குடந்தை அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் 8/10/12 அன்று இரவு உணவில் பல்லி விழுந்துள்ளது, இரவு உணவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு வாயில் நுறை தப்பி, மயக்கம் ஏற்பட்டதும், உடனடியாக அவர்களை மற்ற விடுதி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின் மற்ற மாணவர்கள் விடுதி வாசலில் (குடந்தை – நீலத்தநல்லூர்- செயங்கொண்டம்) சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்களை அதிகாரத் திமிரில் அணுகிய போலீசாரையும் அதிகாரிகளையும் துணிச்சலோடு தட்டிக்கேட்டனர், அவ்வழியே சென்ற பு.மா.இ.மு. தோழர்கள். ”சார் நீங்க எந்த ஜெயில வேணா போட்டுக்குங்க, ஆனா எங்களுக்கு தீர்வு கிடைக்கமா போமாட்டோம்” என்று உறுதியாக நின்றனர் விடுதி மாணவர்கள். மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்களை போலீசு வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர்.

சட்டவிரோதமான முறையில் மேல காவிரி ஆற்றுப் பாலம் அருகே வேனை நிறுத்தி மாணவர்களிடம் ‘பேச்சுவார்த்தை’ நடத்தினர் போலீசார். இத்தகவலறிந்து குடந்தை பு.மா.இ.மு. அமைப்பாளரும், குடந்தை அரசினர் கலைக்கல்லூரி மாணவியுமான தோழர் தமிழ், ” கொட்டும் மழையில் மாணவர்களை இங்கு ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? ஏன் இன்னும் உணவு கொடுக்கவில்லை” என்று கேள்வியெழுப்பினார். மண்டபம் கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை என மழுப்பினர் போலீசார்.

படிக்க:
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !
உரிமை கேட்டால் சஸ்பண்ட் ! குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் !

ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவரை வைத்து மாணவர்களிடம் நைச்சியமாகப் பேசி கலைக்க முயற்சித்தனர் போலீசார். ” ஒரு மாதத்திற்குள் விடுதி பிரச்சினைகளை சரி செய்துவிடுகிறேன் கலைந்து செல்லுங்கள்” என்றார், ஆ.தி.ந. துறை அதிகாரி. ”நீங்க சொல்ற வாக்குறுதியை அப்படியே கைப்பட கடிதமா எழுதிக் கொடுங்க கலைந்து செல்கிறோம்” என்று பு.மா.இ.மு. தோழர் கேட்டதற்கு, ” அதெல்லாம் எழுதித் தரமுடியாது” என்று திமிராக மறுத்தார் அந்த அதிகாரி.

நள்ளிரவு நேரம் என்பதும், மழை பெய்துக் கொண்டிருந்ததாலும் அடுத்தகட்டமாக போராட்டத்தை எவ்வாறு தொடர்வது என்று கலந்தாலோசித்தனர். மறுநாள் காலை (9/10/18) குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர்களிடம் விடுதி மாணவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கி தமது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

விடுதி மாணவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்ட குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “சோறு கேட்டா குத்தமா… உரிமைய கேளு சத்தமா“ என்ற முழக்கத்த்தோடு சாலைமறியல் போராட்டமாக மாற்றினர். கல்லூரி முதல்வரும் போலீசாரும் மாணவர்களின் உறுதியான போராட்டத்தை கண்டு பின்வாங்கினர்.

சம்பவத்தை அறிந்து அங்கு வந்த தி.மு.க. குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்கள் தரப்பிலுள்ள நியாயத்தை உணர்ந்த சட்டமன்ற உறுப்பினர், தாசில்தார் மற்றும் துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு வரவழைத்தார்.

மாணவர்களின் உறுதியான போராட்டத்தின் விளைவாக, முதல்நாள் இரவு அதெல்லாம் முடியாது என்று திமிராகச் சென்ற அதிகாரிகளே மறுநாள் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமானது. மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான உறுதிமொழிகளை சட்டமன்ற உறுப்பினரின் சாட்சி கையெழுத்தோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர், அரசு அதிகாரிகள்.


கும்பகோணம், பேச: 9790215184

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க