Saturday, July 13, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்தீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி ?

தீஸ்தா நேர்காணல் : குஜராத் காவிமயமானது எப்படி ?

-

ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின் 4-வது மற்றும் இறுதிப் பகுதி.

அகமதாபாத் மதப் பிரிவினை
2002-ல் முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறித் தாக்குதல்களைத் தொடர்ந்து வேணுகோபால் சொசைட்டி குடியிருப்புப் பகுதியில் இந்து, முஸ்லீம் பகுதிகளுக்கிடையே பிரிப்பதற்காக கட்டப்பட்டுள்ள சுவர். (படம் : நன்றி Frontline http://www.frontline.in/static/html/fl2020/stories/20031010003303900.htm)

அக்ஷர்தாமில் மோடி அரசால் குற்றம் சாட்டப்பட்ட இசுலாமியர்களுக்கு தொடர்பில்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் விடுவித்தது. இஷ்ரத் ஜஹான், சொராபுதீன் போலி மோதல் கொலை தொடர்பான விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. மோடி – அமித்ஷா தலைமைக்கு தொடர்ந்து வாக்களித்து வரும் குஜராத் இந்து சமூகம் இவற்றை எப்படி பார்க்கிறது?

நான் 1991-ல் இருந்து குஜராத்தை கவனித்து வருகிறேன். அந்த மாநிலமும், சமூகமும் மதவாத சக்திகளால் முறையாக திட்டமிட்டு திரட்டப்பட்டிருக்கிறது, சமூகத்தில் மதவாத கண்ணோட்டத்தின் ஊடுருவல் கிட்டத்தட்ட முழுமையாகியிருக்கிறது.

குஜராத்தில் சாதி எதிர்ப்பு இயக்கம் எதுவும் இருந்ததில்லை. அது ஒரு வணிக சமூகம். தொழிற்சங்கங்கள் கூட காந்திய வழியை பின்பற்றுகின்றன. நிலச் சீர்திருத்தம் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட சாதியான பட்டேல்களை தாண்டி செல்லவில்லை. தலித்துகள் தங்களைத் தாங்களே ஹரிஜன் என்று அழைத்துக் கொள்கின்றனர்.

26 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிபதி அகமது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது குஜராத்தின் அனைத்து மாவட்ட சங்கங்களும், ஒரு இசுலாமியர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வேலை நிறுத்தம் செய்தனர். இதை தமிழ்நாடு அல்லது மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

தலித்துகளுக்கு என்று தனிக் குடியிருப்புகள் அகமதாபாத் நகரில் உள்ளன. தலித் குடியிருப்புப் பகுதிகள் முஸ்லீம் பகுதிகளுக்கு அருகில் உள்ளன. இவ்வாறு, நகரங்கள் பிளவுபட்டிருப்பது மட்டுமில்லை. முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மத்தியில் கடுமையான வெஜிடேரியனிசம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், தலித்துகள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.

தப்லீகி ஜமாத்
தப்லிகி ஜமாத்தின் ‘உத்தரவு’களை பொறுக்க முடியாமல் அவர்களை துரத்தி விட்ட கிஃபாயத் நகர் மக்கள். (படம் : நன்றி Tehelka – http://www.tehelka.com/double-jeopardy-2/4/ )

முஸ்லீம்களும் கூட முன்னிலும் அதிகமாய் பழமைவாதத்தை நோக்கி போகின்றனர். மிகப்பெரிய தப்லிகி ஜமாத் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. குரான் வாசிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் பல மதரசாக்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ஒரு சிறுபான்மை அமைப்பு கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க விரும்பினால் அனுமதி கிடைக்காது. ஆனால், மதரசா கேட்டால் உடனே கிடைத்து விடும்.

ஒரு சமூகத்தின் சொந்த பழமைவாதத்தின் மூலம் அதைக் கட்டுப்படுத்துவது என்று இதைப் பார்க்கலாம். ஒரு நவீன, முற்போக்கான முஸ்லீம் அவரது சொந்த சமூகத்திலேயே ஒதுக்கி வைக்கப்படுகிறார்.

போரா முஸ்லீம்கள் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பது ஒருபுறம். மற்றொரு பக்கம் தப்லீக் ஜமாத். சராசரி முஸ்லீம்கள் மதச்சார்பின்மை பற்றி என்ன கருதுகிறார்கள்?

நீதிக்கான போராட்டம், கல்வி பிரச்சனை ஆகியவற்றில் அவர்கள் மதச்சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து கொள்கிறார்கள். மதவாத அமைப்புகளால் எந்த பலனும் இல்லை என்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். மேலும் குஜராத்தில் ஒரு வலுவான சூஃபி பாரம்பரியம் உள்ளது. பல சூஃபி தலங்களில் முஸ்லீம்களும், இந்துக்களும் இன்றும் பிரார்த்தனை செய்கின்றனர்.

தப்லீகி ஜமாத் அதை எதிர்க்கிறது. முஸ்லீம்களிடையே இது தொடர்பான வேறுபாடு உள்ளது. சூஃபி வழிபாடு செய்யும், சூஃபி வழிபாடு செய்யாத முஸ்லீம்களிடையே விவாதம் நடக்கிறது.

ஒரு மதக் கலவரத்துக்கு முன்பு தெரியும் 5-6 அறிகுறிகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டதை விளக்க முடியுமா?

பிரவீன் தொகாடியா
பிரவீன் தொகாடியா ஒரு இடத்துக்கு வந்தால் அதன் பொருள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

அதற்கு ஒரு திட்டமான வடிவம் உள்ளது. மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி விடுவது. உள்ளூர் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் சில செய்திகளை வெளியிடுதல்; திட்டமிட்ட வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள். தமது வருகை மூலமாகவே ஒரு மிரட்டலை விடுக்கும் கோட்பாட்டுவாதிகள், பிரச்சராகர்கள். உதாரணமாக, பிரவீன் தொகாடியா ஒரு இடத்துக்கு வந்தால் அதன் பொருள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

அதன் பின்னர், பொருளாதார, பிற சமூக பிரச்சனைகள் திரிக்கப்பட்டு முதல் கல்லை எறிவதற்கான தூண்டுதலாக பயன்படுத்தப்படும். நம் முன் இருக்கும் சவால் அத்தகைய கட்டமைத்தலை உணர்ந்து எதிர்வினை ஆற்றுவது. சமூகத்தில் அத்தகைய கட்டமைத்தலுக்கு எதிரான உணர்வை நாம் உருவாக்க முடியும். இந்தத் துறையில் நாம் போதுமான அளவு பணியாற்றவில்லை.

ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் மதவாத நிகழ்ச்சி நிரலும் மோடியின் புதிய தாராளவாத கொள்கையும் எப்படி சேர்ந்து இயங்குகின்றன?

நரேந்திர மோடி
புதிய தாராளவாதத்தையும் மதவாதத்தையும் ஒருசேர எதிர்க்க வேண்டியிருக்கிறது.

தீவிரமான புதிய தாராளவாதம், மதவாத அரசியலுக்கான தளத்தை உருவாக்குகிறது என்று கருதுகிறேன். புதிய தாராளவாதத்தையும் மதவாதத்தையும் ஒருசேர எதிர்க்க வேண்டியிருக்கிறது.

புதிய தாராளவாத கொள்கைகளை எதிர்த்த போராட்டத்தில் ஜார்கண்டில் 2000 பேர் இன்னும் சிறையில் வாடுகின்றனர். 1999-2002-ல் போராட்டங்கள் மூலம் 85 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். நமக்கு அதைப் பற்றி தெரிவதில்லை. ஊடகங்கள் தங்கள் பொறுப்பை முற்றிலும் கைகழுவி விட்டிருக்கின்றன.

நீங்கள் தொழிற்சங்கங்களில் பொருளாதாரவாதம் பற்றி பேசினீர்கள். அதைக் கடந்து செல்வதற்கு ஒரு அரசியல் சித்தாந்தம் தேவைப்படுகிறது. தேர்தல் அரசியல் அத்தகைய மாற்றை வழங்க முடியும் என்று கருதுகிறீர்களா?

எனக்குத் தெரிந்து அத்தகைய மாற்று எதுவும் இதுவரை இல்லை. நாம் ஒரு வெற்றிடத்தில் வாழ்கிறோம். ஒரு பெரிய ஆபத்தை தவிர்க்க ஒவ்வொரு தேர்தலிலும் முயற்சித்து வந்தோம். அந்த அபாயம் நம்மீது கவிந்து விட்ட நிலையில், மாற்று ஒன்றை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

மதச்சார்பற்ற மதிப்பீடுகளை பரப்பும் உங்கள் முயற்சியான கோஜ் பற்றி சொல்லுங்களேன்?

கோஜ் ஒரு சிறிய நகர்வு மட்டும்தான். சுமார் 80 பள்ளிகளில் 2,000 குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறோம். அனுபவரீதியாக, இது எத்தகைய மாற்றங்களை கொண்டு வருகிறது என்பதற்கு நான் மிகச்சிறப்பான உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால் நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினையின் முன்பு இது மிகச் சிறிய முயற்சி. அதைப் போன்ற முயற்சிகள் இன்னும் பரந்த அளவில் நடைபெற வேண்டும்.

சமீபத்தில் வெளியான உங்கள் புதிய புத்தகம் குறித்து…….?

காந்தியின் கொலை
பொது மக்கள் மத்தியில் காந்தியின் கொலை பற்றிய வரலாற்றை சரியாக முன்வைக்க…

1994-ம் ஆண்டு முதல் கோஜ் திட்டத்துக்காக வரலாற்று பாட புத்தகங்களை ஆய்வு செய்ததில், பல இடைவெளிகள், நிழல்கள், மௌனங்கள் இருப்பதை நாங்கள் கண்டோம். நாட்டுப் பிரிவினை மற்றும் சுதந்திரம் பற்றிய வரலாறு முறையாக சொல்லப்படவில்லை. இண்டிகோ கிளர்ச்சி, சந்தால் எழுச்சி போன்றவை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. காங்கிரஸ் பற்றிய வரலாறுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்துத்துவ வலதுசாரி இருட்டடிப்பு செய்த மிகப்பெரிய விஷயம் காந்தியின் கொலை பற்றியது. காந்தியைப் பற்றி என்ன கருத்து இருந்தாலும், 1947-க்குப் பிந்தைய முதல் பயங்கரவாத செயலான காந்தியின் கொலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் (இந்துமதவாதிகள்) ஏன் காந்தியை கொல்ல வேண்டும். அவரை ஓரங்கட்டி விட்டு ஏன் போக முடியவில்லை.

2000-க்கும் 2004-க்கும் இடையே நாங்கள் காம்பட் இதழில், ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யும் அமைச்சரவை தீர்மானம், படேலுக்கும் கோல்வால்கருக்கும் இடையேயான கடிதங்கள் போன்ற சில அதிகாரபூர்வ ஆவணங்களை வெளியிட்டிருந்தோம்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது, அவர்கள் 11,000 ஆவணங்களை அழித்தனர். அதில், இந்த ஆவணங்களும் அழிக்கப்பட்டன என்று எனக்கு ஐயம் உள்ளது. இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டனவா என்பது குறித்து கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனுக்களுக்கு இந்த அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

பொது மக்கள் மத்தியில் காந்தியின் கொலை பற்றிய வரலாற்றை சரியாக முன்வைக்க வேண்டியது முக்கியமானது.

–  முற்றும்.

  1. மது போதையில் கார் ஒட்டிகொன்ற சல்மான்கானுக்கு 5 வருடம் சிறை . மத போதையில் தேசத்தை கூறு போட்ட கொடியவனுக்கு (நரேந்திர மோடி ,அமித்ஷா ) பிரதமர் பதவி, கட்சி தலைவர் பதவி .சல்மானுக்கு 5 வருடம் சரியான நீதி . மோடிக்கும் ,அமித்ஷா க்கும் தண்டனை யார் வழங்குவது ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க