிந்த மனித உடல்களை முறையாக தகனம் செய்வதற்கு கூட வழியில்லாமல் நிற்கதியாய் நிற்கின்றனர் மக்கள்.

படிக்க :
♦ கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

சுடுகாடுகள் நிரம்பி வழிந்து கங்கை நதி பிணங்களை சுமந்து செல்கிறது. “எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்” என்பதைப் போல் பிணத்தைக் காட்டி காசு பறித்து கொள்ளை அடிக்கின்றனர் கார்ப்பரேட் மருத்துவமனைகள்.

இது ஒரு புறமிருக்க, காவி பாசிச சங்பரிவார் கும்பல் மாட்டு மூத்திரத்தை குடித்தால் கொரோனா போய்விடும் என்றும், மாட்டு சாணத்தை தடவி குளிக்க வேண்டும் என்றும் உளறி மக்களை மூட நம்பிக்கைகளில் ஊற வைக்கிறது. அறிவியல் கண்ணோட்டம் சிறிதும் இல்லாத, கிஞ்சித்தும் ஈவு இரக்கம் அற்ற, எவ்வித மனித பண்புகளும் இல்லாத, ஒரு கொடுங்கோல் வர்ணாசிரம வெறி பிடித்த கும்பல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலின் அலட்சியத்தால் இந்த நாட்டின் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் உருவாகியுள்ள இரண்டாவது அலை தாக்குதலில் உயிர் பிழைத்து இருப்போமா? என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் இந்த நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் மரணப் பயத்தில் இருத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற மரண ஓலமும் உயிரற்ற மனித உடல்களும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எந்த உத்வேகத்தையும் கொடுக்கவில்லை. கோமாதா என்ற பெயரில் மாட்டுக்கு தரும் கரிசனத்தை சகமனிதருக்கு காட்ட மறுக்கிறது காவி பாசிசக் கும்பல். தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு தற்காப்பு நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, உண்மையான மரணத்தின் கணக்கை மூடி மறைக்கிறது மோடி அரசு.

மத்திய மாநில அரசு அறிவித்துள்ள தற்போதைய பொது முடக்கத்தினால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. கொடிய வைரஸை விட மிகப்பெரிய தாக்குதலை காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் இந்த நாட்டின் அனைத்து பகுதி மக்கள் மீது ஏவிவிட்டுள்ளது. சாமானிய சிறு-குறு தொழிலகங்கள் மூடப்பட்டு பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.

நாட்டு மக்கள் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் கூட இந்தியாவிலுள்ள 10 சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறுந்தொழில்கள் இழுத்து மூடப்பட்டு விட்ட அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடை இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி கும்பலின் நலன் காப்பது என்ற ஒரே கொள்கையை தாரக மந்திரமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

கார்ப்பரேட்  முதலாளித்துவ கும்பலின் சொத்து மதிப்பு 75 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர்களின் வேலை இழப்பு புதிய உயரங்களை எட்டியுள்ளது. தொழிலாளர்களின் வருமானத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வறுமை, குறைந்தபட்ச வாழ்வாதாரத் தேவைகள் நிறைவு செய்ய இயலாமல் திண்டாடும் நிலை, சத்தான உணவு கிடைக்காமை, வீட்டு வாடகை, மின் கட்டணம், மருத்துவ செலவு உள்ளிட்ட குறைந்த பட்சத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாமல் இந்திய உழைக்கும் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்த ஆய்வின்படி 27 விழுக்காடு மக்களுக்கு எவ்வித வருமானமும் இல்லை. சம்பளம் பெறுபவர்களுக்கு, ஏற்கெனவே பெற்று வந்த சம்பளமும் குறைந்து உள்ளது.

அரசு அறிவித்த ஊரடங்கின் விளைவாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் 40.07 கோடி பேர் வேலையில் இருந்துள்ளனர். இந்த நிலைமை கடந்த மார்ச் மாதத்தில் 39.81 கோடியாக இருந்தது. மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றிய நிறுவனங்களிலிருந்து கணிசமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 2019-2020-ம் ஆண்டில் 85.9 மில்லியனாக இருந்த தொழிலாளர்  எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 73.3-ஆக குறைந்துவிட்டது.

புதிய வேலை வாய்ப்பு அறவே இல்லை என்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வேலையற்றோர் சந்தை பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. வேலை இழப்பை எதிர்கொண்டு புதிய வேலையை தேடாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 1.6 கோடியாக இருந்தது, ஏப்ரல் மாதத்தில் 1.94 கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு (Center for Monitoring Indian Economy) வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த நெருக்கடி இந்திய விவசாயத் துறையிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மோடி அரசின் கார்ப்பரேட் நலன் காக்கும் நடவடிக்கைகள், பெண்களின் வேலை வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 10-லிருந்து 12 வயதுச் சிறுமிகளும் பணியமர்த்தப்பட்டு கடுமையான சுரண்டல் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

நாடெங்கிலும் லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்கள் அழிவை நோக்கி  சென்று கொண்டிருக்கின்ற நிலையில், உரிய நாளில் ஜி.எஸ்.டி.யை செலுத்தவில்லை  என்ற காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சிறு தொழில் மற்றும் குறுந்தொழில் உரிமையாளர்கள், GST அபராதத் தொகையில் விலக்கு கேட்டு அரசிடம் மன்றாடி வருகின்றனர். பல இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களை, கடன் தள்ளுபடியாகவும், ஆத்மநிர்பார் எனும் பெயரிலும், அம்பானி – அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு வாரி வழங்கிய காவி-கார்ப்பரேட் பாசிச கும்பல் சிறு மற்றும் குறுந்தொழில் உரிமையாளர்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது. இதன் விளைவாக லட்சக்கணக்கான உதிரிப் பாட்டாளிகள் மரணத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர். பொது முடக்கம் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ செலவுகள் அனைத்தையும் மத்திய மாநில அரசுகளின் பொறுப்பில் செய்ய வைக்க வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான நிவாரண தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

படிக்க :
♦ கொரோனா : தடுப்பூசி கொள்கையின் அரசியல் பொருளாதாரம்
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!

கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் தனியார் முதலாளிகள் தங்களுடைய ஊழியர்கள் உடைய மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். லட்சோப லட்சம் தொழிலாளர்கள் காவி பாசிச கும்பலின் பொருளாதாரத் தாக்குதலின் காரணமாக வேலையில் இருந்து வீசி எறியப்பட்டு உள்ளனர்.

கொரோனா  பெரும் தொற்றில் இருந்து மக்களை காக்க வக்கற்ற ஆட்சியாளர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலுக்கும், காவி சனாதன வைரஸுக்கும் எதிராக மாபெரும் போராட்டத்தைக் கட்டி அமைக்க வேண்டியுள்ளது.


இரணியன்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க