privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதீஸ்தா சேதல்வாத் நேர்காணல் – மோடி அரசின் மிரட்டல்கள் !

தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் – மோடி அரசின் மிரட்டல்கள் !

-

ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் 2-ம் பகுதி.

2. மோடி அரசு ஏவி விட்டிருக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகள்!

உங்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் பற்றி சொல்ல முடியுமா?

தீஸ்தா சேதல்வாத்
எங்களை பழிவாங்கும் நோக்கில் 6 குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த அமைப்பை எதிர்தது நிற்பதால்தான் எங்களை பழிவாங்கும் நோக்கில் 6 குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

2004-ல் சாட்சியங்களை உருவாக்கியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பினர். 2010-ம் ஆண்டில் பிணங்களை தோண்டி எடுத்ததாக குற்றச்சாட்டு, அடுத்து உச்சநீதிமன்றத்தில் பொய் சாட்சியம் சொல்ல வைத்ததாக குற்றச்சாட்டு. அவை எடுபடவில்லை என்றதும் இப்போது நிதி விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

முதலில் நிதி கையாடல் பற்றி பேசலாம். நாங்கள் சப்ரங் மற்றும் சி.ஜே.பி. என்ற இரண்டு அறக்கட்டளைகளின் கீழ் செயல்பட்டு வருகிறோம்.  இரண்டுமே பதிவு செய்யப்பட்டு அறங்காவலர் குழுவுடன் இயங்கும் அறக்கட்டளைகள்.

சப்ரங், 1995-ம் வருடம் தொடங்கப்பட்டு 1998 முதல் செயல்படத் தொடங்கியது. அதன் முக்கிய வேலை மகாராஷ்டிராவின் உயர்நிலைப் பள்ளிகளில் மதச்சார்பற்ற கல்விக்கான “கோஜ்” என்ற திட்டத்தை செயல்படுத்துவது. பல்வேறு குழுக்கள் எங்களுக்கு நிதி அளித்திருக்கின்றனர்.

2010-11-ல் முதன் முதலாக 2 ஆண்டுகளுக்கு சப்ரங்குக்கு மத்திய அரசு மானியம் கிடைத்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் விசாரணை அந்தத் திட்டம் தொடர்பானது. நாங்கள் அது தொடர்பான அனைத்து விபரங்களையும் கொடுத்தோம். மீதியிருந்த பணத்தை திருப்பி கொடுத்திருந்தோம். பிணை மனு மீதான விசாரணை நடக்கவிருக்கும் போதுதான் இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டார்கள்.

சி.ஜே.பி.யை பொறுத்த வரை 2002-ல் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவி செய்வதுதான் முக்கியமான பணி. முசாஃபர் நகர், 6 முஸ்லீம் சிறுவர்கள் கொல்லப்பட்ட தூலே துப்பாக்கிச் சூடு, கயர்லாஞ்சி தலித்துகள் சிலருக்கு என்றும் நாங்கள் சட்ட உதவி வழங்கினோம்.

அக்கறையுள்ள குடிமக்கள் தீர்ப்பாயம் சி.ஜே.பி-ஆல் அமைக்கப்பட்டது. சி.ஜே.பிக்கான நிதியில் 80% அதன் அறங்காவலர்களால் திரட்டப்பட்டது. எங்கள் அறங்காவலர்கள் அனைவரும் மும்பையின் உயர் நடுத்தர வர்க்கத்தினர்; வசதியானவர்கள்; தேவையான நிதி திரட்டும் அளவுக்கு தொடர்புகள் கொண்டவர்கள். மதவாதத்துக்கு எதிரான இந்தப் பணியில் அவர்களுக்கு இருந்த பிடிப்பு காரணமாக நிதி திரட்டி கொடுத்தார்கள்.

2010-ல் முதல் முறையாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு சி.ஜே.பி.-யின் செலவுகளில் 3-ல் 1 பங்கை தர ஆரம்பித்தது. சமீபத்திய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் எங்களது செயல்பாடுகளை பரிசீலித்து உறுதி செய்து மீண்டும் நிதி வழங்கியிருக்கின்றனர்.

அறக்கட்டளையின் பணத்தில் எதுவும் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. அது குறித்து சொல்லப்படுவது அனைத்தும் தவறானவை. அறக்கட்டளைக்கு என்று கடன் அட்டை பெற முடியாது. எனவே, எனக்கு அல்லது மற்றவர்களுக்கு விமான பயணச் சீட்டு வாங்குவதற்கு நான் என் சொந்த கடன் அட்டையை பயன்படுத்த வேண்டும். அத்தகைய செலவுகளில், எந்த அளவுக்கு அறக்கட்டளை பணிக்காக செய்யப்பட்டதோ அந்த அளவுக்கு நான் அறக்கட்டளை கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக் கொண்டேன்.

இரண்டையும் வேண்டுமென்றே குழப்பி, என் மீது ஒரு அவதூறு பிரச்சாரத்தை தொடங்கினார்கள். குஜராத் உயர் நீதிமன்றத்தில் நாங்கள் கணக்குகள் தொடர்பான 2000 பக்க ஆவணங்களை சமர்ப்பித்தோம். மேலும் 11,000 பக்கங்கள் அடங்கிய குறுவட்டையும் கொடுத்தோம். தேவைப்பட்டால் எந்தப் பக்கத்தையும் அச்செடுத்து தருகிறோம் என்று கூறினோம். ஆனால், நாங்கள் சமர்ப்பித்த அனைத்தையும் உயர்நீதிமன்றம் புறக்கணித்தது. என்னைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒரு வருத்தத்துக்குரிய துரதிர்ஷ்டவசமான தீர்ப்பு. இப்போது அது உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் உள்ளது.

இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை. எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் அவர்கள் கேட்கட்டும். ஆனால், அது நியாயமான முறையில் இருக்க வேண்டும். அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொய்யான பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது. பொதுப் பணத்தை திரட்டும் எங்களுக்கு பதில் சொல்லும் கடமை இருக்கிறது என்று கருதுகிறோம். ஆனால், விசாரணை நடத்தும் போதே, அது தொடர்பான கதைகள் ஊடகங்களில் கசிய விடப்படுகின்றன. குறிப்பிட்ட வகையிலான பரபரப்பை உருவாக்கும் வகையில் பயனீர் (நாளிதழ்) ஒரு செய்தி வெளியிடுகிறது. ஆனால், இன்றுவரை, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை எங்கள் மீது முழுமையாக உள்ளது. நாங்கள் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

இதுவரை நாங்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அனைத்து பிரமாண பத்திரங்களையும் எங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறோம். விரும்பும் யாரும் அதை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம்.

ஜகீரா ஷேக் பற்றி சொல்லுங்களேன்

ஜகீரா ஷேக்
ஜகீரா ஷேக்

குஜராத் படுகொலைகளில் தப்பிப் பிழைத்தவர்களில் மிகவும் கோர்வையாக பேசக் கூடியவர், ஜகீரா. அவர் வர்மா கமிஷன் முன்பு வாக்குமூலம் கொடுத்தார். உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் மூலம், நானாவதி கமிஷன் முன்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளின் தொலைக்காட்சி மூலம் நாடு முழுவதும் பிரபலமான முகமாக ஜகீரா ஷேக் இருந்தார். பெஸ்ட் பேக்கரி வழக்கை விரைவாக முடிக்க குஜராத் அரசு தீர்மானித்த படி விசாரணை 17 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது.

ஜகீரா ஷேக் சாட்சி சொல்ல வந்த நாள் அன்று, நீதிமன்றத்தில் சாட்சியங்கள் அமர வைக்கப்பட்டிருந்த அரசாங்க வக்கீல் அறைக்கு பா.ஜ.க, சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவத்சவா வந்து அவரை மிரட்டியிருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரசில் அந்த செய்தி வெளியிடப்பட்டது.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஜகீரா ஷேக் குடும்ப உறுப்பினர்களின் சாட்சியம் மட்டும்தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. பேக்கரி தொழிலாளர்களின் சாட்சியம் கேட்கப்படவில்லை. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நாங்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தோம். நான் பரோடாவுக்குப் போய் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். அப்போது அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. “நான் முன்பு உங்களை சந்தித்திருக்கிறேன். உங்கள் தொலைபேசி எண் என்னிடம் இருந்தது. நான் இப்போது மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறினார். முறையாக கடிதம் எழுதும்படி அவரிடம் சொன்னேன். பிறகு  அவர் தன் தாயார் மற்றும் சகோதரருடன் மும்பை வந்தார்.

வழக்கறிஞர்களுடன் உட்கார்ந்து ஒரு விரிவான பிரமாண பத்திரம் தயாரிக்கப்பட்டது. அது பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய பிரமாண பத்திரமாக மாறியது.

ஜூலை 7-ம் தேதி, நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார். மது ஸ்ரீவத்சவ் தன்னை அச்சுறுத்தியதாகவும், அரசு வழக்கறிஞர் அறையில் நடந்தது குறித்தும் அவர் விளக்கினார். வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று கோரினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்போது ஆட்சியில் இருந்தது. ஆனால், போராட்டத்தை தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். 3-4 வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்தோம். முன்னணி குற்றவியல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடமும் ஆலோசனை கேட்டோம். அவர் உயர்நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு போகச் சொன்னார்.

பெஸ்ட் பேக்கரி உட்பட 9 வழக்குகளை ஒரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி அதை உச்சநீதி மன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்திருந்தது. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆனந்திடமிருந்து அழைப்பு வந்தது. நாங்கள் ஜகீராவை டெல்லிக்கு அழைத்து சென்றோம். மனித உரிமை ஆணையத்தின் முழு அமர்வின் முன்பு அவர் வாக்குமூலம் அளித்தார். தனது பிரமாண பத்திரத்தில் கூறியிருந்ததையே உறுதி செய்தார்.

உச்சநீதிமன்றம் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கை அனுப்பியது. உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஒரு அநீதியான ஒரு தீர்ப்பு கிடைத்தது. என்னை தேசவிரோதி என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு அதை நீக்கினோம். வழக்கு விசாரணை மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது.

மும்பையில் வழக்கு விசாரணைக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே ஜகீராவிடம் யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். “என்ன செய்ய விரும்புகிறாயோ, செய்து கொள். ஆனால், இப்போது பின்வாங்கினால் என்னை மட்டும் இழுத்து விடப் போவதில்லை. உச்சநீதிமன்றமும் இதில் தலையிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதன் மீது அவர்கள் தீர்ப்பும் வழங்கிய பிறகு, பின்வாங்கினால் இந்த அமைப்பு அதை சகித்துக் கொள்ளப் போவதில்லை” என்று நான் அவரை எச்சரித்தேன்.

வழக்கு விசாரணை ஆரம்பித்து, நேரடி சாட்சியங்களை விசாரிக்கும் கட்டம் வந்த போது, ஜாகிரா ஷேக்கை முதலில் விசாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். பேக்கரி தொழிலாளர்கள் 4 பேரும் நடந்ததை மிகத் தெளிவாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டினார்கள்.

ஜகீரா அடுத்த நாள் சாட்சி அளிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் ஜகீரா பரோடா சென்று அங்கு ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அவளை நான் கடத்தி சென்று மிரட்டியதாக குற்றம் சாட்டிய செய்தி வந்ததது. அதைத் தொடர்ந்து நாங்கள் விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வரும்படி உச்சநீதிமன்றத்தை கேட்டுக் கொண்டோம்.

இறுதியில், அவரது தவறுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். ஆனால், அவரை தூண்டி விட்ட மது ஸ்ரீவத்சவுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை.

–    தொடரும்.

முதல் பகுதி