Tuesday, April 20, 2021
முகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் !

பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் !

-

பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் !

– எஸ்.என்.எம். அப்தி, பத்திரிக்கையாளர்.

து பாபர் மசூதி இடிப்பின் 25 -ஆம் ஆண்டு. 1992, டிசம்பர் -6 அன்று அத்வானியின் மேற்பார்வையில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. நாட்டையே ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்த அந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அவர்களின் கையில் இன்று நாடே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பத்திரிக்கையாளர், எஸ்.என்.எம். அப்தி.

நாட்டைக் காவி இருள் கவ்வத் தொடங்கிய அந்த நாட்களை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். கடந்த கால வரலாறைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல, வரவிருக்கும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கு அது அவசியம்.

எஸ்.என்.எம். அப்தி, புகழ்பெற்ற பத்திரிகையாளர். பீகார் மாநிலம் பகல்பூரில் விசாரணைக் கைதிகள் பலரின் கண்களில் ஆசிட் ஊற்றி அவர்களைக் குருடாக்கிய போலீசின் கொடூரமுகத்தை 1980 -இல் சண்டே வார இதழில் அம்பலப்படுத்தியவர். புலனாய்வு இதழியலின் ஒரு முன்னோடி. 1992 -இல் இல்லஸ்டிரேடட் வீக்லி இதழின் பத்திரிகையாளராக அயோத்திக்குச் சென்ற அப்தி, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட ஒரு குடிமகனாக தனது அனுபவத்தை விவரிக்கிறார்.

*****

நான் முஸ்லீமாகப் பிறந்தவன். எனது தாய் எல்லா தாயையும்போல என்னைப் பாலூட்டி வளர்த்தாள். எனது தந்தை ஒரு முஸ்லீமின் பழக்க வழக்கங்களைக் கற்றுத் தந்தார். வாரணாசியில் பிறந்தேன், பீகாரில் படித்தேன்; பின் கல்கத்தாவில் குடிபுகுந்து வளர்ந்தேன்; கல்கத்தாவில் என்னை வளர்த்து அன்பை ஊட்டியவர் ஓர் இந்துத் தாய். ஆக, எனக்கு இரண்டு அம்மாக்கள்.

1990 -ல் கல்கத்தாவில், ஓர் இந்துப் பெண்ணை மணம் முடித்தேன். இப்போது ஒரு மகன் இருக்கின்றான். அவனுக்கு முஸ்லீம் – இந்து இரண்டு பக்கமும் மாமா – அத்தைமார்கள் ஏராளம். இரண்டு கலாச்சாரமுறைகளும் அவனுக்கு அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.

டிசம்பர் 2 – நான் அயோத்திக்குப் பயணமானேன். எனது இரண்டு அம்மாக்களும் பத்திரிக்கைத் துறை நண்பர்களும் ஒரே மாதிரி புத்திமதி சொன்னார்கள் – ‘பேசாமல் ஒரு இந்துப்பெயரைப் பயன்படுத்து; அதேபோல் நடந்து கொள்.’ எனது இந்துத் தாயை சமாதானப்படுத்திய போது நான் சொன்னேன்; “அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டால், ஒரேயடியாக இந்தியாவை விட்டுப் போக வேண்டியதுதான்.”

லக்னோவை அடைந்தபோது நகரையே அச்சம் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தது. எனக்கு அறிமுகமான மதச்சார்பற்ற நண்பர் தான் நேரில் கேட்ட, பார்த்த செய்திகளை எனக்குச் சொன்னார். என் மனத்தில் பல கேள்விகள், கல்யாண் சிங் அரசாங்கத்தின் மீது உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றி உச்ச நீதிமன்றம் ஏன் தீர்ப்பு வழங்கவில்லை? உ.பி. அரசாங்கம் 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதே முறையற்றது என்ற வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதே இடத்தில் கரசேவை நடத்த ஏன் அனுமதி வழங்கப்பட்டது? மத நம்பிக்கை, சட்டத்தைக் காட்டிலும் பெரியது என்று எப்போதும் பிதற்றி வரும் பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி., – பஜ்ரங்தள் கும்பலிடம் உச்சநீதிமன்றம் ஏன் மலையளவு நம்பிக்கை வைக்கவேண்டும்?

வியாழன், டிசம்பர் 3, 1992 :

லக்னோவிலிருந்து இயங்கும் ஒரு பத்திரிக்கையாளரை எனக்கு மிகவும் பிடிக்கும். “அயோத்திக்குப் போவதானால் ஒரு இந்துப் பெயரோடு போ” என்று அவரும் அம்மா சொன்னது போலவே சொன்னார். அது அதிர்ச்சி அளித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே அவர் அயோத்தி விஷயங்களை எழுதியபோதெல்லாம் இந்துப்பெயரைத்தான் பயன்படுத்தினார்; அவர் ஒரு முஸ்லீம்.

1980 -களின் பிற்பகுதியில் பாபர் மசூதி வளாகத்தில் ராமருக்குக் கோவில் கட்டுவோம் என்ற மதவெரி முழக்கத்தை முன்வைத்து எல்.கே. அத்வானி நடத்திய ரதயாத்திரை (கோப்புப் படம்)

மாலை மங்கிய நேரத்தில் பைசாபாத் சென்றேன். மொத்தம் 250 பத்திரிக்கையாளர்கள் அங்கு நிரம்பி வழிந்தார்கள். ஒரு விடுதியின் முதலாளி கே.கே.கபூர் என்பவர் சொன்னார், “இன்னொரு 10 வருஷம் போனாலும் கோவிலைக் கட்ட முடியாது. நான் இன்னும் சில அறைகள் கட்டப்போகிறேன். அடுத்த கரசேவைக்கு எல்லாப் பத்திரிக்கையாளர்களும் என் விடுதியிலேயே தங்கலாம்”

அயோத்திக்குச் செல்லும் சாலை முழுக்க கரசேவகர்கள் நிரம்பிக் கிடந்தார்கள். “யே அந்தர் கி பாத்ஹை, போலீஸ் ஹமாரே சாத் ஹை!” (உனக்கொரு ரகசியம், போலீஸ் எங்கள் வசம்) என்று அவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள்.

பாபரி மசூதிக்கு வெளியே காவலில் இருந்த போலீஸ் ஒருவர் புரோகிதர் கொடுத்த ‘பிரசாதத்’தை வாங்கி மென்று கொண்டிருந்தார். பிரதேச ஆயுதப்படை ஜவான்கள் பஜ்ரங்தளத்தின் சின்னம் பொறித்த காவி ரிப்பனைத் தலையில் கட்டிக்கொண்டு ‘ஜெய் சியாராம்’ முழக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அயோத்தியில் அஷிம் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றேன். அது பல நடப்புக்களை வெட்ட வெளிச்சமாக்கியது. பாபரி மசூதிக்கு அருகாமையில் 2.77 ஏக்கர் நிலத்தை பி.ஜே.பி. அரசாங்கம் கைப்பற்றியது செல்லாது என்று வழக்கு தொடுத்தவர் இந்த அன்சாரிதான். டிசம்பர் 2 அன்று கரசேவகர்கள் அன்சாரி வீட்டுக்குள்ளே புகுந்து தாக்கினார்கள். வருவதை முன்பே ஊகித்துவிட்டதால் அன்சாரி உயிர் தப்பினார். அவரது குடும்பத்தாரை அடுத்த வீட்டு இந்துக் குடும்பப் பெண் கங்காதேவி, தாக்க வந்த கொலைகாரக் கூட்டத்தின் எதிரே மறித்து நின்று காப்பாற்றினார்.

உ.பி. அரசாங்கம் உச்சநீதிமன்றத்துக்கு நவம்பர்-28 அன்று கொடுத்த வாக்குறுதியை மதிக்காமல் கரசேவகர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறது என்பதை அறிந்தவுடன், ”மசூதியையும் 2.77 ஏக்கர் நிலத்தையும் சட்டரீதியாக ஒரு பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்திடம் கோரினார் அன்சாரி, அது தள்ளுபடி செய்யப்பட்டது.

வெள்ளி, டிச. 4, 1992 :

பாபரி மசூதி நடவடிக்கை குழுவின் பரீதாபாத் பகுதி தலைவர் முகம்மது யூனஸ் ஒரு வழக்குரைஞர். நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தார் யூனஸ். முந்திய இரண்டு நாட்களிலும் 16 முஸ்லீம் கல்லறைகளை கரசேவகக் குண்டர்கள் இடித்துத் தள்ளினார்கள். இப்ராகிம் ஷா என்ற முஸ்லீம் ஞானியின் கல்லறையைத் தோண்டி எடுத்துப் போட்டார்கள் என்று கொந்தளிப்பான நிலையை விளக்கினார்.

கரசேவகர்கள் அயோத்தி, பைசாபாத் வீதிகளெங்கும் சுற்றித் திரிந்தார்கள்; முஸ்லிம்களுக்கு எதிராக ஆபாசமாகக் கோஷமிட்டார்கள், பயபீதி ஊட்டினார்கள்.

அயோத்தி ஜானகி பவனம் கோயிலில் மறக்கமுடியாத ஒரு காட்சி பார்த்தேன் – போலீஸ் ஒருவர் தரையில் சப்பனமிட்டு உட்கார்ந்திருக்கிறார்; மடியில் துப்பாக்கி; கையில் ஜால்ரா, வாயில் பக்தி கீர்த்தனை, தெரியாதவர்களுக்கு ஒரு தகவல் சொல்கிறேன் – ஜானகி பவனம் என்பது அயோத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. – வி.எச்.பி. – பஜ்ரங்தள் கூட்டுக் கும்பலின் மடம்.

அன்று விடியற்காலையிலேயே நான் விஸ்வ இந்து பரிசத் மையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. டிச. 6 கரசேவையைப் பற்றி செய்தி சேகரிக்க வி.இ.ப. – விடமிருந்து செய்தியாளர் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். அந்த மையத்தின் இயக்குனர் ராம்சங்கர் அக்னிஹோத்ரி அட்டை கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கும் ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொன்னார். சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுக்கும்போதே உள்ளே நுழைந்த என் நண்பர் என்னை அழைத்தார். அவர் ஆனந்த பஜார் பத்ரிகா – டெல்லி அலுவலகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். அடையாள அட்டையில் ஒரு முஸ்லீம் பெயரோடு நான் நடமாடினால் வெறி பிடித்த கரசேவகர்கள் கொன்றே போட்டுவிடுவார்கள் என்று அவர் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

அவரது ஆலோசனை நினைவில் எழுந்தது. என் இதயம் கனக்க என் பெயருக்குப் பதிலாக, “ஏ.கே.ரே” என்று எழுதினேன், வங்காள மொழியில் இதனை பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தாதபோது, ‘யே கே(ய்) ரே?” (அவன் யார்?) என்று பொருள் கொடுக்கும். என் வங்காளி நண்பர் எனது நகைச்சுவை உணர்வைப் பாராட்டினார்; ஆனால், என் இதயத்தில் ரத்தம் வடிந்தது.
முதல்நாள் தான் தூர்தர்சன் ஒரு செய்தி வெளியிட்டது. மத்திய மந்திரிகளான அர்ஜூன் சிங்கும், ராஜேஷ் பைலட்டும் பிரதம மந்திரியின் தூதராக அயோத்திக்கு வரப் போவதாக, நிலைமையைக் கணிக்கப் போவதாகச் சொன்னார்கள்; வந்தார்கள் – கல்யாண்சிங்கை மட்டும் சந்தித்துவிட்டு உடனே டெல்லிக்குப் பறந்துவிட்டார்கள் பாபரி மசூதிக்கு ஒரு இரங்கல் குறிப்பு எழுதிவிட நினைத்தேன்; பிறகு, பார்க்கலாம், பொறுத்திருப்போம் என்று தள்ளி வைத்தேன்.

சனிக்கிழமை, டிச.5, 1992 :

அயோத்தி, முஸ்லீம்களுக்கும் ஒரு புனிதத்தலம் என்பதை அங்கு சென்ற பிறகு தான் கண்டுபிடித்தேன். இஸ்லாமியத் துதர்களில் ஒருவரது மகனான அஸ்ரத் ஆதம், மணிபர்வத் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்; அந்த இடம் அயோத்தி ரயில் நிலையத்தின் அருகே உள்ளது. அதற்கு சிஷ் பைகாம்பர் என்று பெயர்.

பிரிவினை வரை முஸ்லீம்கள் பெருந்தொகையில் சீரும் சிறப்போடும் வாழ்ந்த நகரம் அயோத்தி; பிறகு பெருவாரி முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார்கள்; பழைய ஆண்டுகளின் சுவடுகளை பல கல்லறைகளிலும், 200 மசூதிகளிலும் இன்றும் காண முடியும். அயோத்தியின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லீம்கள்: 18000 பேரில் 6000 பேர்.

அயோத்தியில் 400 கோயில்கள் இருக்கின்றன; இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பல கோயில்களின் மேனேஜர்கள் முஸ்லீம்களே. 1984-இல் இறந்த மக்குட் அலி சாகும் வரை மாத்ரகீர் கோயிலை நிர்வாகம் செய்துவந்தார்; முன்னுமியான் என்று அழைக்கப்படும் 87 வயதான அன்சார் ஹுசைனைச் சந்தித்தேன் – அவர் 1984-லிருந்து இன்றுவரை ஒருகோயிலின் நிர்வாகி.

அயோத்தியில் கரசேவகர்கள் கலவரம் செய்தார்கள், மசூதிகளைத் தாக்கினார்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர் அன்று மாலை அறிக்கை கொடுத்தார், “அயோத்தியில் நிலைமை கட்டுக்கடங்கியுள்ளது; கரசேவகர்கள் மிகமிக அமைதியாக ஒழுக்கத்தோடு நடந்து கொள்கிறார்கள்.” கரசேவர்கள் பத்திரிக்கையாளர்களின் கார்களைக் கூட விட்டுவைக்கவில்லை, எல்லோரையும் வழிமறித்து ’ஜெய் சியாராம்’ என்று சொல்லச் சொன்னார்களே என்று கேட்ட போது, அவர் ”கரசேவகர்கள் உற்சாகத்தில் அப்படிச் செய்திருக்கலாம்” என்று சப்பைக் கட்டு கட்டினார்.

லக்னோவில் கல்யாண்சிங் பத்திரிக்கையாளரிடம் பேசினார்: “அயோத்தியில் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுக்க முழுக்க கறாராகச் செய்யப்பட்டிருக்கின்றன; உச்சநீதி மன்றத்துக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி சொல்லிலும் சரி, உணர்விலும் சரி முழுமையாகக் காக்கப்படும். பாபரி மசூதியின் ஒரே ஒரு செங்கல் கூட பாதிக்கப்படாது”

கறுப்பு ஞாயிறு, டிசம்பர் 6, 1992 :

சரியாக பிற்பகல் 4:55 மணிக்கு மதச்சார்பின்மைக்கு அயோத்தியில் சாவுமணி அடிக்கப்பட்டது; பாபரி மசூதியின் மத்திய மகுடம் நொறுக்கி வீழ்த்தப்பட்டது – அந்தக் கணத்திலிருந்து இந்தியா மதச்சார்பின்மை நாடல்ல என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. கடைசி போலி, பாசாங்குத்தனம், அடடா, எத்தனை விரைவாக, வேகமாக உதிர்க்கப்பட்டுவிட்டது?

பாபர் மசூதி இடிக்கப்படும் சதிச் செயலைக் கண்டு குதூகலிக்கும் முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி. (கோப்புப் படம்)

மசூதி மீதான தாக்குதல் சரியாக காலை 11.55-க்குத் தொடங்கியது; கரசேவகர்கள் கையில் கோடரிகள், வெட்டுக் கத்திகள், மண்வாரிகள், சம்மட்டிகள், இரும்புக் கம்பிகள் ஆகிய ஆயுதங்களோடு மசூதியின் மகுடங்கள் மீது ஏறினார்கள். நூற்றுக்கணக்கான போலீஸ், அதிகார அரசு எந்திரம் வெறுமனே கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. ஒரே ஒரு லத்திக்கம்பு கூட அசைக்கப்படவில்லை. சிறப்பு மேடையிலிருந்து பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். , வி.எச்.பி., பஜ்ரங்தள் கும்பலின் பெருந்தலைவர்களான எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், முரளி மனோகர் ஜோஷி, விஷ்ணு ஹரி டால்மியா, வினய் கத்தியார், உமா பாரதி, பெண் துறவி ரிதம்பரா ஆகியோர் வெறிகொண்ட அந்த கூட்டத்தை வழி அனுப்பி வைத்தார்கள்.

வலது மகுடம் பிற்பகல் 2.45-க்கும், இடது மகுடம் பிற்பகல் 3.45-க்கும் வீழ்த்தப்பட்டன. சுற்றுச்சுவரும், உள் சுவர்களும் மெள்ளமெள்ளச் சரியத் தொடங்கின; 4.55-க்கு மத்திய மகுடத்தின் மீது இரும்புக் கொக்கி இணைத்த நீளமான கயிறு வீசப்பட்டு மகுடம் இழுத்து எறியப்பட்டது. சூரியன் மறைந்த அந்தி நேரம் – பாபரி மசூதி அங்கே இல்லை; வெறும் சுண்ணாம்புக் கல் சிதிலமாக மசூதி நொறுங்கிச் சரிந்து விழுந்து கிடந்தது. இனி மறுபடி ஒரு சூரிய உதயத்தை பாபரி மசூதி காணப்போவதில்லை.

மத்திய மகுடம் சரியத் தொடங்கிய கடைசி நேரத்தில் ஒலிபெருக்கியைப் பிடித்துக்கொண்டு உமாபாரதி கூச்சலிட்டார்: ”ஏக் தாக்கா அவர் தோ, பாபரி மஸ்ஜித் தோடு தோ.”

எங்கு பார்த்தாலும் கைதட்டல்; பஜனைகள்; கரைபுரண்டு ஓடும் மகிழ்ச்சி ஆரவாரம் உமாபாரதி மறுபடி பஜனைப்பாட்டைத் தொடங்கினார்: ”ராம் நாம் சத்ய ஹை, பாபரி மஸ்ஜித் துவஸ்த ஹை”

பாபரி மசூதிக்கு நேர் எதிரே மானஸ் பவன் விடுதி. அதன் மேல்மாடியில் உள்நாட்டு, வெளிநாட்டு, செய்தியாளர்கள் – கரசேவை பற்றி செய்தி எழுத, படம்பிடிக்க நின்றிருந்தார்கள். ஐந்து மணிநேரம் நடந்த மசூதி உடைப்பை நேருக்கு நேர் பார்த்த அதிர்ச்சியில் ஒன்றிரண்டு இந்துப் பத்திரிக்கையாளர்கள் அடக்கவே முடியாமல் வாய்விட்டு அழுதார்கள். நான் அழவில்லை; கண்ணீர் வெப்பமாய்த் திரண்டது; ஆனால், அதை அடக்கிச் சேமித்துக் கொண்டேன், இனிவரும் 100 வருடங்களில் அழுவதற்காக.

அங்கே மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இங்கே செய்தியாளர்கள் தாக்கப்பட்டார்கள்; திட்டமிட்ட தாக்குதல் – நோட்டுப் புத்தகங்கள் பறித்துக் கிழிக்கப்பட்டன; கேமெராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன; செய்தியாளர்களும், புகைப்படக்காரர்களும் அடித்து விரட்டப்பட்டார்கள்; ஒரு வகையில் அதுவும் நல்லதற்குத்தானோ என்று தோன்றியது – பத்திரிக்கையாளர்கள் இந்துத்துவ வெறியைக் கொஞ்சம் ருசி பார்க்க வேண்டாமா? மத அடிப்படைவாத அமைப்புக்கள் தங்கள் கருத்துக்களை முழுக்க முழுக்கப் பிரச்சாரம்செய்து பிரபலப்படுத்த இதே பத்திரிக்கைத் துறை துணைபோனதல்லவா?

மசூதி இடிக்கப்படுவதற்கு மத்திய ஆட்சி துணையாக நின்றது. மாலத்தீவைக் காக்க ஐந்தே மணிநேரத்தில் இந்தியத் துருப்புக்கள் அனுப்பப்பட்டது சாத்தியமானது; ஆனால், அதுவே பாபரி மசூதியைக் காக்க அனுப்பப்படவில்லையே, ஏன்?

மசூதி இடிக்கப்பட்டுவிட்டது; கரசேவகர்கள் முஸ்லீம் வீடுகளை, வேறுபல மசூதிகளைக் கொளுத்தத் தொடங்கினார்கள். முஸ்லீம் கல்லறைகளைத் தோண்டி எடுத்துப்போட்டு கேவலப்படுத்தினார்கள்; ஆயுதக் காவல்படை கைகட்டி வாய்பொத்தி நின்றது. அத்துமீறி நொறுக்கப்பட்ட ஒரு மசூதிக்குள்ளே அனுமன் சிலை வைக்கப் பட்டது.

நான் அயோத்தியை விட்டுக் கிளம்பினேன். என் இயலாமை மீது, என் மலட்டுத்தனத்தின் மீது கோபம் பொங்கியது. எனது வீரியத்தின் சின்னமான என் மகன் பல மைல் தொலைவில் கல்கத்தாவில் இருந்தான். அவன் முழுவதுமாக முஸ்லீமும் அல்ல, முழுவதுமாக இந்துவும் அல்ல அவனது மதம் எது?

அது எதுவாக இருந்தால் என்ன, அவன் இனி பாதுகாப்பாக வாழ முடியுமா?

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க