ஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசினர் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. எல்லா அரசுக்கல்லூரியைப் போன்று இந்த கல்லூரியும் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில்தான் இருந்து வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

குடந்தை அரசு கல்லூரி

பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து படிக்கவரும் மாணவர்கள் அதிகாலையே கிளம்பி கல்லூரிக்கு வருவதால் தங்களது காலை உணவையும், மதிய உணவையும் உட்கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. கழிப்பறை வசதிகூட இல்லாத கல்லூரியில் உணவகம்(கேண்டின்) மட்டும் இருந்துவிடுமா என்ன?.

இந்நிலையில்தான் அக்கல்லூரியில் இயங்கிவரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் கேண்டின் வசதி பெறப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரியின் புதிய முதல்வராக பூங்கோதை என்பவர் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்றது முதல் எப்போதுமே மாணவர்கள் மத்தியில்  ஒரு ‘ஸ்ட்ரிக்ட் ஆபிசராக’ (சிடுமூஞ்சியாக) நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11.07.2018 அன்று கேண்டின் வாசலில் மாணவர்கள் சாப்பிடக் காத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கல்லூரி முதல்வர் மாணவர்களை அங்கு நிற்கக்கூடாது என அதட்டினார்.

பதிலளிக்க வாயெடுத்த மாணவர்களை பேசவிடாமல் தனது ‘ஸ்ட்ரிக்டான’ பேச்சால் வாயடைத்தார். இதனை கவனித்த பு.மா.இ.மு. தோழர் பகத் முன் வந்து, மாணவர்கள் வெளியூரில் இருந்து வருவதாகவும், காலையில் சாப்பிட நேரம் இல்லாத காரணத்தால்தான் கல்லூரி கேண்டினில் உணவருந்துவதாகக் கூறினார்.

பகத் பேசி முடிப்பதற்குள், “அதுக்கு? வெளியூர்னா இங்க ஏன் படிக்க வந்தீங்க, முடிலைன்னா, காலையில் 5 மணிக்கே சாப்பிட்டு வா” என அதிகாரத் தொனியில் பதிலளித்துள்ளார் முதல்வர் பூங்கோதை.

மாணவர்கள் போராடிப் பெற்ற கேண்டீனில் சாப்பிடக்கூடாது என்று பேசுவதற்கு முதல்வருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று பகத் பதிலளித்துள்ளார். மேலும் பல முறை மாணவ, மாணவிகளுக்கு குடிக்க நல்ல தண்ணீர் கேட்டும், நல்ல கழிப்பறை கேட்டும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார் பகத்.

அதற்கு முதல்வர் “ இது கவர்மெண்ட் காலேஜ், கேண்டின் இப்படி தான் இருக்கும் இஸ்டம் இருந்தா சாப்பிடு, இப்படி தான் பாத்ரூம் இருக்கும் , இஸ்டம் இருந்தா போங்க.. இப்படிதான் காலேஜ் இருக்கும் இஸ்டம் இருந்தா படிங்க, இல்ல டி.சி வாங்கிட்டு கிளம்புங்க” என அதிகாரத் திமிரை காட்டியுள்ளார்.

பதிலடியாக நமது தோழர் “ எங்கள் உரிமைகளை எப்படி பெறணும்னு எங்களுக்குத் தெரியும்…. எங்களுக்கு பாடம் எடுக்குறதுதான் உங்க வேலையே தவிர, எங்களுக்கு ஆர்டர் போடறது இல்ல…” என மாணவர்களின் உரிமையை பேசியுள்ளார்.

முதல்வரோ “உங்க இடத்துல வந்து பேசறதுனாலதான், உங்களுக்குத் திமிரு, என் இடத்துக்கு வந்து பேசுங்க” என மாணவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு வாதம் நடக்கும்போதே மாணவர்கள் 300 பேர் சூழ, நமது தோழரின் தைரியமான பேச்சு மாணவர்களுக்கு நம்பிக்கையையும், முதல்வரின் திமிரான பேச்சு கோபத்தையும் கிளப்பியது.

மாணவர்கள் மத்தியில் “அடிப்படை வசதிகளுக்காக போராட்டம் செய்தே ஆக வேண்டும்’’ என்ற கருத்து வலுவடைந்தது. அதன் விளைவாக 12.07.2018 அன்று சுமார் 2000 மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தை கலைக்க முயன்ற முதல்வர், திரண்டிருந்த மாணவர்களின் முன் வந்து “படிக்க விருப்பான மாணவர்கள் உள்ளே போங்க’’ என மிரட்டியிருக்கிறார். மாணவர்கள் அனைவரும் உள்ளே போகாமல் முதல்வர் முகத்தில் கரியைப் பூச, அசிங்கப்பட்ட முதல்வர் ஆத்திரத்துடன் உள்ளே சென்றுள்ளார்.

உள்ளே சென்ற முதல்வர் மாணவர்களின் கோரிக்கை பற்றி அக்கறை காட்டாமல், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், போலீசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். மேலும் போராடக்கூடிய மாணவர்களை அச்சுறுத்தும் வகையில், முன்னணியான நான்கு தோழர்களை குறிவைத்து சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம்.

அதில் ஒருவருக்கு கல்லூரிக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார், மீறி கல்லூரிக்குள் நுழைந்தால் கைது செய்யவும் உத்திரவிட்டுள்ளார் முதல்வர் பூங்கோதை.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இடைநீக்கத்துக்கு காரணம் “அனுமதியின்றி போராட்டம் நடத்தி, கல்லூரி நலனுக்கு தீங்கு ஏற்படுத்தியதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை” என கூறியுள்ளது கல்லூரி நிர்வாகம்.

ஸ்டெர்லைட், 8 வழிச் சாலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ போன்ற தேசத்தை அழிக்கும் நாசகாரத் திட்டத்தை எதிர்த்து பேசுபவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என பி.ஜே.பி குற்றஞ்சாட்டுவதைப்போல், இங்கும் கல்லூரிக்கும், கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காகவும் போராடிய மாணவர்களை கல்லூரி நலனுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இனி கக்கூசுக்காக போராடினால்கூட தேசவிரோதம் என கூறுவார்கள் போலும்.

ஒரு மோடி, ஒரு எடப்பாடி மட்டுமல்ல இது போன்று முக்கிய உயர்பதவிகளில் பல மோடி’களும் எடப்பாடிகளும் உள்ளனர்..

”உரிமைகளைப் பெறாமல் விடமாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்..” என மாணவர்கள் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாரகின்றனர்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, குடந்தை
தொடர்புக்கு : 97902 15184

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க