privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாஅலகாபாத் உயர்நீதிமன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு !

அலகாபாத் உயர்நீதிமன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு !

-

அலகாபாத் உயர்நீதி மன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு !

பாபர் மசூதி விவகாரத்தில், வரலாறு, மதநம்பிக்கை, அரசியல், சட்டம் ஆகியவற்றை தனது நோக்கத்துக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஏற்ப ஒன்றை மற்றொன்றோடு சேர்த்துக் குழப்பும் வேலையை சங்க பரிவாரம் தொடக்கம் முதலே செய்து வருகிறது.

“ராம ஜென்மபூமி என்பது இந்துக்களின் மத நம்பிக்கை. மத நம்பிக்கை உண்மையா பொய்யா என்று எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. எனவே மசூதி இருக்கும் இடத்தை முஸ்லிம்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்படவேண்டும்” என்பதுதான் இந்த விவகாரம் தொடங்கிய நாள் முதல் பாஜக முன்வைத்து வரும் கோரிக்கை. 1989 -இல் பா.ஜ.க. நிறைவேற்றிய பாலம்பூர் மாநாட்டு தீர்மானமும் வாஜ்பாயி, அத்வானி உள்ளிட்டவர்களின் அறிக்கைகளும் இதைத்தான் கூறுகின்றன.

பாபர் மசூதி இருந்த வளாகத்தை மூன்றாகப் பிரித்துத் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் (இடமிருந்து) தரம் வீர் ஷர்மா, எஸ்.யு. கான் மற்றும் சுதிர் அகர்வால் (கோப்புப் படம்)

பாபர் மசூதியை கடப்பாரையை வைத்துத்தான் இடிக்க வேண்டும் என்பதில்லை, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் இடிக்கலாம் என்ற சாத்தியத்தை சங்க பரிவாரத்துக்கு புரிய வைத்த தீர்ப்புதான் 2010 -இல் வெளிவந்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.

இந்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் புரிந்து கொள்வோமானால், பாபர் மசூதி வழக்கைப் பற்றி மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்தின் யோக்கியதையையும், நீதித்துறையின் யோக்கியதையையும் கூட தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

சிவில் வழக்கில் மனுதாரராக இணைக்கப்படும் இராமன் சிலை!

ராம ஜென்மபூமி என்கின்ற ஒரு மதநம்பிக்கை சார்ந்த விசயத்தை, சிவில் வழக்கின் வரம்புக்குள் கொண்டுவருகின்ற மிகப்பெரிய மோசடி 1989 -இல்தான் அரங்கேறியது. “1959-இல் நிர்மோகி அகாரா தொடுத்திருந்த உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தை சட்டபூர்வமான முறையில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த சிவில் வழக்கைக் கொண்டு வருவதன் வாயிலாகத்தான் சட்டப்படியே மசூதியைக் கைப்பற்ற முடியும்” என்ற “நுணுக்கம்” தேவகி நந்தன் அகர்வால் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்குத் தான் புரிந்திருந்தது.

டிசம்பர் 22, 1949 இரவில் பாபர் மசூதி வளாகத்தில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட குழந்தை ராமன் சிலை. (கோப்புப் படம்)

உரிமையியல் சட்ட விதி 32 -இன் படி (Order 32 of the civil procedure code) இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமையை கடவுள் சிலை பெற்றிருக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. உலகின் பல்வேறு நாடுகளில் மத நிறுவனங்களுக்கு சொத்துரிமை இருக்கிறதேயன்றி, கடவுளுக்கே நேரடியாக அரசியல் சட்டரீதியான உரிமை எந்த நாட்டிலும் வழங்கப்படவில்லை. இது இந்திய அரசியல் சட்டத்தின் தனிச்சிறப்பு.

இதனை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டார் தேவகி நந்தன் அகர்வால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே, பாபர் மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட இராமன் சிலையையே மனுதாரர் ஆக்கி, அந்தச் சிலையின் காப்பாளர் என்ற முறையில், 1959 முதல் நீடித்துவரும் சிவில் வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார் தேவகி நந்தன் அகர்வால். அடுத்த சில ஆண்டுகளில் தேவகி நந்தன் அகர்வால் இறந்து விடவே, அவருடைய இடத்தில் ‘ராமனின் காப்பாளராக’ திரிலோக்நாத் பாண்டே என்பவர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த திரிலோக் நாத் பாண்டே, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு இடையில்தான் பாபர் மசூதி வளாகம் மூன்று பங்காகப் பிரிக்கப்படவேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் மீதான மேல்முறையீட்டைத்தான் உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது என்பதனால், அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

எது மத நம்பிக்கை? – அதை நீதிமன்றமே தீர்மானிக்கும்!

ஒரு குறிப்பிட்ட இடத்தை இராமன் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதால், அந்த இடம் இராமன் சிலையுடைய (அதாவது அதன் காப்பாளருடைய) சொத்தாகிவிட முடியுமா?
பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களின் அடிப்படையிலோ, அனுபவ பாத்தியதை குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலோ பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு உரிமை மூல வழக்கில், அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, கடவுளின் சொத்துரிமை மற்றும் கடவுள் குறித்த இந்து பக்தனின் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தீர்ப்பில் குறைபாடுகள், முறைகேடுகள் பல உள்ளன. முகலாய மன்னர்கள் காலத்தில் ஏராளமான கோயில்கள் இடிக்கப்பட்டன என்ற பா.ஜ.க.வின் பிரச்சாரத்தில் தொடங்கி, இராமன் கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற புனைகதை வரை அனைத்தையும் அப்படியே வழிமொழிந்திருக்கிறது இத்தீர்ப்பு. ஆனால், பாபர் மசூதியின் நிலத்தை இராமன் சிலைக்கு வழங்குவதற்கான சட்டபூர்வமான நியாயத்தை இந்த புனைகதைகள் வழங்கவில்லை.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள்.

அதனை வழங்கியிருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 (மத நம்பிக்கை தொடர்பான உரிமை), பிரிவு 26 (மத நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பான உரிமை) ஆகியவைதான்.
‘மசூதியின் மையப்பகுதியில்தான் இராமன் பிறந்தான்’ என்று இந்துக்கள் நம்புவதாக இந்தத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளுமே ஏற்றுக்கொள்கிறார்கள். அயோத்தியிலேயே சுமார் 5, 6 இடங்கள் இராமன் பிறந்த இடங்களாக கருதப்பட்டு வந்தன. பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்ற கருத்து இந்து பாசிஸ்டுகளால் 80 களில் தொடங்கி உருவாக்கப்பட்ட கருத்தேயன்றி, இந்துக்கள் அனைவரின் தொன்மையான நம்பிக்கை அல்ல.

இராமன் கடவுள் என்பதும் எல்லா இந்துக்களின் நம்பிக்கை அல்ல, இராவணனைக் கடவுளாக வழிபடும் இந்துக்களும் உண்டு. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, சங்கபரிவாரம் உருவாக்கிய கருத்தையே இந்து சமூகத்தின் தொன்மையான, அத்தியாவசியமான நம்பிக்கை என்று வழிமொழிகிறது இத்தீர்ப்பு.

ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாராம்சமான நம்பிக்கை எது என்று வியாக்கியானம் அளிக்கவும், அதன் அடிப்படையில் அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் அந்த மதத்தினரின் உரிமைகளை அனுமதிக்கவுமான அதிகாரத்தை உயர்நீதி மன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ளது.

பார்ப்பனரல்லாதவர்கள் சாமி சிலையைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்ற கருத்தை இந்துக்களின் மதநம்பிக்கை என்று உச்ச நீதிமன்றம் அங்கீகரிப்பதைப் போலத்தான், மசூதியின் மையப்பகுதியில் ராமன் பிறந்தான் என்று இந்து நம்பிக்கையையும் அலகாபாத் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.

மத நம்பிக்கை, சொத்துரிமையாகவும் ஆக முடியுமா?

ஒரு வாதத்துக்கு அது இந்துக்களின் நம்பிக்கைதான் என்று வைத்துக் கொண்டாலும், அத்தகைய மத நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றான் சொத்தின் மீது உரிமை கோரமுடியுமா? அங்கே ஒரு கோயில் இருந்து அது இடிக்கப்பட்டது என்பதையும் ஒரு வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும், 400 ஆண்டுகளாக அது முஸ்லிம்களின் அனுபவத்தில் இருக்கும் சொத்து என்பது உண்மையா, இல்லையா? மேலும், 1949 -இல் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது உண்மையா இல்லையா? எல்லாமே உண்மைதான் என்று ஏற்றுக் கொள்ளும் இந்தத் தீர்ப்பு, மேற்கண்ட கேள்விகளுக்கு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறது.

பாபர் மசூதியைத் திருப்பிக் கட்டக்கோரி 25 ஆண்டுகளாகப் போராடிவரும் இந்திய முசுலீம்கள்

”ஒரு கோயில் இடிக்கப்பட்டு விட்டாலும், அங்கே கடவுள் சிலையே இல்லாமல் போனாலும், அந்த இடம் தனது தெய்வீகத்தன்மையை இழந்து விடுவதில்லை” என்றும், ”இராமன் பிறந்த அந்த இடமே (பூமியே) வாயு பகவானைப் போல தன்னளவில் அங்கே விரவி நிற்கின்ற கடவுளாகும்” என்று கூறி ஸ்மிருதிகளை மேற்கோள் காட்டி இத்தீர்ப்பு விளக்கம் அளிக்கிறது.

இந்தத் தீர்ப்பின் படி, குறிப்பிட்ட அந்த இடம், நிலம் என்ற முறையில் ஒரு சொத்துக்கான தன்மையைப் பெற்றிருப்பது உண்மையே என்றாலும், அந்த நிலமே கடவுளாகவும் இருப்பதால் அந்த இடத்தை (இராமனைத் தவிர) வேறு யாரும் தமது சொத்தாக ஆக்கிக் கொள்ள முடியாது. இறையாண்மை கொண்ட அரசாங்கத்துக்கே கூட அந்த நிலத்தை (கடவுளை) கையகப்படுத்தும் அதிகாரம் கிடையாது என்கிறது இந்தத் தீர்ப்பு.

கோயில் இடிக்கப்பட்டாலும் கோயிலின் கடவுள் தன்மை அகன்றுவிடுவதில்லை என்ற அடிப்படையிலும், ராம ஜென்மபூமியே கடவுளாக இருப்பதாலும், மசூதியைக் கட்டிய பின்னர்கூட அந்த இடம் பாபருடைய சொத்தாகி விட்டதாகக் கருத முடியாது; அது இராமனுடைய சொத்தாகவே இருக்கிறது என்று விளக்கமளிக்கிறது இத்தீர்ப்பு.

மேலும் உரிமையியல் சட்டப்படி இந்துக் கடவுள் நிரந்தர மைனர் என்று கருதப்படுவதால், மைனரின் சொத்தை எதிர் அனுபோகத்தின் மூலம் (adverse possession) பிறர் கைப்பற்றிக் கொள்வது செல்லத்தக்கதல்ல என்று, உரிமையியல் சட்டத்தின் அடிப்படையிலும் இதற்கு விளக்கமளிக்கிறது அலகாபாத் தீர்ப்பு. அந்த இடத்தில் ஒரு மசூதி இருந்தது என்ற உண்மையையே நிராகரிக்கும் இந்த வாதத்துக்கும், பக்தனின் மத நம்பிக்கை வழியாக கடவுள் தன்னுடைய சொத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் ஏற்பாட்டுக்கும் அரசியல் சட்டத்தின் 25 -ஆவது பிரிவுதான் அடித்தளமாக இருக்கிறது.

சட்டப்படி இராம ஜென்மபூமி புனிதம், மசூதி புனிதமில்லை– இதுதான் இந்திய மதச்சார்பின்மை!

எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மத உரிமை இருப்பதாக நாம் கருதிக் கொண்டிருக்கலாம். மதம் என்பது ஒரு தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விசயம் மட்டுமே என்று வரையறுக்கப்படும் இடத்தில்தான் இந்த உரிமை சமமானதாக இருக்க முடியும்.

”கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம், குறிப்பிட்ட இடம் இராமன் பிறந்த இடம்” என்ற நம்பிக்கைகள் இந்து சமூகத்தின் புனிதமான, புராதனமான, அத்தியாவசியமான நம்பிக்கைகள் என்று அங்கீகரிக்கும் அலகாபாத் தீர்ப்பு, “இசுலாமியக் கோட்பாடுகளின் படியே மசூதி என்பது புனிதமானதோ, இறைவனின் இருப்பிடமோ இல்லை” என்றும் விளக்கம் கூறுகிறது. ”தொழுகை நடத்துவதற்கான ஒரு இடம்” என்பதற்கு மேல் மசூதிக்கு மதம் சார்ந்த புனிதத்தன்மை எதுவும் கிடையாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றமும் (இஸ்மாயில் பரூக்கி வழக்கு) இது குறித்து தீர்ப்பளித்துள்ளது.

1992 மசூதி இடிப்பைப் பற்றி இத்தீர்ப்பு எதுவுமே கூறவில்லை. மசூதி என்பது முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை புனிதமான இடம் என்று கருதப்படுவதில்லை என்பதால், பாபர் மசூதி இடிப்பு என்பதை ஒரு வழிபாட்டுத் தலத்தை இடித்ததாக சித்தரிக்க முடியாது என்றும், சட்டவிரோதமாக ஏதோ ஒருகட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்கு மேல் டிசம்பர் – 6ஆம் தேதி நிகழ்வில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும், இஸ்மாயில் பரூக்கி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி சுப்பிரமணியசாமி கருத்து கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அலகாபாத் தீர்ப்பும் இந்த கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது.

மறைந்திருந்து கொன்றாலும் ராமன் வீரனே! திருட்டு சிலையானாலும் ராமன் தெய்வமே!

1949 சிலை வைப்பும், 1992 மசூதி இடிப்பும் சட்டப்படியே குற்றச்செயல்கள். குற்றத்தில் பிறந்தது எப்படி கோயில் ஆக முடியும், புனிதமானதாக முடியும்?

சட்டப்படி குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள், மத ரீதியில் புனிதமாக்கப்பட்டிருக்கின்றன. அவை மத உரிமைகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. பால்ய விவாகம் என்பது சட்டப்படி குற்றம். ஆனால் பால்ய விவாகம் நடந்து முடிந்து விட்டால், அதனை நடத்தி வைத்தவர்களைத் தண்டிக்க முடியுமே அன்றி, அந்தத் திருமணம் செல்லாது என்று ஆகிவிடாது. தீண்டாமை என்பது கிரிமினல் குற்றம். ஆனால், பார்ப்பன அர்ச்சகன் தவிர, மற்றவர்கள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டு என்று கூறுவது மத உரிமை.

இதுதான் சட்டத்தின் நிலை. அதே போல, மசூதியை இடித்ததும், திருட்டுத்தனமாக சிலையை வைத்ததும் குற்ற நடவடிக்கைகளே என்றபோதிலும், அவ்வாறு வைக்கப்பட்ட சிலை புனிதமற்றது ஆகிவிடுவதில்லை. பக்தர்களும் வழிபாட்டு உரிமையை இழந்து விடுவதில்லை.

சட்டவிரோதமானவை எனினும், சட்டப்பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையால் இந்தக் குற்றங்கள் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. தொகுத்துக் கூறினால், 1992-இல் இந்து பாசிஸ்டுகள் கடப்பாரை ஏந்தும் உரிமையை வழிபாட்டுரிமை என்ற பெயரில் உத்திரவாதப்படுத்தியது சட்டப்பிரிவு -25. தற்போது மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதும் சட்டப்பிரிவு -25 தான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் நிகழ்ந்த சம்பவம்தான் மசூதி இடிப்பு.

எனவே, அலகாபாத் தீர்ப்பை முறியடிக்க வேண்டுமானால், பார்ப்பனியத்தையும், பார்ப்பன பாசிசத்தையும், எல்லா வகையான மதப் பிற்போக்குகளையும் பாதுகாத்து நிற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26 -ஐ நாம் இடித்துத் தள்ள வேண்டும். தற்போதைய அரசியல் சட்டத்தின் வரம்புக்குள் நின்று பார்ப்பனியத்தையோ, பார்ப்பன பாசிசத்தையோ ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில அம்சங்களில் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஏனென்றால், பார்ப்பனியம் மட்டுமின்றி, எல்லாவகையான மதப்பிற்போக்குத்தனங்களையும் பாதுகாக்கும் கவசங்களாகவே மேற்கூறிய இரு சட்டப்பிரிவுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இப்பிரச்சினையில் பார்ப்பன பாசிசக் கும்பல் கையாண்டு வரும் உத்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம்.

13 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதா யுகத்தில் பிறந்த விஷ்ணுவின் அவதாரமே இராமன் என்று கூறி, மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களைத் திரட்டியது சங்க பரிவாரம். “இராமஜென்மபூமி குறித்த தொன்மை வாய்ந்த இந்துக்களின் மதநம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தவோ, தீர்ப்பளிக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது” என்றும் வாதிட்டது.

அதே இராமனை இந்து ராஷ்டிர அரசியலின் தேசிய நாயகனாக சித்தரிப்பதற்காக, மொகலாயப் படையெடுப்பு, பாபர் இடித்த இராமன் கோயில், அதற்கான தொல்லியல் ஆதாரம் என்று வரலாற்றைத் துணைக்கழைத்துக் கொண்டது.

1949 -ஆம் ஆண்டில், சட்டவிரோதமான முறையில் இராமன் சிலையை மசூதிக்குள் வைத்து, உரிமையியல் வழக்கு தொடுப்பதற்குத் தேவையான தாவாவை திட்டமிட்டே உருவாக்கியது. இது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், “அந்த இராமன் சிலை, பூமியை வெடித்துக் கிளம்பிய சுயம்பு விக்கிரகம் என்று இந்துக்கள் நம்புவதால், அதற்கு வழிபாடு நடத்துவது அரசியல் சட்டரீதியாக இந்துக்களின் மத உரிமை” என்று கூறி நீதிமன்றத்தில் பூசை நடத்தும் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது. 1986 -இல் பக்தர்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையையும் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டது.

டிசம்பர் 1992 -இல் வழிபாட்டு உரிமை என்ற அடிப்படையில், பஜனை பாடும் உரிமையை உச்ச நீதிமன்றத்திடம் பெற்று, மசூதியை இடிப்பதற்கு அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டது. மசூதி இடிப்பு என்ற அந்த நடவடிக்கை கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டாலும், அந்தக் கிரிமினல் நடவடிக்கையின் மூலம் மசூதியின் இடிபாடுகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்ட இராமன் சிலைக்கு வழிபாடு நடத்துவது தமது மத உரிமை என்று கூறி நீதிமன்றத்திடம் வழிபாட்டு உரிமையையும் பெற்றுக் கொண்டது.

“எந்த இராமனின் பிறப்பிடம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது” என்று சங்க பரிவாரம் வாதிடுகிறதோ, அதே இராமனின் சிலையை (ராம் லல்லா) உரிமை மூல வழக்கில் ஒரு மனுதாரராக்கி, தான் பிறந்த இடத்தைத் தனக்கு கிரயம் செய்து தருமாறு அதே நீதிமன்றத்தின் முன்னால் முறையிடச் செய்து, நிலத்தையும் பெற்றுவிட்டது.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போதுதான், அரசியல் சட்ட உரிமை, மதநம்பிக்கை, வரலாறு, இந்துப் பாசிச அரசியல் ஆகியவற்றை வாளாகவும் கேடயமாகவும் தேவைக்கேற்ப எப்படியெல்லாம் சங்க பரிவாரம் பயன்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

அரசியல் சட்ட வரம்புக்குள் நின்றபடியே பார்ப்பன பாசிசத்தை முறியடித்து விட முடியும் என்ற பிரமையிலிருந்தும் விடுபட முடியும்.

-மருதையன்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க