Monday, August 15, 2022
முகப்பு வாழ்க்கை மாணவர் - இளைஞர் உங்க வீட்டில் நாங்களும் எங்க விடுதியில் நீங்களும் தங்கலாமா ?

உங்க வீட்டில் நாங்களும் எங்க விடுதியில் நீங்களும் தங்கலாமா ?

-

தரம் குறைந்த உணவு, சுகாதாரமற்ற குடிநீர்

திருச்சி அரசு அம்பேத்கர் விடுதி மாவணர்களின் உள்ளிருப்புப் போராட்டம் !

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர் அரசு அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சே்ாந்த மாணவர்கள் 250 பேர் தங்கி படித்து வருகின்றனர். கழிவறை வசதி கேட்டும், நல்ல சோறு, நல்ல தண்ணீர் வசதி கேட்டும் விடுதியின் அவலநிலைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதிகடந்த டிசம்பர் மாதம் (2013), “சுகாதாரத்தைப் பற்றி வாய்கிழிய வகுப்பெடுக்கும் மாவட்ட ஆட்சியரே! கழிவறையை கட்டி கொடு, இல்லையேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து விடு!” என புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் இணைந்து நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டினோம்.

அதன் பிறகு, நிர்வாகம் புதிய கழிவறை கட்டிக் கொடுத்தது. பராமரிப்பின்றி கிடந்த கழிவறைகளை சீர்செய்தது. விடுதியில் உள்ள முட்புதர்களை வெட்டியதும், தண்ணீர் குழாய்களை போட்டு தருவதும் என கண்துடைப்பு நாடகமாக பெயரளவுக்கு சில பராமரிப்பு வசதிகளை செய்து கொடுத்தனர்.

அப்போது, ‘போர்டு மாணவர்களின் சாப்பாட்டை கெஸ்ட்டாக தங்கி இருக்கும் மாணவர்கள் வாங்கிக் கொள்வதும், கழிவறையை பயன்படுத்தியதும்தான் பிரச்சனை, அவர்கள் தான் போராடுகிறார்கள்’ என்று கெஸ்ட் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றியது. மாணவர்கள் நலனில் அக்கறை காட்டியது போல அதிகாரிகள் நடித்தனர்.

குள்ளநரி சாயம் வெளுத்து போனது போல, மாவட்ட அதிகாரிகளின் யோக்கியதை அம்பலமாக தொடங்கியது.

02-07-2014 அன்று காலை குடிநீர் பிடிக்கச் சென்ற மாணவர்கள் குடிநீர் சகதி கலந்த செம்மண் நிறத்தில் வருவதை கண்டனர். மேலும், கல்லூரி துவங்கி ஏழு நாட்கள் ஆகியும் தரம் குறைந்த உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவது, கழிவறையை திறந்து விடாமல் பூட்டி வைத்திருப்பது என மாவட்ட நிர்வாகம் மாணவர்களை வஞ்சிக்க ஆரம்பித்தது. அதிகாரிகள் தன் வீட்டில் குளிரூட்டப்பட்ட மேற்கத்திய பாணி கழிவறையில் மலம் கழிக்கின்றனர். ஆனால் இங்கு விடுதி மாணவர்கள் திறந்த வெளியில், முட்புதர்களில் மலம் கழிக்கின்றனர்.

தொடர்ந்து இது போன்ற இன்னல்களை பொறுக்க முடியாத மாணவர்கள் பு.மா.இ.மு வுடன் தொடர்பு கொண்டு, விடுதி மாணவர்களும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்களும் அன்று காலையே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் வந்த அப்பகுதி காவல் ஆய்வாளர் முருகவேல், ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்வது போல, சகதி கலந்த குடிநீரை விடுதி அட்டண்டரிடம் கொடுத்து, “இந்த நீரை நீ குடிய்யா? பாக்கலாம்”, என்று கூறி, பிறகு அந்த நீரை அவர் குடித்து காட்டினார். பிறகு அட்டண்டர் குடித்தார். தனது சொந்த செலவில் குடிநீர் வரவழைப்பதாக கூறி போராட்டத்தை முடிக்கக் கூறினார்.

“ஒரு நாள் கொடுப்பீங்க சார், வருடம் முழுவதும் கொடுப்பீங்களா?” என்று மாணவர்கள் கேட்டனர். “எங்கள் விடுதி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும், நல்ல தண்ணீர் வர வேண்டும்” என பேசிய மாணவர்கள் “அதிகாரியை வரச்சொல்லுங்கள்” என்று அந்த காவல் ஆய்வாளருக்கு பதிலடி கொடுத்தனர்.

அதன்பின் வந்த கோட்டாட்சியர் பஷிர் அலி, வழக்கம் போல் பிரச்சனையை கேட்டு மாணவர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பேசினார். உடனே மாணவர்கள், “சார் செய்து தரேன்னு சும்மா சொல்லாதீங்க சார்…, ஏன் இத்தனை நாளா எதுவும் செய்யலைனு பதில் சொல்லுங்க..” என கேள்வி கேட்டு அவரை சூழ்ந்து கொண்டனர்.

பின்னர் புதிய பொறுப்பு என அறிவித்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சொர்ணா பியுலா அங்கு வந்து, “10 அல்லது 15 நாட்களில் சரிசெய்வோம்” என திமிராக பேசினார்.

உடனே மாணவர்கள் பதிலடியாக, “அப்ப அதுவரைக்கும் உங்க வீட்டையும், கக்கூசையும் திறந்து விடுங்க… நாங்க அங்க தங்கியிருக்கோம்! நீங்க இங்க எங்க விடுதில தங்கி பாருங்க, அப்ப தெரியும் எங்க கஷ்டம் என்னனு…” என ஆதங்கத்தோடு பேச வாயை மூடினார் தாசில்தார்.

உடனே சுத்தமான தண்ணீர், நல்ல உணவு, நூலகவசதி, பத்திரிக்கை, மின்விசிறி போன்றவை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தபின் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

அன்று மாலை வந்த உதவி கலெக்டர் முருகையா, ‘அமைப்பில் இணைந்து போராடினால் படிப்புக்கு பிரச்சனை’ என மாணவர்களை மிரட்டினார்.

பிறகு நாம் தலையிட்டபோது ‘மாணவர் அமைப்பிற்கு விடுதியில் என்ன வேலை’ என பு.மா.இ.மு தோழர்களை பார்த்து பணிந்து கேட்டார்.

“UGC விதிமுறைப்படி கல்லூரியிலும், விடுதியிலும் மாணவர்கள் கோரிக்கைகாக மாணவர்கள் சங்கமாக, அமைப்பாக சேர்ந்து செயல்படலாம் என உரிமை உள்ளது. அதனால் விடுதியில் அல்லது கல்லூரிகளில் எதாவது பிரச்சனை என்றால் மாணவர்கள் எங்களிடம் (பு.மா.இ.மு) தான் சொல்கிறார்கள். எந்த அதிகாரியிடமும் சொல்வதில்லை. மாணவர் உரிமைக்காக போராடுவது எங்கள் உரிமை. அதை மறுப்பது சட்டப்படியும், நீதிப்படியும் தவறு, மறுத்தால் பணிந்து போக மாட்டோம்” என்று கூறினோம்.  “மாணவர்களை சங்கமாகசேரக் கூடாது என்று மிரட்டினால் – UGC சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் உங்கள் யோக்கியதையை அம்பலப்படுத்தி போஸ்டர் போட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்” என்று கூறிய போது வாயை மூடிக் கொண்டு ஓடிவிட்டார் உதவி கலெக்டர் முருகையா.

மாணவர்கள் அமைப்பாக இருந்து போராடினால் மட்டுமே வெற்றி என்று கூறியதை விடுதி மாணவர்கள் ஆதரித்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

 1. நிச்சயமாக இப்படிப்பட்ட போராட்டங்கள் தான் உரிமைகளைப் பெற்றுத்தரும். வருடாவருடம் இவற்றிற்கெல்லாம் நிதி ஒதுக்கப்படுவதும் அவை உரி முறையில் பயன்படுத்தப்படாது அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் சட்டைப்பைகளையும் நிரப்புவதும் வழமையாகிவிட்டது.

  மறுபுறத்தில் கிடைக்கப்பெறும் வசதிகளை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் முக்கியமானது. உதாரணத்திற்கு அரச கல்லூரியொன்றின் விடுதியொன்றில் தங்கிப்படித்த சில வாரங்களுக்குள் அங்கு உரிய முறையில் நீர்வசதிகளுடன் இருந்த கழிவறையை தினமும் அசிங்கப்படுத்தி வைக்கும் சில மாணவர்களின் செய்கையால் வெறுப்படைந்து விடுதியிலிருந்து வெளியேறவேண்டியேற்பட்டது. விடுதிக் காப்பாளர் கழிவறையை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று சுவரொட்டிகளை பலமுறை ஒட்டியும் அவர்கள் திருந்தவில்லை. இப்படியே விடுதியின் சுவர்களெல்லாம் ஆபாச வசனங்களாலும் (அவை கவிதைகளாம்!) படங்களாலும் நிறைந்திருந்தது.

  • உரிமை தேவை. கடமை கிடையாது.

   ஒரு வசதி இருந்தால் அதை முறையாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.பராமரிப்பதும் பழுது பட்டால்சரி செய்ய வேண்டியதும் வேறு யாரோ!பொது சொத்து எல்லோருடையதும் அல்ல யாருடையதோ !

   இது நாட்டின் எல்லா மட்டங்களிலும் உள்ள வியாதி.

 2. சென்னையிலேயே இந்த ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளன. இரண்டு விடுதிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது, எனது நண்பன் ஒருவரின் சகோதரர் இங்கு தங்கி படித்து வந்தார், அவரைப் பார்க்க அங்கு போயிருக்கிறேன். அடிப்படை வசதிகள் கூடக் கிடையாது. கழிப்பறைகளைப் பற்றி பேசக் கூடத் தேவையில்லை. மாணவர்கள் எல்லாம் பாயில் அல்லது வெறும் நிலத்தில் தான் தூங்க வேண்டும், விடுதிக்குள் நுழைந்தவுடனேயே குப்பைகளினதும், கழிவுகளின் நாற்றம் தாங்க முடியாது.

  நான் எனது நண்பனின் தம்பியின் அறையில் குறைந்தது எட்டுப் பேராவது இருந்தார்கள். எனது நண்பனின் சகோதரன் எழுந்து, செம்பிலிருந்த தண்ணியைக் கொண்டு வந்து தந்தார், எனக்கு ஒன்றும் புரியவில்லை, கிராமத்தில் அப்படித் தான் வரவேற்பார்களாம். இந்தியால் பாட்டில் தண்ணீரைத் தவிர வேறெந்த தண்ணீரையும் குடிக்காத நான், அன்போடு தந்த அந்தத் தண்ணீரைக் குடித்ததால், அடுத்த நாள் டாக்டரிடம் போக வேண்டி இருந்தது. உணவும் மிகவும் மோசம், இரண்டு வாளிகளில் ஒரு பெரிய கட்டி சோறும், மற்ற வாளியில் தண்ணியாக ஏதோ இருந்தது, அது சாம்பாராம். இந்த நிலைமையால் படிக்கவென்று வந்த பெரும்பாலான மாணவர்கள் கல்யாண மண்டபங்களிலும், விழாக்களிலும் வெயிட்டர்களாகவும், சமையல்காரர்களாகவும் பகுதி நேர வேலைக்குப் போய் விட்டு வந்து, களைப்பில் தூங்கினால், அடுத்த நாள் வகுப்புகளுக்குக் கூடப் போவதில்லையாம். இந்த விடுதிகள் மாணவர்களுக்கு மட்டுமன்றி, ஊரிலிருந்து வந்து சென்னையில் வேலைப் பார்க்கிற சிலருக்கும், ஊரிலிருந்து சென்னைக்குப் பயணம் செய்யும் அங்கு தங்கியுள்ள மாணவர்களின் உறவினர்களுக்கு ஹோட்டலாகவும் பயன்படுகிறது, எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. சாதியடிப்படையில் இல்லாமல், வசதி குறைந்த மாணவர்களுக்காக, பொதுவாக எல்லோருக்குமென்று இந்த விடுதிகளை நடத்தினால் நிலைமை சீரடையலாம் என்று நான் நினைத்ததுண்டு, இங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மட்டும் தங்குவதால் தான் யாரும் அக்கறைப் படுவதில்லையோ என்ற எண்ணம் இந்த விடுதிகளைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

  • வியாசன் என்ற புயல் சென்னையை மையம் கொண்டு வீசியமைக்கு நன்றி.நம் தளித்திய தம்பி, தங்கையர் விடுதிகள் நிலை குறித்தும்,உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்த வியாசனுக்கு மிக்க நன்றி.எல்லாமே இங்கு மனு தர்மத்தின் அடிப்படையில் தான் இயங்கின்றன என்ற விடயம் அறிய வியாசன் அடுத்த முறை வரும்போது சென்னை I I T மாணவர் விடுதியையும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டுகின்றேன்.இரு விடுதிகளுக்கும் உள்ள ஏற்ற தாழ்வை அப்போது நாம் எளிமையாக உணர முடியும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க