யோத்தியில் பாபர் மசூதி உள்ள இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கு வருகிற 10-ம் தேதி  விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை வரும் 10-ம் தேதி அதற்குரிய அமர்வு விசாரிக்கும் எனக்கூறி 30 நொடிகளில் வழக்குக் கேட்பை முடித்தனர்.

மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஸ் சால்வே, ராஜீவ் தவான் ஆகியோர் வெவ்வேறு தரப்பிலிருந்து வாதாட காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு தங்களுடைய தரப்பைச் சொல்ல எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அவசர வழக்காக அயோத்தி வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்த மற்றொரு மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

படிக்க:
♦ அலகாபாத் உயர்நீதிமன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு !
♦ பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் !

அலகாபாத் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு, செப்டம்பர் 30-ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி நிலத்தை ராமரின் பிறந்த இடம் என்றும், பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, சன்னி வஃக்பு வாரியம், ராம்லாலா விராஜ்மன் ஆகிய மூவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிலுவையில் இருந்தன.

உத்தர பிரதேச அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, மேல் முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனு செய்திருந்தது. இந்த மனுவின் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ். கே. கவுல், நீதிபதி கே. எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜனவரி முதல் வாரத்தில் அதற்குரிய அமர்வு அமைக்கப்படும் என்றும், அதன் பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி ஜனவரி 10-ம் தேதி அதற்குரிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் வரவிருப்பதை ஒட்டி, சங் பரிவாரங்கள்  ராமர் கோயில் விசயத்தை மீண்டும் கையிலெடுக்க ஆரம்பித்துள்ளன. நான்கரை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, பாஜக ஆட்சி முடிய இருக்கிற நான்கு மாதத்தில் கோயிலை கட்டியே ஆகவேண்டும் என முழங்குகின்றன.  அண்மையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அயோத்தி தொடர்பான கேள்விக்கு பதிலளித்திருக்கும் மோடி, உச்சநீதிமன்ற ஆணை இல்லாமல் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

படிக்க:
♦ பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
♦ பாபர் மசூதி வழக்கு : மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன் !

பாஜக-வைப் பொறுத்தவரை அயோத்தி பிரச்சினையில், நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்காது என்பதை அறிந்து வைத்திருக்கிறது. அதே சமயம் சங் பரிவாரங்களைத் தூண்டிவிட்டு, அயோத்தி பிரச்சினையை  வாக்கரசியல் லாபத்துக்காக பயன்படுத்தவும் திட்டமிடுகிறது.


கலைமதி
செய்தி ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க