அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 13

கலந்து பழகும் மகிழ்ச்சி

ள்ளி வாழ்க்கையின் இரண்டாவது நாளன்று நான் குழந்தைகளைக் கேட்டேன்:

“ருஷ்ய மொழி பயில விருப்பமா?”

அவர்கள் உற்சாகமாக பதிலளித்தனர்:

“ஆம்.”

அவர்கள் “ஆம்” என்று சொல்ல, ஆர்வமும் எதற்கு ஒப்புக் கொள்கிறோம் என்று தெரியாததும் மட்டும் காரணமல்ல, அவர்கள் உண்மையிலேயே ருஷ்ய மொழி பேச விரும்புவதுதான் காரணம். குடும்பத்தில் இவர்கள் ருஷ்ய மொழியின் முக்கியத்துவம் பற்றி நிறையக் கேட்டிருக்கின்றனர், தொலைக்காட்சியில் வரும் ருஷ்ய மொழி நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள இவர்கள் விரும்புகின்றனர், மாஸ்கோவிற்குச் செல்ல வேண்டுமென ஆசைப்படுகின்றனர், ருஷ்ய மொழியில் பேசும் தம் வயதுச்சிறுவர் சிறுமியருடன் கலந்து பழக விரும்புகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவர்களுக்கு ருஷ்ய மொழி போதிக்க எனக்கும் பல காரணங்கள் உள்ளன.

தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில். ருஷ்ய மொழி உங்களது பன்முக வாழ்வின், நமது மாபெரும் நாட்டுக் குடிமகனின் தொட்டிலாகும்.

ஓ, எனது சொந்த ஜார்ஜிய மொழியே! உனது புதல்வர்கள் பலரைப் போன்றே என்னுள்ளும் எனது மக்களின் மனச்சாட்சி, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் எல்லாவற்றையும் ஊட்டி என்னை மனிதனாக்கியிருக்கின்றாய்! ஜார்ஜியாவை எனக்குப் பரிசாக வழங்கியிருக்கின்றாய், இதன் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய அக்கறையை என் மீது சுமத்தியிருக்கின்றாய்! தாராள மனப்பான்மை மிக்க, நேர்மையான ஜார்ஜிய மொழியாகிய நீதான், நான் சோவியத் நாட்டின் குடிமகன் என்று பெருமிதமடையக் கற்றுக் கொள்வதற்காக என்னை உன் மாபெரும் சகோதரனாகிய ருஷ்ய மொழியிடம் அனுப்பியிருக்கின்றாய்!

ஓ, மாபெரும் சர்வதேசியமாகிய ருஷ்ய மொழியே, உண்மையான ருஷ்ய மனநிலையைப் பேணிக்காக்கும் மொழியே! கலந்து பழகும் மகிழ்ச்சிக்காக ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற ஏராளமானோரைப் போன்றே எனக்கும் நம்பகரமான பாலமாக நிற்கிறாய்; இப்பாலம் சகாப்தங்கள், கலாசாரங்களின் ஊடாக ருஷ்யர்களின் இதயங்களை நோக்கி, விரிந்து பரந்த என் தாயகத்தின் பல்வேறு மக்களினத்தவரின் இதயங்களை நோக்கி, நல்லெண்ணம் கொண்ட உலக மக்களின் இதயங்களை நோக்கிச் செல்கிறது.

குழந்தைகளே, நீங்கள் கண்டிப்பாக மாஸ்கோவிற்குச் செல்வீர்கள், லெனின் கல்லறை, கிரெம்ளின் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பீர்கள், உங்கள் தாயகத்தைப் பற்றிய பெருமிதம் உங்களை ஆட்கொள்ளும். நீங்கள் – அனேகமாக முதன்முதலாக – உங்களில் ஒவ்வொருவரும் மாபெரும் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காகப் பிறந்திருக்கின்றீர்கள், உங்கள் மீது பெரும் நம்பிக்கைகள் உள்ளன என்பதை உணருவீர்கள். ஒரு வேளை நீங்கள், சோவியத் யூனியனின் குடிமகனாக இருப்பது எவ்வளவு கெளரவமானது, பொறுப்புமிக்கது என்பதை முதன் முதலாக உணருவீர்கள். இன்று குறும்புக்காரச் சிறுவர்களாயிருக்கும் உங்களுக்கு ருஷ்ய மொழியைச் சொல்லித் தருகிறேன், இது உங்களுக்கு நீண்ட, தொலைதூரப் பயணங்களுக்கு இறக்கைகளாயிருக்கும். உங்கள் இறக்கைகளில் நீங்கள் எங்கு பறந்து சென்றாலும், எவ்வளவு தொலைதூர பிரதேசங்களுக்குப் போனாலும், எப்படிப்பட்ட மக்களோடு கலந்து பழகினாலும், எங்கும், எல்லா இடங்களிலும் உங்களது ஜார்ஜிய மனப்பாங்கு, திறமை, படைப்பாற்றல், உழைப்பார்வம், நேர்மை, நட்புக் கொள்ளும் குணம் ஆகியவற்றைக் கண்டு மக்கள் மகிழ வேண்டுமென நான் கனவு காண்கிறேன்.

நான் உங்களுக்கு ருஷ்ய மொழியைச் சொல்லித் தரத் துவங்கும் போது என் முன் உள்ள லட்சியங்கள் இவைதான். இதன் மீது உங்களுக்கு அன்பு பிறக்க நான் பாடுபடுவேன். எப்படிப்பட்ட முறையைப் பயன்படுத்துவது? இந்நோக்கங்களின் அடிப்படையில் இதைத் தேடுவேன். எனது முயற்சிகளில் தோல்விகள் ஏற்பட்டால் மன்னியுங்கள், இவை வேண்டுமென்றே செய்யப்படுபவை அல்ல. லட்சியத்தைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்யாமலிருப்பதுதான் முக்கியம்.

சரி, எந்த முறையைப் பயன்படுத்துவது? இது! எப்படிப் பட்டதாயிருக்க வேண்டும்? நான் பின்வரும் கோட்பாடுகள் முக்கியமெனக் கருதுகிறேன்.

முதலில் ஒரு ஜார்ஜியனுக்கு ருஷ்ய மொழியில் பேசக் கற்றுக் கொள்வது எளிதான காரியமல்ல என்றாலும் இது ஒன்றும் முற்றிலும் கடினமான விஷயமல்ல என்பது குழந்தைகளுக்குப் புரிய வேண்டும். பல குழந்தைகள், தம் தவறுகளைக் கண்டு நண்பர்கள் சிரித்துப் பரிகசிக்கக் கூடாதே என்பதற்காக ருஷ்ய மொழியில் பேச அஞ்சுகின்றனர்; பெரியவர்களான பின் கூட இந்த அச்சம் மறைவதில்லை: ருஷ்ய மொழியில் தப்புந்தவறுமாகப் பேச வெட்கப்படுகின்றனர். என் வகுப்புக் குழந்தைகளுக்கு இந்த அச்சம் இருக்கக் கூடாது. அவர்கள் அடிக்கடி சைகைகள் செய்யட்டும், தாய் மொழிச் சொற்களைப் பயன்படுத்தட்டும், தப்புகள் செய்யட்டும். முக்கியமானது என்னவெனில் ருஷ்ய மொழியில் கலந்து பேசும் நாட்டத்தை, மொழியுணர்வை அவர்களிடம் வளர்ப்பதாகும். குழந்தைகளுக்கு நான் எப்படி ருஷ்ய மொழி போதிக்கிறேன் என்பதை அவர்கள் கிட்டத்தட்ட கவனிக்க மாட்டார்கள், ஏனெனில் இது அவர்கள் கலந்து பேசிப் பழகும் போது நேரிடையாக செய்யப்படும்.

இரண்டாவதாக, தமக்கு ருஷ்ய பேச்சு புரிகிறது, தம்மால் ஏற்கெனவே இம்மொழியில் விளக்க முடியும் எனும் உணர்வு இயன்ற அளவு விரைவாகக் குழந்தைகளிடம் தோன்ற வேண்டும். இது இவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும், மொழியைப் பயிலும் ஆர்வத்திற்கு ஊக்கமளிக்கும். குழந்தை என்னிடம் ஏதோ ருஷ்ய மொழியில் கூறுகிறான், நான் உன்னிப்பாகக் கேட்கிறேன், “ஆமாம், ஆமாம், எனக்கும் புரிகிறது” என்று நான் தலையாட்டுகிறேன். இயன்றவரை அதிகமாக, நீண்ட நேரம் பேசும்படி அவனை ஊக்குவிக்கிறேன், “அப்படியா? என்ன? எப்போது இப்படி நடந்தது?” என்றெல்லாம் ஆச்சரியப்படுகிறேன். ஏதோ ருஷ்ய மொழி மீது எனக்கு அக்கறையில்லாதது போன்றும், அவன் சொல்வதன் மீதுதான் அக்கறையுள்ளது போன்றும் பாவனை செய்கிறேன். கதை, கவிதைகளைப் படிக்கும் போது அவர்களுக்கு நன்கு புரிவதற்காகப் பல சமயங்களில் சைகைகளை, பாவனைகளை, நடிப்பைப் பயன்படுத்துகிறேன். சொற்கள், வாக்கியங்கள், சொற்றொடர்களைப் புரியும்படியும் தெளிவாயும் உச்சரிப்பேன்.

ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்குப் புத்தம் புதியவற்றை படிக்கப் போவதில்லை. 10-12 கதைகள், கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வெவ்வேறு பாடங்களில் படிப்பது சிறந்ததாயிருக்கும். குழந்தைகளுக்கு இவை உடனடியாகப் புரியாமலிருக்கலாம், ஆனால் இவற்றை மீண்டும் மீண்டும் படிப்பது இரண்டு விஷயங்களைச் செய்யும்: ருஷ்ய மொழியின் இனிமை, வார்த்தைகளின் ஒலியமைப்பு குழந்தைகளுக்குப் புரியும்; அந்தந்த வார்த்தைகள், சொற்றொடர்கள் படிப்படியாகப் புரிவதும், உள்ளடக்கத்தில் மூழ்குவதும் மொத்தத்தில் புதியவற்றை அறியும் மகிழ்ச்சியைத் தரும். இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் இந்தக் கதைகள், கவிதைகளை இவர்கள் தம் பாடநூல்களில் சந்தித்தால் எவ்வளவு சிறப்பாயிருக்குமென நான் எண்ணுகிறேன். இவ்வாறு படிக்கும் போது முன்னர் கேட்டது புரிந்தும் புரியாதது மாய் நினைவிற்கு வரும். இப்போது எளிதாகப் படித்து, புரிந்து கொள்கையில் குழந்தைக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா! அல்லது இக்கதையை நினைத்துப் பார்க்கையில் ஞாபகத்திலிருக்கும் பல வார்த்தைகள், சொற்றொடர்கள் திடீரெனப் பலவற்றைச் சொல்லும், உடனே குழந்தை “அப்படியா விஷயம், நான் வேறு மாதிரியாக அல்லவா நினைத்தேன்!..” என்று சொல்லிக் கொள்வான்.

படிக்க:
ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !

மூன்றாவதாக, சொல்லிக் கொடுக்கும் போது பாடத்தோடு சம்பந்தப்படாத பேச்சு சூழ்நிலைகளை அடிக்கடி ஏற்படுத்த முயலுவேன். அதாவது, நான் ருஷ்ய மொழியை போதிப்பதைக் குழந்தை உணர மாட்டான், எனக்கு எதையோ சொல்ல விரும்பி, என்னோடு உரையாட விரும்பி பேசத் துவங்குவான். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் விளையாட்டுக்களின் போது தோன்றும். அதுவும் குழந்தைகளே இவற்றைச் சிந்தித்து உருவாக்கும் போது சிறப்பாயிருக்கும். விளையாட்டுக்களின் விஷயத்தில் நான் பின்வரும் முதுமொழியைப் பின்பற்றுகிறேன்:

எந்த விளையாட்டுகள் எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்தும் ஒவ்வொருவரையும் தனித்தனியாயும் சுய கெளரவ மட்டத்திற்கு உயர்த்துகின்றனவோ அவற்றைத்தான் வகுப்பறைக்கேற்ற விளையாட்டுகளாகக் கருத முடியும். வேறு விளையாட்டுகள் குழந்தைகளின் மேன்மைக்கு சிறிதளவு பங்கமேற்படுத்தினாலும் இவை வகுப்பறைக்கு ஏற்றவையல்ல, இவற்றை வகுப்பறையில் அனுமதிப்பது ஒழுக்கக் கேடானது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க